Monday, 10 June 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 22




திருவள்ளுவரின் மேலாண்மை கருத்துக்கள்:
ஒரு தனிமனிதனின் மேலாண்மைக்கு என்னவெல்லாம் தேவைப்படுகிறது?
சொல்வன்மை:
ஒரு மனிதன் சொல்வன்மை மிக்கவனாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? இதோ இந்தக் குறளை உணர்ந்தாலே போதும்...
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து -645
அதாவது, தாம் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக்கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்றாக அறிந்த பிறகே, அந்தச் சொல்லை சொல்ல வேண்டும் என்கிறார். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ‘அவர் பேச்சுக்கு எதிர் பேச்சு இல்லை” என்று மற்றவர் சொல்லும் அளவிற்கு சொல்வன்மை இருக்க வேண்டும் என்கிறார். 
அப்படி சொல்வன்மை மிக்கவன் கூடுதலாக சொல்லில் சோர்வடையாமலும், சபைக்கு . அஞ்சாமலும் இருந்தால் அவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது என்று பின்வரும் குறளில் சொல்வன்மைக்கு வலுசேர்க்கிறார்.
சொல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது - 647

நுண்ணறிவு:
நுண்ணறிவு (Intelligence) என்பதன் விளக்கம் பார்த்தீர்களெனில் அது உலகத்தோடு ஒத்து வாழ்வதாலும் அதாவது தற்போதுள்ள நடைமுறைகளுடன் இசைந்து வாழ்வதாகும். ஒரு விடயத்தைக் கற்றுக் கொள்வதும் கற்றுக் கொண்டதை செயல்படுத்துவதும்ஆகும். 
செற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல் -637
செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவான அச் செயல்களை நிறைவேற்ற வேண்டும் என்கிறார். என்னதான் நிறையக் கற்றிருந்தாலும் அதனை தற்போதைய நடைமுறைக்கேற்று மாற்றி செயல்படுத்தவில்லையெனில் அதனால் பயன் இருக்காது என்கிறார். 

சுயக்கட்டுப்பாடு:
வெற்றியாளர்களை நாம் கவனித்தோமானால் அவர்களிடம் உள்ள ஒற்றையானது சுயக் கட்டுப்பாடாகும். சாப்பிடுவது, நேரத்தைக் கடைப்பிடித்தல், தூங்குதல் என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு கட்டுப்பாட்டினை ஒழுக்கத்தினைக் கடைப்பிடிப்பர். அவ்வாறு செய்தால் அவருக்கு என்ன கிடைக்கும் என்பதை திருவள்ளுவர் இவ்வாறு விளக்குகிறார். 
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் 
எழுநம்யும் ஏமாப் புடைத்து -126
ஆமையானது தன்னுடைய நான்கு கால்கள் மற்றும் ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு மற்றும் செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால் அது அவனுக்கு காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும் என்கிறார். 

பொறாமையற்ற தன்மை:
எவர் ஒருவர் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறாரோ அவர் எவரிடம் இருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்வதற்குத் தயாரக இருக்க வேண்டும். நம்மைச் சார்ந்தவர்களோ நம்மைச் சுற்றி இருப்பவர்களோ அல்லது நீங்கள் எதிர்பாராத ஒருவர் முன்னேறி வந்தாலோ அவர்களைப் பார்த்து பொறாமைப் படுதல் கூடாது அது வளர்ச்சிக்கான வழியாக இருக்காது என்கிறார் திருவள்ளுவர். 
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான் -163
பிறனுடைய ஆக்கத்தைக் கண்டதும், அதனைப் பாராட்டாமல் பொறாமைப்படுகிறவன், தனக்கு அறனும் ஆக்கமும் சேர்வதை விரும்பாதவனே ஆவான் என்கிறார். 

புறங்கூறாமல் இருத்தல்:
தன்னுடைய முன்னேற்றத்தையே ஒவ்வொருவரும் முக்கியமாகக் கருத வேண்டும். பிறரைப் பார்த்துப் பொறாமைப்படக் கூடாது என்று பார்த்தோம். அதே போன்று அவர்களைக் குறித்துப் புறங்கூறாத தன்மையும் வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். 
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை -182
அறத்தையே அழித்துத் தீமைகளைச் செய்து வருவதைக் காட்டிலும், இல்லாதபோது ஒருவனைப் பழித்துப் பேசி, நேரில் பொய்யாச் சிரிப்பது தீமையாகும் என்கிறார். 
இன்னும் பார்ப்போம். 

நன்றி:www.thirukkural.net

No comments:

Post a Comment