Monday, 3 June 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 20

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 20
வேளாண் விஞ்ஞானி திருவள்ளுவர்:
‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம”;
என்ற ஒத்தை வாக்கியத்தில் அய்யன் திருவள்ளுவர் எந்தளவுக்கு வேளாண்மைக்கு முக்கியத்துவம் தருகிறார் என்பதை உணரலாம். 
ஒருவர் எந்த வகையானத் தொழிலினை செய்து கொண்டிருந்தாலும், எவ்வளவு பணம் இருந்தாலும், எந்த வகையான செல்வாக்கில் இருந்தாலும், எந்த வகையான பதவியினை வகித்தாலும் அவருடைய பசியை ஆற்றுவது வேளாண் தொழில் தான். ஆதலால்தான் சுழன்று கொண்டிருக்கும் உலகமானது ஏர் பின்பு செல்கிறது என்று குறிப்பிடுகிறார். ஆதலால் தான் வேளாண் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எந்த சூழலிலும் அதனை கைவிடாமல் எவ்வளவு வருத்தம் இருந்தாலும்,  உழவுத் தொழிலினை கைவிடாமல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். 

உழவரை உயர்த்தும் திருவள்ளுவர்:
உழவு தொழில் செய்யும் வேளாண் குடி மக்கள் எந்தச் சூழலிலும் தாழ்ந்து படக் கூடாது, அவர்கள் சிறுமைப்படுத்திவிடக் கூடாது என்பதை உள்ளாற உணர்ந்த திருவள்ளுவர்,
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் 
தொழுதுண்டு பின்செல் பவர் -1033
அதாவது, மற்றவர்கள் உணவிற்காகவும் சேர்த்து உழைத்து வாழும் உழவரே வாழும் உரிமையுடையவர் அல்லது தலையானவர் மற்றவர்கள் எந்தத் தன்மையாயினும் (மருத்துவர்-விஞ்ஞானி- தொழிலதிபர்-துறவி...) அவர்களைத் தொழுது பின்செல்பவர்களே ஆவார் என்று வலியுறுத்துகிறார். இதில் திருவள்ளுவர் நெசவு தொழில் செய்தவர் என்ற கருதுகோள் உண்டு. அவ்வாறு இருக்கையில் உழவிற்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வாறு எழுதியிருக்கிறார் என்றால் அவர் உழவர்க்கு கொடுத்துள்ள முக்கியத்துவம் குறித்து அறிய இயலும். 
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை -1036 என்று குறிப்பிடுகிறார். அதாவது உழவர்கள் தான் செய்யும் உழவுத் தொழிலை செய்யாது தன் கை மடங்கி விடுமானால் எல்லாவற்றையும் துறந்துவிட்டேன் அல்லது கைவிட்டுவிட்டேன் என்ற துறவிகள் கூட அவருடைய அறத்தில் நிற்க இயலாது அவருடைய பசியையும் போக்கும் தன்மையவர்கள் உழவர்கள் என்கிறார். 
இதற்கு முந்தையக் குறளிலும் உழவர்கள் பிறரிடம் எப்போதும் மற்றவர்களிடம் இரந்து கேட்பதில்லை மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வுறுவர் என்கிறார். இவ்வாறு பல வழிகளில் உழவர்களே முதன்மையானவர்கள் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார். 

உழவிற்கு ஆதாரம்:
உழவு என்று தனி அதிகாரம் இயற்றியிருந்தாலும், இந்த உழவிற்கு அவசியமான மழையினைக் குறித்து அவர் சொல்லாமல் விட்டதில்லை. ஆகவே, மழையினை உணர்த்த இரண்டாம் அதிகாரத்திலேயே வான்சிறப்பு என்ற அதிகாரத்தினை இயற்றியுள்ளார். ஆதலால் மழையினை அமிழ்தம் என்று குறிப்பிடுகிறார். உலகத்தின் உயிர்களுக்கு உணவு வழங்குவதற்கு ஆதாரமாக விளங்குகிறது என்று மழையினைக் குறிப்பிடுவதோடு தானே உணவாகவும் விளங்குகிறது என்றும் குறிப்பிடுகிறார். மழை மட்டும் பெய்யாது பொய்த்துவிட்டால் நெடுங்கடல் சூழ்ந்த உலகத்தில் நாம் வாழ்ந்தாலும் பசியால் உயிர்கள் வாடும். அத்தகைய தன்மையுடையது உழவிற்கு ஆதாரமான மழை என்கிறார். மழை பொய்த்துப் போனால் உலகத்தில் வானோர்க்காகச் செய்யக் கூடிய பூசைகள் கூட நடைபெறாது ஆகவே மழையே அனைத்து நன்மைகளுக்கும் ஆதாரம் என்று குறிப்பிடுகிறார். 

