திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-114:
திருக்குறளில் அரசியல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
அரசியலில் ‘வலியறிதல்” என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்.
தமிழில் ஒரு சொலவடை உண்டு, பிடிவாதமாக இருப்பவர்களை அல்லது தவறான முடிவெடுத்து சிரமப்படப் போகிறார்கள் என்று உணரும் நிலையில், அவ்வாறு விடாப்பிடியாக தன்னுடைய நிலையில் உறுதியாக இருப்பவர்களை இவ்வாறு சொல்வதுண்டு, ‘ஒன்னு சொந்தப் புத்தி இருக்கணும் இல்லையென்றால், சொல் புத்தியாவது இருக்கணும்” என்று. இந்த வார்த்தைக்கும் தோற்றுவாய் ஐயன் திருவள்ளுவர் இருக்கிறார் என்பதனை பின்வரும் குறளைப் பார்த்தாலே உணரலாம். அரசியலில் சிலர் தான்தோன்றித்தனமாக எடுக்கும் முடிவுகள் பல பாதகங்களை ஏற்படுத்துவதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். பின்வரும் குறளில்,
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும் -474 என்கிறார்.
அதாவது, மற்றவரோடு இணங்கி மதித்து நடக்காமலும், தன்னுடைய வலிமையின் அளவை அறியாமல் தன்னைத் தானே வியந்து தான் பெரிய ஆள் என்று சுய தம்பட்டம் அடித்துக் கொள்பவனாக இருப்பவனும் விரைவில் அழிவார் என்கிறார் திருவள்ளுவர். உலகில் பல இடங்களில் போர்கள் ஏற்படுவதற்கும் இது போன்று தான் தோன்றித் தனமாக முடிவெடுப்பவர்களே முக்கியக் காரணமாவார்கள் அதன் பலனையும் அவர்களே நேரடியாகவும் சந்திக்கின்றனர். இதனை 2000 வருடங்களுக்கு முன்னரே நமது ஐயன் கணித்திருப்பது என்னே ஒரு ஞானம்.
அடுத்தக் குறள், நாம் அனைவரும் நன்கு அறிந்தக் குறள் தான். அரசியலில் தலைவராக இருப்பவர் அதிகாரத்தில் இருப்பவர் தன்னுடைய மக்கள் எவ்வளவு சுமைகளை குறிப்பாக வரிச்சுமைகளைத் தாங்குவர் என்று அறிந்து அதற்கேற்றாற் போல் அவர்களுக்கு வரி விகிதங்கள் வகுக்க வேண்டும். என்னவாக இருந்தாலும் மக்கள் தாங்குவர் என்று வைத்துக் கொண்டால். பின்னர் வரிச்சுமை தாங்காமல் மக்கள் எழுச்சி ஏற்படலாம், அல்லது தங்கள் வாய்ப்பின் போது அவர்களை புறக்கணித்து புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நிலை வரலாம். அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு ஆட்சியாளரும் தன்னுடைய வலிமையின் அளவு தெரிந்தே திட்டங்கள் வகுக்க வேண்டும். இல்லையெனில் அதுவே பிறகு தாங்க முடியாத சுமையாக அரசுக்கு மாறிவிடும் என்பதனையும் அரசியல் தலைவர்கள் உணர வேண்டும் என்பதை மிக எளிமையாக பெரும்பாலும் விரும்பி வாசிக்கக் கூடிய பின்வரும் குறளை வடித்துள்ளார் திருவள்ளுவர்.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் -475 என்று மிக எளிமையாகவும் வலிமையாகவும் விளக்குகிறார். அதாவது, மென்மையான மயில் இறகை ஏற்றிய வண்டியே ஆனாலும், அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவிற்கு பலம் பெரும். ஆகவே அளவறிந்து சுமக்க வேண்டும் என்கிறார்.
திருக்குறளைப் படிக்கப் படிக்க நாம் படித்த நீதிக் கதைகள், ஆன்மீகக் கதைகள், இலக்கிய சாராம்சங்கள் திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. பின்வரும் குறளைப் பார்த்தால் புரியும் என்று நம்புகின்றேன்.
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும் -476
அதாவது மரத்தின் நுனிக்கொம்பு வரையும் ஏறிவிட்டவர்கள், அதனையும் கடந்து மேலே செல்வதற்கு முயன்றால், அது அவர்கள் உயிருக்கே முடிவாகிவிடும் என்கிறார். இப்போது நினைவிற்கு வருகிறதா, நுனிக்கொம்பில் உட்கார்ந்து மரம் வெட்டும் முட்டாள்கள் குறித்த கதைகளை...இதில் ஆட்சியாளர் இயற்கை வளங்களை ஓரளவிற்கு மேல் சுரண்டினால், இந்த நிலைமைதான் ஏற்படும் என்பதனையும் உணர வேண்டும். மேலும், அதிகாரத்தை அளவிற்கு மீறி பயன்படுத்தினால் அது அவருக்கே அழிவாய் முடியும் என்ற எச்சரிக்கையையும் கொடுக்கிறது.
தொடர்ந்து பார்ப்போம்.
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.
நன்றி
https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு