Thursday, 23 April 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-118: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-118:     
 திருக்குறளில் அரசியல்:
‘காலம் அறிதல்”  
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் ‘காலம் அறிதல்”  என்ற அதிகாரத்தின் முற்பகுதியில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் தொடர்ந்த குறட்பாக்களைப் பார்ப்போம். 
அலுவலகத்தில் ஊழியர்கள் தான் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதாக நினைத்து தன்னுடைய உயரதிகாரியை மற்றவர்கள் முன்பு மட்டம் தட்டுவது போன்றோ அல்லது தன்னை பொதுவில் மிகைப்படுத்தி வேலையில் கோட்டை விடும் போது, எல்லா உயரதிகாரிகளும் உடனே எதிர்வினை ஆற்றுவதில்லை. அதின் அர்த்தம் அவர்கள் பயப்படுகிறார்கள் என்று இல்லை. சரியான நேரம் வரும்போது, அவர்களின் பொறுப்பற்ற நிலையை அவர்களுக்கு உணர்த்துவர் அல்லது அவருடைய ஒழுங்கற்ற நடவடிக்கைக்குத் தேவையான ஒழுங்கு நடவடிக்கையின் மூலமாகவோ அல்லது பதவி உயர்வு அல்லது ஊதிய மதிப்பீட்டின்போதோ அவர்களுடைய நடவடிக்கைக்குத் தகுந்த பதிலை வழங்குவர். 
அரசியலிலும் சில அரசியல்வாதிகள் தனக்கு அதிகாரம் வரும்வரை காத்திருந்து எதிர்கட்சியில் உள்ளவரின் குற்றங்களை தேடி எடுத்து எதிர்கட்சியோ எதிரிகட்சியோ குற்ற நடவடிக்கை மேற்கொள்கின்றனர். கடந்த வாரம் கூறியதுபோல மன்னராட்சி காலத்திலும் போரில் தோற்ற மன்னர்கள் ஒளிந்திருந்து தங்களுடைய காலம் வரும் போது,  வலுவுடன் வந்து எதிரி மன்னர்களை வீழ்த்துவர். சினத்தை மனத்திலே இருத்தி இருப்பர். இதனையே, அப்போதே தெரிவித்துள்ளார் திருவள்ளுவர்.
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர் -487 என்கிறார். 
அதாவது, அறிவுடையவர், தமக்குப் பகைவர் கெடுதல் செய்த அந்தப் பொழுதே தன்னுடைய சினத்தை வெளியே காட்டமாட்டார்கள், தகுந்த காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள் என்கிறார். 
எல்லா வகையான பொறுமையும் பழிவாங்குதலில் முடியாது, சிலர் சாபம் கொடுத்துச் செல்வர், நல்மனதினர் எந்தச் சாபமும் வழங்காமல், பழி வாங்குதலும் செய்யாமல், “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும”; என்ற சிலப்பதிகாரத்தின் தத்துவத்தைப் போல அறத்தின் வழி நின்று காத்திருப்பர். அத்தகையோருக்கு அடுத்தக் குறள் பொருந்தும்...
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை – 488 என்று குறிப்பிடுகிறார்.
அதாவது, பகைவருக்கு அழிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்த விழும் உரியநேரம் வரும் வரையில் தங்களுடைய பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும் என்கிறார். 
காலம் அறிதல் என்பது காத்திருந்து செய்தல் மட்டுமல்ல உரிய காலம் வரும்போது அதனை சட்டென பற்றிக் கொண்டு செயல்படுத்த வேண்டும். அரசியல்வாதிகள் பொதுவாகவே சந்தர்ப்பவாதிகள் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம். பெரும்பாலும் தனக்கு கொள்கைக்கு விரோதமாக இருந்தாலும் சில சமயங்களில் அது தமது மக்களுக்கு ஆபத்தானதாகவே இருந்தாலும் தங்களுடைய கட்சி வெற்றி பெறுவதற்குப் பொருந்தாத விருப்பமில்லாத கூட்டணியை அமைப்பார். அது சில சமயங்களில் அவர்களுக்குரிய வெற்றியையும் தேடித் தருகிறது. அப்போதைய அவர்கள் தேவை வெற்றி மட்டும்தான் என்பதால், எந்த ஒரு தளர்விற்கும் ஒப்புக்கொண்டு தங்களை கூட்டணிக்கு ஒப்புக் கொடுக்கின்றனர். 
