Wednesday, 22 April 2020

நமது விளையாட்டுக்கள் 22

மெல்ல வந்துக் கிள்ளிப் போ...

இந்த விளையாட்டில் ஒரு அணியின் உறுப்பினரை மற்ற அணியில் இருந்து சத்தம் போடாமல் நிதானமாக வந்து கிள்ளி விட்டு செல்வதால் இந்த விளையாட்டிற்கு இப்பெயர் வந்திருக்கலாம்.
இந்த விளையாட்டிற்கு 10 நபர்களாவது இருப்பது நலம்.

விளையாடும் முறை:
முதலில் இரண்டு தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு, இந்த விளையாட்டில் ஆட்களை ஏதேனும் முறையில் தேர்ந்தெடுத்து இரண்டு சம எண்ணிக்கையில் உள்ள அணியாக வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு அணியிலும் உறுப்பினர்களுக்கு ஒரு பூவின் பெயரோ (பொதுவாக பூவின் பெயர் வைப்பதுண்டு), விலங்கின் பெயரோ வைப்பர். ஒரு அணியின் உறுப்பினர்களுக்கு என்ன பெயர் வைக்கிறார் என்பது மற்ற அணியினருக்குத் தெரியக்கூடாது. அணி உறுப்பினர்களுக்குப் பெயர் வைத்தவுடன்,  தேர்ந்தெடுப்பு முறையில் எந்த அணி கிள்ளப் (pinஉh) போகிறார் என்று முடிவெடுக்கப்படும். அதனடிப்படையில் கிள்ளப்போகும் அணி 1 என வைத்துக் கொள்வோம். கிள்ளு வாங்குபவர்கள் அணி 2 என வைத்துக் கொள்வோம். இரண்டு அணிகளும் ஒரு மூன்று மீட்டர் இடைவெளியில் எதிரெதிரே வரிசையாக அமர்ந்திருப்பர். அணி 1 இன் அணித் தலைவர் அணி 2 அணி உறுப்பினர்கள்  அமர்ந்திருப்பவர்களுக்குப் பின்னே செல்வார். பிறகு அந்த அணியின் ஏதேனும் ஒரு உறுப்பினரின் கண்ணைப் பொத்துவார். கண்ணைப் பொத்தியவுடன் ‘தலையை வெட்டி நாய்க்குப் போடு” என்று சொல்வார். சொன்னவுடன் அணி 2 உறுப்பினர்கள் (கண்ணைப் பொத்தியவர் தவிர) அனைவரும் தலையைக் கண்ணை மூடிக் கொண்டு குனிந்து கொள்வர். இப்போது அணி 1 இன் தலைவர் ‘மல்லிகைப் பூவே... மல்லிகைப் பூவே...  மெல்ல வந்து கிள்ளிப் போ...” என்று உரக்கப்பாடுவார். உடனே அணி 1 இல் இருந்து மல்லிகைப் பூ என்று தனக்குப் பெயரிட்டுக் கொண்ட நபர் மெதுவாக சத்தம் எழுப்பாமல் வந்து அணி 1 இன் தலைவர் அணி 2 இல் யாருடைய கண்ணைப் பொத்தியிருக்கிறாரோ அவரது தொடையிலோ அல்லது கையிலோ கிள்ளி விட்டு ஓசை எழுப்பாமல் மெல்ல தன் இடத்திற்கு வந்து அமர்வார். பிறகு அணி 1 இன் தலைவர் ‘கை ஆட்டு, கால் ஆட்டு” என்றவுடன் அணி 1 இன் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கைகளையும் கால்களையும் ஆட்டிக் கொண்டிருப்பர். இப்போது அணி 1 இன் தலைவர் அணி 2 இல் பொத்தியிருந்த நபரின் கண்களை திறந்து விடுவார். கிள்ளப்பட்ட நபர் இப்போது தன்னைக் கிள்ளியது யார் என்று சரியாக சொல்ல வேண்டும். அப்படி சொல்லிவிட்டால் கிள்ளப்பட்ட அணி வெற்றி பெற்றதாக அர்த்தம். இல்லையெனில் அணி 1 மறுபடியும் அணி 2 இன் உறுப்பினர்களை கிள்ளுவர். ஓவ்வொரு முறை ஆடும் போது தங்கள் பெயர்களை கிள்ளும் அணி மாற்றிக் கொள்ளலாம். உதாரணமாக முதலில் மல்லிகை பெயர் வைத்திருந்தவர் இப்போது முல்லை என்று பெயர் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த விளையாட்டின் மூலம் கூர்ந்து கவனிக்கும் திறன் முக்கியமாக கண்கள் மூடப்பட்டிருந்தாலும் எவ்வாறு நோக்குகிறார்கள் என்னும் திறனை வளர்க்க இந்த விளையாட்டு உதவுகிறது. மேலும் குழு ஒற்றுமைக்கும் உதவுகிறது. 

நன்றி.
படம்:
https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/210842-.html

No comments:

Post a Comment