Wednesday, 1 April 2020

நமது விளையாட்டுக்கள் - 2


 நம்மை ஒருவர் வேகமாக நம் கன்னத்தில் அறைந்தால் நமக்குக் கோபம் வருகிறது. ஆனால், நம் அனுமதியோடு நம்மை ஒருவர் கன்னத்தில் அறைந்தால் கோபம் வராமல் இருக்கும் என்பதனை ஒத்துக் கொள்கிறீர்களா, அப்படி ஒரு விளையாட்டுத் தான் இது... கவலைப்படாதீர்கள் யாரும் கன்னத்தில் அறையப் போவதில்லை. ஆனால், இந்த விளையாட்டின் வரலாறு அப்படியானது. உங்கள் அனுமதியோடு நீங்கள் செல்வத்தைப் பறித்துக் கொண்டாலும் நீங்கள் ஒன்றும் சொல்ல மாட்டீர்கள் அப்படிப் பட்ட விளையாட்டுத்தான் இது. ஆனால், இந்த விளையாட்டை நகைச்சுவையாக பூப்பெய்த பெண்கள் விளையாடும் விளையாட்டாகவும் கர்ப்பிணி பெண்கள் விளையாடும் விளையாட்டாகவும் நினைத்த விளையாட்டில் வாழ்வியல் மற்றும் அதன் பிண்ணனியில் பல தகவல்கள் புதைந்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. 

பல்லாங்குழி ஆட்டத்தைப் பற்றி விளக்குவதற்கு எப்போதும் போல் தேவ நேயப் பாவாணர் அவர்களை துணைக்கு அழைத்துக் கொள்கிறேன். அத்துடன் இந்த முறை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகப் பணியாற்றிய தமிழக்கதில் மக்கள் வாழ்வியலை நாட்டார் வழக்கியலின் முன்னணி ஆய்வாளர் ஆவார். அவர் கட்டுரைகளின் தொகுப்பான ‘பண்பாட்டு அசைவுகளும்” இங்கு பல்லாங்குழி ஆட்டத்தைப் பற்றி விளக்குவதற்கு பெரிதும் உதவுகிறது. 
முதலில் விளையாட்டிற்கு முன் சில செய்திகள்:
இந்த விளையாட்டின் பெயர் ‘பண்ணாங்குழி” பண்ணை என்பது பள்ளம் என்று பொருள் பள்ளம் அமைத்து விளையாடுவதால் இது பண்ணாங்குழி என்று பெயர். இதில் பதினாங்கு குழி இருப்பதால் திரிந்து பண்ணாங்குழி என்று வந்திருக்கும் என்று சொல்வோரும் உண்டு. பள்ளங்கள் அமைத்து விளையாடுவதால் திருத்திய வடிவம் ‘பள்ளாங்குழி” அல்லது “பண்ணாங்குழி” ஆகும். ஆனால், தற்போது “பல்லாங்குழி” என வழங்கப்படுகிறது. 
தேவநேயப் பாவாணர் அவர்களின் ‘தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்” நூலில் நால்வகை பல்லாங்குழி ஆட்டங்களைக் குறிப்பிடுகிறார். 
அவருக்குப் பிறகு பேராசிரியர் தாயம்மாள் அறவாணன் என்பவர் “பல்லாங்குழி (திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு) என்ற விரிவான நூலை எழுதியுள்ளார்.  உலகெங்கிலும் பல்லாங்குழி ஆட்டம் சிற்சில மாறுதல்களுடன் பழங்குடிகளிடம் விளங்கி வருவதை இந்நூல் காட்டுகிறது. 
சமத்தன்மை நிலவிவரும் பழைய சமூகத்தில் ஆட்டத்தின் (அல்லது சூதின்) பெயரால் சமத்தன்மை குலைக்கப்பட்டு ஒருவனது செல்வம் அடுத்தவன் கைக்கு நேரடி வன்முறை இல்லாமல் எளிமையாகப் போய்ச் சேர்ந்து விடுகிறது. தோற்றவனின் இழப்பு நிரந்தரமாக்கப்படுகிறது. மறுபுறமாகச் சேர்ந்த இடத்தில் செல்வமும் நிரந்தரமாக்கப்படுகிறது.ஓரிடத்தில் குவிந்த செல்வம் மற்றொரு இடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதே. பறிப்பதும் பிடுங்குவதற்குமான நேரிடையான வன்முறை இங்கே நிகழவில்லை. அதேபோல் தோற்றவனும் தன் தோல்விக்கான காரணமாக எதிரியின் திறமையினை மட்டும் இங்கே கருதவில்லை. அதற்கும் மேலான ஏதோ ஒன்றில் (தன்னுடைய கெட்ட நேரம், தன்  தலைவிதி ...) காரணமாகத் தோல்வி பெற்றேன் என்று நினைக்கிறான். அதனை ஏற்றுக்கொள்கிறான். செல்வமோ வறுமையோ வந்து சேர்வதற்குரிய காரணமாக மீறிய ஒரு சக்தி உள்ளது எனும் கருத்தும் உணர்வும் இப்படியாகத்தான் மனித மனங்களில் உருவாகத் தொடங்கின. 

