எங்கு நோக்கிலும் வணிகமயம்... அதில் வாடிக்கையாளர்களைக் கவர பலவேறு யுக்திகள்...!
யாசகம் கேட்பவர் கூட ஆட்கள் அருகில் வருகையில் தங்கள் கையில் வைத்திருக்கும பாத்திரத்தை குலுக்கி சத்தம் ஏற்படுத்தி தன் பாத்திரத்தில் கவனத்தை ஈர்த்து யாசகம் இட வைக்கின்றனர்.
அப்படிதான் அன்று ஒரு உணவகத்திற்கு இரவு சிற்றுண்டி முடிக்கச் சென்றேன். தோசை உண்ணலாம் என்று எண்ணியிருந்த வேளையில்... தோசைக்கல்லில் தோசை பிரட்டிகளைக் கொண்டு கடகட வென சத்தம் பலமாக மாஸ்டர் எழுப்பினார். அதில் தூண்டபட்டவனாய் உணவு பருமாறுபவரை அழைத்தேன்."ஒரு கொத்து பரோட்டா" order செய்தேன்."சரிங்க சார், ஒரு முட்டை பரோட்டா...."எனக்கு தூக்கி வாரி போட்டது. நாம் கொத்து பரோட்டா தானே சொன்னோம் ஆனால் இவர் முட்டை பரோட்டா என்கிறாரே? என்ற சிந்தனையில் "தம்பி, இங்க வா, கொத்து பரோட்டா.." என்றேன்.அவன் என்னிடம் "முட்டை பரோட்டா" என்றான். இவன் நம்ம கலாய்கிறானா இல்லை இதற்கு இது தான் பெயரா? எனக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. மறுபடியும் சொன்னேன் "தம்பி, கொத்து பரோட்டா பா"'சார் முட்டை பரோட்டா தான் சார் "அது என்று தீர்மானமாக சொன்னான்.அதற்குள் என்னுடன் சாப்பிட வந்தவர். "சார் இன்னும் 5 நிமிசத்தில தெரியும் சார். பொறுமையா இருங்க" நானும் அமைதியானேன். இரண்டாவது நிமிடத்தில் தோசைக்கல்லில் கொத்து பரோட்டாவினை கொத்தும் சத்தம் கேட்டது. நமக்கு தான் என்று அமைதியானேன். இருந்தாலும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. நல்லவேளை எதிர்பார்த்தபடி கொத்து பரோட்டா வே வந்தது."ஏம்பா... என் திருப்திக்கு கொத்து பரோட்டா சொல்லியிருக்கலாம் ல?""ரெண்டும் ஒண்ணுதான் சார்"."சரிப்பா"இவனிடம் எத்தனை முறை பேசினாலும் இது தான் பதில் வரும் என்று புரிந்து கொண்டேன்.மற்றுமொரு சம்பவம்வேறொரு உணவகம் !
அதே போன்றே நானும் என்னுடன் ஒரு அலுவலரும் வந்திருந்தார்.வழக்கம் போல என்ன சாப்பிடலாம் என்ற பேச்சு ஆரம்பித்தது. தோசை சாப்பிடலாம் என்ற முடிவும் எடுக்கப்பட்டது. சரி ஆர்டர் கொடுக்கலாமா? நானே ஆர்டர் கொடுக்கிறேன் பேர்வழி என்று உணவு பரிமாறுபவரை அழைத்தேன். "ரெண்டு தோசை ப்பா"அவன் தோசை மாஸ்டர் இருக்கும் திசையை நோக்கி "ரெண்டு மாவு"'அடடா மறுபடியுமா?'"தம்பி தோசைப்பா" என்றேன்.நல்லவேளை இவன் மறுபடியும் மாவு என்று சொல்லவில்லை "வரும் சார்" என்று மட்டும் பதில் சொன்னான். அந்த பதிலில் ஒரு தெளிவு இருந்தது. ஆகவே தோசை தான் வரும் என்று உறுதியாக நம்பினேன். அதேபோலவே தோசையும் வந்தது.என் பின்னே அமர்ந்திருந்தவர் இப்போது ஆர்டர் செய்தார்."இந்தப்பா தோசை சொல்லு"உணவு பரிமாறுபவர் தோசை மாஸ்ட்டரை நோக்கினார். இப்போது என் மனதில் அவன் வசனம் ஒலித்தது 'ஒரு மாவு'ஆனால், பரிமாறுபவன் சொன்னது. "ஒரு தோசை"என்னய்யா இது நாம சொல்லும்போது மாவு என்கிறான் ஆனால் தோசை கிடைக்கிறது; மற்றொருவர் ஆர்டர் தரும் போது 'தோசை' என்று சொல்கிறான். அப்போதும் 'தோசை' தான் கிடைக்கிறது. இதுதான் பரிமாறுபவருக்கும் மாஸ்டருக்கும் உள்ள கருத்தொற்றுமையா?
மற்றொரு நாள் நானும் அதே நண்பரும் வேறொரு உணவகத்திற்கு சென்றோம். அன்று நண்பர் ஆர்டர் கொடுப்பதாக சொன்னார். நானும் சரி உங்கள் விருப்பம் போலவே ஆகட்டும் என்றேன். " தம்பி ஒரு தோசை நைசா""ஒரு பேப்பர் நைசே..." என்று மாஸ்டரை நோக்கி குரல் கொடுத்தான்."அவர் இந்த முறை கடுப்பாகி எழ முற்பட்டார். அவரை அமரும்படி சொன்னேன்."இந்த முறை உங்கள் ஆர்டரை மெருகேற்றியுள்ளான். நீங்கள் பாராட்டலாம் அல்லது சும்மா இருக்கலாம் என்றேன்"அவர் சும்மாவே இருந்து விட்டார்!
அப்படிதான் அன்று பொருள் வாங்கிவிட்டு பில் போட சொன்னேன். பில்லில் 'T' என ஆரம்பிக்க வேண்டும். அவனுக்கு நான் சொன்னதில் அது 'D' யா அல்லது 'T' என்று சந்தேகம் வந்து விட்டது.சார் "எந்த டி சார்?"நான் அவனுக்கு எளிமையாக புரிய வைக்கிறேன் பேர்வழி என்று 'Teacher' வர 'T' என்று சொல்லலாம் என்று வாயைத் திறக்க முற்படடபோது அவனே option கொடுத்தான்."குண்டு டி யா குச்சி டி யா சார்?"இது இது நாள் வரை நான் கேள்வி படாத வடிவமாக இருந்தது. கேட்பதற்கும் புதுமையாக இருந்தது சரி ரெண்டு டி யையும் எழுதி காட்டு என்று எழுதி காட்ட சொல்லி 'T' யை எழுத வைத்தேன். அதே வார்த்தையில் 'P' என்று ஒரு எழுத்தும் இருந்தது அதற்கும் அதே முறையில் எழுதப்படடுள்ளது.
இதே போன்று என்னுடைய பள்ளி பருவத்தில் அறத்திற்கு என்ன ற வரும் என்ற சந்தேகம் எழுந்த போது புரிந்து கொள்ள ஒருவன் கொடுத்த option நினைவிற்கு வந்தது.' அறம்' என்ற வார்த்தைக்கு வல்லின ற வா அல்லது இடையின ர வா என்று option கொடுப்பான் என்று நினைத்தேன். ஆனால் அவன் கேட்டது. அறத்திற்கு என்ன ற வரும்?ரம்பாவுக்கு வர 'ர' வா? இல்லை 'பொறம்போக்கிற்கு வரும் 'ற'வா?
No comments:
Post a Comment