கடந்து விட்ட நேரத்தை திருப்பப் பெற இயலாது, அதுபோல கிடைக்கக் கூடிய சந்தர்ப்பத்தை விட்டுவிடக் கூடாது. தனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்துபவரே சரியான வெற்றியாளர். வேலை வேண்டி செல்வோருக்கு நேர்முகத் தேர்வுதான் தன்னுடைய முதலாளியை திருப்திபடுத்தக் கிடைக்கும் ஒரே வாய்ப்பு, நேர்முகத் தேர்வின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு அங்கே சரியாக பதிலளிக்காமல் வெளியே வந்து நண்பர்களிடம் தமக்கு அங்கே கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நன்கு பதில் தெரியும் என்று சொல்வது திறமையாகாது. பல திறமையாளர்கள் தங்களுடைய உயரதிகளை தனக்குக் கிடைக்கும் சிறிய சந்தர்ப்பதை சரியாக பயன்படுத்தி அவர்களின் நன்மதிப்பை பெற்று விடுகின்றனர். ‘First impression is the best impression” என்பது போல சரியான நேரத்தில் புத்திசாலித்தனமாக செயல்படுவதுதான் வாழ்க்கையிலும் சரி அரசியலிலும் சரி... பெரிய வெற்றிகளைக் கொண்டு சேர்க்கும். இதனை திருவள்ளுவர் பின்வருமாறு சொல்கிறார். 
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல் -489
அதாவது, கிடைப்பதற்கு அரிய நல்ல வாய்ப்பு வந்து வாய்க்கும் போது, அந்தத் தருணத்திலேயே நாம் முடிப்பதற்கு உரிய அரிய செயல்களைச் செய்து முடிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். 

‘ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடி யிரு;குமாங் கொக்கு” என்கிறார் மூதுரையில் ஒளவையார். அதாவது, கொக்கானது தனக்கு கிடைக்க வேண்டிய பெரிய மீன் கிடைக்கும் வரையிலும், அவ்வழியே மடையில் இருந்து திறந்த நீரில் வரும் சிறிய மீன்களை பொறுமையாகப் புறக்கணித்து பெரிய மீனைக் கொத்திச் சாப்பிடும் என்பதாகும். இது சரியான வெற்றியை அடைவதற்காக காத்திருக்க வேண்டும் பொறுமை அவசியம் என்பதற்கான உதாரணமாகக் கொடுத்துள்ளார். ஆனால், அவருக்கு முன்னதாகவே நமது செந்நாப்போதர் அடுத்தக் குறளில் குறிப்பிடுகிறார்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து -490
அதாவது, பொறுமையாகக் காத்திருக்க வேண்டிய காலத்தில் கொக்குப் போல அமைதியாகக் காத்திருக்க வேண்டும், சரியான காலம் வாய்க்கும் போது கொக்கு எப்படி தனக்கான மீனை சரியாகக் குத்துகிறதோ அதைப் போல தவறாமல் செய்து முடிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார் திருவள்ளுவர். 


தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 15 April 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-117: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-117:      திருக்குறளில் அரசியல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் ‘காலம் அறிதல்”  என்ற அதிகாரத்தின் முற்பகுதியில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் தொடர்ந்த குறட்பாக்களைப் பார்ப்போம். 
பொறுத்தார் பூமி ஆள்வார் என்று கேள்விப்பட்டிருப்போம்.  தற்போது யுத்தம்  நடந்து கொண்டிருக்கும் சூழலில், ஈரான் சாமர்த்தியமாக தன்னுடைய இடத்தில் இருந்தே சுற்றியுள்ள நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நிலைகளை தகர்த்தது. தன்னை நோக்கி அமெரிக்க துருப்புகள் நெருங்கி வரும் வரை காத்திருந்து அருகில் வந்தவுடன் தெறித்து ஓடச் செய்தது. இதில் போரை நான் ஆதரிக்கவில்லை. ஆனால், தன்னுடைய தலைவர் கொல்லப்பட்டாலும், பொறுமையைக் கடைப்பிடித்து தனக்கான நேரம் வரும் போது சரியான பதிலடியை ஈரான் வழங்கியது. இதில் முக்கியமான விடயம் சரியான காத்திருத்தலும், எந்த இடத்தில் தாக்க வேண்டும் என்ற யுக்தியும் ஆகும். அரசியல்வாதிகளில் யான தருணமும் இடமும் அமைந்துவிட்டால் உலகமே ஆளலாம் என்பதைத் தான் வள்ளுவரும் குறிப்பிடுகிறார். 
