Friday, 3 April 2020

நமது விளையாட்டுக்கள் - 4


தாயம்:
தாயம் விளையாட்டு சதுரங்கத்தின் மாற்று வடிவமாகக் கருதப்படும் விளையாட்டுகளில் ஒன்றாகும். அதே போன்று உள்ள மற்றொரு விளையாட்டு பரமபத சோபானப் பட விளையாட்டாகும். தாயம் என்ற சொல்லுக்குத் தமிழில் சொத்துரிமை என்று பொருள். இந்த இரண்டு ஆட்டங்களிலும் ஆடுபவனத வலிமை என்பது தாயக்கட்டை (கவறாடுகருவி, வட்டு, பகடைக்காய்) அவனுக்குத் தருகிற வலிமைதான்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் கோட்டையில் தாயத்திற்கான ஆடுகள கீறல்களும் காணப்பட்டன.

அரிக்கமேடு, உறையூர், அழகன்குளம், படைவீடு ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாய்வுகளில் பக்கங்களில் புள்ளி எண் இட்ட நீள்செவ்வக வடிவத்தில் அமைந்த தாயக்கட்டைகள் கிடைத்துள்ளன. இவை சுடுமண்ணாலும் அரிய வகை கற்கலாலும் ஆக்கப்பட்டவை. மதுரை, திருநெல்வேலிப் பகுதிகளில் வெண்கலத்திலான நீள் செவ்வக வடிவத்தில் அமைந்த தாயக்கட்டைகள் இன்றும் கிடைக்கின்றன.
தனிச்சொத்துரிமையின் நியாயப்பாட்டை மனித மனங்களில் பதித்து வளர்த்ததில் சூதாட்டத்திற்கும், சூதாடு கருவிகளுக்கும் கணிசமான பங்கு உண்டு.
நரேந்திரநாத் பட்டாச்சார்யா தன் நூல் ஒன்றில் ‘அரசனும் சூதாடு கருவியும்” என்ற நூலில் இது பற்றி விவாதித்துள்ளார்.
சூதாட்டத்திற்கும் விளையாட்டுக்கும் தொடர்பு உண்டு என்பதை நிகழ்கால உலக அரசியலிலும் காணலாம். பன்னாட்டு வணிக நிறுவனங்கள் கவர்ச்சிகரமான பரிசுத் தொகைகளின் மூலம் விளையாட்டு வீரர்களையும் தடகள வீரர்களையும் சூதாட்ட உணர்வுடையவர்களாக மாற்றியிருக்கின்றன.
இந்த விளையாட்டு சூதாட்டம், சொக்கட்டான், சோழி விளையாட்டு என்றழைக்கப்படுகிறது.
மகாபாரதத்தில் பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்றதை நாம் அனைவரும் அறிவோம்.
நளவெண்பாவில் நலன் கலியின் மூலம் புட்கனரால் தோற்கடிக்கப்பட்டு நாட்டை இழப்பதாக படித்திருப்போம். மேலும், சில ஆராய்ச்சிகள் மாயன் பழங்குடியினர் இந்த விளையாட்டை விளையாடிய குகைச் சித்திரங்கள் கிடைத்திருப்பதாகச் சொல்கின்றன.

ஆடுபவர்களின் எண்ணிக்கை: 2 முதல் 4 நபர்கள்
ஆடுகளம்: தரையில் அல்லது பலகையில் படம் வரைந்து விளையாடலாம்.
இரண்டு வகையான ஆடுகளங்கள் உள்ளன.
1. 3 x 6  கட்டம்
2. 7 x 7 கட்டம்
ஆடுகருவிகள்: தாயக்கட்டை, சோழிஃசோகிஃசோவி, ஒரு பக்கம் தேய்க்கப்பட்ட புளியங்கொட்டை இவை அனைத்தும் உருட்டுவதற்கு.
காய்கள் நான்கு பேர்கள் ஆடுவதாக இருந்தால் வெவ்வேறு காய்கள் வைத்திருத்தல் நலம் உதாரணமாக சிறு கற்கள், பெரிய அளவுடைய விதைகள், உடைக்கப்பட்ட விளக்கமாற்றுக் குச்சிகள், உடைந்த விளையல்கள், பாசி மணிகள் போன்றவை
ஆட்ட விதிமுறைகள்:

