Thursday, 30 April 2020

உழைப்பாளர் தின வாழ்த்துகள்


நமது விளையாட்டுக்கள் 28

ஒரு குடம் தண்ணீர் ஊற்றி..

இவ்விளையாட்டில் ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’ என்ற பாடலுடன் துவங்குவதால் விளையாட்டின் பெயரும் ஒரு குடம் தண்ணீர் ஊற்றி என்று அழைக்கப்படுகிறது.

இந்த விளையாட்டின் தோற்றம்:
 அரண்மனை காவலில் இருந்த ஒரு மகமதிய காவலர் அரண்மனைக்குப் பூப்பறிக்க வந்த குழந்தையை பிடித்து வைத்துக் கொண்டபோது, அக்குழந்தையின் பெற்றோர் எவ்வளவோ பொருள் கொடுக்க முன்வந்தும் விடாமல், கறிசோறு தருகிறேன் என்று சொன்னவுடன் விடுவதாக அமைந்த செய்தியையொட்டி இவ்விளையாட்டு அமையப்பெற்றிருக்கலாம் என தேவநேயப் பாவாணர் தமது தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இதில் ஒரு வார்த்தை து**கா என்பது ஒரு இனத்தின் பெயரை அநாகரீகமாக குறிப்பிட வேண்டாம் என்பதால் இப்பாடலில் இயல்பிற்கு மாறாக குலுக்கா என்று குறிப்பிடுகிறேன். நமது நோக்கம் விளையாட வேண்டும் என்பதுதான். அதிலிருந்து நல்விடயங்கள் மட்டும் எடுத்துக் கொண்டால் போலும் என்பதால். மாற்றியமைக்கிறேன். விளையாட்டுக் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் பொறுத்துக்கொள்வார்களாக!

இந்த விளையாட்டிற்கு குறைந்தது ஐந்து நபர்களாவது இருந்தால் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும்.

விளையாடும் முறை:
இதில் இரண்டு நபர்கள் தானாக முன்வந்து எதிர்எதிரெ நின்று கொண்டு இருவரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு தலைக்கு மேல் கைகளை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

இப்போது மற்ற நபர்கள் ஒருவர் பின் மற்றவர்கள் இருவரிடையேயும் மாறி மாறி பின்வருமாறு பாடல் பாடிக்கொண்டே புகுந்து வர வேண்டும்.

“ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்துச்சாம்”
“இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி இரண்டு பூ பூத்துச்சாம்” என்று துவங்கி
“பத்துக் குடம் தண்ணீர்; ஊற்றி பத்துப் பூ பூத்துச்சாம்” என்று பாடி முடிக்கும் போது எந்த நபர் கைகோர்த்து நிற்பவர்கள் மத்தியில் கடந்து செல்கிறாரோ அவரை கை கோர்த்து நிற்பவர்கள் பிடித்துக் கொள்வர்.

இப்போது கோரசாக சுற்றிவந்தவர்களுக்கும் கைகோர்த்து இருப்பவர்களுக்கும் உரையாடல் நடக்கும்.

மற்றவர்கள் : விடுடா குலுக்கா!
கைகோர்த்து இருப்பவர்: விடமாட்டேன் மலுக்கா!
மற்றவர்கள் குனிந்து கணுக்காலில் கைகளை வைத்துக்கொண்டு
மற்றவர்கள் : இம்மாம் இம்மாம் பொன் (தங்கம்) தருகிறேன்விடுடா குலுக்கா!
கைகோர்த்து இருப்பவர்: விடமாட்டேன் மலுக்கா!
மற்றவர்கள் கொஞ்சம் நிமிர்ந்து முழங்காலில் கைகளை வைத்துக்கொண்டு
மற்றவர்கள் : இம்மாம் இம்மாம் பொன் (தங்கம்) தருகிறேன் விடுடா குலுக்கா!
கைகோர்த்து இருப்பவர்: விடமாட்டேன் மலுக்கா!
மற்றவர்கள்; நிமிர்ந்து இடுப்பில்  கைகளை வைத்துக்கொண்டு
மற்றவர்கள் : இம்மாம் இம்மாம் பொன் (தங்கம்) தருகிறேன்; விடுடா குலுக்கா!
கைகோர்த்து இருப்பவர்: விடமாட்டேன் மலுக்கா!
மற்றவர்கள்; தோள்பட்டையில்  கைகளை வைத்துக்கொண்டு
மற்றவர்கள் : இம்மாம் இம்மாம் பொன் (தங்கம்) தருகிறேன் விடுடா குலுக்கா!
கைகோர்த்து இருப்பவர்: விடமாட்டேன் மலுக்கா!
மற்றவர்கள்;; தலையில் கைகளை வைத்துக்கொண்டு
மற்றவர்கள் : இம்மாம் இம்மாம் பொன் (தங்கம்) தருகிறேன் விடுடா குலுக்கா!
கைகோர்த்து இருப்பவர்: விடமாட்டேன் மலுக்கா!
மற்றவர்கள்; தலைக்குமேல்  கைகளை உயர்த்தி வைத்துக்கொண்டு
மற்றவர்கள் : இம்மாம் இம்மாம் பொன் (தங்கம்) தருகிறேன் விடுடா குலுக்கா!
கைகோர்த்து இருப்பவர்: விடமாட்டேன் மலுக்கா!
மற்றவர்கள் : ஆட்டுக்கறியும் சோறும் தருகிறேன் விடுடா குலுக்கா!
கைகோர்த்து இருப்பவர்: இந்தா விடறேன் விடறேன்…
என்று அவரை விட்டுவிடுவர். இத்துடன் விளையாட்டு முடிந்துவிடும். மீண்டும் விளையாட விருப்பம் இருந்தால் மற்ற இருவர் கைகோர்த்து நிற்க ஆட்டம் தொடரும்

எண்ணிக்கைக்கான பயிற்சி கிடைக்கிறது. மேலும் குழு ஒற்றுமையாக மீட்பதற்கு போராடும் எண்ணம் உருவாகிறது.

நன்றி:
தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
படம்:
https://girisubiramaniam.wordpress.com/2016/06/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F/

Wednesday, 29 April 2020

நமது விளையாட்டுக்கள் 27


‘சூ” விளையாட்டு:
இது இரண்டு வகைகளில் விளையாடப்படுகிறது. இது அவுட்டு என்னும் ஆங்கிலப் பெயரால் வழங்கப்படுகிறது. ஓடித் தொடும் ஒருவர் உட்கார்ந்திருக்கும் ஒருவரை எழுப்புவதற்கு சூ என்று சொல்லி எழுப்புவர். தற்போது அவுட்டு என்று எழுப்பப்படுகிறது. ஆரம்பத்தில் இது உசு விளையாட்டு என்று வழங்கப்பட்டிருக்கலாம்.
வகை 1:
இந்த விளையாட்டில் ஐந்து நபர் இருக்க வேண்டும்.
ஒருவர் ஓடுவராக இருப்பார். மற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியாவது விட்டு ஒரே திசை நோக்கி அமர்ந்திருப்பர். அவர்களுள் ஒருவர் ஓடுபவரைத் துரத்திப் பிடிக்க வேண்டும். ஓடுபவர் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு மத்தியில் குறுக்கே ஓடி இரண்டு பக்கமும் புகுந்து வரலாம். ஆனால் பிடிப்பவர் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு மத்தியில் புகுந்து வர இயலாது கடைசி நபரின் தலையைத் தொட்டுவிட்டு; சுற்றித்தான் அடுத்த பக்கத்திற்கு வந்து ஓட முடியும். ஆனால், ஒரு பக்கத்தில் நின்று மறுபக்கத்தில் ஓடுகிறவர்; கை எட்டும் அளவிற்கு நின்று கொண்டிருந்தாலோ ஓடிக் கொண்டிருந்தாலோ பிடிக்கலாம். ஆதலால் ஓடுகிறவன் முடிந்த மட்டிலும் எதிர்ப்பக்கத்தில் இருந்து கையை நீட்டி தொடாத அளவு தள்ளி ஓட வேண்டும். மேலும், தொடுகிறவர்;, தன்னால் தொட இயலாத போது, அல்லது சோர்வடைந்தாலும் உட்கார்ந்திருப்பவர்களில் யாரையாவது முதுகுப்பக்கமாக வந்து அவரை தட்டி ‘அவுட்டு” என்று எழுப்பி விடலாம். பிறகு எழுப்பி விடப்பட்டவர் பிடிக்க ஓடுவார். எழுப்பி விடப்படுதல் முதுகுப் பக்கம் இருந்து மட்டுமே நடக்கப்பட வேண்டும். மேலும் எழுந்து ஓடுபவர் பின்பக்கம் ஓட இயலாது, முன்பக்கமே எழுந்து ஓட வேண்டும். ஓடுபவர் பிடிபட்டால், பிடிபட்டவர் பிடிப்பதற்காக இப்போது அமர்ந்து கொள்வார். மற்றொரு நபர் இப்போது ஓட ஆரம்பிப்பார்.
இந்த வகை விளையாட்டு பாண்டி நாட்டு முறை என தேவநேயப் பாவாணர் வகைப்படுத்துகிறார். இது வேட்டை செயலில்; இருந்து வந்திருக்கலாம் என்றும், தொடுகிறவன் வேட்டைக்காரன் என்றும், ஓடுகிறவன் வேட்டை விலங்கென்றும், எழுப்பப்படுகிறவன் வேட்டை நாய் போலவும் ஆவார் என்று குறிப்பிடுகிறார்.
இப்போது சோழ நாட்டு முறையாக குறிப்பிடப்படும் சூ விளையாட்டைப் பார்ப்போம்.
வகை 2: இந்த விளையாட்டை ‘சூ” என்னும் தனிப்பெயரில் வழங்குவது சோழ நாட்டில் தான்.
இந்த விளையாட்டில் 6 நபர்களுக்கு மேல் விளையாடுவர். இதில் இரண்டு அணியாகப் பிரிந்து கொள்வர். இரண்டு கட்சிகளிலும் ஒருவர் மட்டும் நிற்பர் ஒருவர் ஓடுபவராகவும் மற்றவர் தொடுபவராகவும் இருப்பர். இரு அணியினரும் ஒரு மீட்டர் இடைவெளியில் எதிர் எதிர் பக்கம் பார்த்து அமர்ந்திருப்பர். அணி 1யில் ஒருவர் கிழக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்திருந்தால் 1 மீட்டர் இடைவெளிவிட்டு அணி 2 யில் ஒருவர் மேற்குப்பக்கம் பார்த்து அமர்ந்திருப்பார். இவ்வாறு மாற்றி மாற்றி உட்கார்ந்திருப்பர். இப்போது ஓடுபவரை பிடிக்க முடியாமல் போனாலோ அல்லது  சோர்வடைந்தாலோ பிடிக்கும் அணி தனது அணியில் உள்ள நபரை ‘சூ”  என எழுப்புவார். அதே போன்று ஓடுபவர் பிடிபட்டால் அவர் அமர்ந்து கொண்டு தனது அணி நபரை எழுப்புவார். மற்ற விதிமுறைகள் அனைத்தும் பாண்டி நாட்டு முறையே ஆகும். 
இந்த விளையாட்டு முறையில் தற்போது ஆசிய அளவில் கோ கோ என்னும் விளையாட்டு இந்த விதிமுறைகளில் சிறிது மாற்றத்துடன் விளையாடப்பட்டு வருகிறது. இதில் சூ என்பதற்குப் பதில் கோ என்று உசுப்புவர். மேலும், கடைசியில் உள்ள நபரின் தலையைத் தொட்டு திரும்புவதற்குப் பதில் எல்லையில் ஒரு கம்பு ஒன்று நட்டு வைக்கப்பட்டிருக்கும் . ஒரே அணியினரே எதிரெதிரே அமர்ந்திருந்து பிடிக்கும் வகையில் கோ கோ விளையாட்டின் அமைப்பு இருக்கும்.
குறிப்பிட்ட நேரத்தில் எதிரணி வீரர்களில் எவ்வளவு நபர்களை எதிரணி பிடிக்கிறார்கள் என்பதே இவ்விளையாட்டின் திறன் ஆகும்.
நன்றி:
தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
படம்:
https://www.clipart.email/clipart/sport-kho-kho-clipart-446474.html


Tuesday, 28 April 2020

நமது விளையாட்டுக்கள் 26

STOP  விளையாட்டு
S, T, O, P என்கிற ஒவ்வொரு எழுத்தாகச் சொல்லி பின் STOPஎன்று சொல்லி விளையாடுவதால் இந்த விளையாட்டிற்கு  STOP  விளையாட்டு என அழைக்கப்படுகிறது.
இந்த விளையாட்டிற்கு குறைந்தது 5 நபர்கள் இருந்தால் விளையாட்டு விறுவிறுப்பாக அமையும். ஏதேனும் முறையில் பட்டவராக இருப்பர். மற்றவர்கள் ஒரு 5 மீட்டர் தொலைவில் நிற்பர். பட்டவர் அவர்களை பார்க்காமல் மறுபக்கம் திரும்பி என்ற S, T, O, P  எழுத்துக்களைக் கூறி இறுதியில் STOP என்று முடித்து உடனே திரும்புவார். இதற்குள் பின்னே நின்று கொண்டிருப்பவர்கள் முன்னேறி வருவர் பட்டவர் STOP என்று கூறி திரும்பும் போது மற்றவர்கள் அனைவரும் அசையாமல் சிலைபோல் நிற்பர். அப்படி மீறி அசைந்தால் அவர் ‘அவுட்” என அறிவிக்கப்பட்டு வெளியில் நிற்க வெண்டும். மறுபடியும் பட்டவர் திரும்பி S, T, O, P  என்று ஒவ்வொரு எழுத்துக்களாகக் கூறி இறுதியில் STOP என்று கூறி  திரும்புவார். அவர் மறுபக்கம் திரும்பி ஒவ்வொருமுறையும் கூறிக்கொண்டிருக்கும் போது மற்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருவர். பட்டவர் திரும்பி சொல்லிக் கொண்டிருக்கும் போது அவரை மற்றவர்கள் தொட்டுவிட்டால் பட்டவரே மறுபடியும் STOP என்று சொல்லி திரும்பும் பணியினை மேற்கொள்வார். பட்டவர் எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டால் மறுபடியும் வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்டம் தொடரும்.
இந்த விளையாட்டின் மூலம் சுதாரிப்பாக இருப்பதற்கும், சுய கட்டுப்பாடுடன் அசையாமல் இருப்பதிற்கான பயிற்சியினை கற்றும் கொடுக்கிறது.
இதே முறையில் ‘Statue” என்ற விளையாட்டு விளையாடப்படுகிறது.
‘As the Gods will’ என்கிற ஜப்பானிய திகில் படத்தில் வரும் விளையாட்டுகளில் முதல் விளையாட்டு இதுபோன்ற அமைப்பில் இருக்கும். முதலில் ஒரு வகுப்பறையில் இந்த விளையாட்டு நடப்பது போன்ற காட்சியமைவுகள் இருக்கும். இதில் போதிதர்மர் பொம்மை திரும்பிப் பார்க்கும் போது எவரேனும் அசைந்தால் அவருடைய தலை வெடித்துச் சிதறும். அந்த பொம்மைத் தலையின் பின்புறம் ஒரு பொத்தான் இருக்கும் அதனை அந்த பொம்மை திரும்புவதற்குள் அழுத்தி விட்டால் வெற்றி பெறலாம். இறுதியில் ஒரு மாணவன் மட்டும் அந்த வகுப்பறையில் அழுத்தி தான் மட்டும் அந்த வகுப்பறையில் இருந்து தப்பிப்பிழைப்பது போன்று காட்சி அமைவுகள் இருக்கும்.


Monday, 27 April 2020

நமது விளையாட்டுக்கள் 25

தூரி விளையாட்டுகள்:

தூரி என்றால் ஊஞ்சல் என்று பொருள்படும். தூளி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
ஊஞ்சல் விளையாட்டை சங்க இலக்கியங்களில் ஊசல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“தண்த்தாழை வீழீழ் ஊசல்”
– கலித்தொகை -131-15
( உன் ஊஞ்சலை நான் பிடித்து ஆட்டுகிறேன்)
;
“ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,
‘ஐய! சிறிது என்னை ஊக்கி’ எனக் கூற”
– கலித்தொகை -37-14

(ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தேன், அவன் வந்தான், ‘ஐயா, சிறிது ஆட்டிவிடு என்றேன்)
என்று கலித்தொகையிலும்,

“பூங்குழை யூசற் பொறைசால் காதின் காதின்”
- பொருநராற்றுப்படை -30
(குழைமயிர் வெட்டும் கத்திரிக்கோல் போலக் காதில் ஆடியது)
என்று பொருநராற்றுப்படையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரி, இனி தூரியின் வகைகளைக் காண்போம்.

கால் தூரி:

இது பெரியவர்கள் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக ஆடப்படும் விளையாட்டு. பெரியவர்கள் உயரமாக திண்ணைகளிலோ அல்லது நாற்காலியிலோ அமர்ந்து கொள்வர். அமர்ந்து கொண்டு தங்கள் கால்களை சமமாக வைத்து நீட்டி கீழே வைப்பர். இப்போது இருகால்களின் மேலும் குழந்தை அமர்ந்து கொள்ளும். அவர் குழந்தை உட்கார்ந்திருக்கும் போது தனது காலை மேலே தூக்கியும் இறக்கியும் மாற்றி மாற்றி செய்வார். இது குழந்தைகள் ஊஞ்சல் ஆடுவதைப் போல் இருக்கும். இதுவே கால் தூரி ஆகும். இப்படிக் காலை மேலே தூக்கியும் இறக்கும் போது, குழந்தைகளை மேலும் மகிழ்விக்க
“ஏத்தரறச்சான் ஒன்னான்டி...
இறக்கி வைச்சான் ஒன்னான்டி..” 
 (ஏற்றம் இறைத்தான் என்று அர்த்தம் அதாவது மாடுகட்டி வயலுக்கு நீர் பாய்ச்சும் முறையில் ஏற்றம் என்று பெயர். இந்த முறைபோல் இவ்விளையாட்டு இருப்பதால் இப்படி பாடல் இருக்கலாம்)
என்று பாடிக்கொண்டே காலை ஆட்டுவர்.

தொட்டில் தூரி:

இந்த வகையில் வீட்டில் வேட்டி, சேலை போன்றவற்றையோ தொட்டில் கட்டி ஊஞ்சல் ஆடுவர். இதில் குழந்தைகள் தானாக தொட்டியில் உட்கார்ந்து ஆடலாம் அல்லது யாராவது ஆட்டி விடலாம். தானாக ஆடும்போது தரையில் தன் காலால் குழந்தைத் தானாகவே உந்தித் தள்ள வேண்டும். இப்படி ஆடுவதன் மூலம் தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும் திறன் குழந்தைகளுக்குக் கிடைக்கிறது. ஏனெனில் கவனமாகப் பிடிக்கவில்லையெனில் குழந்தைக் கீழே விழும் வாய்ப்பும் உள்ளது.

மரதூரி அல்லது மர ஊஞ்சல்:

மரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடப்படும் விளையாட்டு. வலுவான கிளைகள் உள்ள மரத்தில் தூரி கட்டுவர். மரக்கிளை வளைவு இல்லாமல் பக்கவாட்டில் நேராக இருக்க வேண்டும். அப்படிப் பட்ட மரத்தில் வலுவான கயிற்றினைக் கொண்டு கட்டப்படும். கயிற்றின் ஒரு நுனியை முதலில் கிளையில் கட்டி இரண்டாவது நுனியினை பலகையிலோ, கோணிப்பையோ அல்லது இரப்பர் டயரோ கொண்டு கட்டிவர். இரண்டடி இடைவெளியில் மற்றொரு கயிற்றினை அதேபோல் கட்டி ஊஞ்சல் அமைப்பர். பிறகு, மாற்றி மாற்றி ஊஞ்சல் விளையாடுவர். இதில் குழந்தைகள் தானாக உந்தியோ அல்லது மற்றவர்கள் தள்ளியோ ஆடுவர். இப்போது குழந்தைகள் பூங்காக்களில் ஊஞ்சலும் ஒரு விளையாட்டுப் பொருளாக மாறியுள்ளது. சிலர் வீடுகளிலும் ஊஞ்சல் அமைத்துள்ளனர்.

தென்னைமட்டை தூரி:


தென்னை மரத்தில் கீழாக இருக்கும் தென்னை மட்டையை பிடித்துத் தொங்கிக் கொண்டு தூரி ஆடுவதால் இது தென்னை மட்டை தூரி எனப்படுகிறது. எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். தென்னை மட்டையை பிடித்துத் தொங்கிக் கொண்டே குழந்தைகள் தூரி ஆடுவர். ஒரே மட்டையைப் பிடித்து இரண்டு மூன்று குழந்தைகள் கூட சேர்ந்து ஆடுவர். ஆலமரத்தின் விழுதுகளையும் பிடித்துத் தொங்கிக் கொண்டு தூரி ஆடுவர். புளியமரம், அல்லது மற்ற உறுதியாக இருக்கும் மரங்களின் கிளைகள் கீழாக இருந்தாலும் அவற்றை பிடித்துத் தொங்கிக் கொண்டு தூரி ஆடுவர்.
இதுபோல் மட்டையைப் பிடித்து ஆடிக்கொண்டிருக்கும் போது குழந்தை மீது மட்டை விழுந்தால் அந்த குழந்தை இறந்துவிட்டது என்று உறவினர்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பி இறந்தவருக்குச் செய்யும் சில சடங்குகள் செய்த பிறகுதான் அந்தக் குழந்தையை ஏற்றுக் கொள்ளும் பழக்கமும் உண்டு.

நன்றி:
1. ப.சசிரேகா, திருச்செங்கோடு வட்டார நாட்டுப்புற விளையாட்டுகள்
படங்கள்:
https://www.vikatan.com/sitemap/sitemap-daily-2016-02-17.xml
https://blog.davey.com/2015/07/best-trees-for-hanging-a-tree-swing-tire-wooden-and-seat/
https://gramho.com/media/2096476566214091813

Sunday, 26 April 2020

நமது விளையாட்டுக்கள் 24

ஊதாமணி:

இந்த விளையாட்டு ஆரம்பத்தில் ஊதா நிறத்தில் மணிமாலையை வைத்து விளையாடப்பட்டிருக்கலாம். ஆனால், இந்த விளையாட்டிற்கு ஏதேனும் ஒரு பொருளை கைக்குள் மறைத்து வைக்கக்கூடிய அளவான பொருளாக இருத்தல் நலம். இந்த விளையாட்டில் ஏதேனும் ஒரு முறையில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவரை கொஞ்சம் தள்ளி வேறு அறையிலோ அல்லது மற்ற விளையாட்டு உறுப்பினர்கள் இருப்பதற்கு எதிர்ப்புறமோ திரும்பி நிற்க வேண்டும். அதற்கு மற்ற வீரர்கள் பொதுவாக வட்டமாக அமர்ந்து கொண்டு யாராவது ஒருவர் கையில் ஊதாமணியையோ அல்லது ஏதாவது ஒரு பொருளையோ கொடுத்து விடுவர். இப்போது யார் கையில் பொருள் இருக்கிறதோ அவர் தனது காலுக்குக் கீழேயோ தனது ஆடையாலோ மறைத்து வைத்திருப்பார். தான் நல்லபடியாக மறைத்து வைத்துவிட்டார் என உறுதிப்படுத்தியதும். அனைவரும் கோரஸாக கைத்தட்டி பின்வருமாறு பாடுவர். ‘ஊதாமணியை ஒளித்திடுவோம்... கண்டுபிடித்தால் கையைத் தட்டுவோம்...” (ஊதாமணி வைக்காமல் பொருள்கள் மாற்றி வைப்பதால் பாடலும் மறுவி ‘தினமணியை (தினமணி பத்திரிக்கை என்று பொருள் அல்ல) ஒளித்திடுவோம் கண்டுபிடித்தால் கையைத் தட்டுவோம்” என்றும் பாடப் பெறுவதுண்டு. கைத்தட்டிப் பாடிய பிறகு வெளியே நிற்பவர் உள்ளே வருவார். அனைவரும் அமைதியாக எந்தச் சலனமும் இல்லாமலோ அல்லது மேற்சொன்ன பாடலைத் திரும்பப் திரும்பக் கைகளைக் கொட்டியோ பாடிக் கொண்டிருப்பர். யாரிடம் பொருள் உள்ளது என்பதை சரியாக கண்டுபிடித்துவிட்டால் பொருள் வைத்திருந்தவர். இப்போது வெளியே சென்று நிற்க வேண்டும். அவர் கண்டுபிடிக்க வேண்டும். பொருள் யார் வைத்திருந்தார் என்று கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் முன்பு கண்டுபிடிக்க முற்பட்டவரே மறுபடியும் செல்ல வேண்டும்.
நன்றி:
தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

Saturday, 25 April 2020

நமது விளையாட்டுக்கள் 23

ராஜா ராணி திருடன் போலிஸ்

இந்த விளையாட்டு வீட்டின் உள்ளே அமர்ந்து விளையாடலாம். இதில் குறைந்தது நான்கு பேர் இருக்க வேண்டும்.
விளையாடும் முறை:
நான்கு துண்டு சீட்டுகளில் ஒரு சீட்டில், ராஜா, இரண்டாவது சீட்டில் ராணி, மூன்றாவது சீட்டில் போலிஸ் மற்றும் நான்காவது சீட்டில் திருடன் எழுதப்பட்டிருக்க வேண்டும். அதே போல் புள்ளிகளும் முறையே ராஜாவுக்கு 10000 புள்ளிகளும், ராணிக்கு 7000 புள்ளிகளும், போலிசுக்கு 1000 புள்ளிகளுக்கு திருடனுக்கு 0 புள்ளிகளும் வழங்க வேண்டும். ஆட்களின் எண்ணிக்கைக் கூடுதல் இருந்தால் கூடுதல் பதவிகளைக் கொடுத்து அதற்கேற்ற புள்ளி வழங்கலாம் உதாரணமாக மந்திரி என்றால் 5000 புள்ளிகளும் சேவகன் என்றால் 2000 புள்ளிகளும் வழங்கிக் கொள்ளலாம். ஆட்களின் எண்ணிக்கைக் ஏற்ப புள்ளிகளில் மாறுதலை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இப்போது ஒரு பெரிய வெள்ளைத்தாளில் ஆடுபவர்களின் பெயரை எழுதிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவில் அவர்கள் எவ்வளவு புள்ளிப் பெறுகின்றனரோ அதனைக் குறித்துக் கொள்ள வேண்டும். இறுதியில் யார் அதிகப் புள்ளிகளைப் பெறுகிறாரோ அவரே வென்றவர் ஆகிறார்.
இப்போது நான்கு நபர்கள் விளையாடுவதாக வைத்துக் கொள்வோம். எழுதப்பட்ட சீட்டுகளை ஒரே மாதிரியாக உருளை போல சுருட்டியோ அல்லது ஒரே அளவாக நான்காக மடிக்கவோ வேண்டும். பிறகு குலுக்கித் தரையில் போட வேண்டும். அதன் பிறகு நான்கு நபர்களும் ஒரு சீட்டு எடுப்பர். இதில் யாருடைய சீட்டில் போலிஸ் என்று எழுதியிருக்கிறதோ அவர் யாருடைய சீட்டில் திருடன் என்று இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். போலிசாக இருப்பவர் திருடன் என்ற பெயருடைய சீட்டு யாருக்கு கிடைத்திருக்கிறது என்பதைச் சரியாகச் சொல்லி விட்டால் அவர் சீட்டில் உள்ள 1,000 புள்ளிகள் அப்படியே கிடைத்துவிடும், தவறாக சொல்லிவிட்டால் திருடன் என்ற பெயருடைய சீட்டு வைத்திருப்பவருக்கு 1,000 புள்ளிகளும் தவறாக சொன்ன போலிசு என்ற பெயருடைய சீட்டு வைத்திருப்பருக்கும் 0 புள்ளிகளும் கிடைக்கும். மற்றபடி ராஜா, ராணி என்ற பெயருடைய சீட்டு வைத்திருப்பவர்களுக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிகளே கிடைக்கும்.


Wednesday, 22 April 2020

நமது விளையாட்டுக்கள் 22

மெல்ல வந்துக் கிள்ளிப் போ...

இந்த விளையாட்டில் ஒரு அணியின் உறுப்பினரை மற்ற அணியில் இருந்து சத்தம் போடாமல் நிதானமாக வந்து கிள்ளி விட்டு செல்வதால் இந்த விளையாட்டிற்கு இப்பெயர் வந்திருக்கலாம்.
இந்த விளையாட்டிற்கு 10 நபர்களாவது இருப்பது நலம்.

விளையாடும் முறை:
முதலில் இரண்டு தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு, இந்த விளையாட்டில் ஆட்களை ஏதேனும் முறையில் தேர்ந்தெடுத்து இரண்டு சம எண்ணிக்கையில் உள்ள அணியாக வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு அணியிலும் உறுப்பினர்களுக்கு ஒரு பூவின் பெயரோ (பொதுவாக பூவின் பெயர் வைப்பதுண்டு), விலங்கின் பெயரோ வைப்பர். ஒரு அணியின் உறுப்பினர்களுக்கு என்ன பெயர் வைக்கிறார் என்பது மற்ற அணியினருக்குத் தெரியக்கூடாது. அணி உறுப்பினர்களுக்குப் பெயர் வைத்தவுடன்,  தேர்ந்தெடுப்பு முறையில் எந்த அணி கிள்ளப் (pinஉh) போகிறார் என்று முடிவெடுக்கப்படும். அதனடிப்படையில் கிள்ளப்போகும் அணி 1 என வைத்துக் கொள்வோம். கிள்ளு வாங்குபவர்கள் அணி 2 என வைத்துக் கொள்வோம். இரண்டு அணிகளும் ஒரு மூன்று மீட்டர் இடைவெளியில் எதிரெதிரே வரிசையாக அமர்ந்திருப்பர். அணி 1 இன் அணித் தலைவர் அணி 2 அணி உறுப்பினர்கள்  அமர்ந்திருப்பவர்களுக்குப் பின்னே செல்வார். பிறகு அந்த அணியின் ஏதேனும் ஒரு உறுப்பினரின் கண்ணைப் பொத்துவார். கண்ணைப் பொத்தியவுடன் ‘தலையை வெட்டி நாய்க்குப் போடு” என்று சொல்வார். சொன்னவுடன் அணி 2 உறுப்பினர்கள் (கண்ணைப் பொத்தியவர் தவிர) அனைவரும் தலையைக் கண்ணை மூடிக் கொண்டு குனிந்து கொள்வர். இப்போது அணி 1 இன் தலைவர் ‘மல்லிகைப் பூவே... மல்லிகைப் பூவே...  மெல்ல வந்து கிள்ளிப் போ...” என்று உரக்கப்பாடுவார். உடனே அணி 1 இல் இருந்து மல்லிகைப் பூ என்று தனக்குப் பெயரிட்டுக் கொண்ட நபர் மெதுவாக சத்தம் எழுப்பாமல் வந்து அணி 1 இன் தலைவர் அணி 2 இல் யாருடைய கண்ணைப் பொத்தியிருக்கிறாரோ அவரது தொடையிலோ அல்லது கையிலோ கிள்ளி விட்டு ஓசை எழுப்பாமல் மெல்ல தன் இடத்திற்கு வந்து அமர்வார். பிறகு அணி 1 இன் தலைவர் ‘கை ஆட்டு, கால் ஆட்டு” என்றவுடன் அணி 1 இன் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கைகளையும் கால்களையும் ஆட்டிக் கொண்டிருப்பர். இப்போது அணி 1 இன் தலைவர் அணி 2 இல் பொத்தியிருந்த நபரின் கண்களை திறந்து விடுவார். கிள்ளப்பட்ட நபர் இப்போது தன்னைக் கிள்ளியது யார் என்று சரியாக சொல்ல வேண்டும். அப்படி சொல்லிவிட்டால் கிள்ளப்பட்ட அணி வெற்றி பெற்றதாக அர்த்தம். இல்லையெனில் அணி 1 மறுபடியும் அணி 2 இன் உறுப்பினர்களை கிள்ளுவர். ஓவ்வொரு முறை ஆடும் போது தங்கள் பெயர்களை கிள்ளும் அணி மாற்றிக் கொள்ளலாம். உதாரணமாக முதலில் மல்லிகை பெயர் வைத்திருந்தவர் இப்போது முல்லை என்று பெயர் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த விளையாட்டின் மூலம் கூர்ந்து கவனிக்கும் திறன் முக்கியமாக கண்கள் மூடப்பட்டிருந்தாலும் எவ்வாறு நோக்குகிறார்கள் என்னும் திறனை வளர்க்க இந்த விளையாட்டு உதவுகிறது. மேலும் குழு ஒற்றுமைக்கும் உதவுகிறது. 

