Wednesday, 11 March 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-112: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-112:    திருக்குறளில் அரசியல்:
எந்த ஒரு செயல் செய்தாலும், திட்டமிட்டு செய்தால், சிறப்பான விளைவுகளை அறுவடை செய்ய முடியும், அது விவசாயமாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி. மேலும், அரசியலில் ஆள்பவர்களின் பங்கு முக்கியமானது. அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், தன்னுடைய நாட்டு மக்களை வளர்ச்சிக்கும் கொண்டு செல்லலாம், படுபாதாளத்திற்கும் தள்ளிவிடலாம். ஆகவே, தெளிவான முடிவnடுத்தல் என்பது ஆட்சியாளருக்கு மிக முக்கியமானதாகவும் அத்தியாவசியமானதாகவும் இருக்கிறது. 
சரி, அரசியல் நிர்வாகத்தில் தெரிந்து செயல்வகையின் முக்கியத்துவத்தைப் பார்ப்போம். 
1. நல்ல நிர்வாகம்:
ஆய்வின் அடிப்படையில் முடிவுகள் எடுத்தல்
திட்டமிடப்பட்ட செயல்பாடுகள்.
2. அரசியலில் நிலைத்தத்தன்மை:
தவறான முடிவுகள் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும்.
3. மக்கள் நம்பிக்கை:
சிந்தித்து செயல்படும் தலைவர் மக்களின் நம்பிக்கையை பெறுவார். 
4. தேசிய முன்னேற்றம்:
நீண்டகால வளர்ச்சி சாத்தியம் 
நல்ல அரசியல் தலைவரின் பண்புகள்:
சிந்தித்து செயல்படுதல்
ஆலோசனை கேட்பது
முன்னோக்கிய பார்வை
மக்களின் நலனை முன்னிலைப்படுத்துதல்
தவறுகளை தவிர்த்தல்
திட்டமிடலின் அடித்தளம்: பொருளாதார மற்றும் விளைவு மதிப்பீடு
இந்த அதிகாரத்தின் முதல் குறளிலேயே ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்னால், அதன் நிதிநிலை மற்றும் நீண்டகாலப் பயன்களை ஆராய்வது அவசியம் என்பதை முதல் குறளிலேயே சொல்கிறார். அரசியல் நிர்வாகத்தில், ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அது நுகரும் வளங்களுக்கும், அது உருவாக்கும் நன்மைகளுக்கும் இடையிலான சமநிலையைப் பொறுத்து அமைகிறது. 
பரிமேலழகர் இதற்கான உரை எழுதும் போது, ஒரு செயலைச் செய்யும் போது தற்போது அழியும் பொருள் (செலவு), அந்தச் செயலால் பின்னர் உண்டாகும் பொருள் (வரவு), அச்செயலால் எதிர்காலத்தில் தொடர்ந்து கிடைக்கக்கூடிய பயன் (ஊதியம்) ஆகிய மூன்றையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்கிறார். நவீன பொதுக் கொள்கை உருவாக்கத்தில், இதனை செலவு பயன் பகுப்பாய்வு (ஊழளவ-டீநநெகவை யுயெடலளளை) என்று அழைக்கப்படுகிறது. ஒரு புதிய உள்கட்டமைப்புத் திட்டத்தை தொடங்குவதாக கைத்துக்கொள்வோம். அரசு அதற்கான திட்டத்தை வகுத்து நிறையச் செலவு செய்கிறது. ஆனால், அத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்ததும் அதன் மூலம் ஈட்டும் வருவாய் மற்றும் அதன் மூலம் சமூகத்திற்கு நீண்டகாலமாகக் கிடைக்கும் மறைமுகப் பொருளாதார நன்மைகள்ஆகியவற்றை ஆராய வேண்டும்.
அடுத்தக் குறளில் கூட்டுப் பொறுப்புணர்வை (462) எடுத்துரைக்கிறார்.  தான் மிகப்பெரிய தகுதியினைக் கொண்டிருந்தாலும் தக்க நிபுணர் குழுவை கொண்டு திட்டங்கள் வகுப்பதும் செயல்படுத்துவதும் மிகப் பெரிய நன்மைகளைக் கொடுக்கும் என்கிறார். 
463 ஆவது குறளில், திறம்பட திட்டமிடால் பெரிய பலன் கிடைக்கும் என்று அடிப்படையை இழந்து விடக் கூடாது என்று எச்சரிக்கிறார். உதாரணமாக பேரிடர் நிதியை எடுத்து தொழில் வளர்ச்சிக்குச் செலவு செய்கிறேன் என்று முடிவெடுத்தால், திடீரென்று ஏற்படும் பேரிடரை சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். 
464 ஆவது குறளின் அடிப்படையில், தனக்கு ஒரு விடயம் புரியவில்லையென்றால், புரிபடவில்லையென்றால், அதனை தவிர்த்து விடுதல் நல்லது, சில ஆட்சியாளர்கள் தங்களுடைய முந்தையத் தலைவர்கள் என்ன கொள்கையின் அடிப்படையில் கட்சியினை ஆரம்பித்தார்கள் எதனை சொல்லி மக்களின் ஆதரவினைப் பெற்றார்கள் என்பதனை மறந்து, அதற்கு எதிராக தனக்குத் தோன்றியதையோ அல்லது சேரக் கூடாத கூட்டத்திடம் மக்களுக்கு உபயோகம் இல்லாத கருத்துக்களைப் பெற்று தனக்கு புரியவில்லையென்றாலும் செயல்படுத்த முனைவது அரசியல் தற்கொலைக்குச் சமமானது ஆகும். 
465 ஆம் குறளின் படி, திறமையான ஆட்சியாளர் நன்கு ஆராய்ந்து அறிந்து திட்டங்களை செயல்படுத்தும் போது, எதிர்கட்சியினராலும், எதிரிக் கட்சியினராலும் அதனைக் குறித்து விமர்சனம் செய்ய இயலாது. அவ்வாறு செய்தால், மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதனை நன்கு அறிந்தவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். இதுவே பகைவரை திறம்பட கையாளும் யுக்தியில் ஒன்றாகும். 
466 ஆவது குறளில், ஒரு அரசியல்வாதியின் வீழ்ச்சி இரண்டு வகைகளில் நிகழலாம். 
ஓன்று செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால்
இரண்டு செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் விடுவதால். 
சுருக்கமாகச் சொல்வதென்றால், சாதாரண காலங்களில் தேவையற்ற ஆடம்பரமும் பேரிடர் காலத்தில் தாமதமான சேவைகளும் ஆகும். 
467 ஆம் குறளில், எண்ணித் துணிகக் கருமம் என்றாலே அனைவரும் அறிந்ததே, முடிவெடுக்கும் முன் நன்கு யோசிக்க வேண்டும். செயலில் இறங்கிவிட்டு பிறகு இப்படிச் செய்திருக்கலாமே அப்படி செய்திருக்கலாமே என்று வருத்தப்படுவது அவமானத்திற்குரிய செயலாகும் என்கிறார். 
468 ஆவது குறளில், முறையாக ஆராய்ந்து அறியாமல் செய்யப்படும் திட்டம் மற்றும் செயல்பாடு தோல்வியையேத் தரும். ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், அனைத்து நிலைகளிலும் அதற்கான வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தினால் மட்டுமே இயலும், இல்லையெனில் ஓட்டைப் பானையில் தண்ணீர் முகர்வது போலாகும். 
469 ஆவது குறளில், சரியான செயல்களை சரியான நபர்களா என்று பார்த்துச் செய்ய வேண்டும். குணமறிந்து செய்ய வேண்டும். இல்லையெனில் ‘தானமாக பெற்ற மாட்டின் பல்லை பரிசோதித்து” தமக்கு நல்ல மாடுதான் கொடுத்தார்களா என்று தானம் பெறுபவன் பரிசோதிக்கும் போது பார்த்துப் பார்த்து தானம் கொடுப்பவனுக்கு ஏற்படும் அவமானம் போல் கெடும். 
