Thursday, 16 April 2020

நமது விளையாட்டுக்கள் 18

அந்திக்கடை

இது ஒரு குழு விளையாட்டாகும் இதற்கு குறைந்தது 10 நபர்கள் இருந்தால் விளையாட்டு ஆர்வமூட்டுவதாக இருக்கும்.
இரண்டு அணிக்கும் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஏதேனும் ஒரு தேர்ந்தெடுப்பு முறையில் அணி உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுவர். அதனைத் தொடர்ந்து எந்த அணி முதலில் விளையாடுவது என்றும் தேர்ந்தெடுப்பு முறையில் உறுதி செய்து. வெற்றி பெற்ற அணி ஆட்டத்தைத் துவக்கும்.

ஆட்டமுறை:
வெற்றி பெற்ற அணி முதலில் ஆடத்துவங்கும்.
இரண்டு அணிகளும் எதிர் எதிரே சுமார் ஒரு 20 மீட்டர் இடைவெளியில் அமர்ந்திருக்க வேண்டும். அணித் தலைவர்கள் மட்டும் நின்று கொண்டிருப்பார்.
ஆட்டம் துவங்குகையில் வெற்றி பெற்ற அணியினர் அனைவரும் தங்கள் கைகளை முதுகுப்பக்கத்தில் இரண்டு கைகளையும் விரல் இடுக்குகளைச் சொருகிக் கொண்டு பின்புறம் கையைக் கட்டி உட்கார்ந்திருப்பர். அப்படி அமர்ந்திருக்கையில் பின்புறம் அவர்கள் இணைக்கப்பட்ட கைகளில் வாயைத் திறந்தாற்போல் வைத்திருக்க வேண்டும். அணியின் தலைவராக இருப்பவர், கையில் காசையோ, சிறு குச்சியோ அல்லது ஏதேனும் ஒரு சிறு பொருளைக் கையில் வைத்துக் கொண்டு தன் கையினை அதனை எதிர் அணியினர் பார்க்காத அளவிற்கு மறைத்துக்கொண்டு தன்னுடைய அணியினர் பின்னே நின்று கொண்டு பின்வரும் பாடலை பாடுவார்.

‘அந்திக் கடை
சந்திக் கடை
ஆவாரம் பூத்த கடை
வெள்ளி முளைத்த கடை
வெங்காயம்
பூட்டெடுத்து பூட்டிக்கோ...”
(இதில் ‘கடை” என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘குடம்” என்று பயன்படுத்தியும் விளையாடுவதுண்டு)

பாடிக்கொண்டு ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொருவரை அணியினரின் பின்பக்கம் அணி உறுப்பினர்கள் திறந்தபடி உள்ள கைகளில் தொட்டு தொட்டு வருவர். அப்படி தொடும் போது எவராவது ஒருவருடைய கைகளில் தன் கையில் உள்ள பொருளை தலைவர் போட்டுவிடுவார். அணி உறுப்பினர் உடனே கையை மூடிக் கொள்வார். பாட்டு முடியும்போது அனைவரும் தங்கள் கையை இறுக மூடிக்கொண்டு தலையைக் குனிந்து கொள்வர். இப்போது எதிரணி தலைவர் யாருடைய கையில் பொருள் இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும். எதிரணி தலைவர் சரியாக சொல்லிவிட்டால், அவர் ஆட்டத்தைத் தொடருவார். தவறாகச் சொல்லிவிட்டால், யாருடைய கையில் பொருள் இருந்ததோ அவர் இருந்த இடத்தில் இருந்தே முன்புறம் தாவுவார் அவர் எவ்வளவு தூரம் தாவுகிறாரோ அந்த இடத்தில் அவர் அமர்ந்து கொள்ளலாம். இப்படியே அணியினர் அனைவரையும் எதிர் அணி உட்கார்ந்திருக்கிற உத்தி வரை தாவி அழைத்துச் செல்ல வேண்டும். அணியில் ஒரு நபர் எதிர் அணியின் உத்தி வரை அடைந்து விட்டால் அவர் வெளியே அமர்ந்து கொள்ள வேண்டும். மீதி நபர்களையும் மாற்றி மாற்றி பொருள் வைத்து எதிர் அணி கண்டுபிடிக்காதவாறு அழைத்துச் செல்ல வேண்டும். கடைசியில் ஒரு நபர் இருந்தால் தலைவர்  கடைசியில் எஞ்சிய நபருடன் உட்கார்ந்து  ஆடுவர். கடைசி ஒரு நபர் இருக்கும் போது கைகளை முன்பக்கம் திறந்த நிலையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் தலைவர் பொருளை தன் கையிலும் மிஞ்சிய நபர் கையிலும் மாற்றி மாற்றி வைக்க முயன்று இருவரில் யாரிடமாவது இருக்கும். எதிர் அணி தவறாக சொல்லி விட்டால் இவர்கள் திரும்ப திரும்ப வைத்துக் கொள்வர்.
எதிர் அணி தவறாக பதில் சொல்லும் தாண்டி முன்னேறிச் சென்றவருக்கும் சேர்த்துத் தான் பொருள் வைக்க வேண்டும். ஒரு வேளை எதிர் அணியும் தாண்டி முன்னேறி வந்து கொண்டிருந்தது என்றால் எதிர் அணியினர் எதிரெதிரே தாண்டுதல் முறையில் அருகே உட்கார்ந்திருந்தால், எதிர் அணித் தலைவர் தனது அணி உறுப்பினர் அருகே வந்து நின்று கொள்ளலாம். எதிர் அணி ஆரம்ப உத்தியில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இது மூலம் எதிர் அணியை அருகிலிருந்தே கவனிக்க முடியும்.
இவ்வாறு தனி அணி உறுப்பினர்கள் அனைவரையும் எந்த அணி முதலில் எதிர் அணி உத்தி வரைக்கும் அழைத்துச் செல்கிறதோ அந்த அணிதான் வென்றதாக அர்த்தமாகும். தோற்ற அணி எதிர் அணியினரை உப்பு மூட்டைத் தூக்க வேண்டும்.


1 comment:

  1. How to Play Baccarat - Wilbur & R. Macy's
    Baccarat is 인카지노 a popular game played on a card that can be played as either an optional or a part-trick, usually played with either 카지노사이트 a straight 바카라 사이트 flush or

    ReplyDelete