கொரோனா மதம் கொண்ட யானை போல் உலகெங்கும் துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. அதனை அடக்குவதற்கு ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கின்றன… ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்தையோ குணப்படுத்தக்கூடிய மருந்தையோ கண்டுபிடிக்க தீவிர ஆராய்ச்சிகள் போய்க்கொண்டிருக்கின்றன… மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், ஊடகங்கள், துப்புரவுப் பணியாளர்கள் என்று பலரும் கொரோனாவிற்கு எதிரான போரில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், எல்லா நாடுகளும் முக்கிய தீர்வாக தற்போது யோசித்திருப்பது சமூக விலக்கம் தான் (Social Distancing) அதனால் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை வீட்டிலேயே இருப்பதற்கு அறிவுறுத்தியுள்ளனர். அதனால் வைரஸ் கிருமி பரவுதலை அதன் தொடர்பு சங்கிலி பிணைப்பு உடைத்து விட முடியும் என்று தீர்க்கமாக நம்பப்படுகிறது. ஆனால், வேலை செய்தே பழகியவர்கள், இயந்திரமயமாக உழைத்தவர்கள் தற்போது வீட்டில் முடங்க வேண்டும் எனும் போது மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும் என்று மனவியலாளர்கள் கருதுகின்றனர். அதற்காக பல தீர்வுகளையும் அவர்கள் கொடுக்கின்றனர். அதில் முக்கியமான ஒன்று குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது. ஆனால், ஒருவர் முகத்தையே ஒருவர் எவ்வளவு நேரம் பார்ப்பது என்று சிலர் புலம்புவதும் காதில் விழுகிறது. அப்படியானால் எப்படி வீட்டில் இருக்கும் நேரத்தை பயனுள்ள வகையில் அதே சமயம் மனஅழுத்தமும் ஏற்படாத வகையில் செயல்படுத்துவது என்று எனக்குத் தெரிந்த ஒரு சில விஷயங்களை நான் இங்கு பட்டியலிடுகிறேன்.
• வீட்டிலிருந்து வேலை செய்தல் (கொடுக்கப்பட்ட பணிகள் வீட்டிலிருந்து செய்ய முடிந்த பணிகள் செய்தல் - ஏதேனும் பணி முடிக்கப்படாமல் இருந்தால், இப்போது முடித்து வைத்துவிடுவது நல்லது- (Professional Ethics!)
o குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல் (பிள்ளைகள்/பேரப்பிள்ளைகள்)(திருமணம் ஆகவில்லையெனில் - ஒரே வீட்டில் சகோதர சகோதரிகள் பிள்ளைகள் இருந்தால்) உங்களுக்குத் தெரிந்த திறமைகளை (கராத்தே, காகிதத்தில் பொம்மைகள் செய்தல், இசை, பேப்பர் கூடை செய்தல், ஓவியம் வரைதல், பொம்மைகள் செய்தல் போன்றவை) அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம்
o உங்களுக்குத் தெரிந்த நீங்கள் சிறுவயதில் விளையாண்ட விளையாட்டுக்களைச் சொல்லித்தரலாம் அல்லது சேர்ந்து விளையாடலாம்.
o கதைகள் சொல்லலாம் - சிறு குழந்தைகள் என்றால் கற்பனைக் கதைகள் வளர்ந்தவர்கள் என்றால் சொந்தக் கதைகள், குடும்ப பெருமைகள் அல்லது ஆர்வமூட்டும் கதைகள் ( அவர்களுக்கு சலிப்புத் தட்டிவிடாமல் சொல்வதுதான் இதில் முக்கியம்)
o இப்போது நிறைய பேருக்கு முக்கியமாக குழந்தைகளுக்கு உறவுமுறைகள் சரிவர தெரிவதில்லை அதுபோன்ற விஷயங்கள் சொல்லித் தரலாம் உதாரணத்திற்கு குடும்ப உறவுமுறை வரைபடம் (Family Tree) வரைந்து விளக்கிக் கூறலாம். குழந்தைகள் குறைந்தது மூன்று தலைமுறைகளாவது தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.
• பாடல்கள் பாடலாம்
• நடனம் ஆடலாம்
• சமையல் செய்யலாம்/சமையலுக்கு உதவி செய்யலாம்/புதிதாக சமையல் ஏதேனும் முயற்சி செய்யலாம்
• சொத்து விபரங்கள் (நீங்கள் பாதுகாப்பு என்று கருதினால்) குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக வாரிசுகளுக்குத் தெரியப்படுத்தலாம்/ குறிப்பெழுதி வைக்கலாம்
• பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன செய்திருக்கிறோம்… என்ன செய்யலாம் என்று கலந்தாலோசிக்கலாம் (உதாரணமாக - காப்பீடுகள் (குறிப்பாக மருத்துவக் காப்பீடு), அரசு சேமிப்புத் திட்டங்களில் முதலீடுகள் (செல்வ மகள் திட்டம் போன்றவை)
• அரசு ஆவணங்கள் பெறவேண்டி திட்டமிடலாம் அல்லது ஆன்லைனில் விண்ணப்பித்து பெற முடியும் எனில் விண்ணப்பிக்கலாம் (ஆதார், பான் (PAN)அட்டை, பிரான் (PRAN) அட்டை, ஏடிஎம் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கடவுச் சீட்டு போன்றவை)
• தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் (ஆன்லைனில் புக்கிங் செய்வது- போக்குவரத்து, உணவு, தங்குமிடம் போன்றவை)
• வீடு சுத்தம் செய்யலாம் அல்லது நினைத்தபடி அழகுபடுத்தலாம்.
• கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எழுதிப் பழகலாம்,
• நீண்ட காலமாக நீங்கள் நினைத்திருந்து வேலைப்பளுக் காரணமாக நேரமின்மை காரணமாக நீங்கள் ஒதுக்கி வைத்திருந்த செயல்களை இப்போது செய்யலாம். (படிக்க வேண்டும் திட்டமிட்டிருந்த புத்தகங்களைப் படிக்கலாம்)
• உங்கள் உடலுக்கும் (ஒருவேளை உங்களுக்கு தொப்பை இருக்கிறதென்றால் அதைக் குறைப்பதற்கான உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்) மனதிற்கும் (யோகா பயிற்சிகள் செய்யலாம்) தேவையான பயிற்சிகள் செய்யலாம்.
• ஏதேனும் மொழி கற்றுக்கொள்ள முயற்சி செய்யலாம்
• புகைப்படங்களை அல்லது கோப்புகளை தேதி வாரியாக ஒருங்கிணைக்கலாம் (நிஜமோ அல்லது கணினி கோப்புகளோ எதுவேண்டுமானாலும் இருக்கலாம்)
• வாய்ப்பிருந்தால் ஏதேனும் இசை கருவிகள் மீட்டுவற்கு கற்றுகொள்ளலாம்
• வீட்டைச் சுற்றி தோட்டம் இருந்தால் அதனைப் பராமரிக்கலாம், குடும்பத்தினருக்கு தோட்டப் பராமரிப்பு யுக்திகளைப் பற்றி சொல்லிக் கொடுக்கலாம்.
• நீங்களே செய்து பாருங்களேன் (do it yourself, 5 minutes crafts) போன்றவற்றை முயற்சி செய்யலாம். இணையத்தில் இப்போது நிறைய கிடைக்கிறது.
• குடும்பத்துடன் உட்கார்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் (மன அழுத்தத்தை தராத நிகழ்ச்சிகள்!) அல்லது படங்கள் பார்க்கலாம்.
• உங்கள் பழைய டைரி குறிப்புகள் அல்லது மனமகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய பள்ளி/கல்லூரி/பணியில் விடைபெறுதலின் போது தோழர்கள் எழுதிய வாழ்த்துச் செய்திகள்/குறிப்புகள் ஆகியவற்றைப் படித்து மகிழ்ச்சியுறலாம்.
• வயதானர்களுடன் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ உரையாடலாம்
• பிடித்த பாடல்கள் கேட்கலாம், நகைச்சுவைக் காட்சிகள் பார்க்கலாம்
• ஜன்னலில் இருந்து இயற்கைக் காட்சிகளை ரசிக்கலாம்.
• வீட்டில் தேவையில்லாத குப்பைகள் அல்லது வேண்டாத பொருட்களை அகற்றலாம்.
குறிப்பு:
• கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் சமூக விலகல் (Social Distancing) அவசியம்
• ஒரே நாளில் மொத்தமாக செயல்படுத்த முயற்சிக்க வேண்டாம் அப்புறம் டயர்ட் ஆகி விடும்.
உங்களுக்கும் இதுபோன்று ஏதேனும் யோசனைகள் இருந்தால் பதிவிடலாம்... அல்லது வீட்டில் செயல்படுத்தலாம்...
இந்தப் பொழுது இனிய பொழுது...
No comments:
Post a Comment