Thursday, 9 April 2020

நமது விளையாட்டுக்கள் 11



தட்டாங்கல்:

இது கையை தரையில் தட்டி காயைப் பிடிக்கும் விளையாட்டு தட்டாங்கல் விளையாட்டு. இது கழங்கு/கழற்சி காய் கொண்டும் ஆடப்பட்டதால் இந்த விளையாட்டு  “கழங்கு” என்றும் வழங்கப்பட்டது. நான் சிறுவயதில் இருந்தபோது இந்த விளையாட்டு ‘கல்லங்காய்”; என்றும்  அழைக்கப்படுகிறது. அச்சாங்கல் என்றும் சில இடங்களில் வழங்கப்படுவதுண்டு. 
புறநானூற்றுப் பாடலில் இவ்விளையாட்டுப் பற்றிய குறிப்பு உண்டு 
“செறி அரிச் சிலம்பின், குறுந் தொடி மகளிர்
போலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்..” புறநானூறு -36

பெரும்பாணாற்றுப்படையில் பகுதி 35 இல்
..’முத்த வார் மணல் பொற்கழங்கு ஆடு” என்று குறிப்பவையும் இவ்விளையாட்டுகளை பற்றியே குறிக்கின்றன.இரண்டு பாடல்களிலும் மகளிர் ஆற்று மணலில் அவர்கள் கழங்கு விளையாட்டு விளையாடியதாகக் குறிப்புகள் காட்டுகின்றன. 

நற்றிணையில் 79 ஆவது பாடலில் 

‘கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின் அறை மிசைத் தாஅம்” 

என்று பாலைத் திணையில் கண்ணகனார் குறிப்பிடுகிறார். அதாவது கூரைவீட்டின் முன்புறம் உள்ள புதர் ஓரத்தில் அமர்ந்து கொண்டு மகளிர் கழங்கு விளையாடினர் என குறிப்பிடுகிறார்.

இது போன்று இன்னும் சில இலக்கிய குறிப்புகள் இவ்விளையாட்டைப் பற்றி இருக்கின்றன. 
இந்த விளையாட்டின் வகைகளைக் காண்போம். 

வகை 1: 
மூன்றாங்கல்:

பொருட்கள்: கழற்சி காய், சிறு கற்கள் போன்றவற்றைக் கொண்டு விளையாடலாம்
மூன்று கற்களைக் கொண்டு ஆடும் ஆட்டம். 
மூன்று கற்களில் ஒரு கல் கீழே இருக்க வேண்டும். இரண்டு கற்கள் கையில் இருக்க வேண்டும். கையிலிருக்கும் இரண்டு கற்களில் ஒன்றை மேலெறிந்து மீதமுள்ள ஒரு கல்லைக் கீழே வைத்து 
ஏற்கனவே கீழே உள்ள கல்லை கையில் பிடித்து மேலிருந்து கீழ் வரும் கல்லையும் கீழே விழாமல் பிடிக்க வேண்டும். இவ்வாறு 12 முறை செய்தால் வெற்றி பெற்றதாகக் கருதப்படும். இவை அனைத்தும் மேலெறியப்பட்டக் கல் கீழே வருவதற்குள் நடந்து விட வேண்டும். அதற்காக மேலெறியும் கல்லையும் அதிக தூரம் எறியக்கூடாது ஒரு அரைமீட்டரில் இருந்து அதிகபட்சம் ஒரு மீட்டருக்குள் எறிவது நலம். 
ஓவ்வொரு எறிதலுக்கும் கீழ்வருமாறு பாடல்கள் பாடுவர்; என தேவநேப் பாவாணர் குறிப்பிடுகிறார். 
1. ஒன்றாவது ஒன்றாங்காய்
2. இரண்டாவது இரத்தினக்கிளி (அல்லது ஈச்சங்காய்)
3. மூன்றாவது முத்துச்சரம்.
4. நாலாவது நாற்காலி
5. அஞ்சாவது பஞ்சவர்ணம்
6. ஆறாவது பாலாறு
7. ஏழாவது எழுத்தாணி
8. எட்டாவது கொட்டாரம்
9. ஒன்பதாவது ஓலைப்பூ
10. பத்தாவது பனங்கொட்டை
11. பதினொன்றாவது தென்னம் பிள்ளை
12. தென்னைமரத்தடியிலே தேரோடும் பிள்ளையார். 
இதுபோல் பாடி 12 முறை பிடிக்கவில்லையெனில் அடுத்த நபர் ஆட வேண்டும். அடுத்து ஆடுபவர் முதலில் இருந்து ஆட வேண்டும். 
பாடல் பாடுதல் சில இடங்களில் மாறுபடும். நாமும் தற்போதைய நடைமுறைக்கேற்ப பாடலை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். 

