Sunday, 26 April 2020

நமது விளையாட்டுக்கள் 24

ஊதாமணி:

இந்த விளையாட்டு ஆரம்பத்தில் ஊதா நிறத்தில் மணிமாலையை வைத்து விளையாடப்பட்டிருக்கலாம். ஆனால், இந்த விளையாட்டிற்கு ஏதேனும் ஒரு பொருளை கைக்குள் மறைத்து வைக்கக்கூடிய அளவான பொருளாக இருத்தல் நலம். இந்த விளையாட்டில் ஏதேனும் ஒரு முறையில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவரை கொஞ்சம் தள்ளி வேறு அறையிலோ அல்லது மற்ற விளையாட்டு உறுப்பினர்கள் இருப்பதற்கு எதிர்ப்புறமோ திரும்பி நிற்க வேண்டும். அதற்கு மற்ற வீரர்கள் பொதுவாக வட்டமாக அமர்ந்து கொண்டு யாராவது ஒருவர் கையில் ஊதாமணியையோ அல்லது ஏதாவது ஒரு பொருளையோ கொடுத்து விடுவர். இப்போது யார் கையில் பொருள் இருக்கிறதோ அவர் தனது காலுக்குக் கீழேயோ தனது ஆடையாலோ மறைத்து வைத்திருப்பார். தான் நல்லபடியாக மறைத்து வைத்துவிட்டார் என உறுதிப்படுத்தியதும். அனைவரும் கோரஸாக கைத்தட்டி பின்வருமாறு பாடுவர். ‘ஊதாமணியை ஒளித்திடுவோம்... கண்டுபிடித்தால் கையைத் தட்டுவோம்...” (ஊதாமணி வைக்காமல் பொருள்கள் மாற்றி வைப்பதால் பாடலும் மறுவி ‘தினமணியை (தினமணி பத்திரிக்கை என்று பொருள் அல்ல) ஒளித்திடுவோம் கண்டுபிடித்தால் கையைத் தட்டுவோம்” என்றும் பாடப் பெறுவதுண்டு. கைத்தட்டிப் பாடிய பிறகு வெளியே நிற்பவர் உள்ளே வருவார். அனைவரும் அமைதியாக எந்தச் சலனமும் இல்லாமலோ அல்லது மேற்சொன்ன பாடலைத் திரும்பப் திரும்பக் கைகளைக் கொட்டியோ பாடிக் கொண்டிருப்பர். யாரிடம் பொருள் உள்ளது என்பதை சரியாக கண்டுபிடித்துவிட்டால் பொருள் வைத்திருந்தவர். இப்போது வெளியே சென்று நிற்க வேண்டும். அவர் கண்டுபிடிக்க வேண்டும். பொருள் யார் வைத்திருந்தார் என்று கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் முன்பு கண்டுபிடிக்க முற்பட்டவரே மறுபடியும் செல்ல வேண்டும்.
நன்றி:
தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

No comments:

Post a Comment