Thursday, 23 April 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-118: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-118:     
 திருக்குறளில் அரசியல்:
‘காலம் அறிதல்”  
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் ‘காலம் அறிதல்”  என்ற அதிகாரத்தின் முற்பகுதியில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் தொடர்ந்த குறட்பாக்களைப் பார்ப்போம். 
அலுவலகத்தில் ஊழியர்கள் தான் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதாக நினைத்து தன்னுடைய உயரதிகாரியை மற்றவர்கள் முன்பு மட்டம் தட்டுவது போன்றோ அல்லது தன்னை பொதுவில் மிகைப்படுத்தி வேலையில் கோட்டை விடும் போது, எல்லா உயரதிகாரிகளும் உடனே எதிர்வினை ஆற்றுவதில்லை. அதின் அர்த்தம் அவர்கள் பயப்படுகிறார்கள் என்று இல்லை. சரியான நேரம் வரும்போது, அவர்களின் பொறுப்பற்ற நிலையை அவர்களுக்கு உணர்த்துவர் அல்லது அவருடைய ஒழுங்கற்ற நடவடிக்கைக்குத் தேவையான ஒழுங்கு நடவடிக்கையின் மூலமாகவோ அல்லது பதவி உயர்வு அல்லது ஊதிய மதிப்பீட்டின்போதோ அவர்களுடைய நடவடிக்கைக்குத் தகுந்த பதிலை வழங்குவர். 
அரசியலிலும் சில அரசியல்வாதிகள் தனக்கு அதிகாரம் வரும்வரை காத்திருந்து எதிர்கட்சியில் உள்ளவரின் குற்றங்களை தேடி எடுத்து எதிர்கட்சியோ எதிரிகட்சியோ குற்ற நடவடிக்கை மேற்கொள்கின்றனர். கடந்த வாரம் கூறியதுபோல மன்னராட்சி காலத்திலும் போரில் தோற்ற மன்னர்கள் ஒளிந்திருந்து தங்களுடைய காலம் வரும் போது,  வலுவுடன் வந்து எதிரி மன்னர்களை வீழ்த்துவர். சினத்தை மனத்திலே இருத்தி இருப்பர். இதனையே, அப்போதே தெரிவித்துள்ளார் திருவள்ளுவர்.
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர் -487 என்கிறார். 
அதாவது, அறிவுடையவர், தமக்குப் பகைவர் கெடுதல் செய்த அந்தப் பொழுதே தன்னுடைய சினத்தை வெளியே காட்டமாட்டார்கள், தகுந்த காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள் என்கிறார். 
எல்லா வகையான பொறுமையும் பழிவாங்குதலில் முடியாது, சிலர் சாபம் கொடுத்துச் செல்வர், நல்மனதினர் எந்தச் சாபமும் வழங்காமல், பழி வாங்குதலும் செய்யாமல், “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும”; என்ற சிலப்பதிகாரத்தின் தத்துவத்தைப் போல அறத்தின் வழி நின்று காத்திருப்பர். அத்தகையோருக்கு அடுத்தக் குறள் பொருந்தும்...
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை – 488 என்று குறிப்பிடுகிறார்.
அதாவது, பகைவருக்கு அழிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்த விழும் உரியநேரம் வரும் வரையில் தங்களுடைய பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும் என்கிறார். 
காலம் அறிதல் என்பது காத்திருந்து செய்தல் மட்டுமல்ல உரிய காலம் வரும்போது அதனை சட்டென பற்றிக் கொண்டு செயல்படுத்த வேண்டும். அரசியல்வாதிகள் பொதுவாகவே சந்தர்ப்பவாதிகள் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம். பெரும்பாலும் தனக்கு கொள்கைக்கு விரோதமாக இருந்தாலும் சில சமயங்களில் அது தமது மக்களுக்கு ஆபத்தானதாகவே இருந்தாலும் தங்களுடைய கட்சி வெற்றி பெறுவதற்குப் பொருந்தாத விருப்பமில்லாத கூட்டணியை அமைப்பார். அது சில சமயங்களில் அவர்களுக்குரிய வெற்றியையும் தேடித் தருகிறது. அப்போதைய அவர்கள் தேவை வெற்றி மட்டும்தான் என்பதால், எந்த ஒரு தளர்விற்கும் ஒப்புக்கொண்டு தங்களை கூட்டணிக்கு ஒப்புக் கொடுக்கின்றனர். 
கடந்து விட்ட நேரத்தை திருப்பப் பெற இயலாது, அதுபோல கிடைக்கக் கூடிய சந்தர்ப்பத்தை விட்டுவிடக் கூடாது. தனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்துபவரே சரியான வெற்றியாளர். வேலை வேண்டி செல்வோருக்கு நேர்முகத் தேர்வுதான் தன்னுடைய முதலாளியை திருப்திபடுத்தக் கிடைக்கும் ஒரே வாய்ப்பு, நேர்முகத் தேர்வின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு அங்கே சரியாக பதிலளிக்காமல் வெளியே வந்து நண்பர்களிடம் தமக்கு அங்கே கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நன்கு பதில் தெரியும் என்று சொல்வது திறமையாகாது. பல திறமையாளர்கள் தங்களுடைய உயரதிகளை தனக்குக் கிடைக்கும் சிறிய சந்தர்ப்பதை சரியாக பயன்படுத்தி அவர்களின் நன்மதிப்பை பெற்று விடுகின்றனர். ‘First impression is the best impression” என்பது போல சரியான நேரத்தில் புத்திசாலித்தனமாக செயல்படுவதுதான் வாழ்க்கையிலும் சரி அரசியலிலும் சரி... பெரிய வெற்றிகளைக் கொண்டு சேர்க்கும். இதனை திருவள்ளுவர் பின்வருமாறு சொல்கிறார். 
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல் -489
அதாவது, கிடைப்பதற்கு அரிய நல்ல வாய்ப்பு வந்து வாய்க்கும் போது, அந்தத் தருணத்திலேயே நாம் முடிப்பதற்கு உரிய அரிய செயல்களைச் செய்து முடிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். 

‘ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடி யிரு;குமாங் கொக்கு” என்கிறார் மூதுரையில் ஒளவையார். அதாவது, கொக்கானது தனக்கு கிடைக்க வேண்டிய பெரிய மீன் கிடைக்கும் வரையிலும், அவ்வழியே மடையில் இருந்து திறந்த நீரில் வரும் சிறிய மீன்களை பொறுமையாகப் புறக்கணித்து பெரிய மீனைக் கொத்திச் சாப்பிடும் என்பதாகும். இது சரியான வெற்றியை அடைவதற்காக காத்திருக்க வேண்டும் பொறுமை அவசியம் என்பதற்கான உதாரணமாகக் கொடுத்துள்ளார். ஆனால், அவருக்கு முன்னதாகவே நமது செந்நாப்போதர் அடுத்தக் குறளில் குறிப்பிடுகிறார்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து -490
அதாவது, பொறுமையாகக் காத்திருக்க வேண்டிய காலத்தில் கொக்குப் போல அமைதியாகக் காத்திருக்க வேண்டும், சரியான காலம் வாய்க்கும் போது கொக்கு எப்படி தனக்கான மீனை சரியாகக் குத்துகிறதோ அதைப் போல தவறாமல் செய்து முடிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார் திருவள்ளுவர். 


தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

No comments:

Post a Comment