திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 41:
கடந்த வாரம் பிரிவாற்றாமை அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; படர் மெலிந்திரங்கல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். படர் மெலிந்து இரங்கல் என்பது பிரிவுத் துன்பத்தைத் தாங்க முடியாமல் உடல் மெலிந்து வருந்தி புலம்புதலாகும். இனி குறள்களையும் அதன் அர்த்தத்தையும் பார்ப்போம்.
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும் -1161
என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்து விடக் கூடாது என்று மறைக்கத்தான் செய்தேன். ஆனாலும், அது இறைக்க இறைக்க எப்படி ஊற்றுநீர் பெருகி வருகிறதோ அதுபோல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது என்று விவரிக்கிறார்.
அடுத்தக் குறளில்,
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும் -1162 என்கிறார்.
அதாவது, இந்தக் காதல் நோயினை என்னால் மூடி மறைக்கவும் முடியவில்லை. இந்த நிலையை நோயை ஏற்படுத்திய காதலருக்கு இதைச் சொல்வதற்கும் வெட்கமாக இருக்கிறதே என்று காதலியின் புலம்பலாகக் குறிப்பிடுகிறார். காதலியின் தவிப்பை வெளிப்படுத்துகிறார்.
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து -1163 என்று மேற்கூறிய குறளில் குறிப்பிடுகிறார்.
நாம் முருகனுக்கு பக்தர்கள் காவடி எடுத்துத்தான் பார்த்திருக்கின்றோம். அந்தக் காவடியினை எங்கு உதாரணமாக பொறுத்துகிறார் என்று பாருங்கள்? காதலியின் தவிப்பை குறிப்பிடுகிறார். அதாவது, பிரிவுத் துயரத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு ஒரு பக்கம் காதல் துன்பத்தையும் மற்றொரு பக்கத்தில் நாணமும் தொங்குகின்றன என்று குறிப்பிடுகிறார்.
அடுத்த உதாரணத்தைப் பாருங்கள்
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல் -1164.
காதலானது கடல் போலச் சூழ்ந்து கொண்டு வருத்துகிறது. ஆனால், அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை என்று காதலியின் பிரிவுத்துயரத்தைக் குறிப்பிடுகிறார்.
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர் -1165
பிரிவுத் துயரத்தில் காதலியானவர் கற்பனை செய்து பார்க்கிறார். இவ்வளவு அன்பாக இனிமையான நட்பு பாராட்டும் என்னிடமே துயரத்தை ஏற்படுத்தும் என்னுடைய காதலர், பகைமை ஏற்பட்டால் எத்தகையவராய் மாறி விடுவாரோ? என்று காதலி நினைக்கிறார்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
No comments:
Post a Comment