Sunday, 12 April 2020

நமது விளையாட்டுக்கள் 14

பொம்மை:
இந்த விளையாட்டில் பங்குபெறுபவர்கள் பொம்மை போல் அசையாமல் நிற்கும் நிகழ்வுகள் வருவதால் இந்த விளையாட்டிற்கு பொம்மை என்று பெயர்.

ஆட்டமுறை:
இந்த விளையாட்டில் ஆட்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் இரண்டு அணியாகப் பிரிந்து கொள்ளலாம். இல்லையெனில் ஒருவர் மட்டும் விளையாட்டினை நடத்துவதாகக் கொள்ளலாம். ஆனால், இரண்டு அணியினராக விளையாடும் போது ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
இரு அணிக்கும் தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தலைவர் பெரும்பாலும் தானாகவோ அல்லது பெரும்பாலானராலோ ஒருமனதாகத் தேர்ந்தெடுப்பர். தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் பெரும்பாலும் பிரச்சனைகள் வருவதில்லை. தலைவர் ஒருவர் மாறி ஒருவர் அங்கு இருக்கும் நபர்களில் ஒவ்வொருவராக தனது அணிக்கு சேர்த்துக் கொள்வர் அல்லது இரண்டு இரண்டு நபராக சென்று கவர்ச்சிகரமான பெயர்களுடன் வருவர். அதாவது ‘வானத்தைத் தாண்டும் கருப்புக் குதிரை வேண்டுமா? வேலியைத் தாண்டும் வெள்ளைக் குதிரை வேண்டுமா?”
‘பரந்து விரிந்து வானம் வேண்டுமா? ஆழமான சமுத்திரம் வேண்டுமா?” என்று பலவித பெயர்களில், நிறங்கள், மலர்கள், பறவைகள், நடிகர் நடிகைகள் என பல விதங்களில் பெயர்களை இட்டு வருவர். அவர்களை ஒருவர் மாற்றி ஒருவர் முறையிட்டு அழைக்க வேண்டும். அதாவது முதல் முறை தலைவர் 1 எனக்கு ‘வேலியைத் தாண்டும் வெள்ளைக் குதிரை வேண்டும்” என்றால் பெயர் சூட்டி வந்தவர்களில் யார் அந்த பெயரை சூட்டி இருந்தாரோ அவர் தலைவர் 1 அணிக்குச் செல்வார் அவருடன் வந்தவர் தலைவர் 2 அணிக்குச் செல்வார். அடுத்த இரண்டு நபர்கள் பேர் வைத்து வரும்போது இந்தமுறை தலைவர் 2 தனக்குப் பிடித்த பதிலைச் சொல்வார் அதனடிப்படையில் இரு தலைவர்களும் அணி அமையும். இவர்களைக் கொண்டு விளையாடப்படும். குறைந்து 10 நபர்களாவது இருந்தால் இந்த ஆட்டம் சுவாரசியமாக இருக்கும்.
இரு அணியினராக இருந்தால் ஒரு அணியினர் வட்டத்திற்கு உள்ளே இருப்பர். மற்றொரு அணியினர் அவர்களைச் சுற்றி சற்று இடைவெளி விட்டு வட்டமாக நிற்பர். உள்ளே நிற்பவர்கள் ‘சுற்றலாம்” என்று சொன்னவுடன் வட்டமாக நிற்கும் அணியினர்  சுற்றி வருவர் (இசைச் சுற்று விளையாட்டில் சுற்றுவது போல) சுற்றிக் கொண்டிருக்கும் போது உள்ளே நிற்கும் அணியினரின் தலைவர் ‘பொம்மை” என்று உரக்கச் சத்தமிடுவார். உடனே சுற்றிக் கொண்டிருப்பவர்கள் அசையாமல் சிலை போல அல்லது பொம்மை போல நிற்பர். உடனே உள்ளே இருந்த நபர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆளைத் தேர்ந்தெடுத்து அவர்களை சிரிக்க வைக்க அல்லது அந்த நிலையில் இருந்து அவர்களை மாற்ற முயற்சி செய்வர். இதற்காக அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம். உள்ளே இருப்பவர்கள் அவர்களை சிரிக்க வைக்க நகைச்சுவைகள், அல்லது அவர்களைப் பற்றி தெரிந்திருப்பதால் பொம்மையாக நிற்பவர்கள் என்ன சொல்லால் சிரிப்பார்கள் என்று தெரிந்து அதனைச் சொல்லிச் சிரிக்க வைக்க முயல்வர், நிறைய சேஷ்டைகள் செய்வர். அவ்வாறு செய்து அனைவரையும் சிரிக்க வைத்துவிட வேண்டும். அப்படி சிரிக்க வைத்துவிட்டால் பொம்மையாக நிற்பவர்கள் தோற்றவர்கள் ஆவார். அவர்கள் வெற்றி பெற்ற அணியினரை உப்பு மூட்டை தூக்க வேண்டும். உப்பு மூட்டைத் தூக்கியப் பின் தோல்வியடைந்த அணி இப்போது வட்டத்தின் உள்ளே இருப்பார்கள் வெற்றி பெற்ற அணி வட்டமாக வந்து சுற்றி வருவர். முன்பு போல் ஆட வேண்டும்.

பொம்மை என்று இல்லாமல் இரண்டு அணியாகப் பிரித்து எதிர் எதிரே நிற்க வைத்து ஒரு அணியினர் எதிர் அணியினரை சிரிக்க வைக்க முயலும் விளையாட்டுகள் மேலாண்மை பயிற்சிகளில் நடத்தப்படுவதுண்டு.

ஒருவர் மட்டும் நடத்துவதாக இருந்தால் அவர் மட்டும் வட்டத்தினுள் இருப்பார், அவர் பொம்மை என்று சொன்னதும், இவரே அனைவரிடமும் சென்று அவர்களை சிரிக்க வைக்க வேண்டும். அப்படி முடியவில்லையெனில் மறுபடியும் இவரே நடத்துவார். சிரிக்க வைத்துவிட்டால் சாட்.. பூத்.. திரி... என்ற முறையில் மற்றவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.


பொம்மையாக இருப்பவர் எதிரணியினர் சிரிக்க வைக்க முயலும் போது தனது பல்லைக் கடிக்காமல் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் சரியாக ஆடியுள்ளார் என அர்த்தமாகும். ஏனெனில் சிரிப்பை அடக்குவதற்கு பலர் பல்லைக் கடித்துக்கொண்டு இருப்பதுண்டு.

அதே போல் பொம்மையாக நிற்பவர் கண்களையும் மூடக் கூடாது.
சிரிக்க வைக்க முயல்பவரும் பொம்மையாக நிற்பவரைத் தொடக்கூடாது.

இந்த விளையாட்டின் மூலம், பொறுமையினையும், பிரச்சனைகள் வந்தாலும் அதனை நிதானமாக எதிர்கொள்ளும் திறன் வளர்கிறது. சுருக்கமாக சொன்னால், உள்ளுக்கும் சிரிப்பு வந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதும் ஒருவகையில் எமொஷனல் இண்டலிஜன்ஸ் தான்.




No comments:

Post a Comment