470 ஆவது குறளில், ஒரு திறம்பட்ட தலைவரின் செயல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அதாவது பெரியோர் அல்லது பயன் பெறுபவர் விரும்பாத செயல்களை அவரிடம் வற்புறுத்தித் திணிக்கக் கூடாது. அப்படி செய்தால் தலைவர் மீது வெறுப்புத்தான் ஏற்படும். தகுதியான திட்டத்தை தகுதியானவர்கள் விரும்பும் வகையில் கொடுக்கும் போது அவர்கள் மகிழ்வர். உதாரணமாக தமிழக அரசு தற்போது வழங்கும் மகளிர் உரிமைத் தொiயைச் சொல்லலாம். அதற்கு உரிமைத் தொகை என்று பெயரிடும் போது அது பெண்கள் மத்தியில் பெருமிதத்தை ஏற்படுத்துகிறது.

தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 4 March 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-111: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-111:   
திருக்குறளில் அரசியல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 . இந்த வாரம் ‘தெரிந்து செயல்வகை” என்னும் அதிகாரத்தில் அரசியல் குறித்து திருவள்ளுவர் என்ன குறிப்பிட்டுள்ளார் என்பதின் கடைசி விரத்தினை தொடர்ந்து பார்ப்போம். 
அரசியலில் ஒரு சிலரே தீர்க்கமாக ஆராய்ந்து தெளிந்த் பின்பு முடிவுகளை எடுக்கின்றனர். பலர் ஆராயாமல், பிறர் சொல்லைக் கேட்டு அல்லது தன்னை விட மூத்தவர்கள் அல்லது தன்னை விட அதிகாரம் மிகுந்தவர்களின் அழுத்தத்தினால், பல வித வாக்குறுதிகளை, தன்னால் செய்ய முடியாது என்றும் தெரிந்தும் கூட சில சமயங்களில் சொல்லி விடுவதுண்டு. தன்னுடைய தவறை இயலாமையை மறைக்க அரசியல் தந்திரம் என்று கூட மழுப்புவது உண்டு. இதுபோன்று ஆராயாமல் செயலை அறிவுடையோர் செய்ய மாட்டார் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் பின்வரும் குறளில்,
தெளிவிலதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சுபவர்-464
அதாவது தெளிவில்லாத செயலை அறிவுடையவர் தொடங்கமாட்டார் என்று குறிப்பிடுகிறார். அவ்வாறு சொல்வது அரசியலில் தோல்வியை ஏற்படுத்தும் என்று உணர்த்துகிறார்.  அப்படி திட்டமிடாமல் செயல்படும் செயல்கள் மற்றவர்கள் முன்பு தோல்வியை ஒப்புக் கொண்டது போல அமையும், குறிப்பாக எதிர்க் கட்சியினரும், எதிரிக் கட்சியினரும் எள்ளி நகையாடுவர். இதனையே அடுத்தக் குறளில், 
வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு.-465 என்று குறிப்பிடுகின்றார். அதாவது திட்டமிடாமல் செயல்படுவது, எதிரிகளுக்கு உதவுவது போன்றது என்று குறிப்பிடுகின்றார். 
அரசியலில தூங்கும் போது கூட காலை ஆட்டிக் கொண்டே தூங்க வேண்டும். இலை;லை எனில் இறந்து விட்டார் என்று கூறி எடுத்து அடக்கம் செய்து விடுவார்கள் என்று அரசியல்வாதிகள் கூறுவதுண்டு. ஆகவே, நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் அரசியல் தலைவர்கள் அதற்கு பதிலளிக்க வேண்டும். அதே போல, எந்த விடயம் செய்ய வேண்டும் எதனை செய்யக் கூடாது என்பதனை அறிந்திருக்கும் தெளிவும் அவசியம் இருக்க வேண்டும். இல்லையெனில் அரசியல் வாழ்வில் பல தீமைகளை சந்திக்க நேரிடும். இதனை பின்வரும் குறளில் திருவள்ளுவர் அவர்கள் அழகாக விளக்கியுள்ளார்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் -466
அதாவது, செய்யக் கூடாததைத் செய்தாலும் தீமை தரும் அதே போல செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தாலும் தீமை தரும் என்கிறார். அரசியல் ரீதியாகச் சொல்ல வேண்டுமெனில் ஒரு அரசானது தவறான முடிவுகள் எடுத்தாலும் அல்லது தேவையான நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்கிறார். 
அரசியலில் நீடித்திருப்பதற்கும் தன் கட்சியினர் தன்னை மதிப்பதற்கும் முக்கிய அம்சமாக இருப்பது முடிவெடுக்கும் திறன். தீர்க்கமான முடிவினை எடுக்கும் தலைவர்கள் தங்களுடைய தொண்டர்களால் மதிக்கப்படுவர். முடிவுகளை மாற்றிக் கொண்டே இருப்பவரால் கட்சிக்குள்ளும் சிக்கல் ஏற்படும். தொண்டர்களும் என்ன செயல் செய்வது என்று தெரியாமல் தவிப்பர். இதனை நம்மில் பலரும் அறிந்த கீழ்க்காணும் திருக்குறளில் கூறியுள்ளார். 
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவது இழுக்கு-467  என்று குறிப்பிடுகிறார். அதாவது எந்த ஒரு செயலுக்கு முன் யோசிக்க வேண்டும். செய்தபின் யோசிப்பது தவறு என்று குறிப்பிடுகிறார். அரசியலில் முன் திட்டமிடலின் அவசியத்தை வலியுறுத்துகிறார். 
சிலர் தவறினை செய்து விட்டு அது தவறு என்று தெரிந்தும் அதனை 
எற்றுக்கொள்ளாமல், அவதூறு பரப்புதலும், பிறர் மீது பழியினை போடுதல் போன்ற கீழ்த்தரமான வேலைகளைச் செய்கின்றனர். இவ்வாறு செய்வது மக்களிடம் இருந்து ஆட்சியாளர்களை விலக்கி வைக்க நேரிடும் வாய்ப்பாக அமைகின்றது. ஆகவே, கவனமாக இருக்க வேண்டும் என்பதனை பின்வரும் குறளில் வலியுறுத்துகின்றார். 
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.-468 அதாவது முன்னே யோசிக்காமல் செய்த தவறு பின்னர் திருத்த முடியாது என்கிறார். உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு தவறான அரசியல் முடிவு நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கலாம்.
ஆரசியலில் பல விடயங்கள் கவனிக்க வேண்டும் அதில் குறிப்பாக எந்தச் செயலை எப்போது செய்ய வேண்டும் என்ற காலம் அறிந்து செய்யப்பட வேண்டும். வறட்சி சமயத்தில் தான் வறட்சியைப் போக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். அந்த சமயத்தில் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டால் அது கேலிக் கூத்தாகிவிடும். ஆகவே நற்செயல் முக்கியம் அதனை மனிதர்களின் இயல்பை அறிந்து செய்வதும் முக்கியம் ஆகும். புpன்வரும் குறளில் அவர் குறிப்பிடுவதாவது:
நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை.-469
நற்செயலும் தவறாகலாம், மனிதர்களின் இயல்பை அறியாமல் செய்தால் என்கிறார். அரசியல் ரீதியாக சொல்ல வேண்டுமென்றால் மக்களின் மனநிலையை அறியாமல் எடுக்கின்ற முடிவு தோல்வியடையும். 
இறுதியாக, மக்களின் ஆதரவோடு இயங்கும் அரசே நல்ல அரசு என்று தெளிவுபடுத்துகிறார். 