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் 
கருதி இடத்தாய் செயின் -484 
அதாவது, உரிய காலத்தையும் ஏற்ற இடத்திலேயும் செயல்படுத்தினால் உலகமே கைப்பற்றலாம் என்று கருதினாலும் அது கைகூடும் என்கிறார். தற்போதைய அரசியலிலும் கூட சில அரசியல் வாதிகள் தனக்கு வசதியான இடத்திலேயும் தனக்கு தோதான தேர்தலிலும் நிற்பதை நாம் நாள் தோறும் பார்த்து வருகிறோம் என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன். 
அடுத்து, 
புராணங்களிலும் நாம் படிக்கும் கதைகளானது, இறைவனிடம் வரம் பெற வேண்டும் என்றால், பொறுமையாக காத்திருக்க வேண்டும். தவம் செய்ய வேண்டும் என்பதே வலியுறுத்தப்பட்டது. ஆகவே, உலகத்தையே வெற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், தன்னுடைய காலம் வரும் வரை பொறுமையாகக் காத்திருப்பர் என்று பின் வரும் குறளில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர் -485
பண்டைய காலங்களில் மன்னர்களின் ஆட்சியிலிருந்தபோது பல வகைகளிலும் படையெடுப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். போரில் தோல்வியுற்ற மன்னர் எங்கேயாவது தலைமறைவாக வாழ்ந்து திரும்பி நாட்டைப் பிடித்தக் கதைகளை நாம் அறிவோம். மூன்றாம் குலோத்துங்க சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து, சடையவர்மன் குலசேகரபாண்டியனை தோற்கடித்தார். இதனைத் தொடர்ந்து சடையவர்மன் குலசேகரபாண்டியன் பதுங்கி வாழ்ந்தார். பிறகு, அவரைக் மூன்றாம் குலோத்துங்க சோழன் கண்டறிந்து தனக்கு திறை கட்டும்படி பணித்தார். சடையவர்மன் மறைவிற்கு பிறகு பதவிக்கு வந்த அவருடைய தம்பி முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ மன்னர் தம்முடைய பாண்டிய நாட்டிற்கு இழைத்த அநீதியை மனதில் கொண்டு தன்னுடைய நேரம் வரும் போது தஞ்சாவூர், உறையூர் போன்ற சோழர்களின் தலைநகர்களைத் தீக்கிரையாக்கினார். மூன்றாம் இராசராசனை போரில் தோற்கடித்தார் என்பது வரலாறு.  இதனையே பின்வரும் குறளில் திருவள்ளுவர் தெளிவுபடுத்துகிறார். 
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து -486 என்கிறார். 
அதாவது, எப்படி ஆட்டுக் கிடா முரட்டுத் தனமாக அதிவேகமாக தாக்குவதற்கு பின்நோக்கி முதலில் சென்று பின்னர் தாக்குகிறதோ, அதே போல ஊக்கம் உடையவர்கள் போருக்கு உடனே செல்லாமல் ஒடுங்கியிருப்பதும் ஆகும் என்கிறார். 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 8 April 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-116: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-116:    
 திருக்குறளில் அரசியல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் ‘வலியறிதல்”  என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் ‘காலம் அறிதல்” என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ள கருத்துக்களைப் பார்ப்போம். 
காலம் அறிதல் என்றால், நேரத்தைத் தெரிந்து கொள்ளுதல் என்பதல்ல, நேர மேலாண்மையுடன் ஒரு செயலைச் செய்வதற்கு உகந்த சூழல், எதிரியின் பலவீனம் மற்றும், தனது பலம் ஆகியவற்றை ஒருங்கிணைந்து வரும் ஒரு தருணமாகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், காலம் அறிதல் என்பது ‘அரசியல் போர் வியூகம்” ஆகும். ஒரு நாட்டின் பலம், படை மற்றும் வளங்களைவிட, காலம் எவ்வாறு வெற்றியைப் பன்மடங்கு பெருக்குகிறது என்பதைக் காணலாம். 