நன்றி.
படம்:
https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/210842-.html

Tuesday, 21 April 2020

நமது விளையாட்டுக்கள் 21

பூப்பறிக்க வருகிறோம்:

இது பொதுவாக சிறுமிகள் விளையாடும் விளையாட்டாகும். பூப்பறிக்க வருகிறோம் என்ற பாடல் துவக்கத்தில் இந்த விளையாட்டு அமைந்திருப்பதால் விளையாட்டிற்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம்.
இந்த விளையாட்டிற்கு குறைந்தது 10 நபர்களாவது இருந்தால் விளையாட்டு விறுவிறுப்பாக அமையும்.
இந்த விளையாட்டில் சம எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டு இரண்டு அணியாக பிரிக்கப்படும். இரண்டு அணியும் எதிரெதிரே பக்கவாட்டில் கைக்கோர்த்துக் கொண்டு நிற்க வேண்டும். இரண்டு அணிக்கும் நடுவே கோடு கிழிக்கப்பட்டிருக்கும் (தெருவில் பொதுவாக விளையாடப்படும் விளையாட்டு என்பதால் சாக்பீஸ், கரிக்கொட்டை, செங்கல் அல்லது தண்ணீர்; கொண்டு கோடு வரையலாம்).
அணி உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பூவின்; பெயரை வைக்க வேண்டும். அந்தப் பூவின் பெயரைச் சொல்லித் தான் விளையாட வேண்டியவர்களை அழைப்பர். ஒவ்வொரு ஆட்டம் முடி

அணி 1: பூப்பறிக்க வருகிறோம், பூப்பறிக்க வருகிறோம், இந்த நாளிலே.
அணி 2: யாரனுப்பப் போகிறீர்? யாரனுப்பப் போகிறீர்? இந்த நாளிலே.
அணி 1: கமலா அனுப்பப் போகிறோம்
கமலா அனுப்பப் போகிறோம், இந்த நாளிலே
அணி 2: எந்தப் பூ வேண்டும்?
எந்தப் பூ வேண்டும், எந்தப் பூ வேண்டும்? இந்த நாளிலே
அணி 1: மல்லிகைப் பூ வேண்டும், மல்லிகைப் பூ வேண்டும் இந்த நாளிலே.
பூவின் பெயரை முதல் அணி சொல்லி முடித்த பிறகு அவர் எந்த பூவைச்  சொல்கிறாரோ அவர் வந்து கோட்டிற்கு அருகில் வருவார். எதிர்கட்சியில் இருந்து யாருடைய பெயரை பரிந்துரைத்தாரோ அவரும் எதிரில் வந்து நிற்பார். இப்போது இருவரும் ஒருவரை ஒருவர் இழுக்க வேண்டும். எவர் பலமாக இழுத்து எதிராளியை நடுவி;ல் வரையப்பட்டக் கோட்டினைத் தாண்டி இழுக்கின்றாரோ அவர் அப்போது வென்றவராகிறார். இழுபட்டவர் எதிர் அணியில் இருப்பார். இப்படியாக மாறி மாறி பாடி ஆட்டத்தின் இறுதியில் எந்த அணியில் அதிக நபர்கள் இருக்கிறாரோ அந்த அணியே வென்ற அணியாகக் கருதப்படும்.
நான் இருந்த பிராந்தியத்தில் பாடல் பின்வருமாறு பாடப்பெற்றது.

அணி 1: பூப்பறிக்க வருகிறோம்..., பூப்பறிக்க வருகிறோம் ...
அணி 2: எந்த மாதம் வருகிறீர்... எந்த மாதம் வருகிறீர்..?
அணி 1: தை மாதம் வருகிறோம்.. தை மாதம் வருகிறோம் ...
(ஏதேனும் ஒரு மாதத்தின் பெயரைக் குறிப்பிடலாம்)
அணி 2: எந்த பூவைப் பறிக்கிறீர்... எந்த பூவைப் பறிக்கிறீர்...;..?
அணி 1: மல்லிகைப் பூவைப் பறிக்கிறோம்... மல்லிகைப் பூவைப் பறிக்கிறோம்.
அணி 2: யாரைக் கொண்டு பறிக்கிறீர்...? யாரைக் கொண்டு பறிக்கிறீர்...?
அணி 1: மீனா கொண்டு பறிக்கிறோம்... மீனா கொண்டு பறிக்கிறோம் ... (மீனா என்ற பெயருடைய பெண் இப்பொழுது அணி 1 இல் இருந்து முன்வருவார்)
மற்றவை மேற்சொன்னபடி விளையாடப்படும்.
இந்த விளையாட்டைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ்க்காணும் சுட்டியை சொடுக்கித் தெரிந்து கொள்ளலாம்.

https://www.youtube.com/watch?v=szUCHlyfnfg
https://www.youtube.com/watch?v=97CKDQqNuO4

நன்றி
படம்:

1. விக்கிப்பீடியா

Monday, 20 April 2020

நமது விளையாட்டுக்கள் 20

பேய்ப்பந்து:
இந்த ஆட்டத்தில் பந்தினை பேய்த்தனமாக வேகமாக எறிவதால் இந்த ஆட்டம் பேய்ப்பந்து என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.
ஐந்து நபர்களுக்கு மேல் இருந்தால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக அமையும்.
பொதுவெளியில் இந்த ஆட்டம் ஆடுவதற்கு சிறந்த இடமாகும்.

ஆட்டமுறை:
ஏதேனும் முறையில் தேர்ந்தெடுப்பு முறையில் பட்டவர் பந்தினைக் கையில் வைத்திருப்பார். பொதுவாக இரப்பர் பந்தைக் கொண்டு ஆடப்படுகிறது. பந்தை வைத்திருப்பவர் தவிர மற்றவர் ஆங்காங்கே நின்று கொண்டிருப்பர். பந்தை கையில் வைத்திருப்பவன் ...’பந்தே பந்து” என்று உரக்கக் கத்துவான். மற்றவர் ‘என்ன பந்து” என்று கேட்பர். அவன் ‘பேய்ப்பந்து” என்பார். ‘யார் மேலே?” என்று ஒருவர் கேட்பார், கையில் பந்து வைத்திருப்பவர் ‘உன் மேலே” என்று சொல்லிக் கொண்டு அங்கு நிற்பவர்கள் யார் மேலாவது ஆக்ரோஷமாக எறிவார். எறிந்த பந்து எறியப்பட்டவரின் மீது படலாம் படாமலும் போகலாம். பிறகு பந்தினை யார் எடுக்கிறார்களோ, அவர் அடுத்த நபரின் மீது வேகமாக எறிவார். இதுபோல மாறி மாறி அடுத்தவர் மீது வேகமாக எறியலாம். இதில் குறி பார்த்து அடிப்பதும். அடிக்கும் போது லாவகமாக நழுவி பந்தைப் பிடித்து அடுத்தவர் மீது எறிவதும் தான் ஆட்டத்தின் உத்தியாகும்.

இதில் அணியாக இருந்தால். பந்தை ஒருவருக்கொருவர் கடத்தி மற்றவர் மீது எறிவதும் எதிர் அணி மீது பந்து கிடைத்தால் மறுபடி அவர்கள் எறிய முற்படுவதும் விளையாட்டினை இன்னும் சுவாரசியப்படுத்தும்.
இந்த விளையாட்டு குறி வைத்து எறிவதற்கான நல்ல பயிற்சியாகும். மேலும், சாமர்த்தியமாக விலகுதலும் சமயோசித்தலுக்கு உதவுகிறது.
எங்கள் பிராந்தியத்தில் பந்தே பந்து பாடலை நாங்கள் பின்வருமாறு பாடியுள்ளோம்.
‘பந்தே பந்து”
‘என்ன பந்து?”
‘இரப்பர் பந்து”
‘என்ன இரப்பர்?”
‘திரி இரப்பர்”
‘என்ன திரி?”
‘விளக்குத் தரி”
‘ என்ன விளக்கு?”
‘ குத்துவிளக்கு..”
' என்ன குத்து ?"
'ம்ம்ம்.. கும்மாங் ...குத்து".என்று பாடிக்கொண்டே பந்தை எவரையாவது குறிவைத்து வேகமாக எறிவார்.

நன்றி:
1. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

Sunday, 19 April 2020

நமது விளையாட்டுக்கள் 19

நாடு பிடித்தல்:
இந்த விளையாட்டிற்கு நான்கு நபர்கள் தேவைப்படுவர்.
இது சமவெளியில் விளையாடுவது சிறந்தது. முதலில் ஒரு பெரிய கட்டம் வரைந்து அதனை இரண்டு குறுக்குக் கோடுகள் படத்தில் காட்டியவாறு வரைந்து கொள்ள வேண்டும். நான்கு நபர்களும் தங்களுக்கு ஒரு கட்டத்தைத் தேர்வு செய்து அதற்கு ஏதேனும் ஒரு நாட்டின் பெயரை சூட்டி அதனை அனைவருக்கும் சொல்ல வேண்டும். அல்லது அனைவரும் மறக்காமல் இருப்பதற்கு கட்டத்திலேயே குச்சியினைக் கொண்டு நாட்டின் பெயர் எழுதப்பட்டிருக்கும். இங்கே உதாரணத்திற்காக இந்தியா, ஜெர்மனி, மலேசியா மற்றும் சிங்கப்பூர் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுப்பு முறையில் அல்லது தாமாக முன்வந்து ஒரு நபர் பட்டவராகக் கருதப்படுவார். அவர் கையில் ஒரு அடி நீளமுள்ள ஒரு குச்சியினைக் கையில் வைத்திருப்பார். மற்றவர்கள் ஓடுவதற்குத் தயாராக இருப்பர். கையில் குச்சியை வைத்திருப்பவர் தன் கையில் வைத்திருக்கும் குச்சியை ஏதேனும் ஒரு கட்டத்தில் போட்டு விட்டு ஓட வேண்டும். ஓடும்போது எந்தக் கட்டத்தில் குச்சியைப் போடுகிறாரோ அந்த நாட்டின் பெயரைச் சொல்லிக்கொண்டே அந்தக் குச்சியினைப் போட வேண்டும். உதாரணமாக அவர் சிங்கப்பூர் என்ற பெயருடைய கட்டத்தில் போடுகிறார் என்றால். சிங்கப்பூர் பெயர் தாங்கிய கட்டத்தின் சொந்தக்காரர் மட்டும் ஓடி வந்து குச்சியை கையில் எடுத்துக்கொண்டு ‘ஸ்டாப்” என்று கத்துவார். உடனே அனைவரும் நின்று விட வேண்டும். பெரும்பாலும் அவர்கள் தங்களுடைய நாடுகளின் எதிர் மூலைப் பகுதியிலிருந்து ஓடுவர் அப்போது தான் தூரமாக ஓட முடியும். இப்போது ‘ஸ்டாப்” என்ற சத்தம் கேட்டவுடன் அனைவரும் நின்று விடுவர். இப்போது கையில் குச்சி வைத்திருப்பவர் தனது நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் நின்று கொண்டு மீதி 3 பேரில் யாரேனும் ஒருவர் மீது குச்சியினை எறியலாம். அப்படி எறியும் போது குச்சி சரியாக எறியப்பட்டவர் மீது விழுந்ததென்றால், குச்சியினை எறிந்தவர், யார் மீது எறிந்தாரோ அவர் நாட்டின் பாகத்தை ஆக்கிரமிக்கலாம் ;அல்லது தனக்குச் சொந்தமாக்கலாம். அந்த நாட்டின் பகுதியினை அவர் தன்வசப் படுத்துவதற்கு அந்த நாட்டின் ஏதேனும் எல்லைக் கோட்டில் நின்று கொண்டு குச்சியினால் தனக்கு எட்டுமளவிற்கு பாகத்தைக் கோடால் கிழிக்க வேண்டும். அவ்வாறு கோடு கிழிக்கும் போது கை தரையில் படக் கூடாது. கால் எல்லைப் பகுதியைத் தாண்டி நாட்டுக்குள் கால் வைக்கக் கூடாது. இப்போது குச்சியால் அடி வாங்கியவரின் நாட்டில் எவ்வளவு பாகம் பிடித்துக் கொண்டாரோ அவ்வளவு பாகம் இடம் பிடித்தவருக்குச் சொந்தமாகும். அந்த இடத்தில் நாட்டைப் பிடித்தவர் தனது நாட்டின் பெயரை எழுதிக் கொள்வார். இப்போது அந்தப் பாகத்தைப் பிடித்தவருக்கு மறுபடியும் அடிக்க வாய்ப்புக் கிடைத்தால் அவர் தான் மற்ற நாட்டில் தன் ஆக்கிரமிப்பில் வைத்திருக்கும் இடத்தில் இருந்து குச்சியினை எறியலாம். அதே போன்று குச்சியினை போடுபவர்கள். பிடித்து வைத்திருக்கும் இடத்தில் கூட அந்த நாட்டின் பெயரை சொல்லி குச்சியினைப் போட்டுவிட்டு ஓடலாம். இவ்வாறு ஒவ்வொருவரும் மற்ற இடத்தை ஆக்கிரமித்து தனது நாட்டின் பரப்பை விரிவாக்கம் செய்வர். இறுதியில் யார் அதிகமான பரப்பளவை வைத்திருக்கிறார்களோ அவரே வென்றவராகிறார்.
குறிபார்த்து எறிதலுக்கும், தனது நாட்டின் மீதான பற்றினை காப்பதற்கான தீவிர ஈடுபாட்டினையும் வளர்க்க அல்லது தன்னுடைய பொருளினை கவனமாக பாதுகாக்க மற்றும் அதிக பொருளீட்டும் ஈடுபாடு ஆகியவற்றை வளர்க்க இந்த விளையாட்டு உதவுகிறது. 




Thursday, 16 April 2020

நமது விளையாட்டுக்கள் 18

அந்திக்கடை

இது ஒரு குழு விளையாட்டாகும் இதற்கு குறைந்தது 10 நபர்கள் இருந்தால் விளையாட்டு ஆர்வமூட்டுவதாக இருக்கும்.
இரண்டு அணிக்கும் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஏதேனும் ஒரு தேர்ந்தெடுப்பு முறையில் அணி உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுவர். அதனைத் தொடர்ந்து எந்த அணி முதலில் விளையாடுவது என்றும் தேர்ந்தெடுப்பு முறையில் உறுதி செய்து. வெற்றி பெற்ற அணி ஆட்டத்தைத் துவக்கும்.

ஆட்டமுறை:
வெற்றி பெற்ற அணி முதலில் ஆடத்துவங்கும்.
இரண்டு அணிகளும் எதிர் எதிரே சுமார் ஒரு 20 மீட்டர் இடைவெளியில் அமர்ந்திருக்க வேண்டும். அணித் தலைவர்கள் மட்டும் நின்று கொண்டிருப்பார்.
ஆட்டம் துவங்குகையில் வெற்றி பெற்ற அணியினர் அனைவரும் தங்கள் கைகளை முதுகுப்பக்கத்தில் இரண்டு கைகளையும் விரல் இடுக்குகளைச் சொருகிக் கொண்டு பின்புறம் கையைக் கட்டி உட்கார்ந்திருப்பர். அப்படி அமர்ந்திருக்கையில் பின்புறம் அவர்கள் இணைக்கப்பட்ட கைகளில் வாயைத் திறந்தாற்போல் வைத்திருக்க வேண்டும். அணியின் தலைவராக இருப்பவர், கையில் காசையோ, சிறு குச்சியோ அல்லது ஏதேனும் ஒரு சிறு பொருளைக் கையில் வைத்துக் கொண்டு தன் கையினை அதனை எதிர் அணியினர் பார்க்காத அளவிற்கு மறைத்துக்கொண்டு தன்னுடைய அணியினர் பின்னே நின்று கொண்டு பின்வரும் பாடலை பாடுவார்.

‘அந்திக் கடை
சந்திக் கடை
ஆவாரம் பூத்த கடை
வெள்ளி முளைத்த கடை
வெங்காயம்
பூட்டெடுத்து பூட்டிக்கோ...”
(இதில் ‘கடை” என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘குடம்” என்று பயன்படுத்தியும் விளையாடுவதுண்டு)

பாடிக்கொண்டு ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொருவரை அணியினரின் பின்பக்கம் அணி உறுப்பினர்கள் திறந்தபடி உள்ள கைகளில் தொட்டு தொட்டு வருவர். அப்படி தொடும் போது எவராவது ஒருவருடைய கைகளில் தன் கையில் உள்ள பொருளை தலைவர் போட்டுவிடுவார். அணி உறுப்பினர் உடனே கையை மூடிக் கொள்வார். பாட்டு முடியும்போது அனைவரும் தங்கள் கையை இறுக மூடிக்கொண்டு தலையைக் குனிந்து கொள்வர். இப்போது எதிரணி தலைவர் யாருடைய கையில் பொருள் இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும். எதிரணி தலைவர் சரியாக சொல்லிவிட்டால், அவர் ஆட்டத்தைத் தொடருவார். தவறாகச் சொல்லிவிட்டால், யாருடைய கையில் பொருள் இருந்ததோ அவர் இருந்த இடத்தில் இருந்தே முன்புறம் தாவுவார் அவர் எவ்வளவு தூரம் தாவுகிறாரோ அந்த இடத்தில் அவர் அமர்ந்து கொள்ளலாம். இப்படியே அணியினர் அனைவரையும் எதிர் அணி உட்கார்ந்திருக்கிற உத்தி வரை தாவி அழைத்துச் செல்ல வேண்டும். அணியில் ஒரு நபர் எதிர் அணியின் உத்தி வரை அடைந்து விட்டால் அவர் வெளியே அமர்ந்து கொள்ள வேண்டும். மீதி நபர்களையும் மாற்றி மாற்றி பொருள் வைத்து எதிர் அணி கண்டுபிடிக்காதவாறு அழைத்துச் செல்ல வேண்டும். கடைசியில் ஒரு நபர் இருந்தால் தலைவர்  கடைசியில் எஞ்சிய நபருடன் உட்கார்ந்து  ஆடுவர். கடைசி ஒரு நபர் இருக்கும் போது கைகளை முன்பக்கம் திறந்த நிலையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் தலைவர் பொருளை தன் கையிலும் மிஞ்சிய நபர் கையிலும் மாற்றி மாற்றி வைக்க முயன்று இருவரில் யாரிடமாவது இருக்கும். எதிர் அணி தவறாக சொல்லி விட்டால் இவர்கள் திரும்ப திரும்ப வைத்துக் கொள்வர்.
எதிர் அணி தவறாக பதில் சொல்லும் தாண்டி முன்னேறிச் சென்றவருக்கும் சேர்த்துத் தான் பொருள் வைக்க வேண்டும். ஒரு வேளை எதிர் அணியும் தாண்டி முன்னேறி வந்து கொண்டிருந்தது என்றால் எதிர் அணியினர் எதிரெதிரே தாண்டுதல் முறையில் அருகே உட்கார்ந்திருந்தால், எதிர் அணித் தலைவர் தனது அணி உறுப்பினர் அருகே வந்து நின்று கொள்ளலாம். எதிர் அணி ஆரம்ப உத்தியில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இது மூலம் எதிர் அணியை அருகிலிருந்தே கவனிக்க முடியும்.
இவ்வாறு தனி அணி உறுப்பினர்கள் அனைவரையும் எந்த அணி முதலில் எதிர் அணி உத்தி வரைக்கும் அழைத்துச் செல்கிறதோ அந்த அணிதான் வென்றதாக அர்த்தமாகும். தோற்ற அணி எதிர் அணியினரை உப்பு மூட்டைத் தூக்க வேண்டும்.


Wednesday, 15 April 2020

நமது விளையாட்டுக்கள் 17

குச்சி விளையாட்டு:
இந்த விளையாட்டிற்கு குச்சே அடிப்படையாக இருக்கிறது. ஆதலால் இப்பெயர் வந்திருக்கலாம்.
ஆடுபவர் ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட இரண்டு முழம் அளவுடைய குச்சு வைத்திருக்க வேண்டும்.
குறைந்தது 5 நபர்களாவது இருக்க வேண்டும்.
ஆடுகளம:; ஒரு பெரிய சதுரம் வரைந்து கொண்டு மையத்தில் ஒரு சிறுவட்டம் வரைந்து அதில் 4 கற்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். (விளையாட்டு சதுரத்திற்கு வெளியில் தான் இருக்கும்)
விளையாடுபவர்கள் அனைவரும் ஒரு உத்திக் கோட்டில் நின்று கொண்டு தங்கள் குச்சிகளை தங்கள் கால் கவட்டை வழியாக எறிய வேண்டும். எவருடைய குச்சி குறைவான தூரத்தில் எறியப்பட்டதோ அவரே  தோற்றவராகக் அல்லது பட்டவர் எனக் கருதப்படுவர்.
பட்டவர்; தன்னுடைய குச்சியை சதுர அரங்கு கோட்டில் நின்று கொண்டு இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி, கை விரல்களை (கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலை) கவட்டை போல் விரித்து அதில் தன்னுடைய குச்சியினைத் தாங்க வேண்டும். மற்ற ஆட்டக்காரரில் ஒருவர் பட்டவரின் குச்சியினை வேகமாக் கெந்தி பின் தள்ளுவர். உடனே ஏற்கனவே தயாராக இருக்கும் மற்ற ஆட்டக்காரர்கள் தங்களுடைய குச்சியால் பட்டவரின் குச்சியை வேகமாக கெந்தியும், தள்ளியும் கொண்டு செல்வர். பட்டவர் குச்சி வீசப்பட்டவுடன் அரங்கினுள் உள்ள வட்டத்தில் வைக்கப்பட்ட நான்கு கற்களையும் எடுத்து அரங்கின் நான்கு மூலைகளிலும் ஒரு கல்லாக வைத்துவிட்டு விளையாடுபவர்களைத் தொட வேண்டும். குச்சியினைத் தள்ளுபவர்கள் தங்கள் குச்சியினை அரங்கினுள் வைத்திருக்கும் கல்லிலோ அல்லது ஏதேனும் ஒரு கருங்கல்லிலோ தங்கள் குச்சியினை வைத்துக் கொண்டு நின்றால் அவரைத்தொடக்கூடாது. பட்டவர் அசரும் நேரம் தங்கள் குச்சியால் தள்ளிவிட்டு சடாரென தங்கள் குச்சியினை கருங்கல்லின் மேல் வைத்துக் கொள்வர். இப்படி செய்யும்போது பட்டவரால் கருங்கல்லில் வைக்காதபோது யார் தொடப்படுகிறாரோ அவர் இப்போது பட்டவராகிறார். யார் பட்டவராக இருக்கிறாரோ அவர் தன் குச்சியை வாயில் கவ்விக் கொண்டு, அல்லது வலது கையில் குச்சியைப் பிடித்துக் கொண்டு இடது கையினை முதுகுப்பக்கம் மடக்கி வைத்துக் கொண்டு, ஏற்கனவே பட்டவர் குச்சி எங்கிருந்ததோ அதுவரை நொண்டியடித்துக் கொண்டு அரங்கு வரைவர வேண்டும்.
அவ்வாறு வரும் போது
‘எங்கள் வீட்டு நாயி எலும்பு கடிக்கப் போச்சு
கல்லால் அடித்தேன் காலொடிந்து போச்சு“என்று பாடிக்கொண்டே வரவேண்டும்.
அப்படி அரங்குவரை வரமுடியவில்லையெனில் மறுபடியும் தொடங்கிய இடத்தில் இருந்தே பாடி வர வேண்டும். ஒருவேளை அவர் வாயில் கவ்விக் கொண்டு வந்தாரென்றால் மற்றவர் மேற்கூறிய பாடலை பாடி வருவர். பிறகு பட்டவன் குச்சிப் பிடிப்பான் ஆட்டம் முன்போல் விளையாடப்படும்.
நன்றி:
1. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்


நமது விளையாட்டுக்கள் 16


 பச்சைக்குதிரை



இது சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு குதிரை போல குனிந்து கொண்டு நிற்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம்.

இந்த விளையாட்டிற்கு 5 முதல் 10 நபர்கள் இருக்கலாம். குறைந்தது 5 நபர்களாவது இருந்தால் இந்த விளையாட்டு விறுவிறுப்பாக இருக்கும்.

இந்த விளையாட்டின் வகைகளைப் பார்க்கலாம்:

வகை -1 :

சிறுவர்கள் வரிசையாக குனிந்து கொண்டு நிற்பர். கடைசியில் நிற்பவன் தனக்கு முன் நிற்கும் ஒவ்வொருவரையும் தாண்டித் தாண்டி முதல் ஆளாக நிற்பவனையும் தாண்டி அவனுக்கு முன்புறம் குனிந்து நிற்பான். அவனைத் தொடர்ந்து அவனுக்கு முன்புறம் உள்ள ஒவ்வொருவராய் தாண்டி ஒவ்வொருவருக்கும் முன்போய் நிற்பர். இவ்வாறு தொடர்ந்து இடம்மாறிக் கொண்டே இருப்பர். இந்த ஆட்டம் பல சுவர்களைத் தொடர்ந்து தாண்டுவதற்கேற்ற பயிற்சியாக இது இருக்கிறது.

வகை 2:

சாட்..பூத்..திரி.. என்ற தேர்ந்தெடுப்பில் தோற்ற சிறுவன், ஒரு காலை நீட்டி உட்கார்ந்திருப்பார். அவர் நீட்டிய காலைப் பிற சிறுவர்கள் ஒவ்வொருவராய் தாண்டித் தாண்டிச் செல்வர். அனைவரும் தாண்டிய பிறகு அடுத்தமுறை தன் ஒரு கால்; மேல் அடுத்த காலை வைத்து நீட்டியிருப்பான். அதையும் அனைவரும் முன்போலவே தாண்டிச் செல்வர். அதற்கு அடுத்த முறை கால்கள் ஒன்றன் மேல் ஒன்று வைத்ததைத் தொடர்;ந்து மேலே இருக்கும் காலின் மேல் ஒரு கையினை விரல்களை விரித்த நிலையில் (சாண் அளவு காண்பிப்பதற்கு விரிப்பது போல) வைக்க வேண்டும். இப்போதும் எல்லோரும் தாண்டிய பிறகு ஏற்கவே வைத்த கையின் மேல் அடுத்த கையினையும் விரித்து வைக்க வேண்டும். இப்போது அனைவரும் தாண்டிச் செல்வர்.  பின்பு, உட்கார்ந்த நிலையில் தாழ குனிய வேண்டும். அடுத்த நிலையில் அதே நிலையில் சற்று நிமிர வேண்டும். மேற்கூறிய முறைகளில் எல்லோரும் தாண்டிய பிறகு, அந்த நிலையில் இருந்து எழுந்தும் குனிந்தும் நிற்க வேண்டும். பிறகு ஒவ்வொரு நிலையாக உயர வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் அனைவரும் தாண்டி வர வேண்டும். எந்த நிலையிலாவது தாண்டி வருபவர்கள்தாண்ட முடியாது போனால் அடுத்து அவர்கள் குனிய வேண்டி வரும். ஏற்கனவே குனிந்திருந்தவர் இப்போது மற்றவர்களோடு சேர்ந்து தாண்ட ஆரம்பிப்பார். இது உயரம் தாண்டுதலுக்கு சிறந்த பயிற்சியாகும்.

வகை 3:

இந்த வகையில் இரண்டு அணிகளாக இருப்பர். ஒவ்வொரு அணிக்கும் குறைந்தது 5 நபர்கள் இருப்பது ஆட்டம் சிறப்பாக அமைவதற்கு உதவும். ஆட்டம் காசை சுண்டியோ அல்லது உடைந்த ஓட்டில் கருப்பு அல்லது சிவப்புப் பகுதியை வைத்தோ குனியும் அணி தேர்வு செய்யப்படும். குனியும் அணி காசு சுண்டலில் தோற்ற அணியாகக் கருதப்படும்.

இந்த ஆட்டத்தில் நடுவர் ஒருவர் பொதுவாக வைக்கப்படுவதுண்டு.

தோற்ற அணியில் ஒரு நபர் முதலில் தன் முதுகுப் பக்கத்தை காட்டி நிற்பார். அவரைத் தொடர்ந்த அவருடைய அணி உறுப்பினர்கள் குனிந்து நிற்பர். அதாவது இரண்டாம் நபர் முதலாம் நபரின் இடுப்பைப் பிடித்துக் கொண்டு தலையை குனிந்தபடி அவர் முதுகில் முட்டுக்கொடுத்து குனிந்து நிற்பார். மூன்றாம் நபர் இரண்டாம் நபரின் இடுப்பை உள்புறமாக இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு தலையை குனிந்து இரண்டாம் நபரின் புட்டத்தில் முட்டுக்கொடுத்து குனிந்து நிற்க வேண்டும். அடுத்து வரும் நபர்கள் மூன்றாம் நபரைப் போலவே தொடர்ந்து குனிந்து நிற்க வேண்டும். இப்போது தோற்ற அணி தயார் நிலையில் இருக்கின்றனர் என்று அர்த்தம். வெற்றி பெற்ற அணி இவர்கள் குனிந்து நிற்கும் இடத்தில் இருந்து சுமார் ஒரு 10 மீட்டர் தூரம் தள்ளி நிற்பர் அவ்விடத்திலிருந்து நேரே ஓடிவந்து குனிந்து நிற்கும் அணி மீது ஏறி அவர்களை கெட்டியாகப் பிடித்து குனிந்து கொள்வர். முதலாம் நபரைத் தொடர்ந்து அடுத்தடுத்து நபர்கள் ஓடி வந்து அவர்கள் மீது தாவி ஏறி அமர்வர். அனைத்து நபர்களும் அவர்கள் முதுகில் ஏறிய பிறகு, முதுகின் மீது ஏறி நிற்பவர்கள் அணியின் தலைவர் ஐந்து விரல்களில் ஏதேனும் ஒரு எண்ணைக் காட்டுவார். குனிந்து நிற்கும் அணியின் தலைவர் அது எத்தனை என்பதனை சரியாகச் சொல்லிவிட்டால் இவர் வெற்றி பெற்றவராக மாறி விடுகிறார்.  அதன்பிறகு முன்பு முதுகின் மேல் ஏறியவர்கள் இப்போது குனிய வேண்டும். மேலும், முதுகில் மேல் ஏறும்போதோ ஏறிய பிறகோ மேலே ஏறியவர்கள் தவறி விழுந்தால் அவர்கள் தோற்றவர்கள் ஆவார்கள். மேலே ஏறியவர்கள் கீழே விழுகிறார்களா அல்லது குனிந்து இருப்பவர்கள் சொன்ன எண்ணைத் தான் மேலே இருந்தவர்கள் காட்டினரா என்பதை சரிபார்ப்பவர் நடுவர் ஆவார். இந்த விளையாட்டின் மூலம் உடல் வலுப்பெறும். குழு ஒற்றுமை வளரும்.




வகை 3:

ஆபியம்:

இதில் தேர்ந்தெடுப்பு முறையில் ஒருவர் குதிரை போல் குனிந்து கொள்வார். மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக தாண்டுபவர்கள். ஒவ்வொரு முறை அனைவரும் தாண்டும் போது ஒரு சொல் அல்லது வாக்கியத்தோடு தாண்டுவர். மேலும், தாண்டும்போதே  பிறிதொரு செயல்களும் இடையில் செய்வர். இவ்வாறு தாண்டுகையில் முதல் முறை ஆபியம் என்ற வார்த்தைக் கொண்டு தாண்டுவர்.

சில இடங்களில் தாண்டும் போது

‘ஆபியம்...

மணியாபியம்..

இஸ்டாபியம்..

லாகரச்சி கொக்கு...

ராஜா சூத்துல ஒத குடு..”

என்று பாடிக்கொண்டே குனிந்தவரின் முதுகைத் தாண்ட வேண்டும்.



இதே பாடலில் சில இடங்களில் வேறுமாதிரி பாடுவர்.

‘ஆபியம்...

மணியாபியம்..

இஸ்டாபியம்..

குரங்காபியம்...

நகரத்தின் எல்லைக் கோடு..

(தாண்டியவுடன் ஒவ்வொருவரும் குனிந்து ஆள்காட்டி விரலைக் கொண்டு தரையில் குனிந்து ஒரு கோடு இழுப்பர்)

குட்டிச் சாத்தான் மண்ணைத் தின்றான்...

(தாண்டியவுடன் குனிந்து மண்ணை வாரி குனிந்து இருப்பரின் வாய்ப் பகுதிக்கு அருகே காட்டுவர், சிலர் மண்ணை அவர் வாய் பகுதியில் வீசுவர் )

தற... தற... சூத்துல உதை”

(இந்த வரியின் போது குனிந்து இருப்பவரின் புட்டத்தை உதைப்பர்)

என்று பாடிக்கொண்டு தாண்டுவர்.

நான் சிறுவயதில் விளையாடிய போது இதே பாடலில் சில வரிகளில் மாற்றம் இருந்தது. ஆனால், அதில் மத சாடல் இருப்பது போல் பாடல் இருந்தது. ஆதலால் அதனை இங்கே குறிப்பிடவில்லை.