சரி விளையாட்டைப் பார்ப்போம்:

வகை 1 : பொதுவகை:

கருவி: பல்லாங்குழிக் கட்டைகள் கடைகளில் கிடைக்கிறது. அல்லது இரண்டு பக்கமும் சமமாக அளவுடைய பக்கத்திற்கு ஏழு வீதம் மொத்தம் பதினான்கு குழிகள் இருக்க வேண்டும். (நகர்ப்புறத்தில் இருப்பவர்கள் வெளியில் குழி பறிக்க இயலாத போது வீட்டிலேயே ஸ்கெட்ச் பென்சில் அல்லது சாக்பீஸ் கொண்டு சம அளவுடைய வட்டங்கள் வரைந்து கொண்டு கூட விளையாடலாம்). ஏதிர்எதிர் குழிகளுக்கு மத்தியில் இரண்டு பெரிய குழிகள் வெற்றி பெற்ற காய்கள் அல்லது ஆட்டம் முடிந்தவுடன் வைப்பதற்காக அமைத்துக் கொள்ளலாம். 

காய்கள்: பொதுவாகப் புளியங்கொட்டைகள் கொண்டு ஆடப்படுவதுண்டு, புளியங்கொட்டை இல்லையெனில் சோழி அல்லது வாய்ப்பிருக்குமானால் பெரிய அளவுள்ள விதைகள் (அவரை விதை, போன்றவை) பயன்படுத்திக் கொள்ளலாம். மொத்தக் காய்கள் ஒரு குழிக்கு ஐந்து வீதம் 14 குழிகளுக்கு (5 x  14 =ரீ 70 ) 70 காய்கள் தேவைப்படும்.

ஆடும் நபர்களின் எண்ணிக்கை: 2 நபர்கள்
வயது வரம்பு 5 வயதிற்கு மேல்
ஆடும் இடம்: பொதுவாக வீடு, திண்ணை
தேவையான பொருட்கள் சிறு கற்கள், புளியங்கொட்டை, சோழி, வேப்பங்காய்கள்…