‘காலம் பொன் போன்றது” என்பதனை அனைவரும் அறிவோம், ஒரு விடயத்தை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதனை உணர்ந்து செய்ய வேண்டும். காலம் குறித்து நிறையப் பொன்மொழிகள் பழமொழிகள் தமிழ் மொழி மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. 
நமது திருவள்ளுவரும் அப்போதே காலம் அறிதலை உவமையுடன் விளக்கியுள்ளார். கீழ்வரும் குறள், அடிப்படையாகக் கொண்டு பஞ்சதந்திரக்கதை ஒன்றைப் படித்திருக்கின்றேன். குறிப்பாக 3வது தந்திரமான ‘அடுத்துக் கெடுத்தல்” அதாவது நம்ப வைத்து கெடுத்தல் அல்லது நம்பிக்கைத் துரோகம் என்ற கருத்தியலின் பிராதனமான கதையே பின்வரும் திருக்குறளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. பஞ்சத் தந்திரக் கதைகளில் ‘கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம்” கதையைப் படித்தீர்கள் என்றால் புரியும். ஆனால், பின்வரும் குறளில் திருவள்ளுவர் குறிப்பிடும் கருத்தானது எதிரியை வீழ்த்துவதற்கு எப்படி நேரத்தைத் திட்டமிட வேண்டும் என்று குறிப்பிடுகிறார். இனி குறளைப் பார்ப்போம். 
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது -481
அதாவது, காகமானது தன்னை விட வலிமையாக இருக்கும் கோட்டானை பகல் நேரத்தில் சண்டையிட்டு வெற்றி பெற்று விடும். அதே போன்று பகைவரை வெல்லுவதற்கு அரசருக்கு ஏற்ற காலம் வேண்டும் என்பதனைக் குறிப்பிடுகிறார். காலம் அறிந்து செயல்பட வேண்டும் என்று எளிய விளக்கத்தின் மூலம் குறிப்பிடுகிறார். 
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதனை கேள்விபட்டிருக்கிறோம். அவ்வாறு செய்வதன்மூலம் செயல் எளிமையாக முடியும், செலவு குறையும். இல்லையெனில் பதரைப் பிரிப்பதற்கு அதிக மெனக்கெட நேரிடும், செலவும் அதிகரிக்கும். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், மின்கட்டணம் போன்ற பல வகையான கட்டணங்களை வரிகளை சரியான சமயத்தில் கட்டப்படும் போது சலுகைகளும் கிடைக்கும் அல்லது தேவையற்ற செலவினைத் தவிர்க்க முடியும். இல்லையென்றால் அதிகக் கட்டணங்களை கட்ட நேரிடும் தேவையில்லாம் பண விரயத்திற்கு வழி வகுக்கும். பின்வரும் குறளில், திருவள்ளுவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். 
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் 
தீராமை ஆர்க்குங் கயிறு -482
அதாவது காலத்தை உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவ விடாமல் கட்டிப் போடும் கயிறாக அமையும். 
ஏந்த ஒரு செயலையும் சரியாகத் திட்டமிட்டு சரியான நேரத்தில் சரியான கருவிகளைக் கொண்டு செயல்படுத்தினால் வெற்றி எளிமையாக அமையும். ஆகவே, வெற்றியாளர்கள், அதிக வெற்றிகளைக் கொண்ட அரசர்கள், எதிரியின் கூடாரத்தை தாக்குவதற்கு முன்னர்;. ஏதிரியின் பலம் மற்றும் பலவீனங்கள், இடத்தின் சூழல் மற்றும் தன்மை போன்ற அனைத்தையும் அறிந்து கொண்டு அதற்கேற்ப வியூகங்களை அமைத்து திறம்பட போரிட்டு வெல்வர். இதில் வல்லவர்கள் மிகச் சிறிய படையினைக் கொண்டு பெரும் படையை வென்றெடுத்த வரலாறும் உண்டு. விவிலியத்தில் ஆஜானுபாகுவாக உயர்ந்து நிற்கும் கோலியாத் என்ற அரசனை தாவீது என்னும் சிறுவன் வெறும் உண்டி வில்லை வைத்து வீழ்த்திய கதை உண்டு. 