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.-470
அதாவது உலகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் யோசித்துச் செயல்பட வேண்டும் என்கிறார். மக்களின் அூதரவு இல்லாத அரசு ஒருபோதும் நீடிக்க இயலாது என்பதனை வலியுறுத்துகின்றார் திருவள்ளுவர். இந்த அதிகாரத்தின் மொத்த சாராம்சங்களை வரும் வாரத்தில் பார்ப்போம். 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு


Sunday, 1 March 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-110: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-110:  
திருக்குறளில் அரசியல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் ‘தெரிந்து செயல்வகை” என்னும் அதிகாரத்தில் அரசியல் குறித்து திருவள்ளுவர் என்ன குறிப்பிட்டுள்ளார் என்று பார்ப்போம். 
தெரிந்து செயல்வகை என்பது எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக அந்தச் செயலின் விளைவுகள், நன்மை-தீமைகள், அதன் சூழல், காலம், வலிமை மற்றும் எதிரிகள் ஆகியவற்ளை ஆராய்ந்து பிறகு செயல்படுதலைக் குறிப்பிடுகிறது. 
அரசியலில் தலைவராக இருப்பதற்கு இந்த விடயம் மிக முக்கியமானது ஆகும். அரசியல் மற்றும் ஆட்சித் திறனில் முடிவெடுப்பதற்கு இது அவசியமாகிறது. ஏனெனில், ஒரு தலைவன் எடுக்கக் கூடிய முடிவுதான் அந்த நாட்டை வளமானதாகவோ அல்லது வீழ்ச்சிக்கோ கொண்டு செல்வதற்குக் காரணமாக அமைகின்றது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், அரசியல் சூழலில், ஒரு சிறு தவறு அல்லது தவறான கணக்கீடு முழு நாட்டையும் பேரிடருக்கு உள்ளாக்கும் என்பதால், "தெரிந்து செயல்" என்பது ஆட்சியாளர்களுக்கு மிக முக்கியமான தகுதியாகக் கருதப்படுகிறது.

இந்த அதிகாரம் வெறும் தார்மீக ஆலோசனைகளை மட்டும் வழங்காமல், நவீன மேலாண்மைத் தத்துவங்களில் கூறப்படும் ‘வியூகத்துடன் திட்டமிடல்”; (Strategic Planning), 'இடர் மேலாண்மை' (Risk Management) மற்றும் 'ஆற்றல் பகுப்பாய்வு' (SWOT Analysis) போன்ற உயர்நிலை நிர்வாகக் கோட்பாடுகளைத் தன்னுள் கொண்டுள்ளது.
ஏந்த ஒரு அரசின் செயல்பாட்டிற்கு நிதி ஆதாரம் முக்கியமானதாகவும். சரியான முறையில் திட்டமிட்டால் ஒரு அரசால் நிறைய வருவாயினை மக்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஏற்படுத்த முடியும். சரியாக திட்டமிடவில்லையெனில் கடன் சுமை அதிகரிக்கும் அதனைச் சமாளிக்க மக்கள் மீது வரிச் சுமை அதிகரிக்கும். 
முதல் குறளில் என்ன கூறியிருக்கிறார் என்று பார்ப்போமா?
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.-461  என்கிறார்.  அதாவது எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் முன்பாது, அது தரும் நன்மை, அது தரும் தீமை மற்றும் அதன் விளைவுகள் ஆகிய எல்லாவற்றையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்கிறார். அரசியல் நோக்கில் சொல்ல வேண்டுமெனில், ஒரு அரசாங்கம் புதிய சட்டம் கொண்டு வரும் போது, அதன் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளை ஆராய வேண்டும் என்று நாம் கொள்ளலாம். முன்பே குறிப்பிட்டது போல வரி உயர்த்துவது அரசுக்கு வேண்டுமானால் ஆதாயம் தரலாம். ஆனால், மக்களுக்கு அது பெருஞ்சுமையை ஏற்படுத்தும் .
அரசியல் தலைப்பின் முந்தைய அதிகாரங்களில் நாம் பார்த்ததுபோல எந்த ஒரு தலைவனும் தகுதியான நபர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளுவதும் சிறுமை எண்ணம் கொண்டவர்களிடம் இருந்தும் விலகி இருந்து பேரினத்துடன் தங்களை இணைத்துக் கொள்வது சாலச் சிறந்தது என்று பார்த்தோம். பின்வரும் குறளிலும் அக்கருத்திற்கு வலு சேர்க்கிறார். 
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.-462
அதாவது, தெரிந்தவர்களுடன் ஆலோசித்து, ஆராய்ந்துசெயல்படுபவர்களுக்கு முடியாதது என்று எதுவும் இல்லை. அனைத்தும் எளிதில் கை கூடும்.
ஒரு நல்ல தலைவர் என்பவர் தங்களுடைய அமைச்சர்கள், நிபுணர்கள், ஆலோசகர்கள் இவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்க வே;;ண்டும் என்கிறார் திருவள்ளுவர். குறிப்பாக, பாதுகாப்பு, பொருளாதாரம், கல்வி போன்ற துறைகளில் நிபுணர்களின் கருத்து அவசியம் என்பதனை உணர வேண்டும். 
சிலபேர், மிகப் பெரிய இலாபம் வரும் என்று கருதி தன்னுடைய சொத்தை விற்றுக் கூட பங்குச் சந்தையில் முதலீடு செய்வர், சரியான கணக்கீடு இல்லாதநிலையில் அவர் பங்குச் சந்தையில் சரிவை எதிர் கொள்ளும் போது, தன்னுடைய சொத்தையும் சேர்த்து இழக்கும் நிலை உருவாகிறது. இதுபோன்ற நிகழ்களை முன்னரே நமது திருவள்ளுவர் சாடுகிறார். 
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடையார்-463  என்கிறார். அதாவது, எதிர்கால இலாபத்திற்காக அடிப்படையை இழக்கும் செயலை அறிவுடையார் செய்யமாட்டர் என்கிறார். அரசியல் தலைவரானவர் தன்னுடை தற்கால இலாபத்திற்காக நாட்டின் நீண்ட கால நலனை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை வாக்குறுதிகள் பெறுவதற்காக அளிப்பதைக் கூட இதன் கணக்கில் கொள்ளலாம். 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்கும் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு


Tuesday, 17 February 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-109:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-109:  
திருக்குறளில் அரசியல்:

திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம். 
கடந்த வாரம் சிற்றினத்துடன் சேர்வதனால் என்ன மாதிரியான துன்பங்களை சிறந்த ஆளுமை உடையவராக இருந்தாலும் அனுபவிக்க நேரிடும் என்பதனைப் பார்த்தோம். இந்த வாரம், சரியான இனத்தாரோடு இனங்கியிருப்பதில் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்.
ஒருவர் எப்பேர்பட்ட அவதூறுகளை எதிர்கொண்டாலும், தான் வயதான காலத்தில் தன்னுடைய பெற்ற பிள்ளைகளே அவரை சுயநலத்தால் ஒதுக்கினாலும், தான் செய்த நல்ல காரியங்கள், சாதனைகள் எப்போதும் அவரை உத்வேகமாகவே வைத்திருக்கும். சோர்ந்து விட மாட்டார். 
அதே போன்று ஒருவர் துவக்கத்தில் இருந்தே மனதளவில் உண்மையாகவும் அதனை நோக்கியே தன் அணியையும் வழிநடத்தும் போது, அவருக்கு அவராலும் அவருடைய அணியினாலும் இருவருக்குமே பெருமை சேர்க்கும். ஆவர்கள் அனைவருக்குமே இதனால் நன்மை பயக்கும் என்பதனை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை -456 என்கிறார். அதாவது, மனத்தூய்மையாக உள்ளவர்களுக்கு எஞ்சி நிற்பது அவருடைய புகழ் ஆகும். அவர் சேர்ந்த இனத்தின் தூய்மையால் அவருக்கு நன்மை இல்லாமல் போகாது என்கிறார்.  
மேலும், அரசியல் வாதியின் மனம் தெளிவாகவும் நல்ல நிலையில் இருந்தால் தான் அவரால் நல்ல பல திட்டங்களை இயற்ற முடியும், அதன் மூலம் மக்களுக்கும் நன்மைகள் நடந்தேறும். அவர் சார்ந்த இனத்தினால் அதன் மூலம் பெரும் புகழ் கிடைக்கும் என்கிறார் பின்வரும் குறளில்,
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் 
எல்லாப் புகழும் தரும் -457
அதாவது, மனத்தின் நலம் உயிர்களுக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் கொண்டு வரும் என்கிறார். 
சிற்றினம் சேராமை அதிகாரத்தின் முற்பகுதியில் நாம் கண்டவாறு ஒருவர் எவ்வளவு திறமையாளராக இருந்தாலும் சேராத இடத்தில் சேரும் போது, அவரால் சிறப்பானவராக இருக்க இயலாது என்பதனை மீண்டும் வலியுறுத்துகிறார். கர்ணன் படத்தில் ஒரு பாடல் வரிகளை நாம் கேட்டிருப்போம், ‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயாடா, கர்ணா...” என்று, கர்ணன் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், கதையின் படி அவன் தவறான இடத்தில் சேர்ந்ததனால், அவன் பலவீனப்படுத்தப்பட்டு வீழ்த்தப்பட்டான் என்கிறது இதிகாசம்.  இதுபோன்ற, அக்பர் சிறந்த ஆட்சியாளராக இருந்தாலும், அவருடைய அமைச்சரவையில் இருந்தவர்கள் அனைவரும் மிகுந்த திறமைசாலிகளாக இருந்ததால் மிகப் பெரிய வலிமையுடன் இருந்தார். இக்கருத்தை, திருவள்ளுவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.  
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து -458
மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே  வலிமை வந்து சேரும் என்கிறார். 
அடுத்தக் குறளில் இந்த நிலையை மேன்மைப் படுத்துகிறார்.
மனநலத்தின்  ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து -459 என்கிறார். 
ஒருவனுக்கு மனநலத்தின் செம்மையாலே மறுமை இன்பம் உண்டாகும். அதுவும் கூடஅவர் சேர்ந்துள்ள இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும் என்று குறிப்பிடுகிறார். 
அடுத்தக் குறளில், ஒட்டுமொத்தமாக இவ்வதிகாரத்தின் குறட்பாக்களை தொகுத்து சுருக்கமாக ஒரே குறளில் குறிப்பிடுகிறார். 
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல் -460 என்கிறார். 
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையாக இருப்பதும் இல்லை, தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் கொடுப்பதும் எதுவும் இல்லை. 
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நாம் எப்பேர்பட்டவர்களாக இருந்தாலும் நம்முடைய சேர்க்கை நம்முடைய நிலையை உணர்த்தும் எனக் கொள்ளலாம். 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 11 February 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-108: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-108:  
திருக்குறளில் அரசியல்: 
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம். 

உன் நண்பன் யாரென்று சொல், நீ எப்படிப்பட்டவன் என்று சொல்கிறேன் என்ற சொல்லாடலைக் கேள்விப்பட்டிருப்போம். உளவியலில் Peer influence என்போம். ஏதார்த்தமாக பேசுவதென்றால் சேர்க்கை என்று வைத்துக் கொள்ளலாம். குற்றவாளிகள் குற்றம் செய்து தப்பிக்கும் போது முதலில் அவர்கள் ஆய்வு செய்வது அவர்கள் செய்கையையும் சேர்க்கையையும் கொண்டே அமைகிறது. இதைத் தான் திருவள்ளுவரும் குறிப்பிடுகிறார். பின்வரும் குறளில்,
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல் -453
மனிதர்க்கு உணர்ச்சி என்பது அவருடைய மனத்தின் தன்மையால் உண்டாகிறது. ஆனால், அவர் இப்படிப்பட்டவர் என்பது உலகத்தாரால் அழைக்கப்படுவது அவர் சேர்ந்திருக்கும் இனத்தால் உண்டாகிறது என்கிறார். இது கூட்டணி அமைப்பதற்கும் பொருத்தமுடையதாக இருக்கின்றது. ஆனால், இது அரசியலுக்கு மட்டும் பொருத்தமானதாக ஒன்று என்று முடிவிற்கு வந்துவிட வேண்டாம். இது பிள்ளைகளைக் கவனிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் பெற்றோருக்கு உதவும் என்பதனை மறந்து விட வேண்டாம். ஏனென்றால், என்னதான் பிள்ளைக்கென்று தனியாக அறிவு இருந்தாலும், முடிவெடுக்கையில் சேர்ந்துள்ள கூட்டத்தின் அடிப்படையிலே எடுக்கும் சூழல் ஏற்படும். சேர்ந்திருக்கும் கூட்டம் தவறானதெனில் விளைவுகளும் அபாயகரமானதாக இருக்கும். அரசியலிலும் அப்படித்தான் இதனை இன்னும் கூடுதலாக அடுத்தக் குறளில் குறிப்பிடுகிறார், ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு, ‘Student is good, students are bad” இதனை பின்வரும் குறளில் முன்னரே விளக்கியுள்ளார் திருவள்ளுவர்.
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு -454
அதாவது, ஒருவனுடைய அறிவு என்பது அவனுடைய மனதின் இயல்பு என்பது போலத் தோன்றினாலும், உண்மையில் அது அவர் சேர்ந்துள்ள கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவது ஆகும் என்கிறார். ஆக, சரியான கூட்டத்தோடு இல்லையென்றால், விளைவுகள் சரியானதாக இருப்பதில்லை.
அப்படியெனில், ஒருவன் இயல்பில் எப்படிப்பட்டவனாகிலும், அவன் சேர்க்கையே அவனை முடிவு செய்கிறது என்பதனை தெளிவாக விளக்குகிறார். 
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்-455 என்கிறார், அதாவது ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தொடர்பு தூய்மையானதாக இருந்தால் தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானதாக அமையும் என்கிறார். பல படங்களில் நாம் பார்த்திருப்போம், தன்னுடைய எதிரியை பழிவாங்க, அவருடைய மகனையோ மகளையோ நல்லவர் போல நடித்து நம்ப வைத்து அவருக்கு எதிராக அவர்களை தூண்டிவிடும் உத்தி!. சிலர் இந்த உத்தியை நட்பிலும் காட்டுகின்றனர். அரசியலில் பலர் மிகச் சிறப்பாகச் செய்கின்றனர். 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 4 February 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-107: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-107:  திருக்குறளில் அரசியல்: 
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம், அரசியலில் பெரியாரை துணைக்கோடல் என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தில் அரசியல் சார்ந்த என்ன கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளார் என்று பார்ப்போம். 

பிறக்கும் போது அனைத்துக் குழந்தைகளுமே நல்ல குழந்தைகள் தான் ஆனால், அவர் எப்படிப்பட்டவராக வளருகிறார் என்பதை பல விடயங்கள் தீர்மானிக்கின்றன, அவர்களின் டி.என்.ஏ, வளர்க்கும் விதம், கூடும் நட்பு, கலாச்சாரம், சுற்றுச்சூழல் (இயற்கை மற்றும் வாழும் சூழல்) ஏற்படுத்தும் தாக்கம் என்று பல வித காரணிகள் ஒரு நபரின் பண்புகளைக் கட்டமைக்கின்றன. ஒவ்வொரு தனிமனிதருக்கும் இவ்வளவு விடயங்கள் இருக்கும் போது அரசிற்கும் அது போன்ற தாக்கங்கள் என்ன விளைவுகளைக் கொண்டுவரும்? ஒரு அரசு திறமையானதாகவோ அல்லது திறமையற்றதாகவோ இருப்பதற்கு எவை காரணமாக அமைகின்றன?
