Saturday, 4 April 2020

நமது விளையாட்டுக்கள் -6


வளையல் ஜோடி

இது வளையல் விளையாட்டு என்றும் அழைக்கப்படுகிறது. நான் ஏற்கனவே சொல்லியுள்ளபடி நமது விளையாட்டுக்கள் வாழ்வியலோடு சார்ந்து விளங்கியது.
மேலும் ஒவ்வொரு விளையாட்டும் ஏதோ ஒன்றையும் கற்றுக் கொடுத்தது, அது உடற்பயிற்சி, மனப் பயிற்சி என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். இப்போது நாம் பார்க்கக் கூடிய விளையாட்டு தற்போது அழிந்து கொண்டிருக்கிறது. இதனைப் பற்றிய குறிப்புகள் புத்தகங்களில் காணப்பெறவில்லை. ஆனால், சிறுவயதில் விளையாடியதின் அனுபத்திலும், பார்த்த அனுபவத்திலும்
இந்த வளையல் ஜோடி விளையாட்டினை பகிர்கிறேன்.
விளையாட்டுக்கள் வாழ்வியலோடு தொடர்பு கொண்டது என்று ஏற்கனவே கூறியிருந்தேன். அதே போன்று  பொருட்களை மறு சுழற்சி அல்லது மறுபயன்பாடாகாவும் தங்கள் விளையாட்டுக்களில் கொண்டிருந்தனர். ஏற்கனவே பனை ஓலை காற்றாடி கூறியிருந்தேன். அதே போன்று இந்த வளையல் ஜோடி விளையாட்டிலும் அப்படித்தான். இதில் உடைந்த வளையல்களை வைத்து விளையாடப்படும் விளையாட்டு.
பொதுவாக இருவர் விளையாடும் விளையாட்டு வளையல்களின் அளவினைப் பொருத்து நான்கு நபர்கள் கூட விளையாடலாம்.
ஆடுகளம்: வீட்டிலேயே வட்டம் அல்லது கட்டம் வரைந்து விளையாடலாம்.
தேவையான பொருட்கள்:
ஜோடியான உடைந்த வளையல்கள்
பொதுவாக கண்ணாடி வளைல்களை வைத்து விளையாடப்படுவதுண்டு, பிளாஸ்டிக் வளையல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆட்டமுறை:
முதலில் ஒவ்வொரு உடைந்த வளையலிலும் அதனுடைய ஜோடியினை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு வளையிலின் இரண்டு உடைந்த துண்டுகள். துண்டுகள் சம அளவில் இருப்பது நல்லது.
முதலில் ஆடுபவர் வளையல் துண்டுகளை கட்டத்திற்குள்ஃவட்டத்திற்குள் எறிவர். ஏதேனும் வளையல் துண்டு கட்டத்தின் கோட்டைக் தொட்டுக்கொண்டோ அல்லது தாண்டியோ சென்றால் அடுத்த நபருக்கு விளையாட வாய்ப்புச் சென்று விடும். ஆதலால் வளையல் துண்டுகளைப் போடுவதை கவனமாகக் கையாள வேண்டும்.
உடைந்த வளையல்களை எறிந்த பின்னர் அவை கட்டத்திற்குள்ஃவட்டத்திற்குள் இருந்தால். எந்த வளையல் துண்டுகளை ஜோடியாக சிக்கலில்லாமல் எடுக்க முடியும் எனக் கவனிக்க வேண்டும். பிறகு, நமது ஒரு விரலை பொதுவாக ஆள்காட்டி விரலைக் கொண்டு ஜோடியில் முதலில் ஒரு வளையலில் விரலை வைத்து விரலை எடுக்காமல் தரையிலேயே தேய்த்துக் கொண்டு அதன் ஜோடி வளையல் துண்டையும் விரலை எடுக்காமல் அதே விரலால் இழுத்துக் கொண்டு கட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும். அப்படி எடுக்கும்போதோ அல்லது வரும்போதோ வேறு வளையல் துண்டுகளை தொட்டுவிட்டால். அவர் ‘அவுட”; எனக் கருதப்பட்டு ஆட்டம் அடுத்த நபருக்குச் செல்லும்.
அதே போல் ஒரு வளையல் துண்டை தொட்டு அதன் ஜோடியினை எடுக்கச் செல்லும் போது கோட்டில் பட்டாலும் அவர் அவுட் எனக் கருதப்படுவார்.
விளையாட்டின் போது ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்த ஜோடி வளையல் துண்டுகளை தன் வசம் வைத்திருப்பர். விளையாட்டு முடிவின் போது யாரிடம் அதிக வளையல் துண்டு ஜோடிகள் இருக்கிறதோ அவரே வெற்றி பெற்றவராக இருப்பார்.
இந்த விளையாட்டில் வளையல்களை எறிவதில் சாதூர்யமாக எறிந்தால் அதிக ஜோடி வளையல் துண்டுகளை தனதாக்கிக் கொள்ள முடியும்.
இந்த விளையாட்டின் மூலம் நிதானத்தைக் கற்றுக் கொள்ள முடியும்.

இந்த ஆட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழேயுள்ள சுட்டியினை சொடுக்கி பார்க்கவும்:

நன்றி:

1.https://www.youtube.com/watch?v=lVX49K6SXbw

No comments:

Post a Comment