Monday, 13 April 2020

அம்பேத்கர்

சில நாட்களுக்கு முன்பு செய்தித்தாளில் பார்த்தேன் ஒரு காவல் அதிகாரி தான் பணிபுரியும் காவல் நிலையத்தில் உள்ள அம்பேத்கரின் சிலையை குப்பையில் போட்டிருக்கிறார். அதற்கு பதில் ‘மேலதிகாரிகளின் உத்தரவு என்று...”இது போன்ற சம்பங்கள் அவ்வப்போது நடந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன. அதற்குக் காரணம்;, அவர் மேல் பூசப்பட்டுள்ள சாதிய சாயம். அவரைப் பற்றி புரிந்து கொள்ளாமை, ஏனெனில் அவரைப் பற்றி தெரிந்திருக்கவில்லை, படிப்பின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுத்த அவரைப் பற்றி படியாமை போன்றவாகும்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் ஒரு தேசிய தலைவர் உலக அளவில் அவர் கொண்டாடப்படுவதால் அவர் உலகத் தலைவர் எனவும் அழைக்கலாம். லண்டன் மியூசியத்தில் கூட காரல் மார்க்ஸ் உடன் ஒன்றாக இணைக்கப்பட்டு சிலை வைக்கப்பெறப்பட்டுள்ள ஒரே இந்தியர் அம்பேத்கர் என்பது உலக அளவில் அவர் கொண்டாடப்படுகிறார் என்பதற்கு இது ஒரு சிறு சான்று ஆகும். இப்போது நமது தேசத்திலிருந்து பார்க்க இருப்பதால் அவரை இங்கு தேசியத் தலைவர் என்ற பார்வையிலேயே இதை இங்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

