Saturday, 16 May 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-120: திருக்குறளில் அரசியல்: இடன் அறிதல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-120: 
திருக்குறளில் அரசியல்: 
இடன் அறிதல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் ‘இடன் அறிதல்” என்ற அதிகாரத்தின் முற்பகுதியில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் தொடர்ந்த குறட்பாக்களைப் பார்ப்போம். 
மல்யுத்தத்தில் பொதுவாக எதிராளியின் பலவீனம் தெரிந்து விட்டாலோ அல்லது உடலின் ஏதாவது ஒரு பாகத்தில் அடிபட்டது என்றாலோ, மறுபடியும் மறுபடியும் அந்த இடத்திலேயே தாக்கி எதிரியை வலுவிழக்கச் செய்து எளிதில் மல்யுத்த வீரர் வெற்றி பெறுவர். 
இந்தியாவையும் பாகிஸ்தானால் இமயமலை வழியாக வந்து தாக்குவதென்பது மிக கடினமான காரியமாக இருக்கிறது. கார்கில் போரிலும் இந்தியாவை கைப்பற்றலாம் என்று நினைத்த பாகிஸ்தானுக்கு அரணாக இருந்தது இமயமலையின் சூழல் மற்றும் நமது வீரர்களின் தீரம். 
உலகில் பல நாடுகளுக்கு எளிதில் போரில் வெல்ல முடியாத அளவிற்கு அவர்களின் அமைவிடம் அல்லது இயற்கை இடங்களான மலைகள், ஆறுகள், பாலைவனங்கள், அடர்த்தியான காடுகள் மற்றும் கடுமையான காலநிலை ஆகியவை பாதுகாப்பாக உள்ளது. 
உதாரணமாக சொல்ல வேண்டுமெனில், இந்தியா, நேபாளம், பூடான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவற்றிற்கு இமயமலை மற்றும் இந்துகுஷ் மிக உயரமான மலைகள், குறுகிய பாதைகள், மெல்லிய காற்று போன்றவை விமானங்கள் மற்றும் படைகள் ஊடுறுவிச் செல்வதற்கு மிக சிரமத்தை ஏற்படுத்துகிறது. 
சுவிட்சர்லாந்திற்கு ஆல்ப்ஸ் மலைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. 
ஈரானிக்கிற்கு ஜாக்ரோஸ் மற்றும் அல்போர்ஸ் மலைகள் பாதுகாப்பு அரண்களாக இருக்கின்றன. இதனை புரிந்து கொள்ளாவிட்டால் இந்த நாடுகளை வெற்றி கொள்வது என்பது மிக அரிதான விடயமாகும். 
இதே போன்று ஐக்கிய நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐஸ்லாந்து போன்ற நாடுகளுக்கு கடல்கள் மற்றும் தீவு அமைப்புகள் அரணாக இருக்கின்றன. இந்த நாடுகளை வெல்ல வேண்டுமெனில், மிகப் பெரிய கடற்படை தேவைப்படும். ஆங்கில கால்வாய் பிரிட்டனை பல ஆண்டுகளாகப் பாதுகாத்தது. 
அமெரிக்காவிற்கு பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்கள் மிகப் பெரிய அரணாக இருக்கின்றன. 
மங்கோலியா மற்றும் சீனா நாடுகளுக்கு கோபி பாலைவனமும், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு தஸத்-இ-கவிர், தஸ்த்-இ-லட் மற்றும் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் அதிகப்படியான வெப்பம் நீர் இல்லாமை போன்றவை அரணாக இருக்கின்றன. 
‘உலகின் நுரையீரல்” என்று அழைக்கப்படும் அமேசான் காடுகளில் உள்ள அடர்த்தியான செடிகள், பல தாவரங்கள் அல்லது சூழல் ஏற்படுத்தும் நோய்கள் அறிய முடியா உயிரினங்களின் தாக்கங்கள் பிரேசில் நாட்டின் மிகப் பெரிய அரணாக இருக்கின்றது.  சைபீரியாவின் பெரிய காடுகள் மற்றும் கடுங்குளிர் மற்றும் சதுப்புப் பகுதிகள் சீனா, மங்கோலியா மற்றும் கஜகஸ்தானிற்கு மிகப் பெரிய பாதுகாப்பு அரணாக உள்ளது. 
ஏற்கனவே நாம் பார்த்தபடி ரஷியாவின் குளிர், மிகப் பெரிய நிலப்பரப்பு, காலநிலை ஆகியவை ரஷ்யாவை காத்து நிற்கின்றது. 
ஆர்க்டிக் மற்றும் டுண்ட்ரா பகுதிகள் கனடாவினை காத்து நிற்கின்றது. 
இது போன்று நாடுகளின் இடஅமைவுகள் மற்றும் வீரர்களின் போர்த்pறம் ஆகியவை எதிரி நாடுகளுக்கு நிறைய இழப்புகளையும் செலவுகளையும் ஏற்படுத்தும். ஆகவே, ஒரு நாட்டினை வெல்வதற்கு இடத்தைத் தெரிந்து செயல்படுதல் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. திருவள்ளுவரும் இதனையே பின்வரும் குறளிலும் குறிப்பிடுகிறார். 
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்-494 
அதாவது, தகுதியான இடத்தை ஆராய்ந்து தொடர்ந்து தாக்கினால், அவரை வெல்லலாம் என்று எண்ணியிருந்த பகைவர் தன் எண்ணத்தில் தோல்வியடைவார் என்கிறார். 