தாயக்கட்டை:
தாயக்கட்டை உபயோகித்தல் சிறந்தது. தாயக்கட்டை நீள் செவ்வ வடிவத்தில் அமைந்திருக்கும் கீறல் கோடு அல்லது கீறல் புள்ளி இருக்கும் அதாவது மொத்தம் இரண்டு கட்டைகள் அதில் ஒவ்வொரு கட்டையிலும் ஒரு பக்கம் ஒரு கீறல் கோடு/புள்ளி, இரண்டாவது பக்கத்தில் இரண்டு கீறல் கோடு/புள்ளிகள் மூன்றாவது பக்கத்தில் 3 கீறல் கோடுகள்/புள்ளிகளும் நான்காவது பக்கத்தில் வெறுமையாகவும் இருக்கும்.
இரண்டு கட்டைகளையும் உருட்டும் போது
ஒரு கட்டையில் ஒரு கோடு/புள்ளியும் மற்றொரு கட்டையில் வெற்றுப் பக்கமும் இருந்தால் அது தாயம் ஒன்று என அழைக்கப்படுகிறது.
இரண்டு கட்டைகளில் ஒரு ஒரு கோடுகள் மட்டும் உருட்டுகையில் விழுந்தால் இரண்டு மதிப்பு/ஒரு கட்டை வெற்றுப் பக்கமும் இன்னொரு கட்டையில் இரண்டு கோடும் இருந்தால் -  எண்ணின் மதிப்பு 2 (புள்ளிக்கு பதிலாக கோடு மாதிரியினை வைத்து பின்வருவனவற்றை விளக்குகிறேன்)
இரண்டு கட்டைகளில் ஒரு கட்டையில் ஒரு கோடும், மற்றொரு கட்டையில் இரண்டு கோடும் அல்லது ஒரு வெற்றுப் பக்கம் கொண்ட கட்டையும் மற்றொரு கட்டையில் 3 கோடும் இருந்தால் - எண்ணின் மதிப்பு 3 ஆகும்
இரண்டு கட்டைகளில் ஒரு கட்டையில் ஒரு கோடும், மற்றொரு கட்டையில் மூன்று கோடும் அல்லது ஒரு கட்டையில் ஒரு கோடும் மற்றொரு கட்டையில் 3 கோடும் இருந்தால் - எண்ணின் மதிப்பு 4 ஆகும்
இரண்டு கட்டைகளில் ஒரு கட்டையில் இரண்டு கோடும், மற்றொரு கட்டையில் மூன்று கோடும்; இருந்தால் - எண்ணின் மதிப்பு 5 ஆகும்
இரண்டு கட்டைகளில் ஒரு கட்டையில் மூன்று கோடும், மற்றொரு கட்டையில் மூன்று கோடும்; இருந்தால் - எண்ணின் மதிப்பு 6 ஆகும்
இரண்டு கட்டைகளுமே உருட்டப்படும் போது வெற்றுப் பக்கங்களைக் காட்டினால் அதன் மதிப்பு 12 ஆகும்.
இதே போன்று சோழிகள் அல்லது புளியங்கொட்டைகள் உருட்டப்படுகிறது என்றால் ஆறு சோழிகள்/புளியங்கொட்டைகள் பயன்படுத்த வேண்டும்.
எத்தனை சோழிகள் திறந்திருக்கிறதோ அத்தனை எண்கள் கணக்கிடப்பட வேண்டும். அதாவது 1,2,3,4,5,6. ஆறு சோழிகளும் மூடிய நிலையில் காணப்பட்டால் அதன் மதிப்பு 12 ஆகும். இதே போன்று புளியங்கொட்டையில் விளையாண்டால் தேய்க்கப்பட்ட பகுதிகள் விழுவதைக் கொண்டு எண் கணக்கிடப்பட வேண்டும். அதாவது 1,2,3,4,5,6. ஆறு புளியங்கொட்டைகளின் தேய்க்கப்படாத பகுதிகள் காணப்பட்டால் அதன் மதிப்பு 12 ஆகும
முக்கியக் குறிப்பு:
எண் 1, 5, 6 மற்றும் 12 ஆகிய எண்கள் விழுந்தால், ஆடுபவர் மறுஉருட்டலை மேற்கொள்ளலாம். 2,3,4 ஆகிய எண்களுக்கு மறு உருட்டல் இல்லை.