நாம் ஏற்கனவே ‘இதனை இதனால் ...” என்ற குறளையும் அறிவோம். அது போன்று பின்வரும் குறளிலும் சரியான முன்னேற்பாடுகள் எப்பேர்பட்ட காரியத்தையும் எளிமையாக்கும் என்கிறார். 
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் - 483
அதாவது, ஒரு செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய கருவிகளுடன் தகுதியான காலத்தையும் அறிந்து கொண்டு செயலைச் செய்தால், செய்வதற்கு அரிய செயல் என்பதும் உண்டோ ? என்று கேட்கிறார். 
இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு தேர்வுக்கு செல்லும் மாணவன், தேர்வுக்குப் படிக்காமல், எழுதுகோல், அழிப்பான் போன்றவை எடுத்துச் செல்லாமல் இருந்தால் அவன் நிலை என்னவாக இருக்கும். அரசியலில் தற்போதைய சூழலில் சொல்ல வேண்டும் என்றால், நமது முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழாவிற்கு, அவர் வந்து பேசிக் கொண்டிருக்கும் போதுதான் விழாப் பந்தல் மேற்கூரைகள் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 1 April 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-115:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-115:    
திருக்குறளில் அரசியல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் ‘வலியறிதல்”  என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம். 
தலைக்குத் தப்பியதுதான் தானமும் தருமமும் அல்லது தனக்குப் பின்தான் தானமும் தருமமும் என்று சொல்வடைக் கேள்விப்பட்டிருப்போம். அதாவது, எந்த ஒரு தர்மம் செய்வதாக இருந்தாலும், தன்னால் இயன்றதை தன்னிடம் உள்ள அளவை அறிந்து தானம் வழங்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த முறை தானம் செய்யாத நிலையில் வருந்த நேரிடும். அதே போன்றுதான் அரசியலிலும், அரசினுடைய நிதி நிலையினை உணர்ந்தே நலத்திட்டங்கள் வகுக்கப் பட வேண்டும். அப்படி செய்யும் போதுதான் தடையின்றி நலத்திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும். இது போன்று தான் நிர்வாகத்தைச் செலுத்த வேண்டும் என்று அன்றே சொல்லியுள்ளார் திருவள்ளுவர். 
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி -477 என்கிறார். 
அதாவது, பிறருக்குக் எதனைக் கொடுத்தாலும் அதனை தன்னுடைய வருவாய் அளவை அறிந்து கொண்டு கொடுக்கவும், அப்படிக் கொடுப்பதே பொருளை சிறப்பான முறையில் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.  என்று குறிப்பிடுகிறார். 
அடுத்தக் குறளில், 
வரவு எட்டணா
செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா
கடைசியில்
துந்தனா துந்தனா துந்தனா
என்று பாமா விஜயம் படத்திற்காக கவியரசு கண்ணதாசன் அவர்கள ;எழுதியப் பாடல் கேட்டிருப்பீர்கள். மிக அழகாக வரவுக்கேற்ற செலவு செய்ய வேண்டும். விரலுக்கேற்ற வீக்கம் இல்லையென்றால் சீல் பிடித்து விரலுக்கே பிரச்சனையாகிவீடம் என்ற உண்மையினை அந்தப் பாடலில் உணர்த்தியிருப்பார். நாம் முன்பே பார்த்தபடி ஒரு சிறந்த தத்துவத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், அறநெறிகள் என்று சென்றோமென்றால், அங்கே திருவள்ளுவர் வந்து நின்று விடுகின்றார். இதோ, மேலேயுள்ள கருத்துக்கள் பின்வரும் குறளில்,
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை -478 என்கிறார். 
