Sunday, 19 April 2020

நமது விளையாட்டுக்கள் 19

நாடு பிடித்தல்:
இந்த விளையாட்டிற்கு நான்கு நபர்கள் தேவைப்படுவர்.
இது சமவெளியில் விளையாடுவது சிறந்தது. முதலில் ஒரு பெரிய கட்டம் வரைந்து அதனை இரண்டு குறுக்குக் கோடுகள் படத்தில் காட்டியவாறு வரைந்து கொள்ள வேண்டும். நான்கு நபர்களும் தங்களுக்கு ஒரு கட்டத்தைத் தேர்வு செய்து அதற்கு ஏதேனும் ஒரு நாட்டின் பெயரை சூட்டி அதனை அனைவருக்கும் சொல்ல வேண்டும். அல்லது அனைவரும் மறக்காமல் இருப்பதற்கு கட்டத்திலேயே குச்சியினைக் கொண்டு நாட்டின் பெயர் எழுதப்பட்டிருக்கும். இங்கே உதாரணத்திற்காக இந்தியா, ஜெர்மனி, மலேசியா மற்றும் சிங்கப்பூர் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுப்பு முறையில் அல்லது தாமாக முன்வந்து ஒரு நபர் பட்டவராகக் கருதப்படுவார். அவர் கையில் ஒரு அடி நீளமுள்ள ஒரு குச்சியினைக் கையில் வைத்திருப்பார். மற்றவர்கள் ஓடுவதற்குத் தயாராக இருப்பர். கையில் குச்சியை வைத்திருப்பவர் தன் கையில் வைத்திருக்கும் குச்சியை ஏதேனும் ஒரு கட்டத்தில் போட்டு விட்டு ஓட வேண்டும். ஓடும்போது எந்தக் கட்டத்தில் குச்சியைப் போடுகிறாரோ அந்த நாட்டின் பெயரைச் சொல்லிக்கொண்டே அந்தக் குச்சியினைப் போட வேண்டும். உதாரணமாக அவர் சிங்கப்பூர் என்ற பெயருடைய கட்டத்தில் போடுகிறார் என்றால். சிங்கப்பூர் பெயர் தாங்கிய கட்டத்தின் சொந்தக்காரர் மட்டும் ஓடி வந்து குச்சியை கையில் எடுத்துக்கொண்டு ‘ஸ்டாப்” என்று கத்துவார். உடனே அனைவரும் நின்று விட வேண்டும். பெரும்பாலும் அவர்கள் தங்களுடைய நாடுகளின் எதிர் மூலைப் பகுதியிலிருந்து ஓடுவர் அப்போது தான் தூரமாக ஓட முடியும். இப்போது ‘ஸ்டாப்” என்ற சத்தம் கேட்டவுடன் அனைவரும் நின்று விடுவர். இப்போது கையில் குச்சி வைத்திருப்பவர் தனது நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் நின்று கொண்டு மீதி 3 பேரில் யாரேனும் ஒருவர் மீது குச்சியினை எறியலாம். அப்படி எறியும் போது குச்சி சரியாக எறியப்பட்டவர் மீது விழுந்ததென்றால், குச்சியினை எறிந்தவர், யார் மீது எறிந்தாரோ அவர் நாட்டின் பாகத்தை ஆக்கிரமிக்கலாம் ;அல்லது தனக்குச் சொந்தமாக்கலாம். அந்த நாட்டின் பகுதியினை அவர் தன்வசப் படுத்துவதற்கு அந்த நாட்டின் ஏதேனும் எல்லைக் கோட்டில் நின்று கொண்டு குச்சியினால் தனக்கு எட்டுமளவிற்கு பாகத்தைக் கோடால் கிழிக்க வேண்டும். அவ்வாறு கோடு கிழிக்கும் போது கை தரையில் படக் கூடாது. கால் எல்லைப் பகுதியைத் தாண்டி நாட்டுக்குள் கால் வைக்கக் கூடாது. இப்போது குச்சியால் அடி வாங்கியவரின் நாட்டில் எவ்வளவு பாகம் பிடித்துக் கொண்டாரோ அவ்வளவு பாகம் இடம் பிடித்தவருக்குச் சொந்தமாகும். அந்த இடத்தில் நாட்டைப் பிடித்தவர் தனது நாட்டின் பெயரை எழுதிக் கொள்வார். இப்போது அந்தப் பாகத்தைப் பிடித்தவருக்கு மறுபடியும் அடிக்க வாய்ப்புக் கிடைத்தால் அவர் தான் மற்ற நாட்டில் தன் ஆக்கிரமிப்பில் வைத்திருக்கும் இடத்தில் இருந்து குச்சியினை எறியலாம். அதே போன்று குச்சியினை போடுபவர்கள். பிடித்து வைத்திருக்கும் இடத்தில் கூட அந்த நாட்டின் பெயரை சொல்லி குச்சியினைப் போட்டுவிட்டு ஓடலாம். இவ்வாறு ஒவ்வொருவரும் மற்ற இடத்தை ஆக்கிரமித்து தனது நாட்டின் பரப்பை விரிவாக்கம் செய்வர். இறுதியில் யார் அதிகமான பரப்பளவை வைத்திருக்கிறார்களோ அவரே வென்றவராகிறார்.
குறிபார்த்து எறிதலுக்கும், தனது நாட்டின் மீதான பற்றினை காப்பதற்கான தீவிர ஈடுபாட்டினையும் வளர்க்க அல்லது தன்னுடைய பொருளினை கவனமாக பாதுகாக்க மற்றும் அதிக பொருளீட்டும் ஈடுபாடு ஆகியவற்றை வளர்க்க இந்த விளையாட்டு உதவுகிறது. 




No comments:

Post a Comment