Monday, 8 July 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 26

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 26
காமத்துப்பாலில் வள்ளுவர் சொல்வது என்ன?
காமத்துப்பால் - இதன் பெயரை வைத்தே திருக்குறளில் பலர் அந்தப் பக்கங்களை எட்டிப்பார்ப்பதில்லை..
ஆனால், 
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.. காதல் என்று அர்த்தம்...
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே..
நினைத்து நினைத்துப் பார்த்தால் நெருங்கி அருகே வருவேன்..
மாலை எனை வாட்டுது மணநாளை மனம் தேடுது..
கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக் குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா...
நெஞ்சிக்குள்ள இன்னாருன்னு சொன்னால் புரியுமா? அது கொஞ்சிக் கொஞ்சிப் பேசுறது கண்ணில் தெரியுமா?
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை…
போன்ற பாடல்களை உங்களால் இரசிக்க முடியும் என்றால் இந்தப் பாடல்களுக்கெல்லாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றிய வள்ளுவர் வகுத்தப் பாடல்களைப் படித்தீர்களென்றால் வள்ளுவரில் இப்படியொரு கவிதை ஊற்றுகளா என்ற ஆச்சரியப்பட வைக்கும். 
காமத்துப்பால் குறித்து கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று வரும் பகுதிகளை ஆரம்பிக்கின்றேன். உங்கள் ஆதரவுடன்...
சங்க காலத்தில் தமிழ்க் கவிஞர்களால் வடிக்கப்பட்ட கவிதைகள் அவற்றின் உள்ளடக்கத்தின் தன்மையினை கருத்திற்கொண்டு அகநூல்கள் என்றும் புறநூல்கள் என்றும் தொகுக்கப்பட்டன. இவற்றில் அதிகம் உள்ள அகம் சார்ந்த கவிதைகளை ஒப்பிடும்போது, அவை வெவ்வேறு கவிஞர்களால் பல்வேறு காலக்கட்டங்களில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றில் அடங்கியுள்ள கருத்துக்கள் உணர்த்தும் முறை, பாடல் அமைப்பு ஆகியவற்றில் ஒற்றுமையினைக் காண முடிகிறது. இதனையே அறிஞர்கள் அகத்திணை மரபு என்று குறிப்பிடுகின்றனர். 
சங்க காலக் கவிதை முதல் இக்கால கவிதை வரை கவிஞர்களின் முக்கிய பாடு பொருள் காதலே...
அகம்-புறம் என்று பிரித்த நம் தமிழ் முன்னோர் அகத்துறையில் அகநானூறு, நற்றிணை மற்றும் குறுந்தொகை என நல்ல பல காதல் பாடல்களைத் தந்தனர். காதலும் சரி... கவிதையின் சரி... இரண்டுமே உணர்வின் ஊற்றுகள் தான். அறத்துப்பாலில் தனிமனித ஒழுக்கமும், அன்பும் பண்பும் நிரம்பிய குடும்ப உறவுமுறையும், சமுதாய நலம் நாடிய சான்றோர் துறவும் இணைந்த வாழ்வியலை எடுத்துரைக்கின்றது. ஆட்சி இயலையும், மக்கள் நலனில் அதனை வழி நடத்த உதவும் அங்கங்களையும், அவற்றின் மூலம் பயன் பெறும் குடி மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்பாடுகளையும் பொருட்பாலில் எடுத்துக்கப்பட்டுள்ளது. 
ஆணும் பெண்ணும் அன்பு ததும்ப வாழும் காதல் வாழ்வை அழகிய கவிதை நயம் சொட்டச் சொட்ட காமத்துப்பாலில் வழங்குகிறார் திருவள்ளுவர். பண்டையத் தமிழ் மரபுகளை அடிப்படையாகக் கொண்டு களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு பகுதிகளாக அமைத்துள்ளார். திருமணத்திற்கு முந்தியது களவியல், பிந்தி நிகழ்வது கற்பியல். களவியலை ஏழு அதிகாரத்திலும் கற்பியலை 18 அதிகாரத்திலும் வழங்கியுள்ளார். இதில் ஆண்பால் இயலுக்கு ஏழு அதிகாரங்களும், பெண்பால் இயலுக்கு 12 அதிகாரங்களும், இருபாலருக்கும் 6 அதிகாரங்களையும் வழங்கியுள்ளார் அய்யன் திருவள்ளுவர். காதலிஃதலைவி, காதலன்ஃதலைவன் மற்றும் தோழி பேசுவது போல்...புலம்புவது போல் ... நினைப்பது போல் ... அமைக்கப்பட்டுள்ள பாடல்களைப் படிக்கும் ஒவ்வொருவரும் பாடுபவர் மனநிலைக்குச் (நுஅpயவால ளுவயவந) சென்று அதிலிருந்து பாடலை இரசிக்கும் அளவிற்கு பாடல்களை கவிநயம் சொட்டச் சொட்ட வடித்துள்ளார் அய்யன் திருவள்ளுவர். 
காமத்துப்பாலினை பலர் தவறுதலாகப் புரிந்து கொள்கின்றனர். அது அழகிய காதலை வெளிப்படுத்துகிறது. அனைத்து வகை உயிரினங்களுக்கும் பசி போல காமமும் பொதுவானது. ஒரு உயிரினத்தில் அடிப்படை நோக்கமே தன்னைப் போன்ற மற்றொரு உயிரினத்தை இந்த பூமியில்  விட்டுச் செல்வதாகத் தான் இருக்கிறது. இதற்கு காதலும் காமமும் தான் அடிப்படை. இந்நிலை இல்லையெனில் உயிரினங்களிடையே பற்று கூட இல்லாமல் போயிருக்கலாம். திருவள்ளுவரும் காமத்தினை தவறாகப் புரிந்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கவில்லை. 
எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
நினைப்பு வருவதொன் றில் -1202
எந்த நிலையிலும் காமம் இனியதுதான். பிரிவுக் காலத்திலும் கூட, நம் அன்புக்குரியவரை நினைத்துக்கொண்டிருந்தாலே ஒரு துன்பமும் வராது. 
திருவள்ளுவர் தனித்துச் சிறு குழுமத்திற்கு மட்டும் வழங்கக்கூடிய உவமையாக வழங்காமல் அனைத்து மக்களுக்கும் பொருந்தக் கூடிய உவமைகளையே பெரிதும் பயன்படுத்தியிருப்பதன் மூலம் தமது குறட்பாக்களுக்கு எல்லை வகுக்காமல் பொதுவில் விட்டிருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.  
இன்னும் பார்ப்போம். 

No comments:

Post a Comment