Monday, 20 April 2020

நமது விளையாட்டுக்கள் 20

பேய்ப்பந்து:
இந்த ஆட்டத்தில் பந்தினை பேய்த்தனமாக வேகமாக எறிவதால் இந்த ஆட்டம் பேய்ப்பந்து என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.
ஐந்து நபர்களுக்கு மேல் இருந்தால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக அமையும்.
பொதுவெளியில் இந்த ஆட்டம் ஆடுவதற்கு சிறந்த இடமாகும்.

ஆட்டமுறை:
ஏதேனும் முறையில் தேர்ந்தெடுப்பு முறையில் பட்டவர் பந்தினைக் கையில் வைத்திருப்பார். பொதுவாக இரப்பர் பந்தைக் கொண்டு ஆடப்படுகிறது. பந்தை வைத்திருப்பவர் தவிர மற்றவர் ஆங்காங்கே நின்று கொண்டிருப்பர். பந்தை கையில் வைத்திருப்பவன் ...’பந்தே பந்து” என்று உரக்கக் கத்துவான். மற்றவர் ‘என்ன பந்து” என்று கேட்பர். அவன் ‘பேய்ப்பந்து” என்பார். ‘யார் மேலே?” என்று ஒருவர் கேட்பார், கையில் பந்து வைத்திருப்பவர் ‘உன் மேலே” என்று சொல்லிக் கொண்டு அங்கு நிற்பவர்கள் யார் மேலாவது ஆக்ரோஷமாக எறிவார். எறிந்த பந்து எறியப்பட்டவரின் மீது படலாம் படாமலும் போகலாம். பிறகு பந்தினை யார் எடுக்கிறார்களோ, அவர் அடுத்த நபரின் மீது வேகமாக எறிவார். இதுபோல மாறி மாறி அடுத்தவர் மீது வேகமாக எறியலாம். இதில் குறி பார்த்து அடிப்பதும். அடிக்கும் போது லாவகமாக நழுவி பந்தைப் பிடித்து அடுத்தவர் மீது எறிவதும் தான் ஆட்டத்தின் உத்தியாகும்.

இதில் அணியாக இருந்தால். பந்தை ஒருவருக்கொருவர் கடத்தி மற்றவர் மீது எறிவதும் எதிர் அணி மீது பந்து கிடைத்தால் மறுபடி அவர்கள் எறிய முற்படுவதும் விளையாட்டினை இன்னும் சுவாரசியப்படுத்தும்.
இந்த விளையாட்டு குறி வைத்து எறிவதற்கான நல்ல பயிற்சியாகும். மேலும், சாமர்த்தியமாக விலகுதலும் சமயோசித்தலுக்கு உதவுகிறது.
எங்கள் பிராந்தியத்தில் பந்தே பந்து பாடலை நாங்கள் பின்வருமாறு பாடியுள்ளோம்.
‘பந்தே பந்து”
‘என்ன பந்து?”
‘இரப்பர் பந்து”
‘என்ன இரப்பர்?”
‘திரி இரப்பர்”
‘என்ன திரி?”
‘விளக்குத் தரி”
‘ என்ன விளக்கு?”
‘ குத்துவிளக்கு..”
' என்ன குத்து ?"
'ம்ம்ம்.. கும்மாங் ...குத்து".என்று பாடிக்கொண்டே பந்தை எவரையாவது குறிவைத்து வேகமாக எறிவார்.

நன்றி:
1. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

No comments:

Post a Comment