மகளின் விருப்பத்திற்காக காலையிலேயே மெரீனா கடற்கரை பயணம்...
காலை நான்கு மணி முதல் எட்டு மணி வரை மெரீனா கடற்கரை உட்புற சாலையில் வாகனம் நிறுத்த அனுமதி இல்லாததால் கலங்கரை விளக்கத்திற்கு இடப்புறம் உட்புகுந்து பட்டினப்பாக்கம் செல்லும் சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ... இணையர் மற்றும் வாரிசுடன் கடலை நோக்கி நடந்தேன். கடைலை அடைவதற்கு இன்னும் தூக்கம் கலையாமல் போர்த்தி கொண்டு படுத்திருந்தவர்கள் பலரை கடந்து செல்ல வேண்டி இருந்தது. ஆங்காங்கே இரவு சாப்பிட்டு அப்படியே திறந்த நிலையில் முழுமையாக சாப்பிடாமல்கிடந்த துர்நாற்றம் வீச துவங்கிய பொட்டலங்கள்....குடிமகன்கள் குடித்து விட்டு உடைத்தும் உடைக்காமலும் கிடக்கும் மதுபான குப்பிகள் (பல பேர் மணலில் நடக்கும் போது பாதத்திற்கு ஏற்படும் அழுத்தத்தினால் மன அழுத்தம் குறைந்து ஒரு வித திருப்தியை அளிக்கும் என வெறும் காலில் நடந்து வருபவர்கள் உண்டு. அவர்களை இந்த குடிமகன்கள் கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் ஆறு, குளம், குட்டை, மலை, வயல்காடு, சத்திரம், பேருந்து நிலையம் என எங்கும் மதுபான குப்பிகள் காட்சியளிப்பது வேதனையளிக்கிறது😒 ).
மதுபான குப்பிகளை கடந்து சென்றால், நடனம் பயில்பவர்களின் ரம்மியமான காட்சி, பந்தை தூக்கி எறிந்தால் நாய் அதனை கவ்வி கொண்டு ஒப்படைக்கும் காட்சி, மட்டைபந்து, கைஎறிபந்து, கைபந்து, கடலலையில் விளையாடுதல், சிறு வியாபாரிகளின் கடைகளில் மக்கள் கூட்டம், காலையில் நடை பயிற்சி செய்பவர்கள் (நடைபயிற்சியினை விட வாய் பயிற்சி தான் வேகமாக சிலருக்கு இருக்கிறது. அவ்வளவு சிரிப்பு, கிண்டல் என்று ஒரே கலகலப்பு! முதுமையை அனுபவிக்கும் இடம் போல!) ஆங்காங்கே குதிரை சவாரி வருவார்களா என்று குதிரையை குறுக்கும் நெடுக்கும் வேகமாயும் மெதுவாயும் ஓட்டி செல்லும் குதிரைகாரர்கள்... கரையில் இறந்து ஒதுங்கிய மீன்கள் என காட்சிகள் நீள்கிறது...ஒருவழியாக கடலை அடைந்து மகளுடன் கடலில் விளையாட ஆரம்பித்தேன். அலை வந்து திரும்பும் போது சிப்பியும் சிறு நண்டும் மணலுக்கும் புதைவது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
அப்போது ஒரு படகு நாங்கள் இருக்கும் பகுதியில் வந்து நின்றது. படகினை கரையேற்றினர். பிறகு அதிலிருந்து இறங்கியவர்கள் தங்கள் கைகளில் கயிற்றின் நுனியினை பிடித்திருந்தனர். படகின் இரண்டு பக்கமும் பிரிந்து சென்று கரையில் ஏறி கயிற்றினை இழுத்தனர். கயிறு எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் அது கடலில் இருந்து வருகிறது. கயிற்றினை இழுக்க ஆரம்பித்தனர் இரண்டு பக்கங்களிலும் ஒரு ஏழு ஏழு பேர் இருந்திருப்பர். கயிற்றினை இழுத்து கொண்டிருந்தனர். நான் என்மகள் அலையுடன் விளையாட அவருக்கு ஒரு பத்துஅடி முன்புறம் கடலில் இருந்து அவரை பாதுகாப்பாக பார்த்து கொண்டு அதே சமயம் இவர்கள் கயிறு இழுக்கும் காட்சியினையும் கண்டேன். அவர்கள் கயிறு இழுப்பது பெரும் சிரமப்பட்டு இழுப்பது போன்று தோன்றியது.