அதாவது, ஒருவருக்கு பொருள் வரும் வழி சிறியதாக இருந்தாலும், அது செலவாகிச் செல்லும் வழி விரிந்து செல்லாமல் இருந்தால், அதனால் அவனுக்குக் கேடு இல்லை என்று குறிப்பிடுகிறார். அரசியலிலும், வருவாயும் செலவும் ஒருங்கிணைந்து செல்லும் வழியில் திட்டமிடுவது அரசுக்கும் மக்களுக்கும் தொந்தரவு கொடுக்காத நிலையினை உருவாக்கும். சுருக்காமாகச் சொல்ல வேண்டுமென்றால், மேற்கண்ட குறள், இன்றைய காலத்து ‘பட்ஜெட் மேலாண்மை’ (Budgetary Management) மற்றும் ‘நிதிப் பற்றாக்குறை” (Fiscal Deficit) சிக்கல்களுக்கு மிகச் சிறந்த தீர்வாக இருக்கிறது. 
அடுத்து வரும் குறள், நமக்கு நன்கு பரிச்சையமானதும் முந்தைய குறளின் தொடர்ச்சியான நெறிமுறையும் ஆகும். 
தன்னுடைய செல்வத்தின் அளவினை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி வாழாதவனுடைய வாழ்க்கையானது உள்ளது போலத் தோன்றினாலும் இல்லாமல் அழிந்து விடும் என்கிறார். 
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும் -479
மேற்கூறிய குறளின் படி சிலர் அரசியலிலும் தவறான கணக்கிட்டு தனக்கான அழிவினைத் தேடிக் கொள்கின்றனர். இப்போது கூட தவறான கணக்கீடு மூலம் இஸ்ரேல் அமெரிக்காவுடன் எடுத்த முடிவு, இரண்டு நாட்டிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி அவர்களுக்கு மட்டுமல்லாது உலக அளவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 
அடுத்தக் குறளில், இதற்கு முன்பு கூறிய குறளின் கருத்துக்களை வலுப்படுத்தி சொல்கிறார். 
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும் -480 என்கிறார்.
அதாவது தன்னுடைய பொருளாதார நிலையை அளவை ஆராயாமல் அளவு கடந்து உதவி செய்து வந்தால், ஒருவனுடைய செல்வத்தின் அளவும் விரைவில் கெட்டுப் போகும் என்கிறார். 
சுருக்கமாக வலியறிதல் அதிகாரத்தில், நவீன பொது நிர்வாகத்தில் வலியறிதல் பயன்பாடுகளை குறிப்பிடுகிறார். இன்றைய நவீன மேலாண்மை மற்றும் பொது நிர்வாகத்தில் வலியறிதல் அதிகாரத்தின் கருத்துக்கள் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தப்படுகின்றன். 

1. ஆதாரங்களின் மதிப்பீடு (Resource Allocation): ஒரு திட்டத்தைத் தொடங்கும் முன் நிதி, மனித உழைப்பு மற்றும் தொழில்நுட்ப வலிமையைச் சரியாகக் கணித்தல்.
2. நெருக்கடி மேலாண்மை (Crisis Management): எதிர்ப்புகளையும் சவால்களையும் (மாற்றான் வலி) முன்கூட்டியே உணர்ந்து தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்தல்.   
3. நிதி நிலைத்தன்மை (Fiscal Sustainability): கடன் சுமையைக் குறைத்து, வருவாய்க்கு உட்பட்ட செலவினங்களை மேற்கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதார இறையாண்மையைக் காத்தல்.
4. தலைமைத்துவப் பண்பு: ஆட்சியாளர் தற்பெருமை கொள்ளாமல், தகுதியான அமைச்சர்களின் ஆலோசனைகளைப் பெறுதல்.

‘வலியறிதல்” அதிகாரத்தைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்.
திருக்குறளின் 'வலியறிதல்' அதிகாரம் நமக்கு உணர்த்தும் பாடம் ஒன்றே: "வலிமை என்பது ஆக்கிரமிப்பு அல்ல; அது துல்லியமான மதிப்பீடு." ஒரு ஆட்சியாளர் தனது செயலின் வலிமை, தன் ஆற்றல், எதிரியின் திறன் மற்றும் துணைகளின் வலிமை ஆகிய நான்கையும் சீர்தூக்கிப் பார்த்து, அந்தத் தராசு சமநிலை (Equilibrium) அடையும் போது மட்டுமே செயலில் இறங்க வேண்டும். இத்தகைய அளவிடப்பட்ட அதிகாரமே (Measured Power) ஒரு நாட்டை நீண்ட காலத்திற்கு நிலைபெறச் செய்யும்.   
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு