Wednesday, 29 April 2020

நமது விளையாட்டுக்கள் 27


‘சூ” விளையாட்டு:
இது இரண்டு வகைகளில் விளையாடப்படுகிறது. இது அவுட்டு என்னும் ஆங்கிலப் பெயரால் வழங்கப்படுகிறது. ஓடித் தொடும் ஒருவர் உட்கார்ந்திருக்கும் ஒருவரை எழுப்புவதற்கு சூ என்று சொல்லி எழுப்புவர். தற்போது அவுட்டு என்று எழுப்பப்படுகிறது. ஆரம்பத்தில் இது உசு விளையாட்டு என்று வழங்கப்பட்டிருக்கலாம்.
வகை 1:
இந்த விளையாட்டில் ஐந்து நபர் இருக்க வேண்டும்.
ஒருவர் ஓடுவராக இருப்பார். மற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியாவது விட்டு ஒரே திசை நோக்கி அமர்ந்திருப்பர். அவர்களுள் ஒருவர் ஓடுபவரைத் துரத்திப் பிடிக்க வேண்டும். ஓடுபவர் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு மத்தியில் குறுக்கே ஓடி இரண்டு பக்கமும் புகுந்து வரலாம். ஆனால் பிடிப்பவர் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு மத்தியில் புகுந்து வர இயலாது கடைசி நபரின் தலையைத் தொட்டுவிட்டு; சுற்றித்தான் அடுத்த பக்கத்திற்கு வந்து ஓட முடியும். ஆனால், ஒரு பக்கத்தில் நின்று மறுபக்கத்தில் ஓடுகிறவர்; கை எட்டும் அளவிற்கு நின்று கொண்டிருந்தாலோ ஓடிக் கொண்டிருந்தாலோ பிடிக்கலாம். ஆதலால் ஓடுகிறவன் முடிந்த மட்டிலும் எதிர்ப்பக்கத்தில் இருந்து கையை நீட்டி தொடாத அளவு தள்ளி ஓட வேண்டும். மேலும், தொடுகிறவர்;, தன்னால் தொட இயலாத போது, அல்லது சோர்வடைந்தாலும் உட்கார்ந்திருப்பவர்களில் யாரையாவது முதுகுப்பக்கமாக வந்து அவரை தட்டி ‘அவுட்டு” என்று எழுப்பி விடலாம். பிறகு எழுப்பி விடப்பட்டவர் பிடிக்க ஓடுவார். எழுப்பி விடப்படுதல் முதுகுப் பக்கம் இருந்து மட்டுமே நடக்கப்பட வேண்டும். மேலும் எழுந்து ஓடுபவர் பின்பக்கம் ஓட இயலாது, முன்பக்கமே எழுந்து ஓட வேண்டும். ஓடுபவர் பிடிபட்டால், பிடிபட்டவர் பிடிப்பதற்காக இப்போது அமர்ந்து கொள்வார். மற்றொரு நபர் இப்போது ஓட ஆரம்பிப்பார்.
இந்த வகை விளையாட்டு பாண்டி நாட்டு முறை என தேவநேயப் பாவாணர் வகைப்படுத்துகிறார். இது வேட்டை செயலில்; இருந்து வந்திருக்கலாம் என்றும், தொடுகிறவன் வேட்டைக்காரன் என்றும், ஓடுகிறவன் வேட்டை விலங்கென்றும், எழுப்பப்படுகிறவன் வேட்டை நாய் போலவும் ஆவார் என்று குறிப்பிடுகிறார்.
இப்போது சோழ நாட்டு முறையாக குறிப்பிடப்படும் சூ விளையாட்டைப் பார்ப்போம்.
வகை 2: இந்த விளையாட்டை ‘சூ” என்னும் தனிப்பெயரில் வழங்குவது சோழ நாட்டில் தான்.
இந்த விளையாட்டில் 6 நபர்களுக்கு மேல் விளையாடுவர். இதில் இரண்டு அணியாகப் பிரிந்து கொள்வர். இரண்டு கட்சிகளிலும் ஒருவர் மட்டும் நிற்பர் ஒருவர் ஓடுபவராகவும் மற்றவர் தொடுபவராகவும் இருப்பர். இரு அணியினரும் ஒரு மீட்டர் இடைவெளியில் எதிர் எதிர் பக்கம் பார்த்து அமர்ந்திருப்பர். அணி 1யில் ஒருவர் கிழக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்திருந்தால் 1 மீட்டர் இடைவெளிவிட்டு அணி 2 யில் ஒருவர் மேற்குப்பக்கம் பார்த்து அமர்ந்திருப்பார். இவ்வாறு மாற்றி மாற்றி உட்கார்ந்திருப்பர். இப்போது ஓடுபவரை பிடிக்க முடியாமல் போனாலோ அல்லது  சோர்வடைந்தாலோ பிடிக்கும் அணி தனது அணியில் உள்ள நபரை ‘சூ”  என எழுப்புவார். அதே போன்று ஓடுபவர் பிடிபட்டால் அவர் அமர்ந்து கொண்டு தனது அணி நபரை எழுப்புவார். மற்ற விதிமுறைகள் அனைத்தும் பாண்டி நாட்டு முறையே ஆகும். 
இந்த விளையாட்டு முறையில் தற்போது ஆசிய அளவில் கோ கோ என்னும் விளையாட்டு இந்த விதிமுறைகளில் சிறிது மாற்றத்துடன் விளையாடப்பட்டு வருகிறது. இதில் சூ என்பதற்குப் பதில் கோ என்று உசுப்புவர். மேலும், கடைசியில் உள்ள நபரின் தலையைத் தொட்டு திரும்புவதற்குப் பதில் எல்லையில் ஒரு கம்பு ஒன்று நட்டு வைக்கப்பட்டிருக்கும் . ஒரே அணியினரே எதிரெதிரே அமர்ந்திருந்து பிடிக்கும் வகையில் கோ கோ விளையாட்டின் அமைப்பு இருக்கும்.
குறிப்பிட்ட நேரத்தில் எதிரணி வீரர்களில் எவ்வளவு நபர்களை எதிரணி பிடிக்கிறார்கள் என்பதே இவ்விளையாட்டின் திறன் ஆகும்.
நன்றி:
தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
படம்:
https://www.clipart.email/clipart/sport-kho-kho-clipart-446474.html


No comments:

Post a Comment