Wednesday, 15 April 2020

நமது விளையாட்டுக்கள் 16


 பச்சைக்குதிரை



இது சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு குதிரை போல குனிந்து கொண்டு நிற்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம்.

இந்த விளையாட்டிற்கு 5 முதல் 10 நபர்கள் இருக்கலாம். குறைந்தது 5 நபர்களாவது இருந்தால் இந்த விளையாட்டு விறுவிறுப்பாக இருக்கும்.

இந்த விளையாட்டின் வகைகளைப் பார்க்கலாம்:

வகை -1 :

சிறுவர்கள் வரிசையாக குனிந்து கொண்டு நிற்பர். கடைசியில் நிற்பவன் தனக்கு முன் நிற்கும் ஒவ்வொருவரையும் தாண்டித் தாண்டி முதல் ஆளாக நிற்பவனையும் தாண்டி அவனுக்கு முன்புறம் குனிந்து நிற்பான். அவனைத் தொடர்ந்து அவனுக்கு முன்புறம் உள்ள ஒவ்வொருவராய் தாண்டி ஒவ்வொருவருக்கும் முன்போய் நிற்பர். இவ்வாறு தொடர்ந்து இடம்மாறிக் கொண்டே இருப்பர். இந்த ஆட்டம் பல சுவர்களைத் தொடர்ந்து தாண்டுவதற்கேற்ற பயிற்சியாக இது இருக்கிறது.

வகை 2:

சாட்..பூத்..திரி.. என்ற தேர்ந்தெடுப்பில் தோற்ற சிறுவன், ஒரு காலை நீட்டி உட்கார்ந்திருப்பார். அவர் நீட்டிய காலைப் பிற சிறுவர்கள் ஒவ்வொருவராய் தாண்டித் தாண்டிச் செல்வர். அனைவரும் தாண்டிய பிறகு அடுத்தமுறை தன் ஒரு கால்; மேல் அடுத்த காலை வைத்து நீட்டியிருப்பான். அதையும் அனைவரும் முன்போலவே தாண்டிச் செல்வர். அதற்கு அடுத்த முறை கால்கள் ஒன்றன் மேல் ஒன்று வைத்ததைத் தொடர்;ந்து மேலே இருக்கும் காலின் மேல் ஒரு கையினை விரல்களை விரித்த நிலையில் (சாண் அளவு காண்பிப்பதற்கு விரிப்பது போல) வைக்க வேண்டும். இப்போதும் எல்லோரும் தாண்டிய பிறகு ஏற்கவே வைத்த கையின் மேல் அடுத்த கையினையும் விரித்து வைக்க வேண்டும். இப்போது அனைவரும் தாண்டிச் செல்வர்.  பின்பு, உட்கார்ந்த நிலையில் தாழ குனிய வேண்டும். அடுத்த நிலையில் அதே நிலையில் சற்று நிமிர வேண்டும். மேற்கூறிய முறைகளில் எல்லோரும் தாண்டிய பிறகு, அந்த நிலையில் இருந்து எழுந்தும் குனிந்தும் நிற்க வேண்டும். பிறகு ஒவ்வொரு நிலையாக உயர வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் அனைவரும் தாண்டி வர வேண்டும். எந்த நிலையிலாவது தாண்டி வருபவர்கள்தாண்ட முடியாது போனால் அடுத்து அவர்கள் குனிய வேண்டி வரும். ஏற்கனவே குனிந்திருந்தவர் இப்போது மற்றவர்களோடு சேர்ந்து தாண்ட ஆரம்பிப்பார். இது உயரம் தாண்டுதலுக்கு சிறந்த பயிற்சியாகும்.

வகை 3:

இந்த வகையில் இரண்டு அணிகளாக இருப்பர். ஒவ்வொரு அணிக்கும் குறைந்தது 5 நபர்கள் இருப்பது ஆட்டம் சிறப்பாக அமைவதற்கு உதவும். ஆட்டம் காசை சுண்டியோ அல்லது உடைந்த ஓட்டில் கருப்பு அல்லது சிவப்புப் பகுதியை வைத்தோ குனியும் அணி தேர்வு செய்யப்படும். குனியும் அணி காசு சுண்டலில் தோற்ற அணியாகக் கருதப்படும்.

இந்த ஆட்டத்தில் நடுவர் ஒருவர் பொதுவாக வைக்கப்படுவதுண்டு.

தோற்ற அணியில் ஒரு நபர் முதலில் தன் முதுகுப் பக்கத்தை காட்டி நிற்பார். அவரைத் தொடர்ந்த அவருடைய அணி உறுப்பினர்கள் குனிந்து நிற்பர். அதாவது இரண்டாம் நபர் முதலாம் நபரின் இடுப்பைப் பிடித்துக் கொண்டு தலையை குனிந்தபடி அவர் முதுகில் முட்டுக்கொடுத்து குனிந்து நிற்பார். மூன்றாம் நபர் இரண்டாம் நபரின் இடுப்பை உள்புறமாக இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு தலையை குனிந்து இரண்டாம் நபரின் புட்டத்தில் முட்டுக்கொடுத்து குனிந்து நிற்க வேண்டும். அடுத்து வரும் நபர்கள் மூன்றாம் நபரைப் போலவே தொடர்ந்து குனிந்து நிற்க வேண்டும். இப்போது தோற்ற அணி தயார் நிலையில் இருக்கின்றனர் என்று அர்த்தம். வெற்றி பெற்ற அணி இவர்கள் குனிந்து நிற்கும் இடத்தில் இருந்து சுமார் ஒரு 10 மீட்டர் தூரம் தள்ளி நிற்பர் அவ்விடத்திலிருந்து நேரே ஓடிவந்து குனிந்து நிற்கும் அணி மீது ஏறி அவர்களை கெட்டியாகப் பிடித்து குனிந்து கொள்வர். முதலாம் நபரைத் தொடர்ந்து அடுத்தடுத்து நபர்கள் ஓடி வந்து அவர்கள் மீது தாவி ஏறி அமர்வர். அனைத்து நபர்களும் அவர்கள் முதுகில் ஏறிய பிறகு, முதுகின் மீது ஏறி நிற்பவர்கள் அணியின் தலைவர் ஐந்து விரல்களில் ஏதேனும் ஒரு எண்ணைக் காட்டுவார். குனிந்து நிற்கும் அணியின் தலைவர் அது எத்தனை என்பதனை சரியாகச் சொல்லிவிட்டால் இவர் வெற்றி பெற்றவராக மாறி விடுகிறார்.  அதன்பிறகு முன்பு முதுகின் மேல் ஏறியவர்கள் இப்போது குனிய வேண்டும். மேலும், முதுகில் மேல் ஏறும்போதோ ஏறிய பிறகோ மேலே ஏறியவர்கள் தவறி விழுந்தால் அவர்கள் தோற்றவர்கள் ஆவார்கள். மேலே ஏறியவர்கள் கீழே விழுகிறார்களா அல்லது குனிந்து இருப்பவர்கள் சொன்ன எண்ணைத் தான் மேலே இருந்தவர்கள் காட்டினரா என்பதை சரிபார்ப்பவர் நடுவர் ஆவார். இந்த விளையாட்டின் மூலம் உடல் வலுப்பெறும். குழு ஒற்றுமை வளரும்.




வகை 3:

ஆபியம்:

இதில் தேர்ந்தெடுப்பு முறையில் ஒருவர் குதிரை போல் குனிந்து கொள்வார். மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக தாண்டுபவர்கள். ஒவ்வொரு முறை அனைவரும் தாண்டும் போது ஒரு சொல் அல்லது வாக்கியத்தோடு தாண்டுவர். மேலும், தாண்டும்போதே  பிறிதொரு செயல்களும் இடையில் செய்வர். இவ்வாறு தாண்டுகையில் முதல் முறை ஆபியம் என்ற வார்த்தைக் கொண்டு தாண்டுவர்.

சில இடங்களில் தாண்டும் போது

‘ஆபியம்...

மணியாபியம்..

இஸ்டாபியம்..

லாகரச்சி கொக்கு...

ராஜா சூத்துல ஒத குடு..”

என்று பாடிக்கொண்டே குனிந்தவரின் முதுகைத் தாண்ட வேண்டும்.



இதே பாடலில் சில இடங்களில் வேறுமாதிரி பாடுவர்.

‘ஆபியம்...

மணியாபியம்..

இஸ்டாபியம்..

குரங்காபியம்...

நகரத்தின் எல்லைக் கோடு..

(தாண்டியவுடன் ஒவ்வொருவரும் குனிந்து ஆள்காட்டி விரலைக் கொண்டு தரையில் குனிந்து ஒரு கோடு இழுப்பர்)

குட்டிச் சாத்தான் மண்ணைத் தின்றான்...

(தாண்டியவுடன் குனிந்து மண்ணை வாரி குனிந்து இருப்பரின் வாய்ப் பகுதிக்கு அருகே காட்டுவர், சிலர் மண்ணை அவர் வாய் பகுதியில் வீசுவர் )

தற... தற... சூத்துல உதை”

(இந்த வரியின் போது குனிந்து இருப்பவரின் புட்டத்தை உதைப்பர்)

என்று பாடிக்கொண்டு தாண்டுவர்.

நான் சிறுவயதில் விளையாடிய போது இதே பாடலில் சில வரிகளில் மாற்றம் இருந்தது. ஆனால், அதில் மத சாடல் இருப்பது போல் பாடல் இருந்தது. ஆதலால் அதனை இங்கே குறிப்பிடவில்லை.

இந்த விளையாட்டில் முதன் முறை குனிந்ததில் அனைவரும் தாண்டியவுடன், இரண்டாம் வகையில் சொன்னதுபோல் கொஞ்ச கொஞ்மாக நிமிர்ந்து கொண்டே குனிந்திருப்பவர் வருவார். எந்த நிலையில் ஒருவரால் தாண்ட முடியாமல் போகிறதோ அப்போது இந்த ஆட்டம் முடிவுறும். தாண்ட இயலாதவர் இப்போது குனிவார்.

இந்த ஆட்டம் உடல் மற்றும் மனம் இரண்டும் ஒருமுகப் பட்டு விளையாடப்படும் விளையாட்டாகும். ஏனெனில், தாண்டும் போது பாடவும் வேண்டும், கூடுதல் செயல்களும் செய்ய வேண்டும்.

மேலும், இவ்விளையாட்டுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள கீழேயுள்ள சுட்டிகளை சொடுக்கித் தெரிந்து கொள்ளலாம்.

https://www.youtube.com/watch?v=KB-yNxe7hHk
https://www.youtube.com/watch?v=VmxLNFfGzks



நன்றி:
1. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
2. http://www.keetru.com/
3. https://www.youtube.com/watch?v=KB-yNxe7hHk
4. https://www.youtube.com/watch?v=VmxLNFfGzks


No comments:

Post a Comment