திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 23
சுய முன்னேற்றச் சிந்தனைகள்:
அறன் வலியுறுத்தல்:
ஒருவன் எவ்வளவு செல்வந்தனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அறம் அற்றவனாக இருத்தல் அவசியம் என்பதனை திருவள்ளுவர் பெரும்பாலான இடங்களில் வலியுறுத்துகிறார். அறம் என்றால் என்ன என்பதற்கு விளக்கமும் அவரே வழங்குகிறார்.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் -35
பிறர் வளர்ச்சிக் கண்டு அடையும் பொறாமை, புலன்கள் வழிச்செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் என்னும் இந்த நான்கையும் விலக்கித் தொடர்ந்து செயல்படுவதே அறம் என்றழைக்கப்படும்.
ஒரு மனிதனுக்கு எது உண்மையான இன்பம்? அதற்கும் இவர்போல் எளிமையாக யாராலும் விளக்கிவிட முடியாது!
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல -39
அற வழியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவையாகும்.
உண்மையான இன்பம் ஆழமாக ஆராய்ந்தால் இவர் சொல்வது தான்!
வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொருவரும் தங்களை முன்னேற்றுவதற்கு எவ்வளவோ சுய முன்னேற்ற நூல்கள், காணொலிகள் போன்றவற்றில் படித்தும் பார்த்தும் கேட்டும் இருக்கிறோம். அவை அனைத்திலுமே வரக் கூடியவை, நாம் எந்த விடயம் செய்ய நினைத்தாலும் அதற்கு பின்வரும் குறளின் ஆலோசனைப்படி நடப்பதே சாலச் சிறந்தது.
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின் -484
தகுதியான காலத்தை ஆராய்ந்து, ஏற்ற இடத்திலும் செய்தால் உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும்.
பணித்தளங்கங்களில் எப்படி இருப்பது?
ஓவ்வொருவரும ;தங்களுடைய பணித்தளத்திலோ அல்லது சொந்த நிறுவனங்களிலோ எப்படி இருந்தால் அவர் உலகத்தையே கட்டியாளக்கூடிய வலிமையுடன் இருப்பார் என்பதை பின்வரும் குறள் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறார்.
கருமம் சிதையாமல் கண்ணோடு வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு -578
தொழிலில் கெடுதல் ஏற்படாமல், எவரிடமும் சரியான கண்ணோட்டத்துடன் நடந்து கொள்ளும் வல்லவர்களுக்கு, இவ்வுலகமே உரிமை உடையதாகும்.
கடினமான சூழல்களில் எப்படி இருக்க வேண்டும்?
கடினமான அல்லது துன்பமான சூழல்களில் எப்படி இருக்க வேண்டும் என்று பின்வரும் குறள்களில் மிக அழகாக திருவள்ளுவர் வெளிப்படுத்துகிறார். முதலாவது உறுதியான ஊக்கம் மிகுந்து இருக்க வேண்டும் என்கிறார்.
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து -624
தடைபடும் இடங்களில் எல்லாம், தளர்ந்து விடாமல் வண்டியை இழுத்துச் செல்லும் எருதைப் போன்ற ஊக்கம் உடையவனுக்கு நேரிடும் துன்பங்களே துன்பம் அடையும்.
மேலும், துன்ப காலங்களில் அதனை புன்னகையுடன் புறந்தள்ளிவிடுங்கள் என்று கூறுகிறார். தலையில் ஏற்றிக் கொண்டால் பாரமே விளையும் ஆதலால் புன்னகையுடன் நடைபோடுங்கள் என்று பின்வரும் நமக்கு நன்கு பரிட்சயமான குறள் மூலம் தெளிவுபடுத்துகிறார்.
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில் - 621
அதாவது துன்பங்கள் வரும் போது, மனம் தளர்ந்து விடாமல், அதனை நகைத்து ஒதுக்கிவிடுங்கள்; துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை என்கிறார்.
மேலும், துன்ப நிலையில் மனம் தளர்ந்து விடாமல் தெளிவான சிந்தனையுடையவர்களை துன்பத்தினால் ஒன்றும் செய்ய இயலாது என்கிறார்.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர் - 623
இடையூறுகள் வந்த போது அதற்காக வருந்தாத மனத்தெளிவு உள்ளவர்கள், துன்பத்துக்குத் துன்பாம் உண்டாக்கி அதனைப் போக்கி விடுவார்கள்.
இன்னும் பார்ப்போம்.
No comments:
Post a Comment