Monday, 24 June 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 24


திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 24
திருவள்ளுவர் இல்லற வாழ்வில் இருப்பவர்களுக்கு என்னவகையான ஆலோசனைகளை வழங்குகிறார்?

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று -49 என்கிறார். அதாவது அறம் என்று சான்றோர்களால் சொல்லப்பட்டது என்னவென்றால் இல்வாழ்க்கை தான்! அதுவும் பிறரால் பழிக்கப்படாலம் இருக்கிறதென்றால் இல்வாழ்க்கை சிறப்பாகும். 
இல்லறவாழ்க்கையில் பயன் நிறைந்த வாழ்வு என்பது யாது?
கணவன் மனைவியருக்குள் அன்புப் பிணைப்பும், அறநெறிப்படியே நிகழ்ந்து வருவதும் உடையதாக இருக்குமானால், இல்லற வாழ்க்கையில் அதுவே பண்பும் பயனும் நிறைந்த வாழ்வாகும் என்பதனை பின்வரும் குறளில் விளக்குகிறார். 
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது -45
கணவனுக்கான பேறு என்பது யாது?
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை -53
நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவளாக மனைவி அமைந்துவிட்டால் ஒருவனும் அதைவிட இல்லையென்று என்னவற்றை சொல்ல முடியும்? அப்படி அவனுக்கு மனைவி அமையாவிட்டால் அவனிடம் இருப்பததுதான் என்ன? என்கிறாள். நல்ல குணமும் நல்ல செயல்களும் உடைய மனைவியே ஒருவனுக்கு உண்மையான சொத்து என்கிறார் அய்யன். 
மேலும், மனைவிக்கு அவர் தரும் வரையறை என்ன?
தற்காத்துக் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் -56
உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி. 
கணவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்?
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன் -147 என்கிறார். அதாவது பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான் என்கிறார். கூடுதலாக,
பிறன் மனைவியை மனதுக்குள் எண்ணாத நிலையினை பேராண்மை என்கிறார். அதாவது பேராண்மை அறம் என்கிறார் அது மட்டுமல்லாமல், அதுதான் சான்றோருக்கு நிறைவான ஒழுக்கமுமாக இருக்கிறது என்பதைக் பின்வரும் குறளில் ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார். 

ஒரு தந்தை தன்னுடைய பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டியது என்ன?
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் -67 என்ற குறளில் தந்தை தன் மக்களுக்குச் செய்ய வேண்டிய நல்லுதவி என்பது அவர்களை அறிஞர்கள் கூடியுள்ள அவையில் புகழுடன் சிறக்குமாறு அவர்களை உருவாக்குதலே ஆகும் என்கிறார். 
அப்படியானால் பிள்ளை செய்ய வேண்டியது என்ன?
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல் -70 என்று கூறுகிறார். ‘ஆகா! இவனைப் பிள்ளையாக பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும் பேறு” என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு ஆகும் என்கிறார்.
அதே போன்று தாயானவள் எப்போது மகிழ்வார்?
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய் -69
தன்மகளை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள். 
இன்னும் பார்ப்போம். 


No comments:

Post a Comment