திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 21
திருக்குறள் நேரடியாக மேலாண்மைக்கான நூலாக இல்லையெனினும் அய்யன் திருவள்ளுவர் மேலாண்மைப் பகுதிகளை தொடாமல் கடந்து செல்லவில்லை. மேலாண்மை பற்றி பல இடங்களில் அவருடைய குறிப்புகள் காணப்படினும், நிறுவனத்திற்கான ஒரு சில கருத்துக்களை மட்டும் நான் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
1. எத்தகையவரைப் பணியில் அமர்த்தலாம்:
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும் -501 என்கிறார் அய்யன் வள்ளுவர். அதாவது எவன் ஒருவன் அற வழியில் உறுதியானவனாகவும் பொருள் வகையில் நாணயமானவனாகவும் இன்பம் தேடி மயங்காதவனாகவும் தன்னுயிர் குறித்து அஞ்சாதவனாகவும் இருக்கிறானோ அவனையே ஆய்ந்தறிந்து பணியில் அமர்த்த வேண்டும் என்கிறார். மேலும்,
தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்-510 என்கிறார். அதாவது ஒருவரை நன்கு ஆராயாமல் அவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும் அல்லது ஆய்வு செய்து ஏற்றுக் கொண்ட பிறகு அவரை நம்பாமல் இருப்பது இரண்டுமே தீராதத் துன்பத்தை விளைவிக்கும் என்கிறார் அய்யன் திருவள்ளுவர்.
2. யாருக்கு என்ன பணி கொடுப்பது?
மேற்கூறிய கேள்விக்கு நமக்கு நன்கு பரிச்சயமானக் குறளே பதிலளிக்கிறது.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் - 517
எந்த ஒரு செயலை எந்தக் கருவியைக் கொண்டு எவரால் முடிக்க வல்லவர் என்பதை தெளிவாக உணர்ந்து அந்தச் செயலை அவரிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்கிறார். இரண்டடியில் எத்தனை ஆழமிக்க கருத்துக்கள்!
மேலும், செயல்புரிபவன் தன்மை, செயலின் தன்மை, செயல் புரியும் காலம் ஆகியவற்றை ஆராய்ந்து பணியைக் கொடுக்க வேண்டும் என்கிறார்.
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்-516
நிர்வாகத்தில் சிலர் செய்யும் தவறானது ஒருவர் நல்லவர் என்ற எண்ணம் கொண்டதனால், அவரிடமே பணியினை ஒப்படைத்து சிக்கலில் மாட்டுவதுண்டு. அவர்களுக்கும் வள்ளுவர் கூறுவதென்னவென்றால்
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று -515
வினையில் நுணுக்கம் அறிந்து அதற்கேற்பச் செயல்படுகின்றவனிடமே பணியைத் தருக. மாறாக நல்லவன் , இனியவன் என்பதற்காகப் பொறுப்பைத் தரலாகாது என்கிறார்.
3. கண்காணித்தல்:
என்னதான் திறமைசாலியாக இருந்தாலும், அனைவரும் மனிதர்கள் தான், எப்போதும் ஒருமாதிரியான நிலைத்தத் தன்மையுடன் இருப்பது கடினம். அப்படி இருக்கையில் ஒரு நிறுவனத்தின் பணியினை குறிப்பிட்ட காலத்தில் முடித்துக் கொடுக்க வேண்டிய கடமையில் இருப்பவர்களும் நிறுவனர்களும் கீழ்வரும் குறளினை எப்போது ஞாபகத்தில் வைத்திருப்பது நலம்.
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையால்
வேறாகும் மாந்தர் பலர் - 514
அதாவது, எல்லா வகையிலும் ஆய்ந்து தெளிவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் செயலினைச் செய்யும் போது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர் என்று குறிப்பிடுகிறார். ஆதாலால், எவரையும் முழுமையாக நம்பி கண்மூடித் தனமாக இருக்காமல் கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
4. நடுநிலை வகித்தல்:
மேலாண்மையில் முக்கியமான ஒன்று நடுநிலை வகித்தல். இதனால், அனைத்து ஊழியர்களின் நன்மதிப்பைப் பெற முடியும். மற்றும் தயங்காமல் தங்களுடைய கருத்தைத் தெரிவிக்க அவர்களுக்கு ஊக்கத்தையும் அளிக்கும். இவ்வாறு நடுநிலை வகிக்கும் தன்மையினை
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு-423
எது அறிவு? கருத்தைக் கூறுபவர் நண்பரா, பகைவரா, அயலரா எனப் பாராமல், கருத்தின் மெய்ம்மையை மட்டுமே ஆராய்ந்து காண்பது அறிவு என்று அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
5. செயல் திட்டம்:
எந்த ஒரு செயலிற்கு முறையான திட்டமிடல் அவசியம், இதனை மேலாண்மையில் இலக்கு நிர்ணயித்தல் என்று குறிப்பிடலாம். ஒரு செயலினை நிறுவனத்தில் செய்யத் திட்டமிடும் போது அதில் ஏற்படும் விளைவுகள் குறித்தும், சாதக பாதகங்கள் என எல்லாவற்றையும் அறிந்து அதிலிருந்து கிடைக்கக் கூடிய நன்மை என்னவென்று உணர்ந்து திட்டமிடுதல் நல்லது என்பதனை வள்ளுவர்,
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் - 461 என்று குறிப்பிடுகிறார். அதாவது ஒரு செயல்புரிவதால் இழக்கப் போவது யாது, பெறப் போவது யாது, அதன்பின் விளையும் ஆதாயம் யாது எனச் சிந்தித்துச் செயலைத் தொடங்குதல் வேண்டும் என்று கூறுகிறார். செயலைத் தொடங்கிய பிறகு அதனை விட்டு விடுவோமா என்று ஆராயமல் செய்யத் தொடங்கினால் அது இழுக்கு என்று இடித்துரைக்கிறார் அய்யன் திருவள்ளுவர். அதாவது செயலைத் தொடங்கிய பிறகு தடுமாறக்கூடாது என்பதை வலியுறுத்துகிறார்.
எண்ணி;த் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு – 467
ஆழ்ந்து ஆராய்ந்த பின ஒரு செயலை ஆற்ற முனைய வேண்டும், செயலில் இறங்கிய பிறகு பின் சிந்தி;ப்போம் என்பது முரணாக அமையும் என்கிறார்.
மேலாண்மை எனும் போது பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன தலைமைப்பண்பு, குழச் செயல்பாடு, நேர மேலாண்மை என்று கூறிக்கொண்டே போகலாம். அவற்றில் சிலவற்றையே தற்போது அளித்துள்ளேன். தொடர்ந்து திருவள்ளுவர் அவர்கள் மேலாண்மைக் கருத்துக்கள் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்.
No comments:
Post a Comment