எப்படி உழ வேண்டும்?:
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் 
வேண்டாது சாலப் படும் -1037
அதாவது ஒரு பலப் புழுதியானது காற்பலமாக ஆகும்படி உழுது காய விடுவோமானால் அதனிடம் செய்த பயிர் ஒரு பிடி எருவும் இன்றி நன்றாக விளையும் என்கிறார் திருவள்ளுவர். இதில் ஆழ உழுதலினை வலியுறுத்துவதோடு அதனை நன்கு காய வைத்தால் நற்பலன் கிடைக்கும் என்கிறார். 
மேற்கண்ட குறளுக்கான விளக்கத்தைக் கீழ் வருமாறு சாலமன் பாப்பையா அய்யா அவர்கள் சொல்கிறார், உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும். 
உழவுத் தொழில் செய்தாரா என்று தெரியாது, ஆனால் அதில் உள்ள ஞானத்தினை என்னவென்று சொல்வது?

உழவினை விளக்குதல்:
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு -1038 
என்ற குறளில் பலகால் உழுதாலும், எருவிடுதல் நல்லது, இவ்விரண்டும் செய்து களையும் எடுத்தப்பின் 
பயிரைக் காத்தல், நீர் பாய்ச்சுதலிலும் நல்லது என்று குறிப்பிடுகிறார். 
ஒரு குறளிலேயே பயிர்த் தொழிலின் அனைத்து முக்கிய அம்சங்களையும் விளக்கியுள்ளார் நம் அய்யன் திருவள்ளுவர். இரண்டு வரியில் இவ்வளவு எளிமையாக விளக்குவதென்பது அவருக்கு உழவினைக் குறித்துக் கொண்டுள்ள ஆழ்ந்த ஞானத்தைக் குறிக்கின்றது. 

உணர்வோடு ஒன்றிய வேளாண் தொழில்:
‘பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ்” என்று தமிழில் பழமொழி உண்டு. 
மேலும், வேளாண் தொழில் எவ்வாறு நம்முடைய உணர்வுக்குள்ளும் உறவுக்குள்ளும் ஒன்றியுள்ளது என்பதனை அழகாகக் கீழ்க்காணும் திருக்குறளில் குறிப்பிடுகிறார். 
செல்லாக் கிழவன் இருப்பின் நிலம் புலர்ந்து 
இல்லாளின் ஊடி விடும். 
அதாவது நிலத்திற்கு உரியவன், நாள்தோறும் நிலத்திற்குச் சென்றுப் பார்த்து, அதற்குச் செய்ய வேண்டியவைகளை செய்யாமல் சோம்பிக் கிடந்தால், அந்த நிலமும் அவனோடு பிணங்கிக் கொண்டு செல்லும் மனைவி போல அவனுக்குப் பயன் தராமல் போய் விடும். ஆகவே, நிலத்தின் மீது அக்கறை கொண்டு பார்க்க வேண்டும் என்று கூறுகிறார். 

சோம்பேறியைக் கண்டு நகைக்கும் நிலமகள்:
இன்றும் தமக்குச் சொந்தமாக நிலபுலன்கள் இருந்தும் அதில் தொழில் செய்யாமல் வேலை தேடியலைந்து வறுமை நிலையில் இருந்து அரசினையும், சமூகத்தையும் குறை கூறிக் கொண்டிருக்கும் பலரையும் நாம் பார்க்கிறோம். அவ்வாறு சோம்பித் திரிபவர்களைக் குறித்து,
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் 
நிலமென்னும் நல்லாள் நகும் -1040 வள்ளுவர் குறிப்பிடுகிறார். 
அதாவது நிலமகள் என்னும் நல்லப் பெண்ணானவள் தன்னிடம் ஒன்றுமே இல்லை என்று சோம்பித் திரிபவர்களைப் பார்த்தால் தனக்குள் சிரித்துக் கொள்வாள் என்று இடித்துரைக்கிறார். நிலத்தில் கால் வைத்து உழுது பணி செய்தால் நிச்சயம் நிலம் நல்லப் பலன் தரும் அதனை விடுத்து அடுத்தவரை நம்பியிருக்க வேண்டாம் என்று அய்யன் வலியுறுத்துகிறார். 
இவ்வாறு பல வழிகளில் உழவுக்கு முக்கியத்துவம் தந்த வள்ளுவரின் வழிநின்று வேளாண் தொழிலைக் காப்போம். 


நன்றி:
படங்கள்:https://www.tamilsirukathaigal.com/





No comments:

Post a Comment