இந்த வாரம் நாம் காணும், 'சிற்றினம் சேராமை', என்னும் இந்த அதிகாரத்தில் ஒரு தலைவன் அல்லது ஆட்சியாளன் தன் இலக்கை அடைவதற்கும், தன்னுடைய புகழைத் தக்கவைப்பதற்கும் அவனது சுற்றுப்புறம் எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.  நாம், சிற்றினம் சேராமையின் அரசியல் முக்கியத்துவத்தையும்இ அதன் உளவியல் தாக்கங்களையும்இ நவீன மேலாண்மைக் கோட்பாடுகளுடன் அதன் தொடர்பையும் விரிவாகப் பார்ப்போம். 
அரசியல் களத்தில் சிற்றினம் சேராமை: ஒரு அறிமுகம்
திருக்குறளின் பொருட்பால்இ ஒரு நாட்டின் நிர்வாகம்இ தூதுஇ அமைச்சரவை மற்றும் ஒரு அரசனின் தனிப்பட்ட பண்புகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. இதில் 46-வது அதிகாரம்இ ஒரு ஆட்சியாளன் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களைத் தேர்ந்தெடுப்பதில் காட்ட வேண்டிய விழிப்புணர்வை வலியுறுத்துகிறது. 'சிற்றினம்' என்பது அறிவில் குறைந்தவர்களையோ அல்லது வறுமையில் உள்ளவர்களையோ குறிப்பதல்ல; மாறாகஇ குறுகிய நோக்கம் கொண்டவர்கள்இ அறநெறியில் நம்பிக்கையற்றவர்கள் மற்றும் ஒரு தலைவனின் சிந்தனையைத் திசைதிருப்பக்கூடிய 'கீழ்மைக் குணம்' கொண்டவர்களைக் குறித்தே இது குறிப்பிடுகிறது.    
ஒரு ஆட்சியாளனின் வெற்றி என்பது அவனது தனிப்பட்ட திறமையை விடஇ அவன் யாரை ஆலோசனைக் குழுவில் வைத்திருக்கிறான் என்பதிலேயே தங்கியுள்ளது என்பதை வள்ளுவர் இந்த அதிகாரத்தின் பத்து குறட்பாக்களின் மூலம் நிறுவுகிறார். சிற்றினத்தைச் சேர்ந்தவர்களைக் கண்டால் பெரியோர்கள் அஞ்சி ஒதுங்குவார்கள் என்ற கருதுகோளில் தொடங்கிஇ நல்லினத்தைச் சேர்வதே ஒருவனுக்குப் பெரிய துணை என்ற இறுதி உண்மை வரை இந்த அதிகாரம் ஒரு முழுமையான அரசியல் தத்துவத்தை முன்வைக்கிறது.
அரசியல் சூழலில் 'சிற்றினம்' யார் என்பதைப் புரிந்துகொள்வது மிக அவசியம். பரிமேலழகர் உரையின்படிஇ "சிற்றினம்" என்பது அறிவைத் திரித்துஇ இம்மைக்கும் மறுமைக்கும் பலன் இல்லாமல் செய்பவர்களைக் குறிக்கும். இது வெறும் தனிப்பட்ட நட்பு சார்ந்தது மட்டுமல்லஇ ஒரு நாட்டின் கொள்கை முடிவுகளை எடுக்கும் ஆலோசனைக் குழுவில் இடம்பெறும் 'தவறான நபர்களை' இது குறிக்கிறது.
இனி சிற்றினம் சேராமை அதிகாரத்தில் திருவள்ளுவர் என்ன குறிப்பிட்டுள்ளார் என்று காணலாம். 
பொதுவாகவே, பயமறியான் என்று தன்னைச் சொல்லிக் கொள்வதை ஒவ்வொருவரும் விரும்புவதுண்டு. ஆனால், திருவள்ளுவர் அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் ‘அஞ்சுவ தஞ்சாமை பேதைமை” என்கிறார். ஏனில், அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுபவரே அறிவாளிகளின் தொழில் என்கிறார். உதாரணமாக ஒரு பெருவெள்ளம் இப்போது சூழப் போகிறது, ஆதலால், பல மக்கள் மடியப் போகிறார்கள் என்ற நிலை வரும் போது, அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது நல்ல அரசு அல்ல, தம் மக்களை பெரு வெள்ளத்தில் இருந்து எவ்வாறு காப்பது என்று யோசிப்பதே சிறந்த ஆட்சியாளருக்கு அழகு, அப்படியெல்லாம் அந்த பெருவெள்ளத்திற்கு அஞ்ச வேண்டும், அப்போதுதான் மக்களை சரியான நேரத்தில் காப்பாற்ற முடியும் என்ற பதட்டமும் அதை நோக்கிய துரித செயல்பாடுகளையும் அரசால் செய்ய இயலும். இந்த நிலை அவசியம் வேண்டும். 
இதனை எதற்காகச் சொல்கிறேன் என்றால், ஒரு நல்ல ஆட்சியாளர் தன்னுடன் மேன்மையான ஆட்களையே வைத்திருக்க வேண்டும், சிறுமை எண்ணங்களும் வன்மமும் கொண்ட ஆட்களை வைத்திருந்தால் அவர்களால் அவ்வரசுக்கும் மக்களுக்கும் தீங்கு தான் ஏற்படும். 
முதல் குறளில், 
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் 
சுற்றமாச் சூழ்ந்து விடும்- 451 என்கிறார். 
மேலே நாம் சொன்ன உதாரணத்தில் தேவையானவற்றிற்கு அஞ்ச வேண்டும் என்று பார்த்தோம். இக்குறளில், திருவள்ளுவர், ‘பெரியோர்கள் சிற்றினத்தைக் கண்டால் அஞ்சி ஒதுங்குவர் ஆனால், சிறியார்களோ அவர்களைத் தம் இனமாகக் கருதி அவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள்” என்கிறார். இதில் சிற்றினத்தைக் கண்டு அஞ்சி ஒதுங்கி நிற்றல் பெரியவர்களுக்கு அழகு என்று வரையறுக்கிறார். அதாவது, அதுதான் அரசியல் முதிர்ச்சி என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.  
நாம் முன்னரே குறிப்பிட்டுள்ளபடி, ஒரு குழந்தை இயற்கையிலே நல்ல குழந்தையாக இருந்தாலும் பல காரணிகள் அதனை மாற்றிவிடும் என்பது போல, ஆட்சியாளரும் என்னதான் நல்லவராக இருந்தாலும், அவர் எந்தக் கூட்டத்தோடு இருக்கிறாரோ, அதற்கேற்றாற்பால் அவர் தன்மையையும் மாறிவிடும் என்பதனை பின்வரும் குறளில் விளக்குகிறார்.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு -452
அதாவது, நீரானது தான் நிலத்தில் ஓடி வரும் போது, எந்த மண் பகுதியைக் கடக்கிறதோ, அதற்கேற்றார்போல அதனுடைய நிறமும் அதன் தன்மையும் மாறுவடும். அதுபோல மக்களுடைய அறிவும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப் படியே மாறும் என்று குறிப்பிடுகிறார் ஐயன். 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 28 January 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-106:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-106:
 திருக்குறளில் அரசியல்: 
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம், அரசியலில் பெரியாரை துணைக்கோடல் என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம். 