இணையரிடம் மகளை பார்த்துக்கொள்ள சொல்லி நாமும் உதவலாமே ஊரில் பல கயிறு இழுக்கும் போட்டியில் பரிசுகள் வென்றிருக்கிறோம் இதையும் ஒரு கை பார்த்து விடலாம் என்று நானும் இழுக்க ஆரம்பித்தேன். என்னைபோலவே ஒரு நான்கு தன்னார்வலர்கள் உதவ முன் வந்தனர். எளிமையாக இருக்கும் என்று கம்பீரமாக ஆரம்பித்தேன் பிறகு தான் புரிந்தது அது அவ்வளவு எளிய காரியம் இல்லை என்று...! குதிகாலை மணலில் அழுத்தி இழுக்க ஆரம்பித்தேன். கயிறு மேலே வர வர மறுபடி முன்னோக்கி சென்று இழுக்க ஆரம்பித்தேன். நான்தான் முதல் ஆளாக நின்று கொண்டிருந்ததால் அதிக ஆற்றல் கொடுத்து இழுக்க வேண்டி இருந்தது. ஆனால், இழுத்து கொண்டே இருக்கிறோம் அரைமணி நேரமாக கயிறு முடிந்தபடி இல்லை...! கடல் உள்ளே தான் இன்னும் இருந்தது. இப்போது தூரத்தில் ஒரு கட்டை கயிற்றில் கட்டப்பட்ட கட்டை தெரிந்தது! அப்பாடா...! இழுவை முடியபோகிறது என்று நினைத்தேன் ... அந்த கட்டை கரையை நெருங்கி கொண்டிருந்தது.... இப்போது எனக்கு பின்னால் கடைசியில் நின்று கொண்டிருந்தவர்கள் என் முன்னே வந்து இழுக்க ஆரம்பித்தனர். இப்போது இன்னும் அதிக ஆற்றல் கொடுக்க வேண்டியதாக இருந்தது. கட்டை கரையை அடைந்தது... இப்போது கயிறு கற்றைகளாக இருந்தது...! எனது அருகிலும் எனக்கு முன்னே மாறி மாறி சென்றவர்கள் இடுப்பில் கயிறினை கட்டியிருந்தனர் அதனை கயிற்றுகற்றையுடன் இணைத்து பலம் கொண்டு இழுத்தனர். நான் குதிகாலை ஊன்றி அழுத்தி இழுத்தேன் ஆனால் அவர்கள் குதிகாலை அழுத்தாமலே பலம் கொண்டு இழுத்தனர். அவர்கள் மீனவர்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். கயிற்றினை இழுத்துக்கொண்டே அவர்களிடம் பேச்சு கொடுத்தேன். இன்னும் எவ்வளவு நேரம் இழுக்க வேண்டும் என்றேன். ‘ஒரு அரை அவரில் முடிந்துடும் சார் என்றார்’ இன்னும் அரைமணி நேரமா இழுப்போம் என்று இழுத்துக்கொண்டே கேட்டேன். எவ்வளவு தூரத்திற்கு கயிறு கடல்ல விட்டுருக்கீங்க ? ‘அது ஒரு மூணு கிலோ மீட்டர்வரும் சார்’. ‘மூணு கிலோ மீட்டரா என்று மனதிற்குள் யோசிக்கும் போதே? ஒரு ஐந்து பேர் கடல் உள்ளே சென்றனர். அதில் ஒருவர் ஒரு பெரிய மூங்கில் கழியினை எடுத்து சென்றார். ‘எதற்கு எல்லாம் உள்ளே போகிறார்கள்? மூங்கில் கழி எதற்கு?’ வலையை இழுத்து வர சார். மூங்கில் கழி வச்சு வலையமுடுக்குவாங்க’
இவ்வளவு நேரம் இந்த் காட்சிகளை பார்த்து கொண்டிருந்த ஒரு பெண்மணி ஒரு 50 வயதிருக்கும் இரண்டு கயிற்றுக்கும் நடுவில் கடலில் தான் கையில் வைத்திருந்த நெகிழிப்பையில் வைத்திருந்த குப்பைகளை கடலில் கொட்டினார். அதில் சிவப்பாக இருந்த தேங்காய், கெட்டு போன மாலை இன்னும் என்னவெல்லாமோ இருந்தது என்று தெரியவில்லை. இழுத்துகொண்டிருந்த இளைஞன் ஒருவன் தலையில் அடித்து கொண்டு கேட்டான்...' இவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டு இருந்து வலை கரைக்கு வர நேரம் கொட்டுறீயிமா? தள்ளியாவது போய் கொட்டலாமுல?'
' ஏற்கனவே கொட்டியாச்சி இது மிஞ்சினது...' அந்தம்மாவின் கணவர் அந்த இளைஞனுக்கு அளித்த பதில்...!
இப்போது படகிற்கும் இரண்டு பக்கங்களிலும் தனித்தனியாக இழுக்கப்பட்ட கயிறுகள் முக்கிய வலை கரையை நோக்கி நெருங்க நெருங்க ஒன்றாக்கப்பட்டு இழுக்கபட்டன.
“எத்தனை கிலோ இந்த வலையில் கிடைக்கும்?”
‘ரெண்டு இல்லைனா மூணு கூடை சார், அதிர்ஷ்டம் இருந்தா கூட கிடைக்க வாய்பிருக்கு?’
“இத இழுக்க எவ்வளவு பேரு தேவை?”
‘இருபதிலேர்ந்து முப்பது பேரு வரைக்கும் வேணும் சார். சில சமயம் உங்கள மாதிரி பீச்சிக்கு வரவங்க ஹெல்ப் பண்ணுவாங்க’
பரவாயில்லை இப்படி யாரவது உதவினால் அவர்களுக்கு சிரமம் குறைய வாய்ப்புள்ளது ஏனென்றால் அவர்கள் பலவிதத்திலும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே வலை கரையினை அடைந்தது.
இப்போது கயிற்றினை இழுத்தவர்களை விட வேடிக்கை பார்க்க வந்தவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. நானும் பெரிய மீன் ஏதாவது மாட்டியிருக்குமோ என ஆர்வத்தில் எட்டி பார்த்தேன் அத்தனையும் நெத்திலிகள்!
இவ்வளவு நேரம் இழுத்த போது இருந்த வலி அந்த மீன் கூட்டங்களை பார்க்கும் போது காணாமல் போய்விட்டது. உழைப்பின் பலன் கிடைக்கும் போது மகிழ்ச்சி வருவது இயல்புதானே. பிறகு அவர்கள் மீன்களை படகில் வைத்து படகினை இழுத்து சென்றனர்.
ஒரு நாள் அவர்கள் உழைப்பை பகிர்ந்த எனக்கு அவர்கள் தினம் படும் வலியினை புரிந்து கொள்ள முடிந்தது.
#கரையை விட கடல் பெரிது தான் ....
No comments:
Post a Comment