இந்த விளையாட்டில் முதன் முறை குனிந்ததில் அனைவரும் தாண்டியவுடன், இரண்டாம் வகையில் சொன்னதுபோல் கொஞ்ச கொஞ்மாக நிமிர்ந்து கொண்டே குனிந்திருப்பவர் வருவார். எந்த நிலையில் ஒருவரால் தாண்ட முடியாமல் போகிறதோ அப்போது இந்த ஆட்டம் முடிவுறும். தாண்ட இயலாதவர் இப்போது குனிவார்.

இந்த ஆட்டம் உடல் மற்றும் மனம் இரண்டும் ஒருமுகப் பட்டு விளையாடப்படும் விளையாட்டாகும். ஏனெனில், தாண்டும் போது பாடவும் வேண்டும், கூடுதல் செயல்களும் செய்ய வேண்டும்.

மேலும், இவ்விளையாட்டுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள கீழேயுள்ள சுட்டிகளை சொடுக்கித் தெரிந்து கொள்ளலாம்.

https://www.youtube.com/watch?v=KB-yNxe7hHk
https://www.youtube.com/watch?v=VmxLNFfGzks



நன்றி:
1. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
2. http://www.keetru.com/
3. https://www.youtube.com/watch?v=KB-yNxe7hHk
4. https://www.youtube.com/watch?v=VmxLNFfGzks


Tuesday, 14 April 2020

நமது விளையாட்டுக்கள் 15

பாரிக்கோடு:
பாரி என்பது வேகமாக ஓடுதல், இரவு காவல் காப்பவர்கள் பாடும் பாடல் ஆகிய அர்த்தம் கொண்டுள்ளது. பாரிக்கோடு விளையாட்டு பொதுவாக 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் விளையாடும் விளையாட்டாக இருக்கிறது. பெரும்பாலும் மூலைப் பகுதிகளில் தப்பி ஓடுவதால் திருச்சி மாவட்டப் பகுதியில் மூலைப்புரி என்று அழைக்கப்படுகிறது. மேலும்இ உப்பு என்று கைக்குலுக்கி விளையாடப்படுவதால்இ இதற்கு உப்புப்பாரி என்றும் பெயர்.
இந்த ஆட்டம் பொதுவாக 8 அல்லது 16 நபர்களைக் கொண்டு ஆடப்படும் விளையாட்டாகும்.
எட்டு நபர்களை கொண்டு ஆடும் போது நான்கு நபர்கள் தப்பி ஓடுபவர்களாகவும்இ மீதி நான்கு பேர் தடுப்பவர்களாகவும் இருப்பர். இந்த முறையில் ஆடும் முறைக்கு ‘நாலாளம் பாரி” என்று பெயர். 16 நபர்களைக் கொண்டு ஆடப்படும் விளையாட்டு ‘எட்டாளம் பாரி” என்று பெயர்.
நாலாளம் பாரி ஆட்டத்தைப் பற்றிப் பார்ப்போம்.
ஆட்டத்தில் இரண்டு அணிகள் இருக்கும். ஒரு அணி ஒவ்வொரு கட்டத்திற்குள்ளும் ஒருவர் நிற்பர். இவர்கள் ஒவ்வொரு கட்டமாக முன்னேறி சென்று ஒரு வழியில் சென்று மீண்டும் அதே வழியில் திரும்பி எதிர் முனையை அடைய வேண்டும்.
இந்தக் கட்டத்தின் பக்கக் போடுகள் 12 அடி நீளம் இருக்க வேண்டும். ஒவ்வொரு கோட்டிலும் ஒருவர் காவலுக்கு இருப்பர். இவர் கட்டத்தின் உள்ளே இருப்பவர் அவரைத் தாண்டி போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவர் தன்னுடைய கோட்டின் பக்கவாட்டில் ஓடி உள்ளே இருப்பவர் வெளியேயும் வெளியே இருப்பவர் உள்ளேயும் வராமல் தடுக்க வேண்டும். அதாவது 1 ஆம் கட்டத்தில் இருப்பவர் 2,3,4 என்று ஒவ்வொரு கட்டமாக முன்னேறி மறுபடியும் 4,3,2,1 என்று வந்து கட்டத்தில் இருந்து இறுதி கட்டம் முடிந்தவுடன் அதிலிருந்து வெளியே வருவர். இதே போல் ஒருவர் நாலாம் கட்டத்தில் இருக்கிறார் என்றால் அவர் 4 என்ற ஒரு கட்டம் மட்டும் தாண்டி விட்டு மறுபடியும் 4,3,2,1 என்ற நிலைக்கு வருவார். ஒவ்வொரு கட்டமும் முன்னேறிய உடன் அங்கு காவல் காப்பவரிடம் சென்று ‘உப்பு” என்று கைகுலுக்க வேண்டும். எந்த அணி அதிக உப்பு வைக்கிறார்களோ அல்லது கைகுலுக்குகிறார்களோ அவர்களே வென்றவர்கள் ஆவார்.
அல்லது காவல் காப்பவரால் கட்டத்தில் இருந்து முன்னேறுபவர் தொடப்பட்டால். தொடப்பட்ட அணி காவல் காக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.
எல்லோருக்கும் சம அளவில் விளையாட்டு கிடைக்க வேண்டும் என்று எண்ணினால்இ அனைவருமே 1 ஆம் கட்டத்தில் இருந்து கிளம்பலாம் அல்லது ஒவ்வொருவராக 1 ஆம் கட்டத்தில் இருந்து கிளம்பலாம்.
இதே ஆட்டத்தில் 8 கட்டளங்கள் வரைந்து 16 நபர்களைக் கொண்டு ஆடப்பட்டால் அது எட்டாளம் பாரி ஆட்டம் ஆகும்.
நன்றி

1. தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

Monday, 13 April 2020

அம்பேத்கர்

சில நாட்களுக்கு முன்பு செய்தித்தாளில் பார்த்தேன் ஒரு காவல் அதிகாரி தான் பணிபுரியும் காவல் நிலையத்தில் உள்ள அம்பேத்கரின் சிலையை குப்பையில் போட்டிருக்கிறார். அதற்கு பதில் ‘மேலதிகாரிகளின் உத்தரவு என்று...”இது போன்ற சம்பங்கள் அவ்வப்போது நடந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன. அதற்குக் காரணம்;, அவர் மேல் பூசப்பட்டுள்ள சாதிய சாயம். அவரைப் பற்றி புரிந்து கொள்ளாமை, ஏனெனில் அவரைப் பற்றி தெரிந்திருக்கவில்லை, படிப்பின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுத்த அவரைப் பற்றி படியாமை போன்றவாகும்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் ஒரு தேசிய தலைவர் உலக அளவில் அவர் கொண்டாடப்படுவதால் அவர் உலகத் தலைவர் எனவும் அழைக்கலாம். லண்டன் மியூசியத்தில் கூட காரல் மார்க்ஸ் உடன் ஒன்றாக இணைக்கப்பட்டு சிலை வைக்கப்பெறப்பட்டுள்ள ஒரே இந்தியர் அம்பேத்கர் என்பது உலக அளவில் அவர் கொண்டாடப்படுகிறார் என்பதற்கு இது ஒரு சிறு சான்று ஆகும். இப்போது நமது தேசத்திலிருந்து பார்க்க இருப்பதால் அவரை இங்கு தேசியத் தலைவர் என்ற பார்வையிலேயே இதை இங்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

2012 ஆம் ஆண்டில் வரலாறு தொலைக்காட்சியும், சி.என்.என்.- ஐ.பி. என். தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச் சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் இறந்து 56 வருடங்களுக்குப் பிறகு மக்கள் மனதில் சிறந்த தலைவராக இருக்கிறார் எனில் இதை விட வேறு என்ன சொல்வது? அவர் தேசியத் தலைவர்தான் என்பதற்கு மேற்சொன்ன ஒரு வாக்கெடுப்பே போதுமானதாக இருக்கும். இருப்பினும் சில சரித்திரத் தகவல்களை பதிவு செய்வது. இன்னும் அவர் தேசிய தலைவர் என்பதை பிறர் புரிந்து கொள்ள உதவும் என நினைக்கிறேன்.
1. இந்திய விடுதலைக்குப் பிறகு நாட்டின் முதல் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றவர்.
2. இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்குவதற்கான குழுவின் தலைவராக இருந்தவர். இதுதான் உலகின் எழுத்துப்பூர்வமாக உள்ள மிகப்பெரிய அரசியல் சாசனம்.
3. அம்பேத்கர் விவசாயத்தை அடித்தளமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார்.
4. நமது தேசியக் கொடியில் காணும் அசோகச் சக்கரம் அமைவதற்குக் காரணம் இவரே.
5. பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற பேரா. அமர்த்தியா சென் அவர்களும் இவரை தன்னுடைய பொருளாதாரத்தின் தந்தை எனக் குறிப்பிடுகிறார்.
6. மத்தியப் பிரதேசமும் பீகாரும் நல்ல வளர்ச்சியைக் காண்பதற்கு இந்த மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று 1950 களில் அம்பேத்கர் அவர்கள் பரிந்துரை செய்தார். ஆனால், 2000 ற்குப் பிறகு தான் சட்டிஸ்கர் மற்றும் ஜார்க்கண்டு இந்த மாநிலங்களைப் பிரித்து உருவானது.
7. சுதந்திரப் போராட்டத்தில் மற்றவர்களில் இருந்து இவருடைய தேசியவாதம் முற்றிலும் மாறுபட்டது. அம்பேத்கரின் தேசியவாதம் வெறுமனே பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியர்களுக்கு அரசியல் அதிகாரத்தை மாற்றுவதில் மட்டுப்படுத்தப்படவில்லை. இது நிலையான தேசிய மறுகட்டமைப்பைப் பற்றிய ஒரு பரந்த கருத்தை மையமாகக் கொண்டிருந்தது, அதாவது பழமை வாய்ந்த  சாதி பாகுபாடு காட்டும் சமூகத்தில் சமூக சமத்துவம் மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பை உருவாக்குவதன் மூலம் ஒரு ஜனநாயக குடியரசை உருவாக்குதலை மையமாகக் கொண்டிருந்தது. (Ambedkar: Awakening India's Social Conscience" by Narendhra Jadhav (member of the Planning Commission and the National Advisory Council (NAC)), Konark Publishers).
8. இவர் அளித்த சட்ட வடிவால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவாகவே நல்ல பல நன்மைகள் அனைவருக்குமே கிடைத்தது. தீண்டாமை கூடாது, அனைவரும் சமம் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவ ஆரம்பித்தது. கொத்தடிமை, பெண்ணடிமை போன்றவை ஒழிய அம்பேத்கரின் சட்டங்கள் வழிவகுத்தன. சுமூக நலனுக்கு குறுக்கே யார் இருந்தாலும் அவர்களை தண்டிக்க சட்டம் கொண்டு வந்ததில் அம்பேத்கருக்குப் பெரும் பங்கு உண்டு.
9. 48 வது விதியில் 14 வயது வரை கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று கொண்டு வந்ததனால் குழந்தைகள் கல்வி பெற முடிந்தது.
10. நமக்கு வேலை நேரம் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் என்று இருந்ததை 8 மணிநேரமாக மாற்றிய பெருமை இவரையேச் சாரும். மேலும், பஞ்சப்படி, விடுப்பு சலுகைகள், பணியாளர் காப்பீடு, மருத்துவ விடுப்பு, சமப்பணிக்கு சம ஊதியம், ஊதிய உயர்வு போன்றவற்றைக் கொண்டு வந்த பெருமையும் இவருக்கே உண்டு.
11. 1927, மார்ச் 19 மற்றும் 20 ஆம் நாள், தற்போதைய மகாராஷ்டிர மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் மகத் என்னும் நகரில் நகரில் அமைந்துள்ள பொதுக்குளத்தில் தலித்துகள் எனப்படும் ஒடுக்கப்பட்டோர் நீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் ‘மகத் சத்தியாகிரகம்” ஆகும். நகரின் முக்கிய குளமாக சவுகார் குளத்தை நோக்கி அம்பேத்கர் தலைமையில் பேரணியாகச் சென்று, குளத்தில் இறங்கி நீர் அள்ளிப் பருகினர். இந்த நாள் (மார்ச் 20) சமூக மேம்பாட்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
12. தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம், பக்ராநங்கல் அணை திட்டம், மகன் ஆறு பள்ளத்தாக்குத் திட்டம் மற்றும் ஹிராகுட் அணை திட்டம் போன்ற இந்தியாவின் பல்வேறு அணை திட்டத்திற்கு முன்னோடியாக இருந்தவர். மத்திய நீர் ஆணையத்;தையும் அமைத்தவர்.
13. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அவரின் முக்கிய முழக்கங்களில் ஒன்று
14. இந்து நெறியியல் சட்டத்தை கொண்டு வருவதில் ஜவஹர்லால் நேருவுக்கும் அம்பேத்கருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது சட்ட அமைச்சர் 1951 இல் பதவியைத் துறந்தார்.
மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
பெண்கள் குடும்பச் சொத்துல் பங்கு பெறும் உரிமையும், விவகாரத்து கோருதல் மற்றும் பெண் குழந்தைகளைத் தத்தெடுத்தல் ஆகியவை
ஏற்பு இல்லையெனில் விவாகரத்து கோரும் உரிமை ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக வழங்கப்பட்டுள்ளது.
விவாகரத்து ஆன மற்றும் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்யும் உரிமை
பலதார மணம் சட்ட விரோதமானது என்றும்
கலப்புத் திருமணம் மற்றும் எந்த சாதியினைச் சேர்ந்த குழந்தையாயினும் தத்தெடுத்தல் உரிமை ஆகியவை வழங்கப்பட்டிருந்தது.
பிறகு இந்த சட்டம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 1952 முதல் 1956 ஆண்டு இடைவெளியில் ஏற்கப்பட்டது.
15. அம்பேத்கர் அவர்கள் வெளிநாட்டில் பொருளாதாரம் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் ஆவார். அதுமட்டுமல்லாது. தெற்காசியாவிலேயே பொருளாதாரத்தில் இரட்டை முனைவர் பட்டம் பெற்ற முதல் நபர் ஆவார். அவர் காலத்தில் அதிகம் படித்த இந்தியர் ஆவார்.
16. இவரை கௌரவிக்க இந்திய அரசு
இவருடைய பெயரில் 13 பல்கலைக் கழகங்கள் அமைத்துள்ளன
          1.     Ambedkar University Delhi – Delhi
2.     Babasaheb Bhimrao Ambedkar Bihar University – Muzaffarpur, Bihar
3.     Babasaheb Bhimrao Ambedkar University – Lucknow, Uttar Pradesh
4.     Dr. B.R. Ambedkar National Law University – Sonipat, Haryana
5.     Dr. B.R. Ambedkar Open University – Hyderabad, Telangana
6.     Dr. B.R. Ambedkar University, Srikakulam – Etcherla, Andhra Pradesh
7.     Dr. B.R. Ambedkar University of Social Sciences – Dr. Ambedkar Nagar (Mhow), Dongargaon, Madhya Pradesh
8.     Dr. Babasaheb Ambedkar Marathwada University – Aurangabad, Maharashtra
9.     Dr. Babasaheb Ambedkar Open University – Ahmedabad, Gujarat
10.  Dr. Babasaheb Ambedkar Technological University – Lonere, Maharashtra
11.  Dr. Bhimrao Ambedkar Law University – Jaipur, Rajasthan
12.  Dr. Bhimrao Ambedkar University – Agra, Uttar Pradesh
13.  Tamil Nadu Dr. Ambedkar Law University – Chennai, Tamil Nadu
17. இவருடைய உருவம் பொதித்த நாணயங்கள், தபால்தலைகள் வெளியிடப்பட்டது.
18. இவருடைய பிறந்த நாளான ஏப்ரல் 14 தேசிய விடுமுறையாக இருக்கிறது.
19. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவர்.