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அடிப்பதற்கு முதன்மைக் காரணம் குழந்தையை வழிநடத்துவதற்கே இருக்கும். அதுதான் உண்மையான பாசம், அதில் தன் குழந்தையைக் குறித்து யாரும் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். வலிக்க வலிக்க சொல்பவர்களே நம் மீது அக்கறை உடையவர்களாக இருப்பார். இனிக்க இனிக்க சொல்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று. அதின் அர்த்தம் கடினமாக இருந்தாலும் நல்லதை மட்டுமே சொல்வர் நல்லவர்கள் என்பதுதான். நமது ஐயனும் இதனைத் தான் சொல்கின்றார் பின்வரும் குறளில்
இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர் - 447
அதாவது, இடித்துரைத்துக் கூறி திருத்தும் தன்மையைக் கொண்ட பெரியவரின் துணையைக் கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு? என்கிறார். 
அடுத்தக் குறளில், ஒருவன் செல்லமாகவே வளர்க்கப்பட்டான் என்று வைத்துக் கொள்வோம், அவனுக்கு சிறுவயதில் இருந்தே அவர்களுடைய பெற்றோர் அவனை; கண் இமையைப் போலப் பார்த்துக்கொண்டார்கள். அவன் சிறுவர்களுடன் விளையாடினான் என்றால், மற்றொரு சிறுவன் அவனை அடித்தாலோ திட்டினாலோ இவர்கள் போய் இவர்களுடைய மகனுக்காக அவர்களுடன் சண்டையிடுவார்கள் இப்படி அச்சிறுவனை அடைகாத்து அடைகாத்து வளர்த்ததின் விளைவு, அச்சிறுவன் எங்கு சென்றாலும் தன் பெற்றோரின் பாதுகாப்பைத் தேடுகிறான். கல்லூhயிpல் விடுதியில் சேர்க்க வேண்டும் என்றால், ஒருநாள் கூட அவனால் விடுதியில் தங்க இயலவில்லை. இவனுக்காக அவர்கள் வீடு வாடகைக்கு எடுத்து கல்லூரியின் அருகிலேயே தங்குகிறார்கள். ஆனால், எவ்வளவு நாள் அவனுடன் கூடவே பயணிக்க முடியும்? சில நாட்களில் அவனுடைய தந்தை இறந்து விடுகிறார். ஆதனைத் தொடர்ந்து தாயும் இறந்து விடுகிறார். இப்போது, இவன் தனியாக இருக்கின்றான். இவனுடைய பெற்றோர்கள் இவனுக்கான தங்களுடைய சொந்த பந்தங்கள் எல்லோரையும் பகைத்துக் கொண்டார்கள். இவனால், எதையும் செய்ய இயலவில்லை, சமைக்கத் தெரியவில்லை, துணி துவைக்கத் தெரியவில்லை, இவனை ஏதாவது ஒரு சக மாணவன் நையாண்டி செய்தால், அதனை எதிர்த்துப் பேச அவனால் இயலவில்லை, படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. முடிவில் அவன் தற்கொலை செய்து கொள்கிறான். ஆகவே, எந்த பெற்றோர் தங்களுடைய திருத்துவதற்கு கோலை உயர்த்தவில்லையே அந்தக் குழந்தை வெளியுலகத்தால் திருத்தப்படும் சூழல் வரும், சிலர் தங்களுக்குத் தாங்களே குழி வெட்டிக் கொள்ளும் நிலை ஏற்படலாம். இது ஒரு குழந்தை மட்டும் வைத்துக் கருதாமல், ஆட்சியாளர்களுக்கும் இதனைப் பொருத்திப் பார்க்கலாம். மிகப் பெரிய வெற்றிகளையும் திறம்பட மக்கள் நலத்திட்டங்களையும் செய்யும் ஆட்சியாளர்கள் பெரும்பாலும் பெரியோரின் ஆலோசனையைக் கேட்கின்றனர். அவர்களுடைய கடிந்தலை மதிக்கிறார்கள். இதனை பின்வரும் குறளில் விளக்குகிறார். 
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் - 448
கடிந்து அறிவுரை சொல்லும் பெரியோரின் துணை இல்லாத காவலற்ற அரசனானவன், தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லாவிட்டாலும் தானே கெடுவர் என்கிறார், திருவள்ளுவர். அடுத்தக் குறளில், வாணிகத்தோடு தொடர்பு படுத்தி விளக்குகிறார். அதாவது எந்த ஒரு  வணிகத்திற்கும் முதலீடு அவசியம், எந்த ஒரு முதலீடும் இன்றி வணிகம் செய்ய இயலாது. இதனை அரசியலோடு ஒப்பிட்டு எழுதியுள்ளார். 
முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ்
சார்பிலார்க்கு இல்லை நிலை – 449 என்கிறார். 
அதாவது, வணிகத்தில் முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் இலாபத்தால் எந்தப் பலனும் இல்லை, அது போன்று தம்முடைய அரசைத் தாங்கும் பெரியோர்கள் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை என்கிறார். 
இதுவரையிலும் பெரியார் துணையோடு சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகளையும், இல்லையென்றால் ஆட்சியாளரின் நிலையினையும் பார்த்தோம். இறுதியில் நல்லவர்கள் நட்பை இழந்தால் என்ன ஆகும்?
ஒருவர் சிறுவயது முதலே மிகவும் நெருங்கிப் பழகிய தோழன், தனக்கு எதுவென்றாலும் முன்னால் வந்து தட்டிக் கேட்பவன், படிப்பில் நிறைய மதிப்பெண் எடுக்க உதவியவன் என்று பல நிலைகளில் இருப்பவனிடம் சிறு தொகை கடன் கேட்டான் என்பதற்காக நட்பினை இழந்து நிற்கும் போது, காதலில் தோல்வியுற்றபோது தன்னை தேற்றுவதற்கு நண்பன் இல்லையே என்று ஏற்படும் வலி எவ்வளவு கொடியது என்று தனது வாழ்வில் முக்கியமான நபர்களில் இருந்து தொடர்பை விளக்கியவர்கள் உணர்வர். குறிப்பாக திருமணத்திற்குப் பிறகு பெற்றோர் தனியாக வாழ்வதை காண சகியாத ஒவ்வொருவருக்கும் இதன் வலியை உணர்ந்திருப்பர். அதனைப் போன்றதுதான் அரசியலில் நல்லவர்களின் நட்பை இழப்பதுவும், தன்னைச் சுற்றி தனக்குக் குழி பறிப்பவர்களே சிரித்துக் கொண்டு இருக்கும் போது ஒருவருடைய மனநிலை எப்படி இருக்கும். இதோ திருவள்ளுவர் சொல்வதைப் பாருங்கள். 
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல் -450 என்கிறார். 
பலரோடும் பகைத்துக் கொள்வதை விட, நல்லோருடன் கொண்ட தொடர்பைக் கைவிடுதல், பல மடங்கு தீமை உடையதாகும் என்கிறார் திருவள்ளுவர். 
தொடர்ந்து பார்ப்போம்...


குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Tuesday, 20 January 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-105: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-105: திருக்குறளில் அரசியல்: 
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம், அரசியலில் பெரியாரை துணைக்கோடல் என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம். 
தலைசிறந்த ஆட்சியாளர்கள் தன்னுடைய அவையில் எப்போது அறிவு மிகுந்தவர்களை தன்னுடன் உடன் வைத்திருப்பதை நாம் அறியலாம். அவரவருக்கு உரிய மரியாதையையும் கொடுத்து ஆட்சியை எந்தவித சிரமமும் இன்றி நடத்தி வருவதைப் பார்த்திருக்கின்றோம். 