வகை 2: 

ஐந்தாங்கல்:
ஐந்து கற்களைக் கொண்டு ஆடப்படுவதால் அப்பெயர் பெற்றது. முதலில் ஆடுபவர் முதலில் ஐந்து கற்களையும் தரையில் ஒன்றுக்கொன்று பக்கத்திலேயே சிதறவிட்டு அவற்றுள் ஒன்றை எடுத்து மேலே போட்டு அது கீழே வருவதற்குள் கீழே உள்ளவற்றில் ஒன்றை எடுத்துக் கொண்டு மேலேயிருந்து வரும் கல்லையும் பிடிக்க வேண்டும். பின்பு கையிலிருப்பவற்றுள் ஒவ்வொன்றை மேலே போட்டுப் போட்டு ஒவ்வொரு தடவையும் கீழிருப்பவற்றுள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு பிடிக்க வேண்டும். 
பிறகு, மறுபடியும் முன் சொன்னவாறு 5 கற்களையும் தரையில் சிதறி ஒரு கல்லை எடுத்து மேலெறிந்து, கீழே இருப்பவைகளுள் இரண்டை எடுத்துப் பிடிக்க வேண்டும். அதன்பின், கையிலிருப்பவற்றுள் ஒன்றை மேலே எறிந்து, கீழே இருக்கும் மீதி இரண்டு கற்களையும் எடுத்துக் கொண்டு மேலிருந்து வரும் கல்லையும் பிடிக்க வேண்டும். இதே போல் 5 முறை சிதறிப் பிடிக்கும் போது, மூன்றாம் முறை ஒரு கல் மற்றும் 3 கற்களுமாகவும், நாலாம் முறை நான்கு கற்களையும் ஒரே சமயத்திலும் , ஐந்தாம் முறை மூன்று கற்கள் மற்றும் ஒரு கல்லாகவும் கீழே இருக்கும் காய்களை எடுக்க வேண்டும். இவை ஒன்றாம்கொட்டை, இரண்டாம் கொட்டை, மூன்றாம் கொட்டை, நாலாம் கொட்டை மற்றும் ஐந்தாம் கொட்டை ஆட்டத்தின் இறுதியில் சொல்லப்படும். 
அதற்குப் பிறகு, நாலு கற்களைக் கைக்குள் வைத்துக் கொண்டு, ஒரு கல்லை இரு தடவை மேலே போட்டுப் பிடித்தல் வேண்டும்.  முதல் முறை ஆட்காட்டி விரலால் தரையில இழுத்துக் “கோழி கொக்காம்” (சிலர் ‘கோழிக் கொத்தாம்” என்றும் சிலர் ‘கோழிப்பீயாம்” என்றும் சொல்வதுண்டு), என்றும் இரண்டாம் தடவை குத்துக் கையால் தரையில் குத்தி ‘குத்து விளக்காம்” என்றும், மேலெறிந்த கல்லைப் பிடிக்கு முன் சொல்ல வேண்டும். பின்பும், அவ்வாறு ஒரு கல்லை இரு தடவை மேலெறிந்து பிடிக்க வேண்டும். முதல் தடவை பிடிப்பதற்கு முன்பு மற்ற நான்கு கற்களையும் கீழே வைத்து ‘வைத்து எடுப்போம்”; அல்லது ‘வைச்சேண்டப்பா” என்றும், மறுதடவை பிடிக்கும் முன் அந்த நான்கு கற்களையும் வாரிக்கொண்டு ‘வாரிக்கொண்டோம்” அல்லது ‘வாரிக்கொண்டேன்” என்றும் சொல்ல வேண்டும். பின்பு, இரு கைகளையும் சேர்த்து இணைத்து வைத்துக் கொண்டு, ஐந்து கற்களும் கீழே விழாதவாறு ‘தப்புத் தாளம் தலைவலி மோளம்” என்று சொல்லிக்கொண்டே வலக்கையின் புறங்கை மற்றும் அகங்கை என இரண்டு முறை புரட்டி வைத்தல் வேண்டும். அதன் பின்பு ஐந்து கற்களையும் மேலே போட்டு அவற்றுள் ஒன்றைப் பிடிக்க வேண்டும். 
பிறகு ஐந்து கற்களையும் போட்டு புறங்கைமேல் தாங்க வேண்டும். அவற்றுள் ஒன்றினை சுட்டிக் காட்டி எதிராளி பிடிக்கச் சொல்லுவார். ஏதிராளி பிடிக்கச் சொன்ன கல்லைப் பிறவற்றுடன் மேலெறிந்து அதை மட்டும் பிடித்துக் காட்ட வேண்டும். அதனை எதிராளியிடம் காட்டியபின் அதைத் தனியாக எடுத்து வைத்து விட்டு, மற்ற நான்கு கற்களில் ஒன்றை மேலே எறிந்து விட்டு மூன்றைக் கீழே வைத்து விட்டுப் பிடித்து, மீண்டும் அதை மேலெறிந்து கீழே வைத்த கல்லை வாரிக் கொண்டு பிடித்தல் வேண்டும். அல்லது வலக்கையில் உள்ள நான்கு கற்களைகளில் இரண்டு கற்களைத் தூக்கிப் போட்டு அதனை இடது புறங்கையால் தாங்கிப் பிடிக்க வேண்டும். அதே போன்று மீதி உள்ள இரண்டு கற்களையும் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அது பழம் ஆகும். 
ஒருவர் ஆடும்போது, மேலே எறிந்த கல்லைப் பிடிக்கத் தவறினால் அல்லது கீழே இருக்கும் கல்லை எடுக்கும் போது பிற கல்லைத் தொட்டு விட்டாலும், அவரால் தொடர்ந்து ஆட முடியாது. ஏதிராள் ஆடத் துவங்குவார். 
ஏதிராளி இதே போல் ஏதேனும் வழிமுறையில் தவறு செய்தால் முன்னவர் ஆடத் துவங்குவார். இந்த ஆட்டத்தில், எந்த இடத்தில் தவறு செய்து ஆட்டம் நிறுத்தப்பட்டதோ மறுமுறை ஆடும்போது விட்ட இடத்திலிருந்து ஆடுவார். இது எல்லா வகைக்கும் பொறுந்தும். 
ஆட்டம் முடிந்த பிறகு, வெற்றி பெற்றவர் தோற்றவரின் கைகளுக்கிடையில் ஒரு கல்லை வைத்து, மேல் கை மேல் மூன்று தடவை குத்துவது வழக்கம் . இது எல்லா வகை ஆட்டத்திற்கும் பொதுவாகும். 

இந்த ஆட்டத்தின் மூலம் கையும் கைநரம்பும் வலுப்பெறும். கைக்கும் கண்களுக்குமான குவியத் திறன் அதிகரிக்கும். 

வகை 3:

ஐந்தாங்கல் மற்றொரு வகை:

இதில் ஆரம்ப விளையாட்டு முறைகள் ஐந்தாங்கல்லின் ஆரம்பமுறைகள் அப்படியே பின்பற்ற வேண்டும். 
அதாவது, முதலில் ஆடுபவர் முதலில் ஐந்து கற்களையும் தரையில் ஒன்றுக்கொன்று பக்கத்திலேயே சிதறவிட்டு அவற்றுள் ஒன்றை எடுத்து மேலே போட்டு அது கீழே வருவதற்குள் கீழே உள்ளவற்றில் ஒன்றை எடுத்துக் கொண்டு மேலேயிருந்து வரும் கல்லையும் பிடிக்க வேண்டும். பின்பு கையிலிருப்பவற்றுள் ஒவ்வொன்றை மேலே போட்டுப் போட்டு ஒவ்வொரு தடவையும் கீழிருப்பவற்றுள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு பிடிக்க வேண்டும். 
பிறகு, மறுபடியும் முன் சொன்னவாறு 5 கற்களையும் தரையில் சிதறி ஒரு கல்லை எடுத்து மேலெறிந்து, கீழே இருப்பவைகளுள் இரண்டை எடுத்துப் பிடிக்க வேண்டும். அதன்பின், கையிலிருப்பவற்றுள் ஒன்றை மேலே எறிந்து, கீழே இருக்கும் மீதி இரண்டு கற்களையும் எடுத்துக் கொண்டு மேலிருந்து வரும் கல்லையும் பிடிக்க வேண்டும். இதே போல் 5 முறை சிதறிப் பிடிக்கும் போது, மூன்றாம் முறை ஒரு கல் மற்றும் 3 கற்களுமாகவும், நாலாம் முறை நான்கு கற்களையும் எடுக்க வேண்டும். அதாவது ஒன்றாம்கொட்டை, இரண்டாம் கொட்டை, மூன்றாம் கொட்டை, நாலாம் கொட்டை வரை ஆட்டத்தின் இறுதியில் சொல்லப்படும். இந்த விளையாட்டில் ஐந்தாம் கொட்டை கிடையாது. 
நாலாம் கொட்டைக்குப் பிறகு, ஐந்து கற்களையும் கீழேபோட்டு அவற்றுள் ஒன்றை நான்குமுறை மேலே போட்டு போட்டு அதை ஒவ்வொரு தடவையும் கீழே உள்ள கல்லை ஒவ்வொன்றாக இடப்பக்கமாகச் சற்றுத் தள்ளித் தள்ளிப் பிடித்தல் வேண்டும். 
பின்பு, மறுபடியும் எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு அவற்றுள் ஒன்றை முன்போல பலதடவை மேலெறிந்து, அதை முற்பட்ட ஒவ்வொரு தடவையும் கீழிருக்குங் கற்களுக்குள் நீங்கியவற்றை ஒவ்வொன்றாக நெருங்க வைத்துப் பிடித்து, இறுதியில் கீழிருப்பவற்றையெல்லாம் ஒருங்கே வாரிப் பிடித்தல் வேண்டும். 
அதன் பின் இரு பாதங்களையும் கூட்டி வைத்து, அவற்றின் மேல் மூலைக்கொன்றாக நான்கு மூலைக்கும் நாலு கல் வைத்து, மீதியிருக்கும் ஒன்றை நான்கு தடவை மேலெறிந்து, அதை ஒவ்வொரு தடவையும் பாதங்களின் மேலுள்ள கல்லை ஒவ்வொன்றாய் இருபாத இடைக்குள் தள்ளித் தள்ளிப் பிடித்தல் வேண்டும். 
பிறகு மீண்டும் ஐந்து கல்லையும் கீழே போட்டு அவற்றுள் ஒன்றினை முன்போல நான்கு தடவை மேலெறிந்து, அதை ஒவ்வொரு தடவையும், கீழிருக்கும் கற்களை ஒவ்வொன்றாய் இடப்புறம் தரையில் பொத்திச் சற்று திறந்து வைக்கப்பட்டிருக்கும் இடக்குடங்கைக்குள் தள்ளித் தள்ளிப் பிடித்தல் வேண்டும். 
பின்பு, ஐந்து கற்களையும் போட்டு புறங்கைமேல் தாங்கி, அவற்றுள் எதிராளி சுட்டிக் காட்டியதைப் பிறவற்றுடன் மேலெறிந்து பிடித்துக் காட்டி, அதைத் தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதி நான்கில் ஒன்றை மேலே எறிந்து, கீழுள்ளவற்றை வாரிப் பிடித்தல் வேண்டும். அத்தோடு பழமாகும். 

வகை 4: 

ஏழாங்கல்:

இந்த வகையும் கிட்டத்தட்ட ஐந்தாம் கல்லின் முதல் வகையைப் போன்றதே ஆகும்.
ஏழு கற்களையும் உருட்டி அவற்றில் ஒன்றை எடுத்து மேலே போட்டு ஒன்றாங்கொட்டை முதல் ஏழாங்கொட்டை வரை விளையாட வேண்டும். ஒன்றாம் கொட்டையில் ஒவ்வொன்றாகவும், இரண்டாம் கொட்டையில் இரண்டு இரண்டாகவும், மூன்றாம் கொட்டையில் மும்மூன்றாகவும், நான்காம் கொட்டையில் இரண்டும் நாலுமாகவும், ஐந்தாம் கொட்டையில் ஐந்தும் ஒன்றுமாகவும், ஆறாம் கொட்டையில் ஆறும் ஒரேடியாகவும், ஏழாம் கொட்டையில் ஒன்றும் இரண்டும் மூன்றுமாகவும் கீழே உள்ள கற்கள் எடுக்கப்பட வேண்டும். 
பின்பு முறையே, இழுத்தல் குத்தல் வைத்தல் வாருதல் நான்கும்  ‘தப்பு-தாளம்-தலைவலி-மோளம்” நான்கும் நிகழும். 
அதற்குப் பிறகு, எல்லாக் கற்களையும் மேலே போட்டு புறங்கையினால் தாங்க வேண்டும். மூன்று கல் மட்டும் புறங்கை மேல் நிற்பின், அதை ‘காட்டான் கருங்கல்” எனக் கீழே போடப்படும். அதற்கு மேலும் கீழும் இருந்தால் அவற்றைச் சொக்க வேண்டும். 
மீண்டும் எல்லாவற்றையும் புறங்கையில் தாங்க வேண்டும். அதில், எதிராளி எதைச் சுட்டிக் காட்டுகிறாரோ அந்தக் கல்லைத் தனியாக பிடித்துக் காட்டி தனியாக வைத்துவிட்டு, மீதி உள்ளவற்றின் ஒன்றை மேலெறிந்து ஐந்தைக் கீழே வைத்துப் பிடித்து, மீண்டும் அதை மேலே எறிந்து கீழுள்ளவற்றை வாரிப் பிடிக்க வேண்டும். பிடித்தால் பழம். 

வகை 5:

இது ஏழாங்கல்லின் மற்றொரு வகையாகும். 

ஒரு கல்லை வைத்துக் கொண்டு மீதி உள்ள ஆறு கற்களையும் உருட்டி ஒன்றாங் கொட்டை முதல் ஏழாங்கொட்டை வரை ஆடல் வேண்டும். ஒன்றாம் கொட்டையில் ஒவ்வொன்றாகவும், இரண்டாம் கொட்டையில் இரண்டு இரண்டாகவும், மூன்றாம் கொட்டையில் மும்மூன்றாகவும், நான்காம் கொட்டையில் இரண்டும் நாலுமாகவும், ஐந்தாம் கொட்டையில் ஐந்தும் ஒன்றுமாகவும், ஆறாம் கொட்டையில் ஆறும் ஒரேடியாகவும், ஏழாம் கொட்டையில் ஒன்றும் இரண்டும் மூன்றுமாகவும் கீழே உள்ள கற்கள் எடுக்கப்பட வேண்டும். 
எடுக்கும் கற்களை ஒரே கைக்குள் அடக்க இயலாதோர், இருகையும் பயன்படுத்துவதுமுண்டு, ஆனாலும், அது சிறப்பு வாய்ந்ததன்று. அனைவரும் ஒப்புக்கொள்ள மாட்டார். 
கீழிருக்கும் கற்கள் தூரத்தூர இருந்தால், கைக்கல்லை பக்கத்தில் வைத்துவிட்டு தொலைவிலுள்ள கல்லை எடுத்துக் கொள்ளலாம். 
ஏழு கொட்டைக்கும் பின்வருமாறு பாடல் பாடப்படும். 
1. பொறுக்கி சிறுக்கி போறாளாம் தண்ணீர்க்குத்தண்ணீர் குடமெடுத்து
2. இரண்டு இரும்பு, ஏழடிக் கரும்பு
3. மூன்று முக்கோடு, முருகன் செங்கோடு
4. நான்கு நடலம், தேங்காய்ப் புடலம்
5. ஐவர் அரைக்கும் மஞ்சள், தேவர் குளிக்கும் மஞ்சள்
6. ஆக்கூர் அடிவாழை, அண்ணன் தம்பி பெருவாழை
7. ஏழண்ணன் காட்டிலே, எங்களண்ணன் ரோட்லே, மஞ்சள் சாரட்டிலே

வேறு பாட்டும் உள்ளது. 

1. தூப்பொறுக்கி தூதுளங்காய் 
மாப்பொறுக்கி மாதுளங்காய்
கல்பொருக்கி கடாரங்காய்
2. ஈர் ஈர்த்திக்கொள்
பூப்பறித்துக் கொள்
பெட்டியில் வைத்துக் கொள்
3. முக்கோண வாசலிலே
முத்துத் தட்டுப் பந்தலிலே
4. நான்கு டோங்கு டம்மாரம்
நாங்களாடும் பம்பரம் 
(அல்லது)
நான்கு டோங்கு 
நாலு வெற்றிலை வாங்கு
5. ஐவர் அரைக்கும் மஞ்சள்
தேவர் குளிக்கும் மஞ்சள்
6. கூறு கூறு சித்தப்பா
குறுக்கே வந்த பெரியப்பா
7. ஏழை எண்ணிக் கொள்
எண்ணெய் மரம் சேர்த்துக்கொள்
பெண்ணை அழைத்துக் கொள்

விருப்பமிருந்தால் நீங்களே சொந்தமாகப் பாடல் புனைந்து ஆடலாம்.

ஏழாம் கொட்டைக்குப் பின், ஒரு கையில் முக்கல்லும் மற்றொரு கையில் நாலுகல்லுமாக வைத்துக் கொண்டு, நாற்கல்லில் ஒன்றை மேலெறிந்து எஞ்சிய இருமூன்றையும் கீழ்வைத்து மேலெறிந்த கல்லைப் பிடித்து, பின்பு மீண்டும் அதை மேலெறிந்து அதைக் கீழ்வைத்த இரு மூன்றையும் இருகையாலும் வாரிக்கொண்டு பிடித்தல் வேண்டும். இது சிறுபுதை எனப்படும். இதை ஆடும் போது பாடும் பாட்டு ‘புதை புதைக்கிற பம்பரம், செட்டி சிதம்பரம்” என்பதாகும். 

இதற்குப் பிறகு, இரண்டு கையிலும் மும்மூன்று கல்லை வைத்துக்கொண்டு, மீதி இருக்கும் ஒன்றை மேலே எறிந்து, ஆட்காட்டி விரலால் நிலத்தில் இழுத்துப் பிடித்தல் வேண்டும். பிறகு, ஒரு கல்லை மேலே எறிந்து ஆறு கல்லைக் கீழ் வைத்துப் பிடித்தபின், மீண்டும் ஒன்றை மேலெறிந்து மீதி உள்ள ஆறையும் ஒருங்கே வாரிப் பிடித்தல் வேண்டும். இது பெரும் புதை எனப்படும்.
இதையடுத்துத் ‘தப்பு-தாளம்-தலைவலி-மேளம்” நான்கும் நிகழும். பின்னர் ஒரு கல்லைக் கீழிட, அதை எதிராளி எடுத்துக் கொடுக்க வேண்டும். இது பழத்தை ஏற்றுக்கொண்டதன் அறிகுறியாகும். 

வகை 6:

பல நாலொரு கல்

ஒன்பது, 13, 17, 21 என்பது போல பல நான்கின் மடங்கோடு ஒரு எண்ணைக் கூட்டிய எண்ணிக்கையில் கற்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கற்களை ஒன்றாக மேலெறிந்து புறங்கையில் தாங்கிப் பிடிக்குமளவு வைத்துக் கொண்டு மற்றவற்றை கீழே தள்ளிவிட்டு, புறங்கையில் உள்ளவற்றை மேலே போட்டு அகங்கையில் பிடித்து, அவற்றில் இருந்து நான்கு நான்காய் இடக்கையாற் பிடித்துக் கீழே நான்கு நான்காய் வைத்தல் வேண்டும். இந்த வகையில் பெரும்பாலும் ஒரு நான்கைத் தான் பிடித்தல் கூடும். 
பின்பு, வலக்கையிலுள்ளவற்றுள் ஒரு கல்லை மேலெறிந்து அதைக் கீழே உள்ளவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ எடுத்துக் கொண்டு பிடித்தல் வேண்டும். இது போல் கீழே கற்கள் உள்ளவரை அல்லது தவறும் வரை திரும்பத் திரும்ப ஆட வேண்டும். கையில் பல கற்கள் சேர்ந்துவிட்டால், உடனே இடக்கையால் ஒரு நான்கை அல்லது பல நான்கைப் பிடித்து நான்கு நான்காய்க் கீழே வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு எல்லாக் கற்களையும் பிடித்து நான்கு நான்காய்க் கீழே வைத்தபின், இறுதியில் எஞ்சியிருக்கும் ஒற்றைக் கல்லை மேலே போட்டுப் புறங்கையில் தாங்கி, அதை மீண்டும் மேலெறிந்து நிலத்தைத் தொட்டு, மேலெறிந்த கல் கீழே விழுவதற்கு முன் அதைக் கையால் அழுத்தி நேரே வீழ்த்தி மூடி விட வேண்டும். இது அமுக்குதல் அல்லது மூடுதல் என்று அழைக்கப்படும். இது பழமாகும். 
முதலாவது புறங்கையால் தாங்கும் போது எல்லாக் கற்களையும் கீழே விட்டு விட்டாலும், பிடிக்கும் போது கல் தவறினாலும், நான்காய் அல்லது நான்குநான்காய்ப் பிடிக்கும் போது கூடக் குறையப் பிடிபட்டாலும், கீழுள்ள கல்லை எடுக்கும் போது மற்றக்கல் அலுங்கினாலும், ஆட்டம் நின்றுவிடும். பிறகு, அடுத்த ஆள் விளையாட வேண்டும். 
ஒரே ஆட்டத்தில், அடுத்தவர் ஆடினாலும், ஆடினவரே மறுமுறை ஆடினாலும், நான்குநான்காய் பிடித்து வைக்கப்பட்ட கற்களை விட்டு விட்டு மற்ற கற்களைக் கொண்டு தான் ஆட வேண்டும். ஒருவர் கடைசிக் கல்லை அமுக்கும் போது தவறிப்போய் அடுத்தவர் அதைச் சரியாக அமுக்கிவிட்டால், அடுத்தவருக்குத் தான் பழம். 

வகை 7:

பன்னிரு கற்கள் அல்லது பதிரெண்டு கற்கள்

12 கற்களை மேலெறிந்து அவற்றைப் புறங்கையில் தாங்கி, அவற்றுள் ஒன்றைமட்டும் இருவிரல் இடையில் சொருகிக் கொண்டு மற்றவற்றை கீழே விட்டு விட்டு, அவற்றை ஒவ்வொன்றாககோ இரண்டு இரண்டாகவோ, மூன்று மூன்றாகவோ, ஒன்றும் பலவுமாகவோ, வேறிரு விரலால் இடுக்கிப் பிடித்துக் கீழே வைத்து எல்லாவற்றையும் பிடித்தபின் புறங்கையிலுள்ளதை அமுக்கி, அதையும் மற்றவற்றோடு சேர்த்து மூன்றுமூன்றாக நான்கு கூறு போட்டு, ஒவ்வொன்றில் இருந்தும் ஒவ்வொரு கல்லை எடுத்துவிட வேண்டும். இக்கூறுகளுக்கு ‘உட்டைகள்” என்று பெயர். நாலு உட்டையிலுருந்தும் ஒவ்வொரு கல்லை நீக்கியபின், எட்டுக் கல் எஞ்சி இருக்கும். அந்த எட்டையும் முன் போன்றே ஆடி, மீண்டும் மூன்று மூன்றாக உட்டை வைத்து ஒவ்வொரு கல்லை நீக்கிய பின், ஆறு கல் எஞ்சி நிற்கும். இவ்வாறே தொடர்ந்து ஆடின், இறுதியில் இருகல் மிஞ்சும். அவற்றுள் ஒன்றை மேலேயெறிந்து இன்னொன்றைக் கீழே வைத்துப் பிடித்து, பின்பு மீண்டும் அதை மேலே எறிந்து கீழே வைத்ததை எடுத்துப் பிடித்தல் வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்தபின், மேலே எறிந்த கல்லை, மூன்று தடவை சிலுப்பியும், (சிலுப்புதல் என்பது அகங்கையிலுள்ளதைப் புறங்கையிலிட்டு வெட்டிப் பிடித்தல் ஆகும்) மூன்று தடவை மேலே எறிந்து தரையைத்; தொட்டுப் பிடித்தும், பின்னர் மூன்று தடவை மேலே எறிந்து தரையும் மார்பும் தொட்டுப் பிடித்தும் முடித்தால் பழமாகும். ஆடும் போது தவறும் வகையும், அதன்பின் நிகழும் விடயமும் முன்கூறியவைப் போன்றே கடைபிடிக்க வேண்டும்.

வகை 8:

பலகல் ஆட்டம்

ஒன்பது முதல் 25 வரை ஒற்றைப்படையான ஏதேனும் ஒரு தொகைக் கற்களை, மேலே போட்டுப் புறங்கையால், தாங்கி ஒரு கல் தவிர மற்றவற்றை எல்லாம் கீழே போட்டுவிட்டு, அந்த ஒரு கல்லை மேலே எறிந்து உள்ளங்கையால் பிடித்து, அதை மீண்டும் மேலே எறிந்து, கீழே கிடக்கும் கற்களுள் இரண்டு நான்கு ஆறு எட்டு என இரட்டைப்படையாக எடுத்துக் கொண்டு, மேலே எறிந்த கல்லையும் பிடிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு எடுப்பிற்கும், முன்னும் பின்னும், ஒரு கல்லை மேலெறிதலும் அதைப் பிடித்தலும் முறையே நடக்க வேண்டும். 
இரண்டு கல் எடுத்தால் காய், நான்கு ஆறு எட்டு ஆனால் பழம். பழக் கற்கள் எல்லாவற்றையும் தன் பங்கில் வைத்துக் கொண்டு, காய் கற்களில் பாதியை விளையாட்டில் போட்டு விட வேண்டும். ஆட்டம் முடிந்தபின், கூடுதலான கற்களை பிடித்திருப்பவர் வெற்றி பெற்றவராவார். 
மற்ற இயல்புகள் செய்திகள் ஆகியவை முன்பு கூறியபடியே ஆகும். 

வகை 9:

பதினாறாங்கல்:
இதே போன்று பதினாறு கற்களையும் கொண்டு ஆடப்படும் ஆட்டம். இதையும் மேற்கூறியவாறு பல வகைகளில் விளையாடலாம். 

நன்றி:
1. தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

No comments:

Post a Comment