Monday, 22 July 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 28

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 28
தகையணங்குறுத்தல் :

முந்தைய வாரங்களில் சொன்னது போன்று திருவள்ளுவர் ஐந்திணைகளின் உரிப்பொருளாக அகத்திணைகளை வரிசைப்படுத்தி நமக்குக் காமத்துப்பாலில் வழங்குகிறார். இதில் அதிகாரங்கள் திணை வாரியாக திருவள்ளுவர் அவர்கள் என்ன குறிப்பிடுகிறார் என்பதனைக் காண்போம். 
சங்ககாலத்தில் இருந்து இன்றும் கூட பல கவிதைகள் இவருடைய குறளின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கலாம் என்பதினை இனிவரும் வாரங்களில்; ஐயமின்றித் தெரிந்துக் கொள்ளலாம்.
காமத்துப் பாலில் அய்யன் திருவள்ளுவர் அவர்கள், 
1. குறிஞ்சி- கூடல் (தகையணங்குறுத்தல், குறிப்பறிதல், புணர்ச்சி மகிழ்தல், நலம் புனைந்துரைத்தல், காதல் சிறப்புரைத்தல்), 
2. பாலை- பிரிதல் (நாணுத் துறவுரைத்தல், அலர் அறிவுறுத்தல், பிரிவாற்றாமை, படர் மெலிந்து இரங்கல், கண் விதுப்பு அழிதல்) 
3. முல்லை-பொறுத்திருத்தல்( பசப்புறு பருவரல், தனிப்படர் மிகுதி, நினைந்தவர் புலம்பல், கனவுநிலை உரைத்தல், பொழுதுகண்டு இரங்கல்), 
4. நெய்தல்-வருந்துதல் (உறுப்பு நலன் அழிதல், நெஞ்சொடு கிளத்தல், நிறையழிதல், அவர்வயின் விதும்பல், குறிப்பறிவுறுத்தல்) மற்றும் 
5. மருதம்-ஊடல் (புணர்ச்சி விதும்பல், நெஞ்சொடு புலத்தல், புலவி, புலவி நுணுக்கம் , ஊடலுவகை) என்ற ஐந்து வகை ஒழுக்கங்களில் (அகத்திணை) நமக்கு வழங்கியுள்ளார். இவை முறையே குறிஞ்சி, பாலை, முல்;லை, நெய்தல் மற்றும் மருதம் ஆகிய ஐந்திணை உரிப்பொருளாக அமைத்துள்ளார். மேற்கூறிய அகத்திணை அடிப்படையில் வள்ளுவர் வகுத்தவற்றைக் காண்போம். 

கூடல்:
 கூடல் என்ற உணர்ச்சியின் கீழ் தகையணங்குறுத்தல், குறிப்பறிதல், புணர்ச்சி மகிழ்தல், நலம் புனைந்துரைத்தல், காதல் சிறப்புரைத்தல் என்ற அதிகாரங்களைப் படைத்துள்ளார் என்பதனை அறிவோம். இவற்றில் என்ன கூறியிருக்கிறார் என்பதனைக் காண்போமா?


தகையணங்குறுத்தல் என்பது தலையின் அழகு தலைவனை வருத்தம் ஏற்படுத்துவதைக் கூறும் அகத்துறை. இதில் சிறந்த கவிஞர் வெளிவருதலைக் காணலாம். இதில் தலைவன் காதலியின் அழகினை பல வகையிலும் வர்ணிக்கிறார். வனப்பு மிகுந்த வான்மகளோ, மாமயிலோ? காதணிகள் பூண்ட அழகுநிறை கன்னியோ? (1081) 
அவள் பார்வையின் சக்தி, தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் தெய்வம் கூட படையையே அழைத்து வந்தது போல் இருந்தது. (1082)
அவள் கண்ணில் எமன் என்று கேள்விப்பட்டவனை நேரில் உணர்கிறேன். (1083)
அவள் கண்கள் உயிரை பறிக்கும் எமனா? உறவாடும் விழியா? மிரளும் பெண்மானா? மூன்றின் குணத்தையும் கொண்டுள்ளதே? (1085)
அவள் வளைந்த புருவங்களும் நேராக இருந்திருந்தால் பார்வையை மறைத்து காதலில் விழுந்துவிடுவேன் என்ற துன்பத்தினையும் எனக்குத் தந்திருக்காது. (1086)
என் பேரைக் கேட்டாலே என் எதிரிகள் குலைநடுங்கும் பேராண்மை கொண்டவன் மின்னும் நெற்றியில் சின்னாபின்னமாகி நிற்கிறேன். (1088)
 மருளும் மான் பார்வையும், அழகிய நாணத்தை விடவா இவளுக்கு நகைகள் அழகு செய்யப் போகிறது. (1089)
வடித்த மது உண்டவர்களுக்குத்தான் மயக்கம் வரும், ஆனால், பெண்ணைக் கண்டாலே ஏற்படும் காமம் மதுவாலும் தர இயலாது. (1090)
மேற்கூறியவைகளில் ஒரு அதிகாரத்தில் இருந்து மட்டும் சுருக்கமாகக் கூறியுள்ளேன். வரும் வாரங்களில் இதனை விடச் சிறந்த கவிதைகளையும் கற்பனைகளையும் காணலாம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொருத்துக் கொள்க.
நன்றி




No comments:

Post a Comment