திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-117: திருக்குறளில் அரசியல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
அரசியலில் ‘காலம் அறிதல்” என்ற அதிகாரத்தின் முற்பகுதியில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் தொடர்ந்த குறட்பாக்களைப் பார்ப்போம்.
பொறுத்தார் பூமி ஆள்வார் என்று கேள்விப்பட்டிருப்போம். தற்போது யுத்தம் நடந்து கொண்டிருக்கும் சூழலில், ஈரான் சாமர்த்தியமாக தன்னுடைய இடத்தில் இருந்தே சுற்றியுள்ள நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நிலைகளை தகர்த்தது. தன்னை நோக்கி அமெரிக்க துருப்புகள் நெருங்கி வரும் வரை காத்திருந்து அருகில் வந்தவுடன் தெறித்து ஓடச் செய்தது. இதில் போரை நான் ஆதரிக்கவில்லை. ஆனால், தன்னுடைய தலைவர் கொல்லப்பட்டாலும், பொறுமையைக் கடைப்பிடித்து தனக்கான நேரம் வரும் போது சரியான பதிலடியை ஈரான் வழங்கியது. இதில் முக்கியமான விடயம் சரியான காத்திருத்தலும், எந்த இடத்தில் தாக்க வேண்டும் என்ற யுக்தியும் ஆகும். அரசியல்வாதிகளில் யான தருணமும் இடமும் அமைந்துவிட்டால் உலகமே ஆளலாம் என்பதைத் தான் வள்ளுவரும் குறிப்பிடுகிறார்.
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாய் செயின் -484
அதாவது, உரிய காலத்தையும் ஏற்ற இடத்திலேயும் செயல்படுத்தினால் உலகமே கைப்பற்றலாம் என்று கருதினாலும் அது கைகூடும் என்கிறார். தற்போதைய அரசியலிலும் கூட சில அரசியல் வாதிகள் தனக்கு வசதியான இடத்திலேயும் தனக்கு தோதான தேர்தலிலும் நிற்பதை நாம் நாள் தோறும் பார்த்து வருகிறோம் என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.
அடுத்து,
புராணங்களிலும் நாம் படிக்கும் கதைகளானது, இறைவனிடம் வரம் பெற வேண்டும் என்றால், பொறுமையாக காத்திருக்க வேண்டும். தவம் செய்ய வேண்டும் என்பதே வலியுறுத்தப்பட்டது. ஆகவே, உலகத்தையே வெற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், தன்னுடைய காலம் வரும் வரை பொறுமையாகக் காத்திருப்பர் என்று பின் வரும் குறளில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர் -485
பண்டைய காலங்களில் மன்னர்களின் ஆட்சியிலிருந்தபோது பல வகைகளிலும் படையெடுப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். போரில் தோல்வியுற்ற மன்னர் எங்கேயாவது தலைமறைவாக வாழ்ந்து திரும்பி நாட்டைப் பிடித்தக் கதைகளை நாம் அறிவோம். மூன்றாம் குலோத்துங்க சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து, சடையவர்மன் குலசேகரபாண்டியனை தோற்கடித்தார். இதனைத் தொடர்ந்து சடையவர்மன் குலசேகரபாண்டியன் பதுங்கி வாழ்ந்தார். பிறகு, அவரைக் மூன்றாம் குலோத்துங்க சோழன் கண்டறிந்து தனக்கு திறை கட்டும்படி பணித்தார். சடையவர்மன் மறைவிற்கு பிறகு பதவிக்கு வந்த அவருடைய தம்பி முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ மன்னர் தம்முடைய பாண்டிய நாட்டிற்கு இழைத்த அநீதியை மனதில் கொண்டு தன்னுடைய நேரம் வரும் போது தஞ்சாவூர், உறையூர் போன்ற சோழர்களின் தலைநகர்களைத் தீக்கிரையாக்கினார். மூன்றாம் இராசராசனை போரில் தோற்கடித்தார் என்பது வரலாறு. இதனையே பின்வரும் குறளில் திருவள்ளுவர் தெளிவுபடுத்துகிறார்.
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து -486 என்கிறார்.
அதாவது, எப்படி ஆட்டுக் கிடா முரட்டுத் தனமாக அதிவேகமாக தாக்குவதற்கு பின்நோக்கி முதலில் சென்று பின்னர் தாக்குகிறதோ, அதே போல ஊக்கம் உடையவர்கள் போருக்கு உடனே செல்லாமல் ஒடுங்கியிருப்பதும் ஆகும் என்கிறார்.
தொடர்ந்து பார்ப்போம்.
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு
No comments:
Post a Comment