சமீப காலங்களில் நாம் காண்கின்ற காட்சியானது குறிப்பாக பிள்ளைகள் விளையாடுவதனைக் குறித்துப் பார்க்கும் போது, அவர்கள் விளையாடும் விளையாட்டானது ஒருவகையான அச்சத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. கையில் மொபைலை வைத்துக்கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு விளையாடுகின்றனர். இல்லையெனில் கிரிக்கெட் விளையாடுகின்றனர். இதனைத் தவிர்த்து அவர்கள் வேறு எந்த விளையாட்டையும் பெரிதாக விளையாடவி;ல்லை என்பது நன்கு தெரிகின்றது. ஆனால், தமிழ்நாட்டில் இருந்த விளையாட்டுக்களில் தெருவோரமாக இருந்தாலும் சரி, நகரமாக இருந்தாலும் சரி, அவ்விடத்திற்கேற்றாற் போலும், இருந்தப் பொருட்களை வைத்துக் கொண்டும் நமது முன்னோர்கள் விளையாடி வந்தனர். அந்த விளையாட்டுக்கள் ஒவ்வொன்றும் அப்போது வாழ்ந்தவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. புதிதாக சிந்திக்கும் திறனைக் கொடுத்தது. மேலும், வாழ்வியலையும் எடுத்துக் காட்டுவதாக இருந்தது. உதாரணமாக காத்தாடி செய்து விளையாடும் பழக்கம் இருந்தது. பனை மரத்தில் இருந்து வரும் நுங்கை சாப்பிட்டு தூக்கி எறியப்படும் பனை ஓலையைக் கொண்டு காத்தாடிக்கான இறக்கை செய்யப்படும். சிறுதானியத்தில் ஒன்றான சோளம் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அதன் தண்டுப்பகுதியான சோளத்தட்டை மாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும். வைக்கோல் போர் அமைக்கையில் சோளத்தட்டையினை அடித்தளம் போல் அமைத்து செய்வர். இந்த சோளத்தட்டையில் சிறு பகுதியை உடைத்து காத்தாடிக்குக் கைப்பிடியாக பயன்படுத்துவர். அந்த சோளத்தட்டையின் உட்பகுதி தெர்மோகோல் போல இருக்கும். பனை ஓலையில் செய்யப்பட்ட இறக்கையில் நடுவே ஓட்டையிடப்பட்டு அதில் காட்டு கருவேல முள்ளை உடைத்துமுள்ளின் அடிப்பகுதியில் சிறிது தண்டு இருப்பதுபோல் வைத்து நுனிப்பகுதியை பனைஓலையில் உள்ளே விட்டு சோளத்தட்டையின் மையப்பகுதியில் சொறுகி விட்டால். காத்தாடி தயார். இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் விவசாயம் சார்ந்த தொழில் அதிகம் இருந்ததால் அதிலிருந்து கிடைத்த இடுபொருட்களில் இருந்து தேவையான பொருட்கள் எடுக்கப்பட்டன. பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இயற்கை பொருட்கள், அவை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதவை. மேலும், காத்தாடியை அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைப்பர். இதில் அவருடைய கற்பனைத் திறன் வளரும். இவ்வாறு ஒவ்வொரு விளையாட்டிற்கு பின்புறம் ஒரு வாழ்வியல் இருக்கும் ஆதலால், 1980-90 களில் நான் விளையாடிய விளையாட்டுக்களையும் நான் பார்த்த கேட்டறிந்த விளையாட்டுக்களையும் நான் தொகுக்க ஆரம்பித்தேன். அப்போது எத்தனித்த வேளையில் எனக்கு வரப்பிரசாதமாக கிடைத்தது 1954ல் மொழிஞாயிறு தேவநேயப் பாவணர் அவர்கள் தொகுத்த ‘தமிழ்நாட்டு விளையாட்டுக்கள’; என்ற அருமையான புத்தகம் கிடைத்தது. அதில் நான் வியக்கும் வகையில் அருமையான தொகுப்பாகவும் என்னுடைய இந்த புத்தகத்தினை எழுதுவதற்கு பேருதவியாகவும் இருந்தது. மேலும், விளையாட்டுக்களானது பிராந்திய அடிப்படையில் சிறிதளவேனும் அல்லது முழுமையாகவும் நடைபெறும். அதற்காக உங்களுக்குத் தெரிந்த அல்லது நீங்கள் விளையாடிய விளையாட்டுக்களை அதில் எழுதி வைக்கலாம். அதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் விரும்பி விளையாடிய, நீங்கள் மிகவும் நேசித்த விளையாட்டுக்களை அவர்களும் அறியச் செய்யலாம். மேலும், அவர்களையும் விளையாட வைக்கலாம். இதன் மூலம் குழந்தைகள் வீட்டினுள்ளே அமர்ந்திருக்காமலும், உங்களோடும், அவர்களுடைய ஒத்த வயதினருடனும் கலந்து விளையாட வாய்ப்புகள் நிறைய உள்ளது. அவ்வாறு குழந்தைகளுக்கான விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் ஒரு தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்பதே இந்தப் பதிவின்; நோக்கமாகும். இதில் சில விளையாட்டுக்கள் இன்னும் கிராமங்களில் விளையாடுகின்றன. விளையாட்டுக்கள் பல இடங்களில் வெவ்வேறான பரிணாமங்களையும் பெற்றிருக்கின்றன. ஒருவேளை நான் சொல்லப்படும் ஏதேனும் ஒரு விளையாட்டு வேறு பிராந்தியங்களில் வேறு மாதிரி விளையாடப்பட்டிருக்கலாம். அப்படி இருப்பின் அதனை உங்கள் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். நோக்கமானது திறன் வளர்ப்பேயாகும்.
நாம் விளையாட்டிற்குச் செல்வதற்கு முன்பு விளையாட்டில் சில அடிப்படை விடயங்களைப் பார்ப்போம்.
அணி பிரித்தல்:
விளையாட்டின் போது முதன்மையாக இருப்பது அணி பிரித்தலாகும். இதற்கு முந்தைய காலத்தில் உத்திக் கட்டுதல் என்று பெயர். பொதுவாக அனுபமும் திறமையும் நிறைந்த நபர் அணித் தலைவராக நிற்பதுண்டு. அப்படி இரு அணித் தலைவர்கள் தாமாக முன்வந்து தங்களுக்குத் தேவையான ஆட்களை ஒருவர் மாற்றி ஒருவர் அங்கு இருக்கும் நபர்களைத் தேர்ந்தெடுப்பர். இல்லையெனில், இரண்டு இரண்டு நபர்களாக ஜோடி சேர்ந்து தங்களுக்குள் ஏதேனும் சிறப்புப் பெயரிட்டுக் கொண்டு வருவர். அவர்களுள் அணித்தலைவர்கள் மாற்றி மாற்றி ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுப்பர். முதலில் ஒரு அணித்தலைவர் சிறப்புப் பெயர் அல்லது புனைப் பெயர் இட்டு வரும் ஒரு ஜோடியில் இருந்து கேட்கிறார் என்றால், அடுத்த ஜோடியில் இருந்து மற்றோர் அணித்தலைவர் கேட்பர். இந்த முறையில் யார் என்ன பெயரிட்டு வருகிறார்கள் என்பது அணித்தலைவர்களுக்குத் தெரியாது. ஏனென்றால் அவர்கள் சற்றுத் தொலைவு சென்று தங்களுக்குள் புனைப்பெயர்கள் வைத்துக் கொள்வர். உதாரணமாக:
“வானத்தைத் தாண்டும் மயிலைக் குதிரை வேண்டுமா?
வேலியைத் தாண்டும் வெள்ளைக் குதிரை வேண்டுமா?” என்றும்
“காற்றைக் கலசத்தை அடைத்தவன் வேண்டுமா?
கடலைக் கையால் நீந்தியவன் வேண்டுமா?” என்றும்
“வானத்தை வில்லாய் வளைத்தவன் வேண்டுமா?
மணலைக் கயிறாகத் திரித்தவன் வேண்டுமா?” என்றும்
“சூப்பர் ஸ்டார் ரஜினி வேண்டுமா?
சூப்பர் ஆக்டர் கமல் வேண்டுமா?” என்றும்
“பதுங்குற புலி வேண்டுமா
பாயுற புலி வேண்டுமா” என்றும் பல விதங்களில் புனைப் பெயர்களில் வந்து அணித்தலைவர்களிடம் கேட்பர். அவர்கள் இரண்டில் ஏதேனும் ஒரு பெயரைச் சொல்லி தனது அணிக்குரிய ஆளைத் தேர்ந்தெடுப்பர். இப்படி பெயர் சொல்லி வருவதை “கூடிவரு வழக்கின் ஆடியற் பெயர்” என்று தொல்காப்பியர் தன்னுடைய தொல்காப்பியத்தில் சொல்லதிகாரம் 165ல் குறிப்பிடுகிறார். பெண்கள் பொதுவாகப் பூக்கள் பெயரை புனைப்பெயராகக் கேட்டு வருவர்.