உங்கள் வெற்றியை நிர்மாணிப்பதற்கு நீங்கள் எந்தளவு தந்திரமாக உருட்டுகிறீர்கள் என்பது முக்கியம்.
விளையாடும் முறை:
ஓவ்வொருவரும் தங்களுக்கென ஒரு மனையை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் ஆறு காய்கள் வைத்திருப்பர். காய்களை சிப்பாய்கள் என்று அழைப்போரும் உண்டு. ஆட்டம் துவங்குவதற்கு முன்னர் ஒவ்வொருவரும் தங்கள் காய்களை தங்கள் மனைகளுக்கு வெளியே வைத்திருப்பர்.
தன்னுடைய ஆட்டத்தை தங்களுடைய மனையில் இருந்து துவக்க வேண்டுமானால் தாயம் ஒன்று விழ வேண்டும், இது முழுக்கு என்று சொல்லப்படும். அதற்குப் பின் ஒவ்வொரு உருட்டல்களுக்கும் காயை நகர்த்த முடியும்.  ஒவ்வொரு தாயம் ஒன்றிற்கும் ஒரு காயை இறக்கலாம்.
ஒரு ஆட்டத்தில் முதற்காய்க்கான தாயம் விழும் முன் மறு ஆட்டத்திற்கான எண்கள் விழுந்து பின் தாயம் விழுந்தால், மறு ஆட்டத்திற்கான எண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
7x7 கட்டத்தில் நான்கு மனைகள் இருக்கும். ஒருவர் தனக்கென ஒரு மனையைத் தேர்வு செய்ய வேண்டும்.  தன் மனையில் இருந்து வலப்பக்கமாக தமது காய்களை நகர்த்துவார். இறுதி மனைக்கு அவர் சென்று சேரும் போது அது பழம் என்று அழைக்கப்படும். ஆரம்பத்தில் மனை என அழைக்கப்படும் குறுக்குக் கோடுகளைக் கொண்ட கட்டம் தனது மனையில் இருந்து அதே போன்ற எதிர்கொள்ளும் அடுத்தக் கட்டங்கள் மலை என்று அழைக்கப்படும். இங்கே காய்கள் வந்து நிற்பதற்கு மலையேறுதல் என்று பெயர். மலையில் நான்கு நபர்களின் காய்கள் கூட நிறுத்தலாம். மலையில் வைத்திருக்கும் போது காய் வெட்டப்படாது. தன் காயை பழமாக ஆக்குவதற்குள் தன்னுடைய மனை தவிர்த்து ஏழு மலைகளை கடந்து எட்டாவது மலையில் பழமாக மாற்றுவார். இதனை எடுத்து வெளியில் வைத்துவிட வேண்டும் இதற்கு ‘பழம் எடுத்தல்”என்று பெயர்.
தன்னுடைய மனையில் இருந்து வலப்பக்கமாச் சென்று ஒரு சுற்று சுற்றி வந்து தனது மனைக்கு முன் உள்ள கட்டத்தில் இருந்து அவர் உள்கட்டத்திற்கு உட்புக வேண்டும்.
உட்புகுவதற்கு நீங்கள் எதிராளியின் ஏதாவது ஒரு காயை வெட்டியிருக்க வேண்டும். ஒரு வேளை வெட்டவில்லையெனில் வெட்டும் வரை அந்த இடத்திலேயே நிற்கலாம். இல்லையெனில் நீங்கள் சுற்றிய வெளிப்புறக் கட்டங்களை உங்கள் மனையை கடந்து மறுபடியும் சுற்றலாம்.
நீங்கள் எதிராளியின் காயை வெட்டினால், அதற்காக நீங்கள் வெட்டாட்டம் என்று தொடர்ந்து தாயக்கட்டை உருட்டலாம்.
அதே போன்று நீங்கள் கடந்து செல்லும் போது உங்கள் பாதையில் எதிராளியிருந்தால் அவரை வெட்டி விட்டுத்தான் நீங்கள் கடந்து செல்ல வேண்டும். உங்கள் காய் வெட்டுப்பட்டால் மறுபடி தாயம் போட்டுத்தான் அந்தக் காயை உள் கொணர முடியும்.
நீங்கள் செல்லுகையில் உங்கள் காய்கள் இருந்தால் அந்தக் காயோடு இணைத்து செல்லலாம். அல்லது உங்கள் காயை கடந்து செல்லலாம்.
ஆடுபவருக்கு நகர்த்துவதற்கு காய்கள் இருந்தும், அவர் ஒரு சுற்றில் உருட்டும் எண்களுக்கு அவரால் காய்களை நகர்த்த முடியவில்லையென்றால், அவ்வாட்டத்திற்கு அவரால் காய்களை நகர்த்த இயலாது.
ஒருவர் தன்னுடைய உருட்டலில் இரண்டு காய்களை கூட நகர்த்த முடியும். அதே போன்று தன்னுடைய காய்களை இரண்டு காய்களாக மூன்று காய்களாக ஓரிடத்தில் கூட சேர்;த்து நகர்த்தலாம். அதேபோல் தன்னுடைய இரட்டை காய்களை ஒரு மலையில் சேர்த்துவிட்டார் என்றால் அதன் பிறகு அந்தக் காய்களை தனியாக நகர்த்திக் கொள்ளலாம்.
ஒருவருக்கு தாயம் போட்டால் எதிராளியின் காயினை வெட்டுவதற்கு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், தன்னுடைய காயே இன்னும் மனையேற்றாமல் வெளியே இருக்கிறதென்றால், தன் காயை மனையேற்றுவதற்குத் தான் அந்த தாயத்தைப் பயன்படுத்த வேண்டும்.
ஒருவர் தன்னுடைய கடைசி காயைப் பழமாக்கப் போகிறார் என்றால் எண் 3 போட்டால் பழமாகிவிடும் என்றால் தாயம் மற்றும் 2 எண்ணோ அல்லது எண் 3 மட்டும் தனியாக விழுந்தால் மட்டுமே ஆட முடியும். இல்லையெனில் அவர் காய் நகர்த்த இயலாது.
முதலில் எவர் தன்னுடைய ஆறு காய்களையும் பழமாக்குகிறாரோ அவரே வென்றவராகிறார்.
சில சமயங்களில் நான்கு பேர் கொண்ட ஆட்டத்தில், எதிரெதிரே அமர்ந்திருப்பவர்கள் ஓரணியாகக் கொண்டு அவர்களில் ஒருவரின் மனையை தங்கள் ;அணிக்குத் தேர்ந்தெடுத்துக் கொண்டு , ஈரணியாகவும் ஆடலாம்.




 இந்த ஆட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழேயுள்ள சுட்டியினை சொடுக்கி பார்க்கவும்

 https://www.youtube.com/watch?v=jwUB_kRcmms
https://www.youtube.com/watch?v=UllWzxSSgrw

நன்றி:

1. தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
2. பண்பாட்டு அசைவுகள், தொ. புரமசிவன், காலச்சுவடு பதிப்பகம்,2016
3. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
4. https://www.youtube.com/watch?v=jwUB_kRcmms
5. https://www.youtube.com/watch?v=UllWzxSSgrw

No comments:

Post a Comment