2012 ஆம் ஆண்டில் வரலாறு தொலைக்காட்சியும், சி.என்.என்.- ஐ.பி. என். தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச் சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் இறந்து 56 வருடங்களுக்குப் பிறகு மக்கள் மனதில் சிறந்த தலைவராக இருக்கிறார் எனில் இதை விட வேறு என்ன சொல்வது? அவர் தேசியத் தலைவர்தான் என்பதற்கு மேற்சொன்ன ஒரு வாக்கெடுப்பே போதுமானதாக இருக்கும். இருப்பினும் சில சரித்திரத் தகவல்களை பதிவு செய்வது. இன்னும் அவர் தேசிய தலைவர் என்பதை பிறர் புரிந்து கொள்ள உதவும் என நினைக்கிறேன்.
1. இந்திய விடுதலைக்குப் பிறகு நாட்டின் முதல் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றவர்.
2. இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்குவதற்கான குழுவின் தலைவராக இருந்தவர். இதுதான் உலகின் எழுத்துப்பூர்வமாக உள்ள மிகப்பெரிய அரசியல் சாசனம்.
3. அம்பேத்கர் விவசாயத்தை அடித்தளமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார்.
4. நமது தேசியக் கொடியில் காணும் அசோகச் சக்கரம் அமைவதற்குக் காரணம் இவரே.
5. பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற பேரா. அமர்த்தியா சென் அவர்களும் இவரை தன்னுடைய பொருளாதாரத்தின் தந்தை எனக் குறிப்பிடுகிறார்.
6. மத்தியப் பிரதேசமும் பீகாரும் நல்ல வளர்ச்சியைக் காண்பதற்கு இந்த மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று 1950 களில் அம்பேத்கர் அவர்கள் பரிந்துரை செய்தார். ஆனால், 2000 ற்குப் பிறகு தான் சட்டிஸ்கர் மற்றும் ஜார்க்கண்டு இந்த மாநிலங்களைப் பிரித்து உருவானது.
7. சுதந்திரப் போராட்டத்தில் மற்றவர்களில் இருந்து இவருடைய தேசியவாதம் முற்றிலும் மாறுபட்டது. அம்பேத்கரின் தேசியவாதம் வெறுமனே பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியர்களுக்கு அரசியல் அதிகாரத்தை மாற்றுவதில் மட்டுப்படுத்தப்படவில்லை. இது நிலையான தேசிய மறுகட்டமைப்பைப் பற்றிய ஒரு பரந்த கருத்தை மையமாகக் கொண்டிருந்தது, அதாவது பழமை வாய்ந்த  சாதி பாகுபாடு காட்டும் சமூகத்தில் சமூக சமத்துவம் மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பை உருவாக்குவதன் மூலம் ஒரு ஜனநாயக குடியரசை உருவாக்குதலை மையமாகக் கொண்டிருந்தது. (Ambedkar: Awakening India's Social Conscience" by Narendhra Jadhav (member of the Planning Commission and the National Advisory Council (NAC)), Konark Publishers).
8. இவர் அளித்த சட்ட வடிவால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவாகவே நல்ல பல நன்மைகள் அனைவருக்குமே கிடைத்தது. தீண்டாமை கூடாது, அனைவரும் சமம் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவ ஆரம்பித்தது. கொத்தடிமை, பெண்ணடிமை போன்றவை ஒழிய அம்பேத்கரின் சட்டங்கள் வழிவகுத்தன. சுமூக நலனுக்கு குறுக்கே யார் இருந்தாலும் அவர்களை தண்டிக்க சட்டம் கொண்டு வந்ததில் அம்பேத்கருக்குப் பெரும் பங்கு உண்டு.
9. 48 வது விதியில் 14 வயது வரை கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று கொண்டு வந்ததனால் குழந்தைகள் கல்வி பெற முடிந்தது.
10. நமக்கு வேலை நேரம் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் என்று இருந்ததை 8 மணிநேரமாக மாற்றிய பெருமை இவரையேச் சாரும். மேலும், பஞ்சப்படி, விடுப்பு சலுகைகள், பணியாளர் காப்பீடு, மருத்துவ விடுப்பு, சமப்பணிக்கு சம ஊதியம், ஊதிய உயர்வு போன்றவற்றைக் கொண்டு வந்த பெருமையும் இவருக்கே உண்டு.
11. 1927, மார்ச் 19 மற்றும் 20 ஆம் நாள், தற்போதைய மகாராஷ்டிர மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் மகத் என்னும் நகரில் நகரில் அமைந்துள்ள பொதுக்குளத்தில் தலித்துகள் எனப்படும் ஒடுக்கப்பட்டோர் நீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் ‘மகத் சத்தியாகிரகம்” ஆகும். நகரின் முக்கிய குளமாக சவுகார் குளத்தை நோக்கி அம்பேத்கர் தலைமையில் பேரணியாகச் சென்று, குளத்தில் இறங்கி நீர் அள்ளிப் பருகினர். இந்த நாள் (மார்ச் 20) சமூக மேம்பாட்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
12. தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம், பக்ராநங்கல் அணை திட்டம், மகன் ஆறு பள்ளத்தாக்குத் திட்டம் மற்றும் ஹிராகுட் அணை திட்டம் போன்ற இந்தியாவின் பல்வேறு அணை திட்டத்திற்கு முன்னோடியாக இருந்தவர். மத்திய நீர் ஆணையத்;தையும் அமைத்தவர்.
13. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அவரின் முக்கிய முழக்கங்களில் ஒன்று
14. இந்து நெறியியல் சட்டத்தை கொண்டு வருவதில் ஜவஹர்லால் நேருவுக்கும் அம்பேத்கருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது சட்ட அமைச்சர் 1951 இல் பதவியைத் துறந்தார்.
மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
பெண்கள் குடும்பச் சொத்துல் பங்கு பெறும் உரிமையும், விவகாரத்து கோருதல் மற்றும் பெண் குழந்தைகளைத் தத்தெடுத்தல் ஆகியவை
ஏற்பு இல்லையெனில் விவாகரத்து கோரும் உரிமை ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக வழங்கப்பட்டுள்ளது.
விவாகரத்து ஆன மற்றும் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்யும் உரிமை
பலதார மணம் சட்ட விரோதமானது என்றும்
கலப்புத் திருமணம் மற்றும் எந்த சாதியினைச் சேர்ந்த குழந்தையாயினும் தத்தெடுத்தல் உரிமை ஆகியவை வழங்கப்பட்டிருந்தது.
பிறகு இந்த சட்டம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 1952 முதல் 1956 ஆண்டு இடைவெளியில் ஏற்கப்பட்டது.
15. அம்பேத்கர் அவர்கள் வெளிநாட்டில் பொருளாதாரம் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் ஆவார். அதுமட்டுமல்லாது. தெற்காசியாவிலேயே பொருளாதாரத்தில் இரட்டை முனைவர் பட்டம் பெற்ற முதல் நபர் ஆவார். அவர் காலத்தில் அதிகம் படித்த இந்தியர் ஆவார்.
16. இவரை கௌரவிக்க இந்திய அரசு
இவருடைய பெயரில் 13 பல்கலைக் கழகங்கள் அமைத்துள்ளன
          1.     Ambedkar University Delhi – Delhi
2.     Babasaheb Bhimrao Ambedkar Bihar University – Muzaffarpur, Bihar
3.     Babasaheb Bhimrao Ambedkar University – Lucknow, Uttar Pradesh
4.     Dr. B.R. Ambedkar National Law University – Sonipat, Haryana
5.     Dr. B.R. Ambedkar Open University – Hyderabad, Telangana
6.     Dr. B.R. Ambedkar University, Srikakulam – Etcherla, Andhra Pradesh
7.     Dr. B.R. Ambedkar University of Social Sciences – Dr. Ambedkar Nagar (Mhow), Dongargaon, Madhya Pradesh
8.     Dr. Babasaheb Ambedkar Marathwada University – Aurangabad, Maharashtra
9.     Dr. Babasaheb Ambedkar Open University – Ahmedabad, Gujarat
10.  Dr. Babasaheb Ambedkar Technological University – Lonere, Maharashtra
11.  Dr. Bhimrao Ambedkar Law University – Jaipur, Rajasthan
12.  Dr. Bhimrao Ambedkar University – Agra, Uttar Pradesh
13.  Tamil Nadu Dr. Ambedkar Law University – Chennai, Tamil Nadu
17. இவருடைய உருவம் பொதித்த நாணயங்கள், தபால்தலைகள் வெளியிடப்பட்டது.
18. இவருடைய பிறந்த நாளான ஏப்ரல் 14 தேசிய விடுமுறையாக இருக்கிறது.
19. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவர்.

உலகத் தலைவர் எனவும் அழைப்பதற்கு ஏன் தகுதி வாய்ந்தவர்?
1. அம்பேத்கர் வாழந்த காலத்தில் அவர் வைத்திருந்த புத்தகங்கள் 50,000 ற்கும் அதிகம், அதுதான் உலக அளவில் தனிநபர் வைத்திருந்த பெரிய நூலகமாக இருந்தது.
2. அம்பேத்கர்  எழுதிய புத்தகமான  "Waiting for a visa” கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பாடபுத்தகமாக இருக்கிறது.
3. கொலம்பியா பல்கழைக்கழகம் 2004 ஆம் ஆண்டில் உலகில் சிறந்த 100 அறிஞர்கள் பட்டியலைத் தயாரித்தது. அதில் முதல் பெயர் அம்பேத்கர் அவர்களுடையது தான்.
4. நாம் ஆயக்கலைகள் 64 என்று சொல்வோம். ஆனால், அண்ணல் அம்பேத்கர் 64 துறைகளில் சிறந்து விளங்கினார். 9 மொழிகள் தெரிந்து வைத்திருந்தார் (இந்தி, பாலி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரென்ச், ஜெர்மன், மராத்தி, பெர்சியன் மற்றும் குஜராத்தி)
5. 21 வருடங்களில் உலகின் பல மதங்களை கற்றறிந்திருந்தார்.
6. London School of Economics  என்ற கல்வி நிறுவனத்தில் 8 வருடங்கள் படிக்க வேண்டிய படிப்பை 2 வருடங்கள் மூன்று மாதங்களில் படித்து முடித்திருந்தார். இதற்காக இவர் தினமும் 21 மணிநேரம் செலவழித்தார்.
7. London School of Economics இல் இதுவரை அம்பேத்கர் ஒருவரே "Doctor All Science”  என்ற மதிப்புமிக்க முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார். அறிவார்ந்த பலர் முயன்றும் இன்றும் அந்தப் பட்டத்தைப் பெற இயலவில்லை.
8. 850000 நபர்களை  அம்பேத்கர் அவர்கள் புத்த மதத்திற்கு மாறினார். உலகிலேயே ஒரே இடத்தில் அதிக நபர்கள் மதமாற்றம் நிகழ்ந்த சம்பவம் இது ஒன்றே ஆகும்.
9. உலக அளவில் அதிக அளவிலான பாடல்கள் மற்றும் புத்தகங்கள் ஒரு தலைவர் பெயரால் எழுதப்பட்டதென்றால் அது இவருக்கு மட்டுமே.
10. கவர்னர் லார்ட் லின்லித்கௌ மற்றும் மகாத்மா காந்தி ஆகிய இருவருமே அம்பேத்கர் 500 புத்திசாலி பட்டதாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான அறிஞர்களை விட மேலான அறிவாற்றல் கொண்டவர் என்பதை நம்பினர்.
11. 1954 ஆல் நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் அம்பேத்கருக்கு புத்தமதத்தில் மிக உயரிய விருதான ‘போதிசத்துவா” என்ற கௌரவத்தைக் கொடுத்தது.
12. உலக அளவில் அதிக சிலைகள் இவருக்கு மட்டும்தான் வைக்கப்பட்டுள்ளது. இவருடைய பிறந்த நாளும் உலகம் முழுமையும் கொண்டாடப்படுகிறது.
13. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்த முதல் வழக்கறிஞர் இவர் ஆவார்.
14. Demonetisation  குறித்து பல கருத்துக்கள் பாபாசாகேப் அம்பேத்கர் எழுதியுள்ள The Problem of Rupee-Its Origin & its solution” தற்போதுகூட உலக அளவில் பேசு பொருளாக இருக்கிறது.
15. தான் உயிரோடு இருக்கும் போதே 1950 இல் கோல்புர் நகரத்தில் அம்பேத்கர் அவர்களுக்கு முதல் சிலை எழுப்பப்பட்டது.

#இன்று அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள்

நன்றி

1.https://www.jagranjosh.com/general-knowledge/unknown-facts-about-dr-b-r-ambedkar-1512560767-1

2.https://www.business-standard.com/article/news-ians/ambedkar-was-a-national-not-just-dalit-leader-114050100202_1.html

3.https://www.thebetterindia.com/95923/bhimrao-ambedkar-father-indian-constitution-little-known-facts-life/

Photos:
4. https://velivada.com/2015/01/24/dr-ambedkar-wallpaperphotos-for-republic-day/
5. https://www.ecopetit.cat/ecdown/iohimxb_dr-ambedkar-photos-all/

No comments:

Post a Comment