“அல்லி வேண்டுமா
முல்லை வேண்டுமா”
“மணமணக்கும் மல்லி வேண்டுமா
பளபளக்கும் அல்லி வேண்டுமா? என்பன போன்று கேட்டு வருவர்.
அதன் பின்பு விளையாடப் போகும் விளையாட்டின் விதிமுறையினை அணித்தலைவர்கள் பேசிக் கொண்டு உறுதி செய்வர். அதனடிப்படையிலேயே விளையாடுவர். விதிமுறையினை மீறும் போது அணித்தலைவர்கள் அதனை சரிசெய்வர்.
விளையாட்டைத் துவங்குதல்:
எந்த அணி முதலில் விளையாட வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கு பொதுவாக காசு சுண்டி தலையா? பூவா? என்று கேட்டு தேர்ந்தெடுப்பது உண்டு. சில சமயங்களில் உடைந்த ஓடு சில்லினை பயன்படுத்துவர். அதுவும் கிடைக்க வில்லையெனில் சப்பையான கல்லில் ஒரு பக்கம் மட்டும் எச்சிலைத் துப்பி அல்லது ஈரம் செய்து சுண்டிவிட்டு எந்த அணி ஜெயிக்கிறதோ அந்த அணியே விளையாடத் துவங்கும்.
இடையில் விளையாட்டை நிறுத்துதல்:
விளையாட்டின் போது வீட்டிலிருந்து அழைப்பு வந்தாலோ, அடி பட்டாலோ போன்ற ஏதேனும் காரணத்திற்காக விளையாட்டினை இடையில் நிறுத்தவேண்டிய நிலை வந்தால், ஆரம்ப காலங்களில் “தூ” என்ற வழக்கச் சொல்லும், “அம்பேல்” என்ற சொல்லும் இருந்தது. இப்போது ‘வெயிட்’ அல்லது ‘வெயிட்டீஸ்’ என்று பொதுவாக சொல்கிறார்கள்.
தோல்வி தண்டனைகள்:
தோல்வி;க்கான தண்டனைகளை பாட்டை என்றும் வழங்குவதுன்டு. பொதுவாக தோல்வி தண்டனைகள் ஆட்டத்திற்கேறப மாறுபடும். ஒரு சில ஆட்டங்களில் எதிரணியினரை முதுகில் சுமந்து செல்லுதல் (இதனை குதிரையேறுதல் அல்லது உப்பு மூட்டை தூக்கிச் செல்தல் என்பர்), முட்டி போட்டு நடத்தல் போன்ற தண்டனைகள் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்
என்னும் திருக்குறளில் அடுத்தூர்வது என்பது ஒருவன் அடுத்தவன் மேல் செய்யும் குதிரைச் சவாரியைக் குறிப்பதாகும்.
எல்லா விளையாட்டுக்களிலும் தண்டனை இல்லை. தண்டனையில்லாமல் விளையாடுவதும் உண்டு.
மேலே சொல்லப்பட்டவை அனைத்து பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் பொருந்தும். ஆனாலும், நாம் இப்போது வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் அது சார்ந்த விளையாட்டுகளைப் பார்ப்போம்.
இந்த விளையாட்டுகளில் சீட்டுக்கட்டுகள், சதுரங்கம், சீனா பலகை விளையாட்டுக்கள் மற்றும் மொபைல் வீடியோ கேம்கள் இடம்பெறாது என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சரி விளையாட்டிற்குச் செல்வோம்.
நூற்றுக்குச்சி (அ)நூத்துக்குச்சி
ஆட்டத்தின் பெயர்: நூத்துக்குச்சி
ஆடுவோர்: சிறுவர்/சிறுமியர்கள்
ஆடும் நபர்களின்
எண்ணிக்கை: 2-4
வயது வரம்பு: 5-15 வயது மதிக்கத்தக்கவர்கள்
ஆடும் இடம்: வீட்டின்
திண்ணை, முற்றம் போன்றவை
தேவையான பொருட்கள்: தென்னை
ஓலைக்குச்சி/விளக்குமாத்துக் குச்சி/சீவாங்குச்சி
சுமார் 10 செ.மீ அளவுள்ள பத்து
சீவாங்குச்சிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனைப் போன்று இரண்டு மடங்கு நீளமுள்ள
ஒரு சீவாங்குச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய சீவாங்குச்சியின் பெயர்
நூத்துக்குச்சி ஆகும். அதாவது இதற்கு மதிப்பு 100 புள்ளிகள் ஆகும். சிறிய குச்சிகள் ஒவ்வொன்றிற்கும் 10 மதிப்பு ஆகும். இரண்டு தனி நபர்களாகவே
பொதுவாக விளையாடுவர். நபர்களின் எண்ணிக்கை நாலாக இருந்தால் எதிர் எதிரே அமர்ந்து
கொண்டு அணிக்கு புள்ளிகள் சேர்த்து அதிகப்புள்ளிகளின் அடிப்படையில்
வெற்றியைத்தீர்மானிக்கலாம்.
ஆட்ட முறை ஒரு கையில் அனைத்துப்
பதினோரு குச்சிகளையும் எடுத்து தலைக்கு மேல் கொணர்ந்து (தலைக்கு மேல் கொணர்ந்து
வீசுவது பொதுவாக செய்யப்படுவது, குச்சியை மேலிருந்து கீழே
எறிய வேண்டும் என்பதே சூத்திரம்) அப்படியே கீழேப் போட வேண்டும். சிறிய குச்சிகள்
ஏதேனும் ஒன்று கட்டாயம் பெரிய குச்சியின் மீது இருக்க வேண்டும். அப்படி இல்லையேல்
தகுதியற்ற போடுதல் என தீர்மானிக்கப்பட்டு எதிர் அணிக்கு வாய்ப்பு சென்று விடும்.
ஆதனால் ஏதேனும் ஒரு குச்சியாவது பெரிய குச்சியின் மீது விழும் வகையில் போட வேண்டும்.
அப்படிப் போடும் போது குச்சிகள் பெரிய குச்சியின் மீது குவியலாகவோ அல்லது சிதறியோ
காணப்படும். சிதறிக் கிடக்கும்போது புள்ளிகள் விரைந்து எடுப்பது எளிது. ஆதலால்
குச்சிகளை எறிதலில் கவனமாக எறிவது சிறப்பு. எறியும்போது விழும் குச்சிகளில்
சிறியக் குச்சி ஒன்றினை மட்டும் அதாவது முதல் குச்சியினை மட்டும் கையினால்
எடுக்கலாம். மற்றக் குச்சிகளைக் முதலில் எடுத்தக் குச்சியினைக் கொண்டுதான் எடுக்க
வேண்டும் அல்லது நகர்த்த வேண்டும். இந்த விளையாட்டின் இன்னொரு முக்கியமான அம்சம்
என்னவென்றால் ஒரு குச்சியினை எடுக்கும் போது மற்ற குச்சியின் மீது எடுக்கும் போது
மற்றக் குச்சியின் மீது படவும் கூடாது. மற்றக் குச்சிகள் அசையவும் கூடாது அவ்வாறு
அசைவு ஏற்பட்டால் ஆட்டமாவரின் ஆட்டம் முடிவுற்றதாக அர்த்தமாகும். அவர் எடுத்துள்ள
சிறிய குச்சிகள் மற்றும் பெரிய குச்சியின் எண்ணிக்கையினை வைத்து அவருடைய புள்ளி
நிர்ணயிக்கப்படும். உதாரணமாக. ஒருவர் கையில் 5 சிறு குச்சிகளும் ஒரு பெரிய குச்சியும் வைத்திருக்கிறார்
என்றால் (5 x 10 புள்ளிகள் 50 புள்ளிகள் மற்றும் 1 x 100 =100 புள்ளிகள் மொத்தம் 150 புள்ளிகள் அவர் பெற்றவராகிறார். ஒருவேளை அவர்
அனைத்து குச்சிகளையும் மற்றக் குச்சிகள் அலுங்காமல் எடுத்துவிட்டார் என்றால்
அவருக்கு கிடைக்கும் புள்ளிகள் மொத்தம் 200 ஆகும். இவ்வாறு 1000 புள்ளிகள் எடுக்கும் வரை
விளையாடுவர். வெற்றியின் அடிப்படையில் பாட்டை அரங்கேறும்.
பாட்டை:
தோல்வி கண்டவர் தன்னுடைய இரு கைகளையும் குவித்து கிடைமட்டமாக
நெஞ்சுக்கு எதிராக நீட்ட வேண்டும். வெற்றி பெற்றவரை தோல்வி கண்டவர் மூன்று முறை
ஏமாற்ற வேண்டும்.
இந்த விளையாட்டு கூர்ந்து கவனித்தல் திறனை வளர்க்க உதவுகிறது, சாதுர்யம் மற்றும் பொறுமையையும் கற்று கொடுக்கிறது.
கீழ்க்காணும் லிங்க்கில்
காணொலியாகக் கிடைக்கிறது:
No comments:
Post a Comment