திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 29
மடலேறுதல்:
இந்த வாரம் திருக்குறளில் காணப்படும் பண்டைய தமிழ்மரபு நிகழ்வு ஒன்றைப் பார்ப்போமா. மடலேறுதல்... இந்தப் பதம் நாணுத் துறவுரைத்தல் என்னும் அதிகாரத்தில் பயன்படுத்தப்படுகிறது. அப்படியானல் அதன் அர்த்தம் என்ன?
மடலேறுதல்:
இன்றைய காலத்தில் காதலில் தோல்வியுற்றோர் வழிகாட்டுதலின்றி தற்கொலை செய்து கொள்ளுதல், பெண் வீட்டாரை துன்புறுத்தல் போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதைக் காண்கிறோம். ஆனால், திருவள்ளுவரின் பாடலில் அறத்துடன் தன் வலியைக் காட்டும் ஆண்மகனை படம் போட்டுக் காட்டுகிறார்.
பனங்கருக்கால் குதிரை செய்து உடல்நோக ஏறி உடல் முழுவதும் சாம்பல் தடவி, யாரும் அணிய விரும்பாத எலும்பு, எருக்கம் பூ போன்றவற்றால் மாலை அணிந்து, காதலியின் படத்தினை கையில் வைத்துக் கொண்டு ஊர் முழுவதும் வலம் வந்து வரும் மடலேறுதன் என்ற நிகழ்வினை நாணுத் துறவுரைத்தலில் காட்சிப்படுத்துகிறார். இது அறத்துடன் செய்யும் நிகழ்வாகும் இந்நிகழ்விற்கு பிறகு பெண் வீட்டாரிடம் ஊர்காரர் பேசி மணம் முடிப்பர் அல்லது காதலன் மறுமுறை தன் வாழ்க்கையை மணமுடிக்காமல் முடித்துக் கொள்வார். ஒருமுறை மடலேறியவர் மறுமுறை மடலேறுவது இல்லை. இது ஆணுக்குரிய ஒழுக்கமாகும். இது இழிவான ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே தன்னைச் சந்திக்க தலைவி மறுக்கும் போது தோழி மூலம் மடலேறி விடுவேன் என்று தலைவன் சொல்வது உண்டு அல்லது மிரட்டுவது உண்டு. காமம் மிகுந்த ஆண்களுக்கு மட்டுமே மடலேறுதல் பொருந்தும். பெண்கள் இவ்வாறு செய்வதில்லை.
திருவள்ளுவர் மடலேறுவதை வலியுறுத்தவில்லை மாறாக அந்த நிலைக்கு போகும் அளவிற்கு காதலன் நொந்து இருக்கிறான் என்பதை எடுத்துக் காட்டுகிறார்.
No comments:
Post a Comment