ஓவ்வொரு வாரமும் இந்தத் தொடர் சனிக்கிழமை அன்று வெளிவரும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி. 

தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Saturday, 9 May 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-119: திருக்குறளில் அரசியல்: இடன் அறிதல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-119:       

திருக்குறளில் அரசியல்: 

இடன் அறிதல்:



திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் ‘காலம் அறிதல்”  என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் ‘இடன் அறிதல்” என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த திருவள்ளுவர் கருத்துக்களைப் பார்ப்போம். குறட்பாக்களைப் பார்ப்போம். 
பொருட்பாலில் உள்ள 70 அதிகாரங்களில், ஒரு செயலைச் செய்து முடிப்பதற்குத் தேவையான அடிப்படைத் தகுதிகளாகத் திருவள்ளுவர் 'வலி அறிதல்'இ 'காலம் அறிதல்'இ மற்றும் 'இடன் அறிதல்' ஆகிய மூன்றினைக் குறிப்பிடுகிறார். இவற்றில் ‘வலி அறிதல்” மற்றும் ‘காலம் அறிதல்” ஆகியவற்றை நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம். இந்த வாரம் ‘இடன் அறிதல்” அறிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிடுவதைப் பார்க்கலாம். ஆரசியல் ரீதியாக ‘இடன் அறிதல்” என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பு, போர் வெற்றி மற்றும் நிர்வாக நிலைத்தன்மை ஆகியவற்றில் நிலப்பரப்பு மற்றும் இடத்தின் முக்கியத்துவத்தை மிக விரிவாக ஆராய்கிறது. 
இந்த அதிகாரத்தின் மூலம் ஒரு ஆட்சியாளர் தனது அதிகாரத்தைச் செலுத்தும் இடமும், அவர் எதிர் கொள்ளும் சூழலும் எவ்வாறு வெற்றியைத் தீர்மானிக்கின்றன என்பதனை விளக்குகிறார். 
மகாபாரத கதையில்; திறமைசாலியான அபிமன்யு யுத்தத்தில் சிறப்பாக போரிடுகிறான். ஆனால், இறுதியில், சக்கர வியூகத்தில் மாட்டிக் கொள்கின்றான். உள்ளே எளிதில் நுழையத் தெரிந்த அவருக்கு வெளியில் வரும் வழி தெரியவில்லை. அந்த வியூகத்தை நன்கு அறிந்திருந்தால் இறப்பிலிருந்து தப்பித்திருக்கலாம். 
தமிழில் சொலவடை ஒன்று உள்ளது. ‘ஆழம் தெரியாமல் காலை விடாதே” என்று. இடத்தின் தன்மையும் சூழலும் நன்கு அறிந்த பின்னரே செயல்பட வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம். இதனையே திருவள்ளுவர் முன்பே குறிப்பிடுகிறார். பின்வரும் குறளைப் பார்ப்போம். 
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் 
இடங்கண்ட பின்அல் லது.-491
பகைவரை முற்றுகை செய்வதற்குத் தகுதியான இடத்தைக் கண்டறியும் வரை எந்த செயலையும் செய்ய வேண்டாம், அதே போன்று பகைவரின் பலம் அறியாமல் அவரை அற்பர் என்று இகழவும் வேண்டாம் என்கிறார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் கைப்பற்றுவதற்கு சரியான இடத்தை தேர்வு செய்தபின்னே செயலில் இரங்க வேண்டும். அதீத நம்பிக்கை ஆகாது என்று குறிப்பிடுகிறார். 