ஆட்ட முறை:
எதிரெதிரே ஒருவர் வீதம் அமர்ந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள அனைத்துக் குழிகளிலும் குழிக்கு தலா ஐந்து காய்கள் வீதம் இடுவர். இருவரில் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டு ஒருவர் ஆட்டத்தை துவக்குவார். தன் பக்கமாக இருக்கும் வரிசையில் ஏதேனும் ஒரு குழியில் இருந்து காய்களை எடுத்து வலப்புறமாக குழிக்கொரு காய்வீதம் அடுத்தடுத்தக் குழிகளில் காய்களைப் போட்டு வருவார். கடைசிக்காய் போட்ட குழியின் அடுத்த குழியிலிருக்கும் காய்களை எடுத்து எடுத்தக் குழியில் இருந்து அடுத்த குழிக்கு ஒரு காய் வீதம் போட்டுக் கொண்டே வருவார். இப்படிப் போடும் போது தன் வரிசையில் இடதுபுறமாகவும் எதிர்புறம் இருப்பவர் வரிசையில் வலதுபுறமாகவும் காய்களை போட்டுக் கொண்டே வருவர். இப்படிப் போட்டுக் கொண்டு வரும்போது கடைசியாக காய் போட்ட பிறகு அதற்கு அடுத்தக் குழி வெறுமையாக இருந்தால் வெறுமைக் குழிக்கு அடுத்தக் குழியில் இருக்கும் மொத்தக்காய்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்ட குழிகள் வெறுமையாக இருந்தால். இவர் ஆட்டத்தை நிறுத்த வேண்டும். இப்போது எதிரில் இருப்பவர் ஆடத்துவங்குவார். அவர் தன் பக்கத்தில் இருக்கும் 7 குழிகளில் காய்கள் இருக்கும் எந்தக் குழியில் இருந்து வேண்டுமானாலும் ஆட்டத்தைத் துவக்கலாம். முன்சொன்னமாதிரி ஆட வேண்டும் வெற்றுக்குழி வரும் போது ஒரு குழிமட்டும் காலியாக இருந்தால் அதற்கு அடுத்தக் குழியில் இருக்கும் காய்களை எடுத்துக் கொள்ளலாம். இல்லையெனில் ஆட்டத்தை நிறுத்த வேண்டும். மேலும், காய்கள் போட்டுக் கொண்டு வரும்போது தங்கள் பக்கத்தில் உள்ள குழிகளில் நான்கு காய்கள் சேரும் போது அந்தக் காய்களை ‘பசு’ என்று சொல்லி எடுத்துக் கொள்ள வேண்டும். சில பிராந்தியங்களில் அது ‘முத்து’ என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது. (சில இடங்களில் 8 காய்கள் சேர்ந்தால் அதனை ‘பழம்’ என்று எடுக்குக் கொள்ளும் பழக்கமும் உண்டு). இவ்வாறு மாற்றி மாற்றி ஆடும் போது காய்கள் ஒரு பகுதியில் மட்டும் இருந்து எதிர்பகுதியில் இல்லையென்றால் ஆட்டம் நின்று விடும். அதன்பிறகு ஆடுபவர்கள் தங்கள் பகுதியில் சேர்ந்துள்ள காய்களை எண்ணுவர். எவரிடம் குறைவாக காய்கள் இருக்கிறதோ அவர் எண்ணிக்கையின் அடிப்படையில் குழிகளில் காய்கள் நிரப்பப்படும். அதாவது இரண்டு பேரில் ஒருத்தரிடம் 17 காய்கள் மட்டுமே இருக்கிறதென்றால். அவர் தன் பக்கத்தில் குழிக்கு 5 காய்கள் வீதம் 3 குழிகளில் மட்டுமே நிரப்ப முடியும். மீதி நான்கு குழிகள் ‘பவ்வீக் குழிகள’; அல்லது ‘தக்கம்’ எனப்படும். அதில் விளையாட முடியாது. குhலி குழிகளில் அடையாளத்திற்காக சிறு குச்சியை போட்டு வைத்திருப்பர். எதிராளியும் இவர் எத்தனைக் குழிகளில் காய்கள் நிரப்பியுள்ளாரோ அத்தனைக் குழிகளில் மட்டுமே காய்கள் நிரப்புவார் இப்போது 14 குழிகளில் 6 குழிகளில் மட்டுமே காய்கள் நிரப்பப்பட்டு ஆட்டம் தொடங்கும்.  முன் வென்றவர் இதில் முதலில் ஆடுவார். இப்படி ஆடிக் கொண்டு வரும்போது எவரேனும் ஒருவர் இறுதியில் மொத்த எண்ணிக்கையில் 5 காய்களுக்கும் குறைவாக வைத்திருக்கிறார் எனில் உதாரணமாக 2 காய்கள் வைத்திருக்கிறார் எனில் குழிக்கு ஒன்றாக இரண்டு குழிகளில் மட்டும் காய்கள் போட வேண்டும். ஏதிரில் இருப்பவரும் அவ்வாறே காய்களை இட்டு வைப்பார் எஞ்சிய குழிகள் தக்கங்களாக இருக்கும். இந்த நிலைக்கு கஞ்சி காய்ச்சுதல் என பெயர். சில சமயம் கஞ்சு காய்ச்சுதலில் இருந்தும் வெற்றி பெற வாய்ப்புண்டு.

வகை 2: கட்டுக் கட்டல்:

இந்த ஆட்டமும் இருவர் ஆடும் ஆட்ட முறையாகும். ஆடுபவர் இருவரும் தங்களுடைய இடது பக்கம் கடைசிக் குழியில் இருந்துதான் ஆட்டத்தைத் துவக்க வேண்டும். காய்களை ஒவ்வொன்றாகப் போட்டப்பின் கடைசியாக எந்தக் குழியில் காய்கள் போடுகிறாரோ அதிலிருந்துதான் துவங்க வேண்டும் (பொதுமுறையில் கடைசியாக காய் போட்டதன் பக்கத்துக் குழியில் இருந்து துவங்குவர் இதில் அப்படிக் கிடையாது). இவர் கடைசிக்; காயாகப் போடும் குழியில் ஒரு காயாவது இருக்க வேண்டும். இல்லையெனில் அவர் ஆட்டம் நின்று விடும். காலி குழியில் இவர் காய் போட்டு அந்தக் குழியில் இப்பொழுது ஒரு காய் இருக்கிறதென்றால் அதனை எடுத்து அவர் ஆடக் கூடாது. இவ்வாறு காய் ஒவ்வொரு குழியாகப் போட்டுக் கொண்டு வரும் போது மூலையில் உள்ள குழியில் ஏற்கனவே மூன்று காய் சேர்ந்திருந்ததென்றால் நான்காவது காய் குழியில் போடாமல் அதற்கு வெளியில் வைக்க வேண்டும். இதுவே ‘கட்டுக் கட்டுதல்’ ஆகும். எவர் ஒருவர் நான்காவது காய் அந்த இடத்தில் காய் வைத்தாரோ அவர் மட்டுமே அந்த இடத்தில் காய் வைக்க முடியும் எதிரில் ஆடுபவர்; வைக்க இயலாது. இதுபோல் ஒருவரோ அல்லது இருவருமோ நான்கு மூலைக்கும் கட்டுக்கட்டிக் கொள்ளலாம். எல்லாக் காய்களும் நான்கு மூலைக்கும் போய்ச் சேர்ந்த பிறகு எவர் கட்டிய மூலையில் அதிகக் காய்கள் இருக்கிறதோ அவரே வென்றவராவார். 

வகை 3:                                                                                                              
அரசனும் மந்திரியும் சேவகனும் (ராஜா மந்திரி சேவகன்):

 இந்த ஆட்டத்திற்கு 3 நபர்கள் தேவை.
ஒருவர் அரசன் என்று ஒருவர் மந்திரி மற்றொருவர் சேவகன் என்றொரு புனைப்பெயருடன் ஆட வேண்டும். அவரவர் அவருக்குப் பிரிக்கப்பட்ட (நடு எதிர்எதிர் 3 குழிகள் (3 ூ3 ஸ்ரீ6) குழிகள் அரசனுக்கும் இடப்புறம் எதிர்எதிர் இரண்டு குழிகள் (மொத்தம் 4 குழிகள்) மந்திரிக்கும் வலதுப்புறம் எதிர்எதிர் இரண்டு குழிகள் (மொத்தம் 4 குழிகள்) சேவகனுக்கும் ஒதுக்;கப்படும். அரசர் முதலிலும் மந்திரி இரண்டாவதாகவும் சேவகன் மூன்றாவதாகவும் விளையாட வேண்டும். அவரவர் தங்கள் குழிகளில் இருந்து காய் நகர்த்தலை துவக்க வேண்டும். ஆனால் அனைவர் குழிகளிலும் காய் இட்டுச் செல்ல வேண்டும். காய்கள் போட்டுக் கொண்டே செல்லும் போது கடைசி காய் போட்டவுடன் அதற்கு அடுத்தக் குழியில் உள்ள காய்களை எடுத்து பொது ஆட்டத்தில் உள்ள வழிமுறைகள் படி ஆட வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குழிகளில் நான்கு காய்கள் சேர்ந்தால் “பசு” அல்லது “முத்து” என்று காய்களை எடுத்துக் கொள்ளலாம். காலி குழி வந்தவுடன் ஆட்டம் நின்று விடும். ஒரு குழி மட்டுமே காலி என்றால் அந்தக் குழியை துடைத்து அதற்கடுத்தக் குழியில் உள்ள காய்களை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு தொடர் காலி குழிகள் என்றால் எதுவும் எடுக்க முடியாது. அடுத்தவர் ஆட்டத்தைத் தொடர வேண்டும். ஆட்டம் தொடர இயலாதபோது அரசனாக இருப்பர் மந்திரி மற்றும் சேவகன் ஆகிய இருவருக்கும் தலா ஒரு காய் கொடுக்க வேண்டும். காய் கொடுத்தப்பிறகு அரசனிடம் ஒவ்வொரு குழிக்கும் தலா 5 காய்கள் வைத்திருக்க வேண்டும். அதாவது 30 காய்கள் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருந்தால்தான் அவர் அரசர் பதவியை தொடர முடியும். ஆனால், வேறு யார் அதிக காய்கள் வைத்திருப்பாரோ அவர் பதவி உயர்வு அடைவர், காய்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பதவி மாறுபாடு அடையும். வாழ்க்கையில் உள்ள ஏற்றம் இறக்கங்களை இவ்விளையாட்டு உணர்த்துகிறது.  

வகை 4:                                                                                                               
அசோகவனத்தாட்டம்:
இந்த ஆட்டத்தில் ஒருவர் மட்டுமே விளையாடும் விளையாட்டாகும். அசோகவனத்தில் தனித்திருந்ததாக சொல்லப்படும் சீதையோடு தொடர்புபடுத்தி அசோகவனத்தாட்டம் என்று அழைக்கப்படுகிறது.
படத்தில் காட்டியவாறு காய்களை ஒவ்வொரு குழியிலும் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு மற்றும் ஏழு என எண்ணிக்கையை ஒவ்வொரு குழியிலும் அதற்கடுத்த குழிக்கும் ஒரு காய் எண்ணிக்கையை உயர்த்தி குழியில் போட வேண்டும். எதிர்பக்கம் இருக்கும் குழிகளில் இதற்குத் தலைகீழாக அமைக்க வேண்டும். கீழிருந்து மேலிருந்து கீழாகவோ எதிர்எதிரே ஏற்றமிறக்க முறையில் அமைந்திருக்க வேண்டும். 
இப்போது காய்களை அதிக எண்ணிக்கையில் இருந்து ஆடத்துவங்க வேண்டும். காயின் எண்ணிக்கை முடியும் போது எந்த வரிசையில் முடிகிறதோ எந்த வரிசையில் எந்தக் குழியில் அடுத்து  அதிக எண்ணிக்கையில் காய்கள் இருக்கின்றதோ அந்தக் குழியில் இருந்து எடுத்து காய்களை இட வேண்டும். இது பொதுவாக எந்தக் குழியில் முடிகிறதோ அதற்கு அடுத்தக் குழி தான் அதிகக் காய்களை கொண்ட குழியாக இருக்கும். இதில் காலிக் குழியினை  துடைத்து அடுத்தக் குழி காய்களை எடுப்பதோ, நான்கு காய்கள் சேர்ந்தவுடன் “பசு” என்றோ “முத்து” என்றோ எடுத்துக் கொள்ளுதலும் இந்த ஆட்டத்தில் கிடையாது. ஒன்பது முறை காய் நகர்த்தல்கள் செய்யப்பட வேண்டும். ஒன்பது முறை ஆடியபிறகு ஆட்டம் துவங்கிய போது காய்கள் அமைப்பு எப்படி இருந்ததோ அதே போன்று எதிர்எதிர்பகுதியில் ஏற்ற இறக்கத்தோடு காய்கள் அமைந்திருக்கும். அப்படி அமைந்தால்தான் விளையாட்டு சரியாக விளையாடப்பட்டுள்ளது என்று அர்த்தமாகும். இல்லையெனில் தவறாக விளையாடப்பட்டுள்ளது என்று அர்த்தமாகும்.










No comments:

Post a Comment