திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-112: திருக்குறளில் அரசியல்:
எந்த ஒரு செயல் செய்தாலும், திட்டமிட்டு செய்தால், சிறப்பான விளைவுகளை அறுவடை செய்ய முடியும், அது விவசாயமாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி. மேலும், அரசியலில் ஆள்பவர்களின் பங்கு முக்கியமானது. அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், தன்னுடைய நாட்டு மக்களை வளர்ச்சிக்கும் கொண்டு செல்லலாம், படுபாதாளத்திற்கும் தள்ளிவிடலாம். ஆகவே, தெளிவான முடிவnடுத்தல் என்பது ஆட்சியாளருக்கு மிக முக்கியமானதாகவும் அத்தியாவசியமானதாகவும் இருக்கிறது.
சரி, அரசியல் நிர்வாகத்தில் தெரிந்து செயல்வகையின் முக்கியத்துவத்தைப் பார்ப்போம்.
1. நல்ல நிர்வாகம்:
• ஆய்வின் அடிப்படையில் முடிவுகள் எடுத்தல்
• திட்டமிடப்பட்ட செயல்பாடுகள்.
2. அரசியலில் நிலைத்தத்தன்மை:
• தவறான முடிவுகள் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும்.
3. மக்கள் நம்பிக்கை:
• சிந்தித்து செயல்படும் தலைவர் மக்களின் நம்பிக்கையை பெறுவார்.
4. தேசிய முன்னேற்றம்:
• நீண்டகால வளர்ச்சி சாத்தியம்
நல்ல அரசியல் தலைவரின் பண்புகள்:
• சிந்தித்து செயல்படுதல்
• ஆலோசனை கேட்பது
• முன்னோக்கிய பார்வை
• மக்களின் நலனை முன்னிலைப்படுத்துதல்
• தவறுகளை தவிர்த்தல்
திட்டமிடலின் அடித்தளம்: பொருளாதார மற்றும் விளைவு மதிப்பீடு
இந்த அதிகாரத்தின் முதல் குறளிலேயே ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்னால், அதன் நிதிநிலை மற்றும் நீண்டகாலப் பயன்களை ஆராய்வது அவசியம் என்பதை முதல் குறளிலேயே சொல்கிறார். அரசியல் நிர்வாகத்தில், ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அது நுகரும் வளங்களுக்கும், அது உருவாக்கும் நன்மைகளுக்கும் இடையிலான சமநிலையைப் பொறுத்து அமைகிறது.
பரிமேலழகர் இதற்கான உரை எழுதும் போது, ஒரு செயலைச் செய்யும் போது தற்போது அழியும் பொருள் (செலவு), அந்தச் செயலால் பின்னர் உண்டாகும் பொருள் (வரவு), அச்செயலால் எதிர்காலத்தில் தொடர்ந்து கிடைக்கக்கூடிய பயன் (ஊதியம்) ஆகிய மூன்றையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்கிறார். நவீன பொதுக் கொள்கை உருவாக்கத்தில், இதனை செலவு பயன் பகுப்பாய்வு (ஊழளவ-டீநநெகவை யுயெடலளளை) என்று அழைக்கப்படுகிறது. ஒரு புதிய உள்கட்டமைப்புத் திட்டத்தை தொடங்குவதாக கைத்துக்கொள்வோம். அரசு அதற்கான திட்டத்தை வகுத்து நிறையச் செலவு செய்கிறது. ஆனால், அத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்ததும் அதன் மூலம் ஈட்டும் வருவாய் மற்றும் அதன் மூலம் சமூகத்திற்கு நீண்டகாலமாகக் கிடைக்கும் மறைமுகப் பொருளாதார நன்மைகள்ஆகியவற்றை ஆராய வேண்டும்.
அடுத்தக் குறளில் கூட்டுப் பொறுப்புணர்வை (462) எடுத்துரைக்கிறார். தான் மிகப்பெரிய தகுதியினைக் கொண்டிருந்தாலும் தக்க நிபுணர் குழுவை கொண்டு திட்டங்கள் வகுப்பதும் செயல்படுத்துவதும் மிகப் பெரிய நன்மைகளைக் கொடுக்கும் என்கிறார்.
463 ஆவது குறளில், திறம்பட திட்டமிடால் பெரிய பலன் கிடைக்கும் என்று அடிப்படையை இழந்து விடக் கூடாது என்று எச்சரிக்கிறார். உதாரணமாக பேரிடர் நிதியை எடுத்து தொழில் வளர்ச்சிக்குச் செலவு செய்கிறேன் என்று முடிவெடுத்தால், திடீரென்று ஏற்படும் பேரிடரை சமாளிக்க முடியாத நிலை ஏற்படும்.
464 ஆவது குறளின் அடிப்படையில், தனக்கு ஒரு விடயம் புரியவில்லையென்றால், புரிபடவில்லையென்றால், அதனை தவிர்த்து விடுதல் நல்லது, சில ஆட்சியாளர்கள் தங்களுடைய முந்தையத் தலைவர்கள் என்ன கொள்கையின் அடிப்படையில் கட்சியினை ஆரம்பித்தார்கள் எதனை சொல்லி மக்களின் ஆதரவினைப் பெற்றார்கள் என்பதனை மறந்து, அதற்கு எதிராக தனக்குத் தோன்றியதையோ அல்லது சேரக் கூடாத கூட்டத்திடம் மக்களுக்கு உபயோகம் இல்லாத கருத்துக்களைப் பெற்று தனக்கு புரியவில்லையென்றாலும் செயல்படுத்த முனைவது அரசியல் தற்கொலைக்குச் சமமானது ஆகும்.
465 ஆம் குறளின் படி, திறமையான ஆட்சியாளர் நன்கு ஆராய்ந்து அறிந்து திட்டங்களை செயல்படுத்தும் போது, எதிர்கட்சியினராலும், எதிரிக் கட்சியினராலும் அதனைக் குறித்து விமர்சனம் செய்ய இயலாது. அவ்வாறு செய்தால், மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதனை நன்கு அறிந்தவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். இதுவே பகைவரை திறம்பட கையாளும் யுக்தியில் ஒன்றாகும்.
466 ஆவது குறளில், ஒரு அரசியல்வாதியின் வீழ்ச்சி இரண்டு வகைகளில் நிகழலாம்.
ஓன்று செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால்
இரண்டு செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் விடுவதால்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், சாதாரண காலங்களில் தேவையற்ற ஆடம்பரமும் பேரிடர் காலத்தில் தாமதமான சேவைகளும் ஆகும்.
467 ஆம் குறளில், எண்ணித் துணிகக் கருமம் என்றாலே அனைவரும் அறிந்ததே, முடிவெடுக்கும் முன் நன்கு யோசிக்க வேண்டும். செயலில் இறங்கிவிட்டு பிறகு இப்படிச் செய்திருக்கலாமே அப்படி செய்திருக்கலாமே என்று வருத்தப்படுவது அவமானத்திற்குரிய செயலாகும் என்கிறார்.
468 ஆவது குறளில், முறையாக ஆராய்ந்து அறியாமல் செய்யப்படும் திட்டம் மற்றும் செயல்பாடு தோல்வியையேத் தரும். ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், அனைத்து நிலைகளிலும் அதற்கான வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தினால் மட்டுமே இயலும், இல்லையெனில் ஓட்டைப் பானையில் தண்ணீர் முகர்வது போலாகும்.
469 ஆவது குறளில், சரியான செயல்களை சரியான நபர்களா என்று பார்த்துச் செய்ய வேண்டும். குணமறிந்து செய்ய வேண்டும். இல்லையெனில் ‘தானமாக பெற்ற மாட்டின் பல்லை பரிசோதித்து” தமக்கு நல்ல மாடுதான் கொடுத்தார்களா என்று தானம் பெறுபவன் பரிசோதிக்கும் போது பார்த்துப் பார்த்து தானம் கொடுப்பவனுக்கு ஏற்படும் அவமானம் போல் கெடும்.
470 ஆவது குறளில், ஒரு திறம்பட்ட தலைவரின் செயல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அதாவது பெரியோர் அல்லது பயன் பெறுபவர் விரும்பாத செயல்களை அவரிடம் வற்புறுத்தித் திணிக்கக் கூடாது. அப்படி செய்தால் தலைவர் மீது வெறுப்புத்தான் ஏற்படும். தகுதியான திட்டத்தை தகுதியானவர்கள் விரும்பும் வகையில் கொடுக்கும் போது அவர்கள் மகிழ்வர். உதாரணமாக தமிழக அரசு தற்போது வழங்கும் மகளிர் உரிமைத் தொiயைச் சொல்லலாம். அதற்கு உரிமைத் தொகை என்று பெயரிடும் போது அது பெண்கள் மத்தியில் பெருமிதத்தை ஏற்படுத்துகிறது.
தொடர்ந்து பார்ப்போம்.
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு
No comments:
Post a Comment