உலகத் தலைவர் எனவும் அழைப்பதற்கு ஏன் தகுதி வாய்ந்தவர்?
1. அம்பேத்கர் வாழந்த காலத்தில் அவர் வைத்திருந்த புத்தகங்கள் 50,000 ற்கும் அதிகம், அதுதான் உலக அளவில் தனிநபர் வைத்திருந்த பெரிய நூலகமாக இருந்தது.
2. அம்பேத்கர்  எழுதிய புத்தகமான  "Waiting for a visa” கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பாடபுத்தகமாக இருக்கிறது.
3. கொலம்பியா பல்கழைக்கழகம் 2004 ஆம் ஆண்டில் உலகில் சிறந்த 100 அறிஞர்கள் பட்டியலைத் தயாரித்தது. அதில் முதல் பெயர் அம்பேத்கர் அவர்களுடையது தான்.
4. நாம் ஆயக்கலைகள் 64 என்று சொல்வோம். ஆனால், அண்ணல் அம்பேத்கர் 64 துறைகளில் சிறந்து விளங்கினார். 9 மொழிகள் தெரிந்து வைத்திருந்தார் (இந்தி, பாலி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரென்ச், ஜெர்மன், மராத்தி, பெர்சியன் மற்றும் குஜராத்தி)
5. 21 வருடங்களில் உலகின் பல மதங்களை கற்றறிந்திருந்தார்.
6. London School of Economics  என்ற கல்வி நிறுவனத்தில் 8 வருடங்கள் படிக்க வேண்டிய படிப்பை 2 வருடங்கள் மூன்று மாதங்களில் படித்து முடித்திருந்தார். இதற்காக இவர் தினமும் 21 மணிநேரம் செலவழித்தார்.
7. London School of Economics இல் இதுவரை அம்பேத்கர் ஒருவரே "Doctor All Science”  என்ற மதிப்புமிக்க முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார். அறிவார்ந்த பலர் முயன்றும் இன்றும் அந்தப் பட்டத்தைப் பெற இயலவில்லை.
8. 850000 நபர்களை  அம்பேத்கர் அவர்கள் புத்த மதத்திற்கு மாறினார். உலகிலேயே ஒரே இடத்தில் அதிக நபர்கள் மதமாற்றம் நிகழ்ந்த சம்பவம் இது ஒன்றே ஆகும்.
9. உலக அளவில் அதிக அளவிலான பாடல்கள் மற்றும் புத்தகங்கள் ஒரு தலைவர் பெயரால் எழுதப்பட்டதென்றால் அது இவருக்கு மட்டுமே.
10. கவர்னர் லார்ட் லின்லித்கௌ மற்றும் மகாத்மா காந்தி ஆகிய இருவருமே அம்பேத்கர் 500 புத்திசாலி பட்டதாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான அறிஞர்களை விட மேலான அறிவாற்றல் கொண்டவர் என்பதை நம்பினர்.
11. 1954 ஆல் நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் அம்பேத்கருக்கு புத்தமதத்தில் மிக உயரிய விருதான ‘போதிசத்துவா” என்ற கௌரவத்தைக் கொடுத்தது.
12. உலக அளவில் அதிக சிலைகள் இவருக்கு மட்டும்தான் வைக்கப்பட்டுள்ளது. இவருடைய பிறந்த நாளும் உலகம் முழுமையும் கொண்டாடப்படுகிறது.
13. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்த முதல் வழக்கறிஞர் இவர் ஆவார்.
14. Demonetisation  குறித்து பல கருத்துக்கள் பாபாசாகேப் அம்பேத்கர் எழுதியுள்ள The Problem of Rupee-Its Origin & its solution” தற்போதுகூட உலக அளவில் பேசு பொருளாக இருக்கிறது.
15. தான் உயிரோடு இருக்கும் போதே 1950 இல் கோல்புர் நகரத்தில் அம்பேத்கர் அவர்களுக்கு முதல் சிலை எழுப்பப்பட்டது.

#இன்று அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள்

நன்றி

1.https://www.jagranjosh.com/general-knowledge/unknown-facts-about-dr-b-r-ambedkar-1512560767-1

2.https://www.business-standard.com/article/news-ians/ambedkar-was-a-national-not-just-dalit-leader-114050100202_1.html

3.https://www.thebetterindia.com/95923/bhimrao-ambedkar-father-indian-constitution-little-known-facts-life/

Photos:
4. https://velivada.com/2015/01/24/dr-ambedkar-wallpaperphotos-for-republic-day/
5. https://www.ecopetit.cat/ecdown/iohimxb_dr-ambedkar-photos-all/

Sunday, 12 April 2020

நமது விளையாட்டுக்கள் 14

பொம்மை:
இந்த விளையாட்டில் பங்குபெறுபவர்கள் பொம்மை போல் அசையாமல் நிற்கும் நிகழ்வுகள் வருவதால் இந்த விளையாட்டிற்கு பொம்மை என்று பெயர்.

ஆட்டமுறை:
இந்த விளையாட்டில் ஆட்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் இரண்டு அணியாகப் பிரிந்து கொள்ளலாம். இல்லையெனில் ஒருவர் மட்டும் விளையாட்டினை நடத்துவதாகக் கொள்ளலாம். ஆனால், இரண்டு அணியினராக விளையாடும் போது ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
இரு அணிக்கும் தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தலைவர் பெரும்பாலும் தானாகவோ அல்லது பெரும்பாலானராலோ ஒருமனதாகத் தேர்ந்தெடுப்பர். தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் பெரும்பாலும் பிரச்சனைகள் வருவதில்லை. தலைவர் ஒருவர் மாறி ஒருவர் அங்கு இருக்கும் நபர்களில் ஒவ்வொருவராக தனது அணிக்கு சேர்த்துக் கொள்வர் அல்லது இரண்டு இரண்டு நபராக சென்று கவர்ச்சிகரமான பெயர்களுடன் வருவர். அதாவது ‘வானத்தைத் தாண்டும் கருப்புக் குதிரை வேண்டுமா? வேலியைத் தாண்டும் வெள்ளைக் குதிரை வேண்டுமா?”
‘பரந்து விரிந்து வானம் வேண்டுமா? ஆழமான சமுத்திரம் வேண்டுமா?” என்று பலவித பெயர்களில், நிறங்கள், மலர்கள், பறவைகள், நடிகர் நடிகைகள் என பல விதங்களில் பெயர்களை இட்டு வருவர். அவர்களை ஒருவர் மாற்றி ஒருவர் முறையிட்டு அழைக்க வேண்டும். அதாவது முதல் முறை தலைவர் 1 எனக்கு ‘வேலியைத் தாண்டும் வெள்ளைக் குதிரை வேண்டும்” என்றால் பெயர் சூட்டி வந்தவர்களில் யார் அந்த பெயரை சூட்டி இருந்தாரோ அவர் தலைவர் 1 அணிக்குச் செல்வார் அவருடன் வந்தவர் தலைவர் 2 அணிக்குச் செல்வார். அடுத்த இரண்டு நபர்கள் பேர் வைத்து வரும்போது இந்தமுறை தலைவர் 2 தனக்குப் பிடித்த பதிலைச் சொல்வார் அதனடிப்படையில் இரு தலைவர்களும் அணி அமையும். இவர்களைக் கொண்டு விளையாடப்படும். குறைந்து 10 நபர்களாவது இருந்தால் இந்த ஆட்டம் சுவாரசியமாக இருக்கும்.
இரு அணியினராக இருந்தால் ஒரு அணியினர் வட்டத்திற்கு உள்ளே இருப்பர். மற்றொரு அணியினர் அவர்களைச் சுற்றி சற்று இடைவெளி விட்டு வட்டமாக நிற்பர். உள்ளே நிற்பவர்கள் ‘சுற்றலாம்” என்று சொன்னவுடன் வட்டமாக நிற்கும் அணியினர்  சுற்றி வருவர் (இசைச் சுற்று விளையாட்டில் சுற்றுவது போல) சுற்றிக் கொண்டிருக்கும் போது உள்ளே நிற்கும் அணியினரின் தலைவர் ‘பொம்மை” என்று உரக்கச் சத்தமிடுவார். உடனே சுற்றிக் கொண்டிருப்பவர்கள் அசையாமல் சிலை போல அல்லது பொம்மை போல நிற்பர். உடனே உள்ளே இருந்த நபர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆளைத் தேர்ந்தெடுத்து அவர்களை சிரிக்க வைக்க அல்லது அந்த நிலையில் இருந்து அவர்களை மாற்ற முயற்சி செய்வர். இதற்காக அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம். உள்ளே இருப்பவர்கள் அவர்களை சிரிக்க வைக்க நகைச்சுவைகள், அல்லது அவர்களைப் பற்றி தெரிந்திருப்பதால் பொம்மையாக நிற்பவர்கள் என்ன சொல்லால் சிரிப்பார்கள் என்று தெரிந்து அதனைச் சொல்லிச் சிரிக்க வைக்க முயல்வர், நிறைய சேஷ்டைகள் செய்வர். அவ்வாறு செய்து அனைவரையும் சிரிக்க வைத்துவிட வேண்டும். அப்படி சிரிக்க வைத்துவிட்டால் பொம்மையாக நிற்பவர்கள் தோற்றவர்கள் ஆவார். அவர்கள் வெற்றி பெற்ற அணியினரை உப்பு மூட்டை தூக்க வேண்டும். உப்பு மூட்டைத் தூக்கியப் பின் தோல்வியடைந்த அணி இப்போது வட்டத்தின் உள்ளே இருப்பார்கள் வெற்றி பெற்ற அணி வட்டமாக வந்து சுற்றி வருவர். முன்பு போல் ஆட வேண்டும்.

பொம்மை என்று இல்லாமல் இரண்டு அணியாகப் பிரித்து எதிர் எதிரே நிற்க வைத்து ஒரு அணியினர் எதிர் அணியினரை சிரிக்க வைக்க முயலும் விளையாட்டுகள் மேலாண்மை பயிற்சிகளில் நடத்தப்படுவதுண்டு.

ஒருவர் மட்டும் நடத்துவதாக இருந்தால் அவர் மட்டும் வட்டத்தினுள் இருப்பார், அவர் பொம்மை என்று சொன்னதும், இவரே அனைவரிடமும் சென்று அவர்களை சிரிக்க வைக்க வேண்டும். அப்படி முடியவில்லையெனில் மறுபடியும் இவரே நடத்துவார். சிரிக்க வைத்துவிட்டால் சாட்.. பூத்.. திரி... என்ற முறையில் மற்றவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.


பொம்மையாக இருப்பவர் எதிரணியினர் சிரிக்க வைக்க முயலும் போது தனது பல்லைக் கடிக்காமல் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் சரியாக ஆடியுள்ளார் என அர்த்தமாகும். ஏனெனில் சிரிப்பை அடக்குவதற்கு பலர் பல்லைக் கடித்துக்கொண்டு இருப்பதுண்டு.

அதே போல் பொம்மையாக நிற்பவர் கண்களையும் மூடக் கூடாது.
சிரிக்க வைக்க முயல்பவரும் பொம்மையாக நிற்பவரைத் தொடக்கூடாது.

இந்த விளையாட்டின் மூலம், பொறுமையினையும், பிரச்சனைகள் வந்தாலும் அதனை நிதானமாக எதிர்கொள்ளும் திறன் வளர்கிறது. சுருக்கமாக சொன்னால், உள்ளுக்கும் சிரிப்பு வந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதும் ஒருவகையில் எமொஷனல் இண்டலிஜன்ஸ் தான்.




Saturday, 11 April 2020

நமது விளையாட்டுக்கள் 13



கல்பாரி:

இந்த விளையாட்டிற்கு 5 நபர்கள் தேவை.


ஆட்ட அமைவு
தண்ணீரால் அல்லது கரித்துண்டு அல்லது சுண்ணக்கட்டி ஏதாவது ஒன்றின் உதவியுடன் நான்கு பெரிய கட்டங்கள் போட வேண்டும். நான்கு கட்டங்களையும் இணைக்கும் மையப்பகுதியில் வட்டம் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த வட்டத்தில் 4 கற்கள் வைக்கப்பட வேண்டும்.

தேவையான பொருட்கள்: கற்கள்

ஆட்ட முறை:

சாத்.. பூ…திரி போன்று ஏதேனும் ஒரு முறையின் மூலம் இறுதியில் மிஞ்சும் அவுட் ஆன நபராக  தேர்ந்தெடுக்கப்படுவர்.
நான்கு கட்டங்களிலும் ஒரு நபர் இருப்பர். அவுட் ஆனதாக கருதப்படும் நபர். மையத்தில் கட்டத்தை அமைக்கும் கோடுகளில் மட்டும் குறுக்கும் நெடுக்கும் நடக்க வேண்டும்.
அவ்வாறு நடக்கும் போது வட்டத்தில் உள்ள கற்களை மிதித்துச் செல்ல வேண்டும். அவர் முதன் முறை கற்களை மிதித்தப் பிறகு கட்டத்தில் உள்ளவர்கள் அவரவர்க்கென்று ஒரு கல்லை எடுக்க வேண்டும்.
அவ்வாறு எடுக்கும் போது குறுக்கும் நெடுக்கும் செல்பவர் அந்தக் கல்லை எடுக்க விடாமல் தடுக்க முயல வேண்டும். கல்லை எடுக்கும் போது காவல் இருப்பவர் தொட்டு விட்டால். தொடு பட்டவர் அவுட் ஆனதாகக் கருதப்பட்டு அவர் கற்களைக் காவல் காக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
கட்டத்தில் உள்ளே இருப்பவர்கள் காவல் காப்பவர் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லைக்குச் செல்லுகையில் லாவகமாக கல்லை எடுத்து விட வேண்டும்.
ஒரு நபரே ஒன்று மேற்பட்ட கற்களை எடுக்கலாம். எடுத்தக் கல்லில் தனக்கென்று ஒன்று வைத்துக்கொண்டு மற்றக் கற்களை பிறருக்கும் கொடுக்கலாம். ஆனால், அவ்வாறு கொடுக்க வேண்டும் எனில் அவர்கள் பக்கத்தில் உள்ள கட்டத்திற்கு சென்று தான் கொடுக்க வேண்டும். மேலும், பக்கத்து கட்டத்திற்கு செல்லும் போது தனது கட்டத்தில் ஒரு கல்லை வைத்து விட்டுச் செல்ல வேண்டும். இல்லையெனில் காவல் காப்பவர் கட்டத்திற்குள் நுழைந்து விடுவார். அவ்வாறு நுழைந்து விட்டால் எவர் கட்டத்தை விட்டு வெளியே சென்றாரோ அவர் அவுட்’ எனக் கருதப்பட்டு கற்களை பாதுகாக்கும் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும்.
ஒருவேளை, தன் கட்டத்தில் கல்லை வைத்து விட்டு, பக்கத்துக் கட்டத்திற்கும் கொடுத்து விட்டு அடுத்தக் கட்டத்திற்கும் அவர் போக வேண்டும் என்று நினைத்தால் போகலாம். ஆனால் அவ்வாறு கடக்கும் போது காவலாளியின் கையில் அகப்பட்டுவிடக்கூடாது.
ஒருவர் சொந்த கட்டத்தில் இருந்து பிற கட்டத்திற்கு கூட தேவையேற்படின் மாறிக்கொள்ளலாம். ஒரு கட்டத்தில் ஒரு நபர் கட்டாயம் இருக்க வேண்டும். அவர் அங்கு இல்லையெனில் கல் இருக்க வேண்டும் என்பது தான் கணக்கு.
இறுதியாக நான்கு கட்டங்களிலும் கல் வந்து விட்டது என்றால். கல்லை எடுத்தவர்கள் மீண்டும் அகப்படாமல் கல்லை எடுத்த இடத்திலேயே அதாவது கட்டத்தின் மையப்பகுதியில் வரையப்பட்டுள்ள வட்டத்தில் வைக்க வேண்டும். ஒருவேளை ஒருவர் ஆரம்பத்தில் 3 கல் எடுத்திருந்தார் என்றால் அவர்தான் 3 கல்லையும் வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. கட்டத்தில் உள்ளவர்கள் தங்கள் கட்டத்தில் உள்ள கல்லை உரிய இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு மறுபடி வைத்து விட்டார்கள் என்றால் ஆட்டம் முடிவுற்றது என்று அர்த்தம். காவல் காத்தவர் தோற்று விட்டார் என்று அர்த்தம். அவருக்குப் பாட்டை வழங்கப்படும் அல்லது மறுபடியும் ஆட்டம் துவங்கும். அவரே மறுபடியும் காவல் காக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

இந்த விளையாட்டு
பொருட்களை கவனமாகக் கண்கானிக்க உதவுகிறது.
குழு ஒற்றுமையையும்
பகிர்ந்து அளிக்கும் குணத்தையும் அளிக்கிறது.

இந்த விளையாட்டிற்கு அணில்பிள்ளை விளையாட்டு என்றும் பெயர். இதில் கற்களை காவல் காப்பவராக இருப்பவர் அணில்பிள்ளை என்று அழைக்கப்படுகிறார்.