ஊதாரணமாக, ஆட்சியாளருக்கு நிர்வாகத்தில் மிகச் சிறந்தவர் ஆனால், நிதி மேலாண்மையில் இல்லை என்றால், நிதி மேலாண்மையில் திறம்பட கற்றுத் தேர்ந்து சிறப்பாகக் கையாளத் தெரிந்தவரை பதவியில் அமர்த்தி அழகு பார்க்கும் போது, நாட்டின் நிதி நிலைமை உயர்வதற்கும், அரசின் செலவினங்களை திறம்பட கையாண்டு, வலுவான நிலையில் நாட்டினை வைத்திருக்க உதவும். இன்றும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்கள் இருப்பதைக் காணலாம். அவர்கள் திறன் மிகுந்தவராக இருப்பின் ஆட்சியாளருக்கு தான் மக்களுக்கு நினைத்ததை செய்வது மிக எளிதான ஒன்றாக மாறிவிடும்;. திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை -444
அதாவது, அறிவு ஆற்றல் போன்றவற்றில் தம்மை காட்டிலும் சிறந்த வல்லமைப் படைத்த அறிவுடையோரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, மிகப் பெரிய வலிமையாக அமையும் என்கிறார். 
தொலைநோக்குப் பார்வை உடையவர்கள் நாட்டிற்கு மிக அவசியானவர்கள் ஆவார்கள். அவர்களைப் போன்ற சிந்தனையாளர்களால்; தான் அரசால் தொலைநோக்குத் திட்டங்கள் 5 ஆண்டுகள் திட்டம், 10 ஆண்டுகள் திட்டம் என வகுக்க இயலுகிறது. இதையெல்லாம் முன்பே கணித்த திருவள்ளுவர் நிர்வாக மேலாண்மையில் தொலைநோக்குப் பார்வையுடையவர்கள்எப்போதும் ஆட்சியாளர்கள் தங்களிடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அப்படிப்பட்ட ஆட்கள் இருக்கும் போதுதான் பஞ்ச காலங்களையும் பருவ காலங்களையும் வானியல், புவியல் நிகழ்வுகளையும், இராணுவ நிலைகளையும், உலக நோக்கில் பொருளாதார மாற்றங்களையும் முன்கூட்டியே உணர்ந்து நாட்டினை பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். நமது ஐயன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் -445
கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளருக்கு நன்மை பயக்கும் என்று குறிப்பிடுகிறார். 
எப்போதும் வரப்போவதை முன் கூட்டியே அறிந்து, அதற்கேற்ப திட்டமிட்டால், வெற்றியினை எளிதாக அடையலாம், தஞ்சாவூர் பெரிய கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பிரமிடுகள் என்பன போன்ற மிகப் பெரிய கட்டிடங்களை உதாரணமாகக் கொண்டோம் என்றால் அதன் துல்லிய வடிவமைப்பு, எவ்வளவு திட்டமிடல்களை அந்த காலத்திலேயே கொண்டிருந்தனர் என்பதனை உணரலாம். உலகிற்கே இன்றும் ஆச்சரியமாய் விளங்கும் கல்லணையைப் பார்த்தோம் என்றால,; 2500 வருடங்களுக்கு முன்பே எவ்வளவு பெரிய திட்டமிடல்? மிகப் பெரிய கோயில்கள், கோட்டைகள் எதிரிகளிடம் இருந்து காக்கும் அரண்களாக அந்தக் காலத்தில் இருந்தன. இதனையே அடுத்தக் குறளில், 
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் 
செற்றார் செயக்கிடந்த தில் -446 என்றுக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். அதாவது, அறிவும் ஆற்றலும் கொண்ட ஒருவன் தகுதி மிக்க பெரியோரை நட்பாகக் கொண்ட அவர்காட்டும் வழியில் நடந்தால் அவரை பகைவரால் ஒன்றும் செய்ய இயலாது என்கிறார்.
தொடர்ந்து பார்ப்போம்...


குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 14 January 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-104: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-104:
திருக்குறளில் அரசியல்: 
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம், அரசியலில் குற்றங்கூறாமை என்ற அதிகாரத்தில் இருந்து அரசியல் கருத்துக்களை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் பெரியாரை துணைக்கோடல் என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனைப் பார்ப்போம். 
இதில் தலைப்பினை வைத்து 2000 ஆண்டுகளுக்கு, நமது தெய்வப்புலவர்,  முன்பே பெரியார் என்று ஒருவர் வருவார் அவர் தமிழ்நாட்டில் பல சீர்;;திருத்தங்களைச் செய்வார். அவரை துணையாகக் கொள்ளுங்கள் என்று தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார் என்று எண்ணிவிட வேண்டாம். ஆனால், தன்னுடைய கருத்துக்களை உள்வாங்கியவர்கள் அனைவரும் பெரியாராக உயர்ந்திடுவர் என்பதனை நிச்சயம் தீர்க்கமாக உணர்ந்திருப்பார். இல்லையென்றால், இதோ இன்று போகிப் பண்டிகை, பல இலக்கியங்கள், இலக்கண நூல்கள், தமிழ் பாரம்பரியங்கள், மருத்துவம் என்று பலவும் ஓலைச்சுவடியில் இரகசியமாகவும் தொடர் தொடராக குடும்பம் குடும்பமாக கடத்தப்பட்டும் வந்த பல ஓலைச் சுவடிகள் தீயில் கருகின. ஆயினும், அதையெல்லாம், கடந்து, எங்கோ ஓலைச் சுவடியில் பாதுகாக்கப்பட்டு, கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி என்று பல இலக்கியங்களிலும் ஆங்காங்கே திருக்குறள் குறிப்புகள் எடுத்தாளப்பட்டும் கடந்து வந்திருந்தது என்றால், எவ்வளவு பெரிய பொக்கிஷமாக மக்கள் இதனை உணர்ந்திருப்பர். தமிழ் ஆர்வலர்கள் கடந்த 100 ஆண்டுகாலத்தில் இதற்காக தீவிரமாக உழைத்ததால், இன்று பல வடிவங்களில் நாம் திருக்குறளை அனுபவதித்து மகிழ்கின்றோம். இவையெல்லாம் நடந்ததற்கு சரியான பெரியார்கள் தான் காரணம். 
ஆம், அவர் பெரியார் என்றுக் குறிப்பிடுவது. வெறும் வயதி;ல் மூத்தவர்கள மட்டும் குறிப்பிடுவதில்லை, மாறாக, அறிவு, ஒழுக்கம், அனுபவம் மற்றும் துணிச்சல் மிக்க ஆலோசகர்களைக் குறிக்கிறது. ஒரு தலைவன் தன் அதிகாரத்தைத் தக்க வைக்கவும், மக்கள் நலன் காக்கவும் இத்தகையோரைத் துணையாகக் கொள்ள வேண்டும் என்கிறார். 
சரி, இனி திருக்குறள் வாயிலாக சென்று பார்ப்போம்..
முதல் குறளில்,
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை 
திறனறிந்து தேர்ந்து கொளல் -441 என்கிறார். 
அறத்தினை திறம்பட நுண்மையாக அறிந்தவராக முதிர்ந்த அறிவுடையவரின் நட்பினை கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து அவரைத் துணையாகக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர். அவ்வாறு நட்பு கொள்வது என்பது வெறுமனே நட்புடன் இருப்பதில்லை, அது ஒரு மிகப் பெரிய அரசியல் முதலீடு ஆகும். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மமதை இல்லாமல், திறனுடைய பெரியோரின் அறிவுரையை ஏற்பது, தக்க சமயத்தில் உதவும். 
ஏன் பெரியோரைத் துணையாகக் கொள்ள வேண்டும்? அவரால் ஆலோசனை தவிர வேறு என்ன முக்கியமாகச் சொல்ல முடியும்? அனுபவம் எப்படி அரசியலுக்கு உதவும் என்று நீங்கள் ஒரு வேளை நினைக்கலாம். அடுத்தக் குறளில் சொல்கிறார் பாருங்கள்.
