Thursday, 30 April 2020

நமது விளையாட்டுக்கள் 28

ஒரு குடம் தண்ணீர் ஊற்றி..

இவ்விளையாட்டில் ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’ என்ற பாடலுடன் துவங்குவதால் விளையாட்டின் பெயரும் ஒரு குடம் தண்ணீர் ஊற்றி என்று அழைக்கப்படுகிறது.

இந்த விளையாட்டின் தோற்றம்:
 அரண்மனை காவலில் இருந்த ஒரு மகமதிய காவலர் அரண்மனைக்குப் பூப்பறிக்க வந்த குழந்தையை பிடித்து வைத்துக் கொண்டபோது, அக்குழந்தையின் பெற்றோர் எவ்வளவோ பொருள் கொடுக்க முன்வந்தும் விடாமல், கறிசோறு தருகிறேன் என்று சொன்னவுடன் விடுவதாக அமைந்த செய்தியையொட்டி இவ்விளையாட்டு அமையப்பெற்றிருக்கலாம் என தேவநேயப் பாவாணர் தமது தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இதில் ஒரு வார்த்தை து**கா என்பது ஒரு இனத்தின் பெயரை அநாகரீகமாக குறிப்பிட வேண்டாம் என்பதால் இப்பாடலில் இயல்பிற்கு மாறாக குலுக்கா என்று குறிப்பிடுகிறேன். நமது நோக்கம் விளையாட வேண்டும் என்பதுதான். அதிலிருந்து நல்விடயங்கள் மட்டும் எடுத்துக் கொண்டால் போலும் என்பதால். மாற்றியமைக்கிறேன். விளையாட்டுக் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் பொறுத்துக்கொள்வார்களாக!

இந்த விளையாட்டிற்கு குறைந்தது ஐந்து நபர்களாவது இருந்தால் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும்.

விளையாடும் முறை:
இதில் இரண்டு நபர்கள் தானாக முன்வந்து எதிர்எதிரெ நின்று கொண்டு இருவரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு தலைக்கு மேல் கைகளை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

இப்போது மற்ற நபர்கள் ஒருவர் பின் மற்றவர்கள் இருவரிடையேயும் மாறி மாறி பின்வருமாறு பாடல் பாடிக்கொண்டே புகுந்து வர வேண்டும்.

“ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்துச்சாம்”
“இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி இரண்டு பூ பூத்துச்சாம்” என்று துவங்கி
“பத்துக் குடம் தண்ணீர்; ஊற்றி பத்துப் பூ பூத்துச்சாம்” என்று பாடி முடிக்கும் போது எந்த நபர் கைகோர்த்து நிற்பவர்கள் மத்தியில் கடந்து செல்கிறாரோ அவரை கை கோர்த்து நிற்பவர்கள் பிடித்துக் கொள்வர்.

இப்போது கோரசாக சுற்றிவந்தவர்களுக்கும் கைகோர்த்து இருப்பவர்களுக்கும் உரையாடல் நடக்கும்.

மற்றவர்கள் : விடுடா குலுக்கா!
கைகோர்த்து இருப்பவர்: விடமாட்டேன் மலுக்கா!
மற்றவர்கள் குனிந்து கணுக்காலில் கைகளை வைத்துக்கொண்டு
மற்றவர்கள் : இம்மாம் இம்மாம் பொன் (தங்கம்) தருகிறேன்விடுடா குலுக்கா!
கைகோர்த்து இருப்பவர்: விடமாட்டேன் மலுக்கா!
மற்றவர்கள் கொஞ்சம் நிமிர்ந்து முழங்காலில் கைகளை வைத்துக்கொண்டு
மற்றவர்கள் : இம்மாம் இம்மாம் பொன் (தங்கம்) தருகிறேன் விடுடா குலுக்கா!
கைகோர்த்து இருப்பவர்: விடமாட்டேன் மலுக்கா!
மற்றவர்கள்; நிமிர்ந்து இடுப்பில்  கைகளை வைத்துக்கொண்டு
மற்றவர்கள் : இம்மாம் இம்மாம் பொன் (தங்கம்) தருகிறேன்; விடுடா குலுக்கா!
கைகோர்த்து இருப்பவர்: விடமாட்டேன் மலுக்கா!
மற்றவர்கள்; தோள்பட்டையில்  கைகளை வைத்துக்கொண்டு
மற்றவர்கள் : இம்மாம் இம்மாம் பொன் (தங்கம்) தருகிறேன் விடுடா குலுக்கா!
கைகோர்த்து இருப்பவர்: விடமாட்டேன் மலுக்கா!
மற்றவர்கள்;; தலையில் கைகளை வைத்துக்கொண்டு
மற்றவர்கள் : இம்மாம் இம்மாம் பொன் (தங்கம்) தருகிறேன் விடுடா குலுக்கா!
கைகோர்த்து இருப்பவர்: விடமாட்டேன் மலுக்கா!
மற்றவர்கள்; தலைக்குமேல்  கைகளை உயர்த்தி வைத்துக்கொண்டு
மற்றவர்கள் : இம்மாம் இம்மாம் பொன் (தங்கம்) தருகிறேன் விடுடா குலுக்கா!
கைகோர்த்து இருப்பவர்: விடமாட்டேன் மலுக்கா!
மற்றவர்கள் : ஆட்டுக்கறியும் சோறும் தருகிறேன் விடுடா குலுக்கா!
கைகோர்த்து இருப்பவர்: இந்தா விடறேன் விடறேன்…
என்று அவரை விட்டுவிடுவர். இத்துடன் விளையாட்டு முடிந்துவிடும். மீண்டும் விளையாட விருப்பம் இருந்தால் மற்ற இருவர் கைகோர்த்து நிற்க ஆட்டம் தொடரும்

எண்ணிக்கைக்கான பயிற்சி கிடைக்கிறது. மேலும் குழு ஒற்றுமையாக மீட்பதற்கு போராடும் எண்ணம் உருவாகிறது.

நன்றி:
தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
படம்:
https://girisubiramaniam.wordpress.com/2016/06/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F/

No comments:

Post a Comment