Friday, 10 April 2020

நமது விளையாட்டுக்கள் 12

இலைக்கொத்து:

இலைக்கொத்தினை வைத்து விளையாடுவதால் இதற்கு இப்பெயர்.
ஒரு செடியையோ,(நான் சிறுவயதில் இருந்தபோது பார்த்தீனியம் மிகுந்து கிடந்ததால் அந்தச் செடியையும் பிடிங்கி விளையாடியதுண்டு) அல்லது வேப்பமரம், அல்லது புங்கமரத்தில் இருந்து கையில் பிடிக்கும் வகையில் ஒரு கொத்து இலையைப் பறித்து, (ஒரு சிறு கிளையை)  சாட்..பூத்.. திரி.. என்ற முறையில் ஒரு ஆளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த நபர் முன்னிலையில் இலைக் கொத்து இருக்கும். அவரை ஏமாற்றி முன் பக்கமிருந்தோ, பக்கவாட்டில் இருந்தோ அல்லது பின்னாடியிலிருந்தோ இலைக்கொத்தை எடுத்துக் கொண்டு ஓட வேண்டும். இலைக் கொத்து கையில் இருக்கும்போது ஏற்கனவே துரத்தி வருபவர்; தொட்டுவிட்டால் எவர் கையில் இலைக்கொத்து இருந்ததோ அவர் அவுட் ஆனதாகக் கருதப்படுவார். இலைக்கொத்தினை எடுத்துக் கொண்டு ஓடுபவர் ஓடும்போது மற்றவரிடம் கொடுத்து விட்டும் ஓடலாம். அவுட் ஆனவர்; அடுத்து யார் இலைக்கொத்தைத் தொடுகிறார் என்று பார்க்கவேண்டும்.
இந்த விளையாட்டிற்கு குறைந்தது மூன்று நபர்களாவது வேண்டும்.
இந்த விளையாட்டின் மூலம் தன்னைச் சுற்றிலும் நடப்பதைக் கண்கானிப்புடனும் விழிப்புடனும் சுதாரிப்பாகவும் இருக்க உதவுகிறது.

இந்த விளையாட்டினைப் பற்றிய குறிப்புகளோ வேறு எதுவும் தரவுகளோ கிடைக்காததால் powerpoint உதவியுடன் வரைந்துள்ளேன். படம் சுமாராகத் தான் இருக்கும் பொறுத்துக் கொள்ளவும். நன்றி!

Thursday, 9 April 2020

நமது விளையாட்டுக்கள் 11



தட்டாங்கல்:

இது கையை தரையில் தட்டி காயைப் பிடிக்கும் விளையாட்டு தட்டாங்கல் விளையாட்டு. இது கழங்கு/கழற்சி காய் கொண்டும் ஆடப்பட்டதால் இந்த விளையாட்டு  “கழங்கு” என்றும் வழங்கப்பட்டது. நான் சிறுவயதில் இருந்தபோது இந்த விளையாட்டு ‘கல்லங்காய்”; என்றும்  அழைக்கப்படுகிறது. அச்சாங்கல் என்றும் சில இடங்களில் வழங்கப்படுவதுண்டு. 
புறநானூற்றுப் பாடலில் இவ்விளையாட்டுப் பற்றிய குறிப்பு உண்டு 
“செறி அரிச் சிலம்பின், குறுந் தொடி மகளிர்
போலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்..” புறநானூறு -36

பெரும்பாணாற்றுப்படையில் பகுதி 35 இல்
..’முத்த வார் மணல் பொற்கழங்கு ஆடு” என்று குறிப்பவையும் இவ்விளையாட்டுகளை பற்றியே குறிக்கின்றன.இரண்டு பாடல்களிலும் மகளிர் ஆற்று மணலில் அவர்கள் கழங்கு விளையாட்டு விளையாடியதாகக் குறிப்புகள் காட்டுகின்றன. 

நற்றிணையில் 79 ஆவது பாடலில் 

‘கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின் அறை மிசைத் தாஅம்” 

என்று பாலைத் திணையில் கண்ணகனார் குறிப்பிடுகிறார். அதாவது கூரைவீட்டின் முன்புறம் உள்ள புதர் ஓரத்தில் அமர்ந்து கொண்டு மகளிர் கழங்கு விளையாடினர் என குறிப்பிடுகிறார்.

இது போன்று இன்னும் சில இலக்கிய குறிப்புகள் இவ்விளையாட்டைப் பற்றி இருக்கின்றன. 
இந்த விளையாட்டின் வகைகளைக் காண்போம். 

வகை 1: 
மூன்றாங்கல்:

பொருட்கள்: கழற்சி காய், சிறு கற்கள் போன்றவற்றைக் கொண்டு விளையாடலாம்
மூன்று கற்களைக் கொண்டு ஆடும் ஆட்டம். 
மூன்று கற்களில் ஒரு கல் கீழே இருக்க வேண்டும். இரண்டு கற்கள் கையில் இருக்க வேண்டும். கையிலிருக்கும் இரண்டு கற்களில் ஒன்றை மேலெறிந்து மீதமுள்ள ஒரு கல்லைக் கீழே வைத்து 
ஏற்கனவே கீழே உள்ள கல்லை கையில் பிடித்து மேலிருந்து கீழ் வரும் கல்லையும் கீழே விழாமல் பிடிக்க வேண்டும். இவ்வாறு 12 முறை செய்தால் வெற்றி பெற்றதாகக் கருதப்படும். இவை அனைத்தும் மேலெறியப்பட்டக் கல் கீழே வருவதற்குள் நடந்து விட வேண்டும். அதற்காக மேலெறியும் கல்லையும் அதிக தூரம் எறியக்கூடாது ஒரு அரைமீட்டரில் இருந்து அதிகபட்சம் ஒரு மீட்டருக்குள் எறிவது நலம். 
ஓவ்வொரு எறிதலுக்கும் கீழ்வருமாறு பாடல்கள் பாடுவர்; என தேவநேப் பாவாணர் குறிப்பிடுகிறார். 
1. ஒன்றாவது ஒன்றாங்காய்
2. இரண்டாவது இரத்தினக்கிளி (அல்லது ஈச்சங்காய்)
3. மூன்றாவது முத்துச்சரம்.
4. நாலாவது நாற்காலி
5. அஞ்சாவது பஞ்சவர்ணம்
6. ஆறாவது பாலாறு
7. ஏழாவது எழுத்தாணி
8. எட்டாவது கொட்டாரம்
9. ஒன்பதாவது ஓலைப்பூ
10. பத்தாவது பனங்கொட்டை
11. பதினொன்றாவது தென்னம் பிள்ளை
12. தென்னைமரத்தடியிலே தேரோடும் பிள்ளையார். 
இதுபோல் பாடி 12 முறை பிடிக்கவில்லையெனில் அடுத்த நபர் ஆட வேண்டும். அடுத்து ஆடுபவர் முதலில் இருந்து ஆட வேண்டும். 
பாடல் பாடுதல் சில இடங்களில் மாறுபடும். நாமும் தற்போதைய நடைமுறைக்கேற்ப பாடலை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். 

வகை 2: 

ஐந்தாங்கல்:
ஐந்து கற்களைக் கொண்டு ஆடப்படுவதால் அப்பெயர் பெற்றது. முதலில் ஆடுபவர் முதலில் ஐந்து கற்களையும் தரையில் ஒன்றுக்கொன்று பக்கத்திலேயே சிதறவிட்டு அவற்றுள் ஒன்றை எடுத்து மேலே போட்டு அது கீழே வருவதற்குள் கீழே உள்ளவற்றில் ஒன்றை எடுத்துக் கொண்டு மேலேயிருந்து வரும் கல்லையும் பிடிக்க வேண்டும். பின்பு கையிலிருப்பவற்றுள் ஒவ்வொன்றை மேலே போட்டுப் போட்டு ஒவ்வொரு தடவையும் கீழிருப்பவற்றுள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு பிடிக்க வேண்டும். 
பிறகு, மறுபடியும் முன் சொன்னவாறு 5 கற்களையும் தரையில் சிதறி ஒரு கல்லை எடுத்து மேலெறிந்து, கீழே இருப்பவைகளுள் இரண்டை எடுத்துப் பிடிக்க வேண்டும். அதன்பின், கையிலிருப்பவற்றுள் ஒன்றை மேலே எறிந்து, கீழே இருக்கும் மீதி இரண்டு கற்களையும் எடுத்துக் கொண்டு மேலிருந்து வரும் கல்லையும் பிடிக்க வேண்டும். இதே போல் 5 முறை சிதறிப் பிடிக்கும் போது, மூன்றாம் முறை ஒரு கல் மற்றும் 3 கற்களுமாகவும், நாலாம் முறை நான்கு கற்களையும் ஒரே சமயத்திலும் , ஐந்தாம் முறை மூன்று கற்கள் மற்றும் ஒரு கல்லாகவும் கீழே இருக்கும் காய்களை எடுக்க வேண்டும். இவை ஒன்றாம்கொட்டை, இரண்டாம் கொட்டை, மூன்றாம் கொட்டை, நாலாம் கொட்டை மற்றும் ஐந்தாம் கொட்டை ஆட்டத்தின் இறுதியில் சொல்லப்படும். 
அதற்குப் பிறகு, நாலு கற்களைக் கைக்குள் வைத்துக் கொண்டு, ஒரு கல்லை இரு தடவை மேலே போட்டுப் பிடித்தல் வேண்டும்.  முதல் முறை ஆட்காட்டி விரலால் தரையில இழுத்துக் “கோழி கொக்காம்” (சிலர் ‘கோழிக் கொத்தாம்” என்றும் சிலர் ‘கோழிப்பீயாம்” என்றும் சொல்வதுண்டு), என்றும் இரண்டாம் தடவை குத்துக் கையால் தரையில் குத்தி ‘குத்து விளக்காம்” என்றும், மேலெறிந்த கல்லைப் பிடிக்கு முன் சொல்ல வேண்டும். பின்பும், அவ்வாறு ஒரு கல்லை இரு தடவை மேலெறிந்து பிடிக்க வேண்டும். முதல் தடவை பிடிப்பதற்கு முன்பு மற்ற நான்கு கற்களையும் கீழே வைத்து ‘வைத்து எடுப்போம்”; அல்லது ‘வைச்சேண்டப்பா” என்றும், மறுதடவை பிடிக்கும் முன் அந்த நான்கு கற்களையும் வாரிக்கொண்டு ‘வாரிக்கொண்டோம்” அல்லது ‘வாரிக்கொண்டேன்” என்றும் சொல்ல வேண்டும். பின்பு, இரு கைகளையும் சேர்த்து இணைத்து வைத்துக் கொண்டு, ஐந்து கற்களும் கீழே விழாதவாறு ‘தப்புத் தாளம் தலைவலி மோளம்” என்று சொல்லிக்கொண்டே வலக்கையின் புறங்கை மற்றும் அகங்கை என இரண்டு முறை புரட்டி வைத்தல் வேண்டும். அதன் பின்பு ஐந்து கற்களையும் மேலே போட்டு அவற்றுள் ஒன்றைப் பிடிக்க வேண்டும். 
பிறகு ஐந்து கற்களையும் போட்டு புறங்கைமேல் தாங்க வேண்டும். அவற்றுள் ஒன்றினை சுட்டிக் காட்டி எதிராளி பிடிக்கச் சொல்லுவார். ஏதிராளி பிடிக்கச் சொன்ன கல்லைப் பிறவற்றுடன் மேலெறிந்து அதை மட்டும் பிடித்துக் காட்ட வேண்டும். அதனை எதிராளியிடம் காட்டியபின் அதைத் தனியாக எடுத்து வைத்து விட்டு, மற்ற நான்கு கற்களில் ஒன்றை மேலே எறிந்து விட்டு மூன்றைக் கீழே வைத்து விட்டுப் பிடித்து, மீண்டும் அதை மேலெறிந்து கீழே வைத்த கல்லை வாரிக் கொண்டு பிடித்தல் வேண்டும். அல்லது வலக்கையில் உள்ள நான்கு கற்களைகளில் இரண்டு கற்களைத் தூக்கிப் போட்டு அதனை இடது புறங்கையால் தாங்கிப் பிடிக்க வேண்டும். அதே போன்று மீதி உள்ள இரண்டு கற்களையும் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அது பழம் ஆகும். 
ஒருவர் ஆடும்போது, மேலே எறிந்த கல்லைப் பிடிக்கத் தவறினால் அல்லது கீழே இருக்கும் கல்லை எடுக்கும் போது பிற கல்லைத் தொட்டு விட்டாலும், அவரால் தொடர்ந்து ஆட முடியாது. ஏதிராள் ஆடத் துவங்குவார். 
ஏதிராளி இதே போல் ஏதேனும் வழிமுறையில் தவறு செய்தால் முன்னவர் ஆடத் துவங்குவார். இந்த ஆட்டத்தில், எந்த இடத்தில் தவறு செய்து ஆட்டம் நிறுத்தப்பட்டதோ மறுமுறை ஆடும்போது விட்ட இடத்திலிருந்து ஆடுவார். இது எல்லா வகைக்கும் பொறுந்தும். 
ஆட்டம் முடிந்த பிறகு, வெற்றி பெற்றவர் தோற்றவரின் கைகளுக்கிடையில் ஒரு கல்லை வைத்து, மேல் கை மேல் மூன்று தடவை குத்துவது வழக்கம் . இது எல்லா வகை ஆட்டத்திற்கும் பொதுவாகும். 

இந்த ஆட்டத்தின் மூலம் கையும் கைநரம்பும் வலுப்பெறும். கைக்கும் கண்களுக்குமான குவியத் திறன் அதிகரிக்கும். 

வகை 3:

ஐந்தாங்கல் மற்றொரு வகை:

இதில் ஆரம்ப விளையாட்டு முறைகள் ஐந்தாங்கல்லின் ஆரம்பமுறைகள் அப்படியே பின்பற்ற வேண்டும். 
அதாவது, முதலில் ஆடுபவர் முதலில் ஐந்து கற்களையும் தரையில் ஒன்றுக்கொன்று பக்கத்திலேயே சிதறவிட்டு அவற்றுள் ஒன்றை எடுத்து மேலே போட்டு அது கீழே வருவதற்குள் கீழே உள்ளவற்றில் ஒன்றை எடுத்துக் கொண்டு மேலேயிருந்து வரும் கல்லையும் பிடிக்க வேண்டும். பின்பு கையிலிருப்பவற்றுள் ஒவ்வொன்றை மேலே போட்டுப் போட்டு ஒவ்வொரு தடவையும் கீழிருப்பவற்றுள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு பிடிக்க வேண்டும். 
பிறகு, மறுபடியும் முன் சொன்னவாறு 5 கற்களையும் தரையில் சிதறி ஒரு கல்லை எடுத்து மேலெறிந்து, கீழே இருப்பவைகளுள் இரண்டை எடுத்துப் பிடிக்க வேண்டும். அதன்பின், கையிலிருப்பவற்றுள் ஒன்றை மேலே எறிந்து, கீழே இருக்கும் மீதி இரண்டு கற்களையும் எடுத்துக் கொண்டு மேலிருந்து வரும் கல்லையும் பிடிக்க வேண்டும். இதே போல் 5 முறை சிதறிப் பிடிக்கும் போது, மூன்றாம் முறை ஒரு கல் மற்றும் 3 கற்களுமாகவும், நாலாம் முறை நான்கு கற்களையும் எடுக்க வேண்டும். அதாவது ஒன்றாம்கொட்டை, இரண்டாம் கொட்டை, மூன்றாம் கொட்டை, நாலாம் கொட்டை வரை ஆட்டத்தின் இறுதியில் சொல்லப்படும். இந்த விளையாட்டில் ஐந்தாம் கொட்டை கிடையாது. 
நாலாம் கொட்டைக்குப் பிறகு, ஐந்து கற்களையும் கீழேபோட்டு அவற்றுள் ஒன்றை நான்குமுறை மேலே போட்டு போட்டு அதை ஒவ்வொரு தடவையும் கீழே உள்ள கல்லை ஒவ்வொன்றாக இடப்பக்கமாகச் சற்றுத் தள்ளித் தள்ளிப் பிடித்தல் வேண்டும். 
பின்பு, மறுபடியும் எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு அவற்றுள் ஒன்றை முன்போல பலதடவை மேலெறிந்து, அதை முற்பட்ட ஒவ்வொரு தடவையும் கீழிருக்குங் கற்களுக்குள் நீங்கியவற்றை ஒவ்வொன்றாக நெருங்க வைத்துப் பிடித்து, இறுதியில் கீழிருப்பவற்றையெல்லாம் ஒருங்கே வாரிப் பிடித்தல் வேண்டும். 
அதன் பின் இரு பாதங்களையும் கூட்டி வைத்து, அவற்றின் மேல் மூலைக்கொன்றாக நான்கு மூலைக்கும் நாலு கல் வைத்து, மீதியிருக்கும் ஒன்றை நான்கு தடவை மேலெறிந்து, அதை ஒவ்வொரு தடவையும் பாதங்களின் மேலுள்ள கல்லை ஒவ்வொன்றாய் இருபாத இடைக்குள் தள்ளித் தள்ளிப் பிடித்தல் வேண்டும். 
பிறகு மீண்டும் ஐந்து கல்லையும் கீழே போட்டு அவற்றுள் ஒன்றினை முன்போல நான்கு தடவை மேலெறிந்து, அதை ஒவ்வொரு தடவையும், கீழிருக்கும் கற்களை ஒவ்வொன்றாய் இடப்புறம் தரையில் பொத்திச் சற்று திறந்து வைக்கப்பட்டிருக்கும் இடக்குடங்கைக்குள் தள்ளித் தள்ளிப் பிடித்தல் வேண்டும். 
பின்பு, ஐந்து கற்களையும் போட்டு புறங்கைமேல் தாங்கி, அவற்றுள் எதிராளி சுட்டிக் காட்டியதைப் பிறவற்றுடன் மேலெறிந்து பிடித்துக் காட்டி, அதைத் தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதி நான்கில் ஒன்றை மேலே எறிந்து, கீழுள்ளவற்றை வாரிப் பிடித்தல் வேண்டும். அத்தோடு பழமாகும். 