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல் -442 என்கிறார். இதனை விளக்கும் முன், ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். நமக்கானவர் யார்? ஏன்ற கேள்விக்குப் பதில், நமது கடினமான காலங்களில் நம்முடன் யார் துணையாக நமக்கு ஆதரவாக இருக்கிறார்களோ...அவர்களே நமக்கானவர்கள் ஆவார். வசதி வாய்ப்புகள் மற்றும் ஆடம்பரம் இருக்கும் போது நம்மோடு கூடி மகிழ்பவர்கள் நமக்கானவர்கள் இல்லை. அதே போல் தான், பல பெரியோர்கள் அந்தக் காலத்தில் அரசர்களாக இருந்தாலும் சரி, இந்தக் காலத்தில் ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி, எத்தகைய துன்பம் நேரினும் ஆட்சியாளர்களோடு தோளோடு தோளாக நிற்கின்றனர். சிறைக்கும் சென்றுள்ளனர். இப்படிப்பட்டவர்கள் பொறுப்பில் இருக்கும் போது பொறுப்புடனும் செயல்படுகின்றனர். இவர்கள் ஆட்சியாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய அரண் ஆகும். 
இது போன்ற பெரியவர்களையே, திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது, ‘வந்த துன்பங்களை அறிந்து அதனைப் போக்கி, மேலும், துன்பங்கள் வராமல் காக்கின்ற ஆற்றல் மிக்க பெரியவர்களைப் போற்றித் துணையாகக் கொள்ள வேண்டும் என்கிறார். இவர்கள் 
எது ஒருவனுக்கு வலிமை? மல்யுத்தத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் சண்டை செய்வதா? தன்னை விட எளியவனை தொடர்ந்து ஆளுமை செலுத்தி நசுக்குவதா? 
உடல் வலிமை, மன வலிமை ஆகியவை ஒரு ஆட்சியாளருக்கு முக்கியமான அம்சம் ஆனால், அதனிலும் வலிமை என்பது என்னவென்று திருவள்ளுவர் சொல்கிறார் என்பதைப் பார்ப்போமா?
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் 
பேணித் தமராக் கொளல் -443 என்கிறார். 
அதாவது, துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும் என்கிறார். இத்தகையோரைப் பெறுவது எல்லா வலிமைகளையும் விட ஒரு ஆட்சியாளருக்கு மிகப் பெரிய வலிமையாகும். 

Saturday, 10 January 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-103: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-103:
திருக்குறளில் அரசியல்: 
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம், அரசியலில் குற்றங்கூறாமை என்ற அதிகாரத்தின் முற்பகுதியை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதன் பிற்பகுதியைப் பார்ப்போம். 
நாம் சரித்திர நாவல்கள் அல்லது மிகப் பெரிய ஆளுமைகளைப் பற்றி படித்திருப்போமானால் அவர்களின் குறிப்பிடத்தக்க குணாதிசயத்தையும் பார்த்திருப்போம். அது என்னவென்றால், சுய விழிப்புணர்வு (Self Awareness) சுயத்தைத் தெரிந்திருத்தல், அப்படி இருக்கும் போதுதான் தன்னைப் பற்றிய மற்றவர்களின் விமர்சனம் மற்றும் பார்வைகளை சீர்தூக்கி நல்லது எது? அல்லது எது? என்று ஆராய முடியும். அப்படித் தன்னை முழுமையாக அறிந்தவரால் மற்றவரின் உணர்வுகளையும் நடவடிக்கைகளையும் எளிதில் புரிந்து கொள்ள இயலும். இந்த உண்மையினை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஐயன் எடுத்துரைத்துள்ளார். 
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் 
என்குற்ற மாகும் இறைக்கு -436 என்கிறார். 
முதலில் தன்னுடைய குற்றத்தை நீக்கிப் பிறகு, பிறருடைய குற்றத்தை ஆராயவல்ல ஆற்றல் மிக்க அரசனுக்கு எந்த குற்றமும் வராது என்கிறார் திருவள்ளுவர். 
சவேரியார் என்ற திருத்தூதர் ஒருமுறை இப்படிச் சொல்கின்றதாக ஒரு தேவாலயத்தில் பார்த்தேன் ‘ஒருவன் உலகெல்லாம் சுற்றித் திரிந்தாலும் தன் ஆன்மாவை இழந்தால் என்ன பயன்?” என்கிறார். அவர் கடவுள் மீது நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்று அப்படித் தன் கருத்தினை வெளிப்படுத்துகிறார். நான் என் நடைமுறையைப் பார்த்திருக்கிறேன். சுpலர் பெரும் பணக்காரர்களாக இருப்பர், மக்களை வஞ்சித்தும், அதிகாரத்தையும் , ஆக்கிரமிப்பையும் பயன்படுத்தி வறியவர்களை துன்புறுத்தியும் சொத்து சேர்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லாது தான் சேர்த்த செல்வத்தினை அனுபவிக்க மனமும் இல்லாமல் வழியும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த ஆய்வில் உயர் அதிகாரி ஒருவர், தன்னுடைய கழிப்பறையில் பணத்தை மறைத்து வைத்துக் கட்டியுள்ளது பெரிய அதிர்ச்சி அளித்தது, அப்படி அந்தப் பணத்தை கழிப்பறையில் மறைத்து வைப்பதால் யாருக்கு என்ன பலன்? இப்படித்தான் சில நாட்களுக்கு முன்னர் மிக உயர்பாக மதிக்கத் தக்கப் பொறுப்பில் உள்ள நீதிபதி அவர்கள் பணத்தினை கட்டு; கட்டுகளாக எரிhத்துள்ளர். 
இதனையே முன்பே உணர்த்தியிருக்கிறார் நமது செந்நாப்போதர்...
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும் -437 என்கிறார். அதாவது, செல்வத்தால் செய்யத்தகுந்த நன்மைகளைச் செய்யாமல், பொருள் மீது கொண்ட பற்றினால், சேர்த்து வைப்பவனுடைய செல்வமானது யாருக்கும் பலனிற்றி வீணே கெட்டு அழியும். 
மேற்கூறியவாறு யாருக்கும் பயன்படாமல் செல்வத்தை வீணாக்குதல் தனிப் பெருங்குற்றம் என்று பின்வரும் குறளில் குறிப்பிடடுகிறார்
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் 
எண்ணப் படுவதொன் றன்று -438
எல்லாக் குற்றங்களையும் விட மிகப் பெரிய குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் ஆர்வங்கொண்டு மற்றவர்களுக்கு ஈயாமல் வாழ்வதுதான் என்கிறார். 
முந்தைய செயலை விடக் கொடியது எது என்பதனை அடுத்தக் குறளில் வழங்குகிறார் திருவள்ளுவர். 
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை -439
எப்போதும் தன்னையே மிக உயர்வாக எண்ணி வியந்து அகங்காரம் கொண்டு பேசக் கூடாது. நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்யக் கூடாது என்கிறார். 
ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளபடி எமோஷனல் இன்டலிஜென்ஸ் ஒரு நபருக்கு குறிப்பாகத் தலைவராக இருப்பவருக்கு அவசியம் என்கிறார் திருவள்ளுவர் அடுத்தக் குறளில். 
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல் -440
ஏவர் ஒருவர் தன்னுடைய விருப்பத்தைப் பிறர் அறியாத வகையில் காத்து வருகிறாரோ நடைமுறைப்படுத்துகிறாரோ அவரை அழிக்க எண்ணுபவரின் எண்ணம் பலிக்காமல் போய்விடும் என்கிறார். 
தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க
தொடர்ந்து பார்ப்போம்...


குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு