திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-113:
திருக்குறளில் அரசியல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
அரசியலில் ‘தெரிந்து செயல்வகை” என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் ‘வலியறிதல்” என்னும் அதிகாரத்தில் அரசியல் குறித்து திருவள்ளுவர் என்ன குறிப்பிட்டுள்ளார் என்று பார்ப்போம்.
வலியறிதல் அதிகாரத்தில், ஒரு நாட்டினுடைய அதிகாரம் மற்றும் அதன் ஆற்றலை எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதற்கான நுணுக்கமான வழிமுறைகளை வழங்குகிறது. சமகாலத்து அரசியல் மற்றும் மேலாண்மைக் கோட்பாடுகளுடன் ஒப்பிடும்போது, ‘வலியறிதல்” என்பது வெறும் வளங்களைச் சேர்ப்பது மட்டுமல்ல, அந்த வளங்களின் எல்லைகளையும் விகிதாச்சாரத்தையும் சரியாகப் புரிந்து கொள்வதாகும்.
திருவள்ளுவர் ஒரு முழுமையான அரசுக்கு படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகிய ஆறு அங்கங்கள் அவசியம் என்று குறிப்பிடுகிறார். இந்த ஆறினையும் உடைய அரசன், ‘அரசியலில் சிங்கம்” போன்றவன் என்று போற்றப்படுகிறான். 'வலியறிதல்' அதிகாரமானது கல்வி, குற்றங்கடிதல் மற்றும் பெரியாரைத் துணைக்கோடல் ஆகிய அதிகாரங்களுக்குப் பிறகு இடம்பெற்றுள்ளது. இது அதிகாரம் என்பது அறிவாற்றலாலும், ஒழுக்கத்தாலும், சிறந்த வழிகாட்டுதலாலும் செம்மைப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்பதை உணர்த்துகிறது. 'வலி' என்ற சொல் 'ஆற்றல்' என்பதோடு, அதைத் தவறாகப் பயன்படுத்தினால் ஏற்படும் 'வருத்தம்' அல்லது 'வலி' (Strain) என்பதையும் குறிக்கிறது.
இனி ‘வலியறிதல்” அதிகாரத்தில் ஒவ்வொரு குறளிலும் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம். முதல் குறளிலேயே எச்சரிக்கை உணர்வுடன் ஆரம்பிக்கிறார். மங்கோலியப் படைத் தலைவன் செங்கிஸ்கானின் திறனே எதிரியின் வலிமையை அறிந்து அதனைக் குன்றச் செய்து எதிரியை வீழ்த்துவதுதான். அதுபோல, ஒரு செயலினை செய்யத் தொடங்கும் முன் ஒரு சில வலிமைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்-471
மேற்கூறிய குறளில் அரசியல் தலைவன் எந்தவொரு செயலில் ஈடுபடும் முன்பு நான்கு வகையான வலிமைகளைச் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார். அந்த நான்கு வகையான வலிமைகளாவன:
1. வினைவலிமை: (மேற்கொள்ளும் பணியின் கடினத்தன்மை, அதில் உள்ள ஆபத்து மற்றும் அதனால் ஏற்படும் தாக்கம்)
2. தன்வலிமை: (ஆட்சியாளர் அல்லது அரசியல்வாதியின் மன உறுதி, நிர்வாகத் திறன் மற்றும் வளங்கள் ஆகியவை)
3. எதிரியின் வலிமை: (எதிராளியின் ஆற்றல், சூழ்நிலை மற்றும் அவருடைய எதிர்ப்புத் திறன்)
4. துணையின் வலிமை: (தன்னுடைன் உள்ள அமைச்சர்கள், கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஆதரவாளர்களின் வலிமை) ஆகியவை. மேற்கண்ட நான்கு வலிமைகளையும் மதிப்பீட்டு முறையை திருவள்ளுவர் சீர் தூக்கிப் பார்த்தல் என்று அழைக்கின்றார். அதாவது, தற்போதைய 'SWOT' (Strengths, Weaknesses, Opportunities, Threats) ஆய்விற்கு முன்னோடியாகக் கருதப்படுகிறது.
சிலர் எதிர்காலத் திட்டமிடுகிறேன், இந்த வருடத்திற்கான இலக்கினை திட்டமிடுகிறேன் என்ற பேரில் மிகையாக எண்ணிக்கை இடுவதுண்டு. உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒருவனுடைய மாத சம்பளம் 20000 என்று வைத்துக் கொண்டால், அந்த வருடத்தில் அவன் சேமிக்கத் திட்டமிட்டுள்ள தொகை 12 ஆல் பெருக்கினால், 240000 ஐ தாண்டக் கூடாது.( இதுவே நான் மிகையாகத் தான் குறிப்பிட்டுள்ளேன். ) அவருக்கு வேறு எந்த வருமான வாய்ப்பும் இல்லாத நிலையில், இந்த வருடத்தின் என்னுடைய சேமிப்பிற்கு 10 இலட்சம் செலவிட முடியும் என்று குறிப்பிட்டால் அது அடைய முடியாத இலக்காக ஆகும். ஆகவே, எந்த ஒரு திட்டம் இடும் போதும், அல்லது செயல்படும் போதும் தனது திறனறிந்து தனது திறனறிந்து செயல்படுபதே ஆட்சியாளருக்கு அழகாகும். இதனை மிக தெளிவாகப் பின்வரும் குறளில் குறிப்பிடுகிறார்.
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல் -472 என்கிறார்.
அதாவது தன்னால் முடியக் கூடியவற்றை ஆராய்ந்து அறிந்து, அந்தச் செயலிலேயே நிலைத்து நின்று முயற்சி செய்பவர்களுக்கு, முடியாத செயல் எதுவும் இல்லை என்கிறார்.
அடுத்தக் குறளில் முந்தையக் குறளின் தொடர்ச்சியாக குறிப்பிடுகிறார். முந்தையது சேமிப்பு என்று வைத்துக் கொண்டோம். இப்போது கடன் என்ற நிலையில் பார்ப்போம். ஒருவரால், தன்னுடைய ஆயுசு முழுவதும் உழைத்தாலும் தன்னால், ஒரு கோடியினைத் தாண்டி சம்பாதிக்க முடியாது என்ற நிலையில், தொடர்ந்து ஆடம்பரமாக வீட்டு நிகழ்வுகளை மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற எண்ணத்தில் செலவு செய்வது, மேலும், வீட்டுக் கடன் வட்டி போடப்படுதல் குறித்த விபரம் தெரியாமல், புரியாமல் தன் மேல் கொண்ட அளவுகடந்த நம்பிக்கையினால், 2 கோடிக்கு மேல் கடன் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கடனை அடைப்பதற்குள் அவர் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்வார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சிலர் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்யும் நிலையையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அதே போல தான் அரசியலிலும், தன்னுடைய பலம் அறியாமல், தன்னிடம் வேட்பாளராக நிற்பதற்குக் கூட ஆளே இல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்துத் தொகுதிகளிலும் வென்று ஆட்சி அமைப்போம் என்று சொல்வதும் ஆகும். ஆகவே, மனஎழுச்சியில் பேசுவதை விட தம்முடைய அளவுகோல் என்னவென்று தெரிய வேண்டும், தன் வலிமை என்னவென்று அறிந்து செயல்படுதலே ஞானமாகும் என்கிறார். அடுத்தக் குறளைப் பார்ப்போமா?
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்-473 என்கிறார்.
அதாவது தன்னுடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல் மன எழுச்சியினாலே தூண்டப்பட்டுச் செயலைத் தொடங்கிவிட்டு, இடையிலே அதை முடிக்க வழி தெரியாமல் அழிந்தவர் பலர் என்று சொல்கிறார் திருவள்ளுவர். இதை நாம் ஏற்கனவே ‘எண்ணித் துணிக கருமம்..” என்ற அடிப்படையிலுமே திருவள்ளுவர் சொல்லி பார்த்துள்ளோம்.
தொடர்ந்து பார்ப்போம்.
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.
நன்றி
https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு
No comments:
Post a Comment