Tuesday, 24 March 2020

காசநோயும் கொரோனாவும்


பள்ளி வகுப்பில் படித்திருக்கிறேன். பாக்டீரியாவிற்கும் வைரஸிற்கும் உள்ள வேற்றுமைகள் என்ன என்ற கேள்விகள் படித்திருக்கிறேன். வைரஸ் என்றாலே ' நஞ்சு ' என்று தான் அர்த்தம் என்ற வார்த்தை இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. இப்பொழுது உலகம் முழுதும் உணர்ந்து கொண்டிருகிறது. பாக்டீரியாவில் நன்மை செய்யும் பாக்டீரியாவும் உண்டு (வயிற்றில் இ-கோலி என்னும் பாக்டீரியா செரிமானதிற்கு உதவுகிறது) தீமை செய்யும் பாக்டீரியாவும் உண்டு.
ஆனால் வைரஸ் அனைத்துமே தீமை செய்பவைதான் என்பதை புத்தகத்தில் படித்ததை எச்.ஐ.வி.யுடன் வாழ்பவர்களுடன் எனது பணி காலம் உணர்த்தியது...மருத்துவமனைகளில் நாயின் வாயில் எச்சிலுடன் வெறி நாய் கடி நோயை பற்றி போட்டிருக்கும் போது உணர்த்தியது... பன்றி காய்ச்சல் பீதி வந்த போது... சார்ஸ் பயமுறுத்தியபோது... எபோலா எட்டிப்பார்த்தபோது ... இப்போது உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வரை வைரஸ் என்றாலே நஞ்சு தான்.
இப்போது இதனை நாம் சுட்டி காட்ட வேண்டிய அவசியம் என்ன?
கொரோனா ஒரு தொற்றுவியாதியாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கில் உயிர்கள் பலியாகிக் கொண்டிருகின்றன. ஆனால் இந்த பலிகளை நாம் தவிர்க்க நாம் செய்ய வேண்டிய எளிய செயல்கள்
- தும்மும் போதும் இருமும் போதும் முகத்தை சுத்தமான துணி கொண்டோ, முகமூடி அணிந்தோ, கைக்குட்டை கொண்டோ நீர் திவலைகள் வெளியேறாமல் தடுக்கலாம், எதுவும் இல்லையெனில் வலது பக்கமோ, இடது பக்கமோ கையினை தூக்கி தோல்பட்டையுடன் கை இணையும் இடத்தில் இருமும் போதோ தும்மும் போதோ சட்டையில் கிருமி தங்கி விடும் மற்றவருக்கு பரவாது அங்கேயே இறந்து விட வாய்ப்புள்ளது. கைகளை வைத்து இருமவோ தும்மவோ வேண்டாம் அப்படி தும்மினாலோ இருமினாலோ உடனே கைகளை சானிடைசர் கொண்டோ, Hand wash கொண்டோ அல்லது சோப்பு கொண்டோ கைகளை நன்கு கழுவ வேண்டும்.
- அதிகமாக தொடும் பொருட்களை இடங்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்
- இருமல், தும்மல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் மருத்துவ உதவியை அணுகலாம் அல்லது தனிமை படுத்திக் கொள்ளலாம். இவ்வளவு தான்!
இதில் முக்கியமானது சோசியல் டிஷ்டன்சிங் ஒருவரிடமிருந்து மற்றவர் 6 அடி தூர இடைவெளியில் நின்று கொண்டு பேசுதல், பொருட்கள் வாங்குதல் போன்ற செல்கள் புரியலாம். ஆனால் அதனை பலர் இன்னும் முக்கியமான பிரச்சினையாக உணராமல் இருப்பது வேதனையளிகிறது. அதனை நீங்கள் காணொலிகளில் நிறைய பார்த்திருப்பீர்கள் ஆகையால் அதனை நான் கடந்து செல்கிறேன்.
பாக்டீரியாவிலும் நோய்களை தருபவை இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவையும் பல்லாண்டுகளாக மனித குலத்திற்கு அச்சுறுத்துபவையாகவும், மனித குலத்தை அழித்துக் கொண்டும் இருக்கும் முக்கியமான நோய் ‘காசநோய்’. இதற்கு காரணம் ‘மைகோபாக்டீரியம் டியுபர்குலோசிஸ்’(MYCOBACTERIUM TUBERCULOSIS) என்கிற பாக்டீரியா ஆகும்.

நான் ஏன் கொரோனாவினை காசநோயுடன் ஒப்பிட ஆரம்பித்தேன் என்றால் இரண்டுமே காற்று மூலம் எளிதில் பரவுகின்றன.

கொரோனா பல பேருக்கு உடனடியாக மரணத்தை சம்பவிப்பதாலும் அதிவேகமாக பரவுவதாலும் நாம் மிக அதிக கவனம் செலுத்துகிறோம். இது அவசியமானது தான். தீவிரத்தை உணரவில்லை என்றால் பலரையும் நாம் இழக்க நேரிடும். அந்த நிலை வரக்கூடாது என்பதற்காகத் தான் நமது அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

நமது பிரதமர் நம்மை 22.03.2020 அன்று ஒருநாள் வைரஸ் பரவும் சங்கிலியை அறுக்கும் நோக்கத்தில் 14 மணிநேரம் நம்மை வீட்டிலே இருக்கச் சொன்னார். அப்போது பலபேர், வைரஸ் வெயிலில் இறந்துவிடும் என்றெல்லாம் கருத்துத் தெரிவித்தனர். ஆனால், பாக்டீரியா நல்ல வெயில் நல்ல குளிர் இரண்டிலும் தாக்குப்பிடித்து வாழும் தன்மை உடையது. ஆனால், ஒரே ஆறுதல் நோய்தொற்று வீதம், கொரோனோ வைரஸை ஒப்பிடுகையில் குறைவுதான். அதுவும் காசநோயுடன்; இருப்பவர்களுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கு காசநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. மேலும், காசநோய்க்கு நாம் தடுப்பு ஊசியாக BCG குழந்தைப் பருவத்திலேயே போடுகிறோம். மேலும், காசநோய் உண்டாக்கும் பாக்டீரியா நம் உடலில் நுழைந்தாலும் அனைத்துமே நமக்கு காசநோயினை உண்டாக்குவதில்லை. சில சமயங்களில் உறக்க நிலையிலேயே இருக்கும். நமது உடல் எதிர்ப்புச் சக்தி குறையும் போது அவை தாக்கத்தை ஏற்படுத்தலாம். அந்த நிலையினை உறக்க நிலை (Latent TB) என்று வைத்துக் கொள்ளலாம். இந்த நிலையில் அவை காசநோயினை மற்றவருக்கு கடத்துவதில்லை. தீவிர காசநோய் (active TB) மட்டுமே மற்றவருக்கு நோயை பரப்புபவை. அதுவும் நோயைக் கண்டறிந்து மருந்து எடுக்க ஆரம்பித்தால் மற்றவருக்கு பரவுதலும் குறைந்து விடுகிறது. மேலும், காசநோயானது பரவாமல் தடுக்கக் கூடியது மற்றும் குணப்படுத்தக் கூடியது. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் காசநோய் பற்றி முக்கியத்துவம் கொரோனா அளவிற்கு நாம் கொடுக்க வேண்டும். அதற்கு சில தகவல்கள் உங்களுக்கு வழங்கினால் அதனைப் பற்றிய தீவிரம் புரியும் என்று நம்புகிறேன்.
- காசநோய் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
- உலக காசநோயாளிகளில் 5ல் ஒருவர் இந்தியர். இந்தியாவில் வருடத்திற்கு 20 இலட்சம் பேர் புதிதாக காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் இறக்கின்றனர்.
- காசநோய் தாக்கத்தில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது

- ஒரு காசநோயாளி ஆண்டுதோறும் 10 முதல் 15 பேர் வரை இந்த நோயைப் பரப்புகிறார்.
- தமிழகத்தில் மட்டும் 70 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உலக சுகாதர நிறுவனம் 24.03.2020 அன்று வழங்கிய அறிக்கை
- 2018 ஆம் அன்று உலக அளவில் காசநோயினால் 15 இலட்சம் பேர் இறந்துள்ளனர். இதில் 2 இலட்சத்து 5 ஆயிரம் பேர் குழந்தைகள்!
- காசநோய் உலகில் மக்கள் அதிகம் இறக்கும் முதல் 10 காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.
- 2018 ஆம் ஆண்டு 1 கோடி நபர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சொல்கிறது.
காசநோய் கொரோனா போலவே அதிகம் பாதிக்கின்ற உறுப்பு நுரையீரல் தான்! நுரையீரல் பகுதியினை பாதிக்கும் காசநோய் நுரையீரல் காசநோய் (Pulmonary Tuberculosis) என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இன்னொரு விடயம் என்னவென்றால் இது நுரையீரல் அல்லாது உடலின் மற்ற உறுப்புகளையும் பாதிக்கக் கூடியது. இது நுரையீரல் அல்லாத காசநோய் (Extra Pulmonary Tuberculosis) என்றழைக்கப்படுகிறது.
- காசநோய் பாதிக்கப்பட்டால் (DOTS Directly observed treatment short course) என்கிற கூட்டு மருந்து சிகிச்சை உள்ளது. இதனை 6 மாதங்கள் சாப்பிட்டு வர காசநோய் குணமாகிறது. குணமாகிவிட்டதா என்பதை பரிசோதனைக்குப் பிறகே உறுதி செய்ய வேண்டும்.
- மருந்து சாப்பிடாவிட்டால் உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புண்டு, காய்ச்சல், 2 வாரங்களுக்கு மேற்பட்ட இருமல், இரவில் வியர்த்தல், பசியின்மை, உடல் எடை குறைதல் ஆகிய ஏற்பட்டு இறப்பும் நேரிட வாய்ப்புள்ளது. நான் காசநோய் கண்டு இறந்தவர்களையும் கண்டிருக்கிறேன். மருந்து உட்கொண்டு குணமானவர்களையும் கண்டுள்ளேன்.

முக்கியப் பிரச்சனை:
டாட்ஸ் சிகிச்சை 6 மாத கால அளவு வரை நீடிக்கிறது. ஆனால், மருந்துகள் சாப்பிட ஆரம்பித்த இரண்டு மாத கால அளவிற்குள் இதன் அறிகுறிகள் மறைந்து விடுகின்றன. அவரிடமிருந்து கிருமி பரவுதல் குறைந்து விடுகிறது. ஆதலால், பலர் தங்களுக்கு குணமாகிவிட்டதாக கருதி, மருந்தினை உட்கொள்ளுவதை நிறுத்தி விடுகின்றனர். மேலும், சிலர், தங்கள் மருந்துகளை வேளை தவறாமல் எடுத்துக் கொள்வதில்லை, விட்டு விட்டு எடுத்துக் கொள்ளுகின்றனர். இதனால் நோய்கிருமிகள் அந்த மருந்துகளை எதிர்த்து வாழ ஆரம்பிக்கின்றன. அதனால் அதனை விட அதிக ஆற்றல் கொண்ட மருந்துகளை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

Multi Drug Resistance TB:

நோய் கிருமி எதிர்த்து வாழ ஆரம்பிக்கும் போது, காசநோய் மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாக உருவெடுக்கிறது. உதாரணமாக சொல்ல வேண்டுமெனால் புகைப் போட்டு விரட்டியடித்த உருவத்தில் சிறியதாக இருந்த கொசுவிற்கு கொசுவர்த்திச் சுருள் வைத்தனர், விட்டுவிட்டு வைத்ததன் விளைவு அதனை எதிர்கொள்ள ஆரம்பித்ததாகக் கருதுவோம், அடுத்தது கொசுமேட் வைக்கப்பட்டது, அடுத்தது கொசுவிற்கான காயில்கள் பல ஆற்றல்களில் ... ஆனால், கொசுவினை முழுமையாக விரட்ட முடியவில்லை. கொசுவோ உருவ அளவில் இப்போது பெரிதாக உருமாறி நிற்கிறது. இப்போது கைகளினாலேயே பேட் கொண்டு அடித்து கொன்றால் மட்டுமே கொல்ல முடிகின்ற நிலையில் இருக்கிறது. காசநோயும் மருந்துக்கு கட்டுப்படாத காச நோயாக மாறி (Multi Drug Resistance TB) அதற்கு இரண்டு வருட சிகிச்சை அளிக்க நேரிடும். இப்போது ஒருவர் Multi Drug Resistance TB நிலையில் இருந்தால் அவரிடம் இருந்து பரவும் காசநோயும் அந்த நிலையிலேயே பரவும். நோய்கிருமி பெறுபவர் டாட்ஸ் மருந்து நிலைக்குச் செல்லாமல் நேரிடையாக Multi Drug Resistance TB நிலைக்குச் செல்வார். தமிழகத்தில் மட்டும் இந்த நிலையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இருப்பதாகத் தெரிகிறது.

Extreme Drug Resistance TB:
இவர்கள் இந்த நிலையிலும் சிகிச்சையை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் தீவிர நிலைக் காசநோயாக (Extreme Drug Resistance TB) உருவெடுக்கும். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மோசமான நிலை.

அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன?
கொரோனா பாதிப்பிற்கு என்ன சொல்கிறோமோ அதேதான்
- இருமல், தும்மல் வரும்போது பாதுகாப்பாக துணியைக் கொண்டோ, திசு பேப்பர் வைத்தோ, கைக்குட்டையை வைத்தோ மூடிக்கொண்டு இரும அல்லது தும்ம வேண்டும்.
- கைகளை ஹேண்ட்வாஷ் கொண்டு அல்லது சோப் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
- சத்தான ஆகாரம் உண்ண வேண்டும்.
- உடல் எதிர்ப்புச் சக்தியை நன்முறையில் பேண வேண்டும்.
- மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்
- தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசின் தற்போதைய கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கை காசநோயையும் தடுப்பதற்கு ஒருவகையில் வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இல்லையெனில் காரணமே தெரியாமல், யாரால் தொற்றியது என்று தெரியாமல் காசநோயால் இறப்பது பெருங்கொடுமை.
சுத்தம் சோறுபோடும் என்பது உண்மை என்பதை காலங்காலமாக காசநோய் உணர்த்த முயற்சிக்கிறது.
கொரோனா திடமாக உணர்த்துகிறது.

திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டார்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் (குறள்:435)

# மார்ச் 24 உலக காசநோய் தினம்

நன்றி!

இ.ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்

No comments:

Post a Comment