ஒருவர் நேர்முகத் தேர்வில் தேர்வாகி ஒரு பதவியைப் பெறுகின்றார் என்றால் அதில் வெற்றி பெறுவதற்கு, அவருடைய திறமை, அனுபவம், கற்ற கல்வி, நிலைமையை சமாளிக்கும் திறன் ஆகியவை இணைந்து தான் அவரை வெற்றியாளராக மாற்றும், வெறுமனே நேர்முகத் தேர்விற்கு, தொழிலைப் பற்றி தெரிந்திருந்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்தோடு போவாரென்றால், அவர் நேர்முகத் தேர்விற்கு சென்றிருக்கும் நிறுவனத்தைப் பற்றி தெரியவில்லையெனில் அவருக்கு மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. ஆகவே, அனைத்துத் திறன்களையும் ஒருங்கிணைத்துச் செல்வதே சிறப்பு. 
நமது அமைச்சர்களை நாம் பார்த்திருப்போம், சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் துறை சார்ந்த அனைத்து விடயங்களும் களத்திலும் பார்த்திருப்பதாலும், அவர்தான் அவர் துறை சார்ந்த கோப்புகளில் அவர் கையொப்பமிடுவதால் நன்கு அறிந்திருந்தாலும் கையில் மொத்த அறிக்கைகளையும் எடுத்து வருவார். ஏதிர்க்கட்சிகள் என்னவெல்லாம் கேள்விகள் கேட்பார் என்று அதற்கேற்ற கேள்வி பதில் தயாரிப்புடன் வருவார். அது அவருக்கு கூடுதல் தன்னம்பிக்கையை அளிக்கும். 
அடுத்தக் குறளிலும் அதிகபட்ச பாதுகாப்புடன் இருப்பதனை வலியுறுத்துகிறார் குறிப்பாக இடம் சார்ந்த விடயத்தில்.
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் 
ஆக்கம் பலவுந் தரும் -492 என்கிறார். 
அதாவது, வரும் பகையை எதிர்த்துத் தாக்கும் பெறுவலிமை இருந்தாலும், அரணைச் சேர்ந்திருத்தலின் போது உண்டாகும் வெற்றியானது பலவகையான பயன்களைத் தரும் என்கிறார். அரண் என்பது உள்ளே என்ன இருக்கிறது என்பதை கணிக்க இயலாத அமைப்பாக இருக்கும், அதுமட்டுமல்லாது உள்ளிருந்து பலவகையிலும் தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்கும் ஏதுவாக இருக்கும். 
வரலாற்றின் பக்கங்களைப் பார்க்கும் போது, ரஷ்யா நாட்டினை எளிதில் வெற்றி கொள்ள முடியாமல் நெப்போலியன் போனபார்ட்  போனதற்கு அந்த நாட்டின் நில அமைப்பு முக்கியக் காரணமாகும். ரஷ்யப் படைகள் நெப்போலியன் படைகளை உள்நோக்கி மிக அதிகத் தொலைவிற்கு வரவழைத்தனர், ஐரோப்பாவை விட போர்க்களம் மிகப் பெரியதாகவும் கணிக்க முடியாததாகவும் இருந்தது. அவர்கள் சென்றபோது மழைக்காலத்தினால் சகதியிலும் அவர்களால் ஒழுங்காக வயல்களைக் கடந்து செல்ல இயலவிலலை, பனி, கரடுமுரடான நிலைப்பரப்பு கணிக்க முடியாத வானிலை போன்றவை நெப்போலியனின் மாபெரும் சேனையை அழித்தன. ஈரானையும் மற்ற நாட்டினரால் எளிதில் வெல்ல முடியாததற்கு அதன் நில அமைப்பு முக்கிய காரணியாகும் அதனைக் கொண்டு சிறப்பாகவும் செயல்படுகின்றனர்.  துன்னுடைய இடத்தை அறிந்து அதற்கேற்றாற்போல் தனக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துதல் சிறப்பைத் தரும். திருவள்ளுவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின் -493 என்கிறார். 
தகுந்த இடத்தை அறிந்து கொண்டு, பகைவர்களோடு போராடுதலைச் சிறப்பாகச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர் என்கிறார் திருவள்ளுவர்.































































































தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

பணிச்சூழல் காரணமாக இந்தவாரம் முதல் சனிக்கிழமை பதிவு போடத் திட்டமிட்டுள்ளேன். உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி. 

நன்றி