Saturday, 11 April 2020

நமது விளையாட்டுக்கள் 13



கல்பாரி:

இந்த விளையாட்டிற்கு 5 நபர்கள் தேவை.


ஆட்ட அமைவு
தண்ணீரால் அல்லது கரித்துண்டு அல்லது சுண்ணக்கட்டி ஏதாவது ஒன்றின் உதவியுடன் நான்கு பெரிய கட்டங்கள் போட வேண்டும். நான்கு கட்டங்களையும் இணைக்கும் மையப்பகுதியில் வட்டம் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த வட்டத்தில் 4 கற்கள் வைக்கப்பட வேண்டும்.

தேவையான பொருட்கள்: கற்கள்

ஆட்ட முறை:

சாத்.. பூ…திரி போன்று ஏதேனும் ஒரு முறையின் மூலம் இறுதியில் மிஞ்சும் அவுட் ஆன நபராக  தேர்ந்தெடுக்கப்படுவர்.
நான்கு கட்டங்களிலும் ஒரு நபர் இருப்பர். அவுட் ஆனதாக கருதப்படும் நபர். மையத்தில் கட்டத்தை அமைக்கும் கோடுகளில் மட்டும் குறுக்கும் நெடுக்கும் நடக்க வேண்டும்.
அவ்வாறு நடக்கும் போது வட்டத்தில் உள்ள கற்களை மிதித்துச் செல்ல வேண்டும். அவர் முதன் முறை கற்களை மிதித்தப் பிறகு கட்டத்தில் உள்ளவர்கள் அவரவர்க்கென்று ஒரு கல்லை எடுக்க வேண்டும்.
அவ்வாறு எடுக்கும் போது குறுக்கும் நெடுக்கும் செல்பவர் அந்தக் கல்லை எடுக்க விடாமல் தடுக்க முயல வேண்டும். கல்லை எடுக்கும் போது காவல் இருப்பவர் தொட்டு விட்டால். தொடு பட்டவர் அவுட் ஆனதாகக் கருதப்பட்டு அவர் கற்களைக் காவல் காக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
கட்டத்தில் உள்ளே இருப்பவர்கள் காவல் காப்பவர் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லைக்குச் செல்லுகையில் லாவகமாக கல்லை எடுத்து விட வேண்டும்.
ஒரு நபரே ஒன்று மேற்பட்ட கற்களை எடுக்கலாம். எடுத்தக் கல்லில் தனக்கென்று ஒன்று வைத்துக்கொண்டு மற்றக் கற்களை பிறருக்கும் கொடுக்கலாம். ஆனால், அவ்வாறு கொடுக்க வேண்டும் எனில் அவர்கள் பக்கத்தில் உள்ள கட்டத்திற்கு சென்று தான் கொடுக்க வேண்டும். மேலும், பக்கத்து கட்டத்திற்கு செல்லும் போது தனது கட்டத்தில் ஒரு கல்லை வைத்து விட்டுச் செல்ல வேண்டும். இல்லையெனில் காவல் காப்பவர் கட்டத்திற்குள் நுழைந்து விடுவார். அவ்வாறு நுழைந்து விட்டால் எவர் கட்டத்தை விட்டு வெளியே சென்றாரோ அவர் அவுட்’ எனக் கருதப்பட்டு கற்களை பாதுகாக்கும் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும்.
ஒருவேளை, தன் கட்டத்தில் கல்லை வைத்து விட்டு, பக்கத்துக் கட்டத்திற்கும் கொடுத்து விட்டு அடுத்தக் கட்டத்திற்கும் அவர் போக வேண்டும் என்று நினைத்தால் போகலாம். ஆனால் அவ்வாறு கடக்கும் போது காவலாளியின் கையில் அகப்பட்டுவிடக்கூடாது.
ஒருவர் சொந்த கட்டத்தில் இருந்து பிற கட்டத்திற்கு கூட தேவையேற்படின் மாறிக்கொள்ளலாம். ஒரு கட்டத்தில் ஒரு நபர் கட்டாயம் இருக்க வேண்டும். அவர் அங்கு இல்லையெனில் கல் இருக்க வேண்டும் என்பது தான் கணக்கு.
இறுதியாக நான்கு கட்டங்களிலும் கல் வந்து விட்டது என்றால். கல்லை எடுத்தவர்கள் மீண்டும் அகப்படாமல் கல்லை எடுத்த இடத்திலேயே அதாவது கட்டத்தின் மையப்பகுதியில் வரையப்பட்டுள்ள வட்டத்தில் வைக்க வேண்டும். ஒருவேளை ஒருவர் ஆரம்பத்தில் 3 கல் எடுத்திருந்தார் என்றால் அவர்தான் 3 கல்லையும் வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. கட்டத்தில் உள்ளவர்கள் தங்கள் கட்டத்தில் உள்ள கல்லை உரிய இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு மறுபடி வைத்து விட்டார்கள் என்றால் ஆட்டம் முடிவுற்றது என்று அர்த்தம். காவல் காத்தவர் தோற்று விட்டார் என்று அர்த்தம். அவருக்குப் பாட்டை வழங்கப்படும் அல்லது மறுபடியும் ஆட்டம் துவங்கும். அவரே மறுபடியும் காவல் காக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

இந்த விளையாட்டு
பொருட்களை கவனமாகக் கண்கானிக்க உதவுகிறது.
குழு ஒற்றுமையையும்
பகிர்ந்து அளிக்கும் குணத்தையும் அளிக்கிறது.

இந்த விளையாட்டிற்கு அணில்பிள்ளை விளையாட்டு என்றும் பெயர். இதில் கற்களை காவல் காப்பவராக இருப்பவர் அணில்பிள்ளை என்று அழைக்கப்படுகிறார்.

No comments:

Post a Comment