Wednesday, 1 April 2020

ஆட்டிசம்

                       அறிந்து கொள்வோம்

'ஆட்டிசம்' என்பது என்ன? அது ஒரு நோய் அல்ல; மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு - Development disability! மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு பேச்சு மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு. பிறந்த மூன்று வருடங்களுக்குள் ஒரு குழந்தையிடம் தென்படத் துவங்கும் 'ஆட்டிசம்' என்ற இந்தக் குறைபாட்டிற்கு உடல்ரீதியான அறிகுறிகள் கிடையாது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் சுற்றி இருக்கும் எதைப் பற்றிய சிந்தனையுமே இல்லாது தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கிக் கொண்டு அதில் அமிழ்ந்து கிடப்பார்கள். இன்னதென்று வகைப்படுத்த இயலாது பல வித அசாதாரணமான பாதிப்புகளை உண்டாக்கும் 'ஆட்டிசம்' மருத்துவரீதியாக ஒரு Spectral Disorder என அழைக்கப்படுகிறது. தூய தமிழில் இது தற்புனைவு ஆழ்வு என குறிப்பிடப்படுகிறது.
ஆட்டிசத்தின் தன்மைகள்

சமூக வாழ்வுக்கு தேவையான ஆற்றல்கள் இல்லாமை:

இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகள் சமவயது உடைய குழந்தைகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு அதை மேலும் வளர்க்கும் வழிமுறைகளை அறியாதவர்களாக இருப்பார்கள். அதற்காக நல்ல உறவை உருவாக்கிக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை என்று கூறிவிட முடியாது; அதற்கான வழிமுறைகள் அவர்களுக்கு தெரியாது, அவ்வளவுதான்! சமூக உறவுகளை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல்கள் அவர்களுக்கு கற்றுத் தருவது முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பணி ஆகும்.
தொடர்புகொள்ளும் ஆற்றல்கள் இல்லாமை:

'ஆட்டிச'த்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பு கொள்ளும் ஆற்றல்கள் இல்லாதவர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் பேசும் திறன் அற்றவர்கள். அப்படியே ஒருக்கால் பேசும்திறன் இருந்து மொழி ஆற்றலும் வாய்க்கப்பெற்றவர்கள் கூட அவற்றை திறம்பட கையாளும் வழி தெரியாதவர்களாகத்தான் இருப்பார்கள். மேலும் பேச்சு மற்றும் முகபாவங்கள் சைகைகள் மூலம் தங்கள் எண்ணங்களை உணர்த்துவதற்கோ, அல்லது மற்றவர்கள் உணர்த்துவதை புரிந்துகொள்ளவோ இயலாதவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
விளையாட்டுகளுக்கான திறனோ ஆர்வமோ இல்லாமை:

சாதாரணமாக விளையாட்டின் மீது குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வமும் கற்பனைத் திறனும் 'ஆட்டிச’க் குழந்தைகளிடம் காணப்படுவதில்லை. தன்னை ஒரு மிருகமாகவோ, பறவையாகவோ பாவித்துக் கொண்டு அவற்றின் நடை,உடை பாவனைகளை விளையாட்டில் புகுத்தி மகிழும் (PRETEND PLAY) கற்பனைத்திறன் இல்லாதவர்கள் இவர்கள். புலனியக்க ஒருங்கிணைப்பில் உள்ள கோளாறினால் (Disorder of Sensory Integration) சிறிதும் சலிப்படையாமல் தொடர்ந்து ஒரே மாதிரியான விளையாட்டுகள், அங்க அசைவுகளில் இந்தக் குழந்தைகள் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகள் பொதுப்படையானவை, நபருக்கு நபர் மாறுபடக்கூடியவை. 'ஆட்டிச'த்தினால் பாதிக்கப்படும் ஒரு நபர் அந்தக்கோளாறு இருப்பதையே அறியாது தன் வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பதுண்டு. இந்தக் குறைபாட்டினால் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறவர்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.

ஆட்டிசத்தினால் பாதிக்கப்படுபவர்கள் யார்?

இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி மக்களைப் பீடிக்கும் 'ஆட்டிசம்' பெண்களை விட ஆண்களையே பெரும்பாலும் தாக்குகிறது. குடும்ப வருமானம், வாழ்க்கைத்தரம், கல்வி என்ற எந்த பாகுபாடும் அதற்குக் கிடையாது. இன்று சுமார் 20 லட்சம் இந்தியர்கள் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 'Downs Syndrome’ என்ற மூளை வளர்ச்சி சம்பந்தப்பட்ட குறைபாட்டை விடவும் அது பரவலாகக் காணப்படுகிறது என்றாலும், பல துறைகளிலுள்ள படித்தவர்கள் கூட 'ஆட்டிசம்' பற்றியோ, அந்தக் குறைபாடுள்ள நபர்களை கையாளும் முறை பற்றியோ அறியாதவர்களாக இருக்கிறார்கள். அறிகுறிகளை கவனித்து முறையான பரிசோதனைகளுக்குப் பின் அதற்கான சிகிச்சை முறைகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்கு வழி செய்வது பற்றி யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை.
ஆட்டிசத்தின் அறிகுறிகளைக் கண்டறிதல்

ஆரம்பக் கட்டத்திலேயே 'ஆட்டிசம்' இருப்பதை பரிசோதித்து கண்டறிதல் சிகிச்சைக்கும், மறுவாழ்வு திட்டங்களை மேற்கொள்வதற்கும் மிக அவசியமானது. மற்ற நோய்களைப் போல் படிப்படியாக ஆய்ந்து அறிய உதவும் முறையான பா¢சோதனைகள் மற்றும் உடல்ரீதயான அறிகுறிகள் 'ஆட்டிச'த்திற்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குழந்தை நடந்துகொள்ளும் விதத்தை வைத்து அதற்கு இருக்கும் அல்லது இல்லாத சில தன்மைகளை கவனித்துதான்.

' ஆட்டிசம்' இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதோ சில உதாரணங்கள்:
நடத்தை ரீதியான அறிகுறிகள்
கண்ணோடு கண் நோக்காது பேசுதல், பழகுதல்
கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்க்காது இருத்தல்
ஒருவர் சொன்னதையே திரும்ப சொல்லுதல்
தாமதமாகப் பேசத் தொடங்குதல்
விளையாட்டில் நாட்டமின்றி இருத்தல்
முகபாவம், சைகை மூலம் எண்ணங்களை உணர்த்தவோ / உணரவோ அறியாதிருத்தல்
சமவயதுள்ள நபர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் அல்லது அந்த உறவை நீடிக்கச் செய்யும் வழிமுறைகள் அறியாதிருத்தல்

தீர்வு


எதனால் 'ஆட்டிசம்' ஏற்படுகிறது என்பது சரிவரத் தெரியவில்லை. தாய், தந்தையரின் பரம்பரையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருத்தல், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமச் சத்துகளின் குறைபாடு, 'செக்ரடின்' என்ற ஹார்மோன் குறைபாடு என பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் 'ஆட்டிசம்' ஒரு நோய் அல்ல என்பது மட்டும் உறுதி. எனவே அதற்கு மருந்து என்பது கிடையாது. ஆனால் ஆரம்பக்கட்டத்திலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் முறையை முழுமையான பயிற்சிகள் மூலம் மாற்றி அமைத்து அவர்கள் வாழ்க்கையை முழுமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் செய்துகொள்ள உதவலாம்.

இதற்கான வழிமுறைகள் குறைபாடுகளின் தன்மையைப் பொறுத்தும், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பொறுத்தும் வேறுபடும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே இந்தக் குறைபாட்டைக் கவனித்து ஆவன செய்வது பெரிதும் உதவும் என்றாலும் அதற்காக தாமதமாகச் செய்தால் பலன் இருக்கப்போவதில்லை என்று அசட்டையாகவும் இருந்து விடவும் கூடாது. தாமதமாகவாவது செயல்படுவது, செயல்படாமலேயே இருப்பதைக் காட்டிலும் சிறந்ததல்லவா?

இன்று ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

No comments:

Post a Comment