திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 25
இல்லற வாழ்வில் விருந்தோம்பல் குறித்து திருவள்ளுவர் அவர்கள் என்ன கூறுகிறார் என்பதனை இன்று பார்ப்போம்.
நமது உடலானது அன்பினை அடிப்படையாகக் கொண்ட உயிர் நிறைந்த நிலையாகும், அப்படி அன்பற்ற நிலை இருந்தது என்றால் அதனை வெறும் எலும்பின் மேல் தோலைப் போர்த்தியது போல் ஆகும் என்று அன்பே பிரதானம் என்கிறார் பின்வரும் குறளில்…
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு -80
அப்படி அன்புதான்பிராதானம் என்றால் நம்மை நோக்கி வரும் விருந்திதனர்களை நாம் எப்படி கவனிக்க வேண்டும் என்கிறார்?
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று -82
அதாவது வீட்டிற்கு வெளியே விருந்தினர் இருக்கும் போது தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும் விரும்பக் கூடியது அல்லது என்று அறிவுரைக் கூறுகிறார்.
அவ்வாறு செய்யும் போது விருந்தினர்கள் நிலை எப்படி இருக்கும் என்பதனையும் படம் பிடித்துக் காட்டுகிறார் அய்யன்.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து -90 என்கிறார். அதாவது அனிச்சம் என்ற மலரானது நுகர்ந்து பார்த்தவுடனே வாடிவிடும், அதுபோலே விருந்தினர்களை மாறுபட்ட முகத்துடன் நாம் பார்த்தோமானால் விருந்தினர்கள் உள்ளம் வாடி விடுவார்கள். ஆகவே, விருந்தினரை புன்சிரிப்புடன் எதிர்கொள்ள வேண்டும் என திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.
அப்படி செய்தால் என்ன நிகழும் என்பதனையும் திருவள்ளுவர் விளக்காமல் இல்லை..
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல் -84
முகமலர்ச்சியோடு நல்லமுறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டில் செல்வம் என்னும் திருமகள் வந்து உள்ளம் மலர்ச்சியோடு அகலாது தங்கியிருப்பாள் என்கிறார்.
அப்படி முகமலர்ச்சியோடு இருப்பனுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதனையும் திருவள்ளுவர் சொல்லாமல் இல்லை...
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று -83 என்கிறார். அதாவது தன்னை நோக்கு வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவருடைய வாழ்க்கையாது துன்பத்ததால் வருந்திக் கெட்டுப் போவதில்லை என்கிறார். விருந்தோம்பலில் மட்டுமல்ல பொதுவாகவே நல்ல பண்பு என்பது என்ன என்பதை பின்வருமாறு குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின் -92
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுதானது அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும் என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.
இன்னும் பார்ப்போம்...
No comments:
Post a Comment