வகை 4: 

ஏழாங்கல்:

இந்த வகையும் கிட்டத்தட்ட ஐந்தாம் கல்லின் முதல் வகையைப் போன்றதே ஆகும்.
ஏழு கற்களையும் உருட்டி அவற்றில் ஒன்றை எடுத்து மேலே போட்டு ஒன்றாங்கொட்டை முதல் ஏழாங்கொட்டை வரை விளையாட வேண்டும். ஒன்றாம் கொட்டையில் ஒவ்வொன்றாகவும், இரண்டாம் கொட்டையில் இரண்டு இரண்டாகவும், மூன்றாம் கொட்டையில் மும்மூன்றாகவும், நான்காம் கொட்டையில் இரண்டும் நாலுமாகவும், ஐந்தாம் கொட்டையில் ஐந்தும் ஒன்றுமாகவும், ஆறாம் கொட்டையில் ஆறும் ஒரேடியாகவும், ஏழாம் கொட்டையில் ஒன்றும் இரண்டும் மூன்றுமாகவும் கீழே உள்ள கற்கள் எடுக்கப்பட வேண்டும். 
பின்பு முறையே, இழுத்தல் குத்தல் வைத்தல் வாருதல் நான்கும்  ‘தப்பு-தாளம்-தலைவலி-மோளம்” நான்கும் நிகழும். 
அதற்குப் பிறகு, எல்லாக் கற்களையும் மேலே போட்டு புறங்கையினால் தாங்க வேண்டும். மூன்று கல் மட்டும் புறங்கை மேல் நிற்பின், அதை ‘காட்டான் கருங்கல்” எனக் கீழே போடப்படும். அதற்கு மேலும் கீழும் இருந்தால் அவற்றைச் சொக்க வேண்டும். 
மீண்டும் எல்லாவற்றையும் புறங்கையில் தாங்க வேண்டும். அதில், எதிராளி எதைச் சுட்டிக் காட்டுகிறாரோ அந்தக் கல்லைத் தனியாக பிடித்துக் காட்டி தனியாக வைத்துவிட்டு, மீதி உள்ளவற்றின் ஒன்றை மேலெறிந்து ஐந்தைக் கீழே வைத்துப் பிடித்து, மீண்டும் அதை மேலே எறிந்து கீழுள்ளவற்றை வாரிப் பிடிக்க வேண்டும். பிடித்தால் பழம். 

வகை 5:

இது ஏழாங்கல்லின் மற்றொரு வகையாகும். 

ஒரு கல்லை வைத்துக் கொண்டு மீதி உள்ள ஆறு கற்களையும் உருட்டி ஒன்றாங் கொட்டை முதல் ஏழாங்கொட்டை வரை ஆடல் வேண்டும். ஒன்றாம் கொட்டையில் ஒவ்வொன்றாகவும், இரண்டாம் கொட்டையில் இரண்டு இரண்டாகவும், மூன்றாம் கொட்டையில் மும்மூன்றாகவும், நான்காம் கொட்டையில் இரண்டும் நாலுமாகவும், ஐந்தாம் கொட்டையில் ஐந்தும் ஒன்றுமாகவும், ஆறாம் கொட்டையில் ஆறும் ஒரேடியாகவும், ஏழாம் கொட்டையில் ஒன்றும் இரண்டும் மூன்றுமாகவும் கீழே உள்ள கற்கள் எடுக்கப்பட வேண்டும். 
எடுக்கும் கற்களை ஒரே கைக்குள் அடக்க இயலாதோர், இருகையும் பயன்படுத்துவதுமுண்டு, ஆனாலும், அது சிறப்பு வாய்ந்ததன்று. அனைவரும் ஒப்புக்கொள்ள மாட்டார். 
கீழிருக்கும் கற்கள் தூரத்தூர இருந்தால், கைக்கல்லை பக்கத்தில் வைத்துவிட்டு தொலைவிலுள்ள கல்லை எடுத்துக் கொள்ளலாம். 
ஏழு கொட்டைக்கும் பின்வருமாறு பாடல் பாடப்படும். 
1. பொறுக்கி சிறுக்கி போறாளாம் தண்ணீர்க்குத்தண்ணீர் குடமெடுத்து
2. இரண்டு இரும்பு, ஏழடிக் கரும்பு
3. மூன்று முக்கோடு, முருகன் செங்கோடு
4. நான்கு நடலம், தேங்காய்ப் புடலம்
5. ஐவர் அரைக்கும் மஞ்சள், தேவர் குளிக்கும் மஞ்சள்
6. ஆக்கூர் அடிவாழை, அண்ணன் தம்பி பெருவாழை
7. ஏழண்ணன் காட்டிலே, எங்களண்ணன் ரோட்லே, மஞ்சள் சாரட்டிலே

வேறு பாட்டும் உள்ளது. 

1. தூப்பொறுக்கி தூதுளங்காய் 
மாப்பொறுக்கி மாதுளங்காய்
கல்பொருக்கி கடாரங்காய்
2. ஈர் ஈர்த்திக்கொள்
பூப்பறித்துக் கொள்
பெட்டியில் வைத்துக் கொள்
3. முக்கோண வாசலிலே
முத்துத் தட்டுப் பந்தலிலே
4. நான்கு டோங்கு டம்மாரம்
நாங்களாடும் பம்பரம் 
(அல்லது)
நான்கு டோங்கு 
நாலு வெற்றிலை வாங்கு
5. ஐவர் அரைக்கும் மஞ்சள்
தேவர் குளிக்கும் மஞ்சள்
6. கூறு கூறு சித்தப்பா
குறுக்கே வந்த பெரியப்பா
7. ஏழை எண்ணிக் கொள்
எண்ணெய் மரம் சேர்த்துக்கொள்
பெண்ணை அழைத்துக் கொள்

விருப்பமிருந்தால் நீங்களே சொந்தமாகப் பாடல் புனைந்து ஆடலாம்.

ஏழாம் கொட்டைக்குப் பின், ஒரு கையில் முக்கல்லும் மற்றொரு கையில் நாலுகல்லுமாக வைத்துக் கொண்டு, நாற்கல்லில் ஒன்றை மேலெறிந்து எஞ்சிய இருமூன்றையும் கீழ்வைத்து மேலெறிந்த கல்லைப் பிடித்து, பின்பு மீண்டும் அதை மேலெறிந்து அதைக் கீழ்வைத்த இரு மூன்றையும் இருகையாலும் வாரிக்கொண்டு பிடித்தல் வேண்டும். இது சிறுபுதை எனப்படும். இதை ஆடும் போது பாடும் பாட்டு ‘புதை புதைக்கிற பம்பரம், செட்டி சிதம்பரம்” என்பதாகும். 

இதற்குப் பிறகு, இரண்டு கையிலும் மும்மூன்று கல்லை வைத்துக்கொண்டு, மீதி இருக்கும் ஒன்றை மேலே எறிந்து, ஆட்காட்டி விரலால் நிலத்தில் இழுத்துப் பிடித்தல் வேண்டும். பிறகு, ஒரு கல்லை மேலே எறிந்து ஆறு கல்லைக் கீழ் வைத்துப் பிடித்தபின், மீண்டும் ஒன்றை மேலெறிந்து மீதி உள்ள ஆறையும் ஒருங்கே வாரிப் பிடித்தல் வேண்டும். இது பெரும் புதை எனப்படும்.
இதையடுத்துத் ‘தப்பு-தாளம்-தலைவலி-மேளம்” நான்கும் நிகழும். பின்னர் ஒரு கல்லைக் கீழிட, அதை எதிராளி எடுத்துக் கொடுக்க வேண்டும். இது பழத்தை ஏற்றுக்கொண்டதன் அறிகுறியாகும். 

வகை 6:

பல நாலொரு கல்

ஒன்பது, 13, 17, 21 என்பது போல பல நான்கின் மடங்கோடு ஒரு எண்ணைக் கூட்டிய எண்ணிக்கையில் கற்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கற்களை ஒன்றாக மேலெறிந்து புறங்கையில் தாங்கிப் பிடிக்குமளவு வைத்துக் கொண்டு மற்றவற்றை கீழே தள்ளிவிட்டு, புறங்கையில் உள்ளவற்றை மேலே போட்டு அகங்கையில் பிடித்து, அவற்றில் இருந்து நான்கு நான்காய் இடக்கையாற் பிடித்துக் கீழே நான்கு நான்காய் வைத்தல் வேண்டும். இந்த வகையில் பெரும்பாலும் ஒரு நான்கைத் தான் பிடித்தல் கூடும். 
பின்பு, வலக்கையிலுள்ளவற்றுள் ஒரு கல்லை மேலெறிந்து அதைக் கீழே உள்ளவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ எடுத்துக் கொண்டு பிடித்தல் வேண்டும். இது போல் கீழே கற்கள் உள்ளவரை அல்லது தவறும் வரை திரும்பத் திரும்ப ஆட வேண்டும். கையில் பல கற்கள் சேர்ந்துவிட்டால், உடனே இடக்கையால் ஒரு நான்கை அல்லது பல நான்கைப் பிடித்து நான்கு நான்காய்க் கீழே வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு எல்லாக் கற்களையும் பிடித்து நான்கு நான்காய்க் கீழே வைத்தபின், இறுதியில் எஞ்சியிருக்கும் ஒற்றைக் கல்லை மேலே போட்டுப் புறங்கையில் தாங்கி, அதை மீண்டும் மேலெறிந்து நிலத்தைத் தொட்டு, மேலெறிந்த கல் கீழே விழுவதற்கு முன் அதைக் கையால் அழுத்தி நேரே வீழ்த்தி மூடி விட வேண்டும். இது அமுக்குதல் அல்லது மூடுதல் என்று அழைக்கப்படும். இது பழமாகும். 
முதலாவது புறங்கையால் தாங்கும் போது எல்லாக் கற்களையும் கீழே விட்டு விட்டாலும், பிடிக்கும் போது கல் தவறினாலும், நான்காய் அல்லது நான்குநான்காய்ப் பிடிக்கும் போது கூடக் குறையப் பிடிபட்டாலும், கீழுள்ள கல்லை எடுக்கும் போது மற்றக்கல் அலுங்கினாலும், ஆட்டம் நின்றுவிடும். பிறகு, அடுத்த ஆள் விளையாட வேண்டும். 
ஒரே ஆட்டத்தில், அடுத்தவர் ஆடினாலும், ஆடினவரே மறுமுறை ஆடினாலும், நான்குநான்காய் பிடித்து வைக்கப்பட்ட கற்களை விட்டு விட்டு மற்ற கற்களைக் கொண்டு தான் ஆட வேண்டும். ஒருவர் கடைசிக் கல்லை அமுக்கும் போது தவறிப்போய் அடுத்தவர் அதைச் சரியாக அமுக்கிவிட்டால், அடுத்தவருக்குத் தான் பழம். 

வகை 7:

பன்னிரு கற்கள் அல்லது பதிரெண்டு கற்கள்

12 கற்களை மேலெறிந்து அவற்றைப் புறங்கையில் தாங்கி, அவற்றுள் ஒன்றைமட்டும் இருவிரல் இடையில் சொருகிக் கொண்டு மற்றவற்றை கீழே விட்டு விட்டு, அவற்றை ஒவ்வொன்றாககோ இரண்டு இரண்டாகவோ, மூன்று மூன்றாகவோ, ஒன்றும் பலவுமாகவோ, வேறிரு விரலால் இடுக்கிப் பிடித்துக் கீழே வைத்து எல்லாவற்றையும் பிடித்தபின் புறங்கையிலுள்ளதை அமுக்கி, அதையும் மற்றவற்றோடு சேர்த்து மூன்றுமூன்றாக நான்கு கூறு போட்டு, ஒவ்வொன்றில் இருந்தும் ஒவ்வொரு கல்லை எடுத்துவிட வேண்டும். இக்கூறுகளுக்கு ‘உட்டைகள்” என்று பெயர். நாலு உட்டையிலுருந்தும் ஒவ்வொரு கல்லை நீக்கியபின், எட்டுக் கல் எஞ்சி இருக்கும். அந்த எட்டையும் முன் போன்றே ஆடி, மீண்டும் மூன்று மூன்றாக உட்டை வைத்து ஒவ்வொரு கல்லை நீக்கிய பின், ஆறு கல் எஞ்சி நிற்கும். இவ்வாறே தொடர்ந்து ஆடின், இறுதியில் இருகல் மிஞ்சும். அவற்றுள் ஒன்றை மேலேயெறிந்து இன்னொன்றைக் கீழே வைத்துப் பிடித்து, பின்பு மீண்டும் அதை மேலே எறிந்து கீழே வைத்ததை எடுத்துப் பிடித்தல் வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்தபின், மேலே எறிந்த கல்லை, மூன்று தடவை சிலுப்பியும், (சிலுப்புதல் என்பது அகங்கையிலுள்ளதைப் புறங்கையிலிட்டு வெட்டிப் பிடித்தல் ஆகும்) மூன்று தடவை மேலே எறிந்து தரையைத்; தொட்டுப் பிடித்தும், பின்னர் மூன்று தடவை மேலே எறிந்து தரையும் மார்பும் தொட்டுப் பிடித்தும் முடித்தால் பழமாகும். ஆடும் போது தவறும் வகையும், அதன்பின் நிகழும் விடயமும் முன்கூறியவைப் போன்றே கடைபிடிக்க வேண்டும்.

வகை 8:

பலகல் ஆட்டம்

ஒன்பது முதல் 25 வரை ஒற்றைப்படையான ஏதேனும் ஒரு தொகைக் கற்களை, மேலே போட்டுப் புறங்கையால், தாங்கி ஒரு கல் தவிர மற்றவற்றை எல்லாம் கீழே போட்டுவிட்டு, அந்த ஒரு கல்லை மேலே எறிந்து உள்ளங்கையால் பிடித்து, அதை மீண்டும் மேலே எறிந்து, கீழே கிடக்கும் கற்களுள் இரண்டு நான்கு ஆறு எட்டு என இரட்டைப்படையாக எடுத்துக் கொண்டு, மேலே எறிந்த கல்லையும் பிடிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு எடுப்பிற்கும், முன்னும் பின்னும், ஒரு கல்லை மேலெறிதலும் அதைப் பிடித்தலும் முறையே நடக்க வேண்டும். 
இரண்டு கல் எடுத்தால் காய், நான்கு ஆறு எட்டு ஆனால் பழம். பழக் கற்கள் எல்லாவற்றையும் தன் பங்கில் வைத்துக் கொண்டு, காய் கற்களில் பாதியை விளையாட்டில் போட்டு விட வேண்டும். ஆட்டம் முடிந்தபின், கூடுதலான கற்களை பிடித்திருப்பவர் வெற்றி பெற்றவராவார். 
மற்ற இயல்புகள் செய்திகள் ஆகியவை முன்பு கூறியபடியே ஆகும். 

வகை 9:

பதினாறாங்கல்:
இதே போன்று பதினாறு கற்களையும் கொண்டு ஆடப்படும் ஆட்டம். இதையும் மேற்கூறியவாறு பல வகைகளில் விளையாடலாம். 

நன்றி:
1. தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்