திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 42:
படர் மெலிந்து இரங்கல்:
கடந்த வாரம் படர் மெலிந்திரங்கல் அதிகாரத்தில் இருந்து முதல் பகுதியைப் பார்த்தோம். இந்த வாரம் படர் மெலிந்திரங்கல் அதிகாரத்தில் இருந்து இரண்டாவது பகுதியைப் பார்ப்போம்.
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது -1166
பிரிவுத் துயரமானது சேர்ந்திருக்கும் போது கிடைக்கும் இன்பத்தினை விட மிகப் பெரியது என்பதனை இவ்வாறு குறிப்பிடுகிறார். காமம் மகிழ்விக்கும்போது கிடைக்கும் இன்பமானது கடல் அளவு பெரியது. ஆனால், பிரிவுத் துன்பத்தால் வருந்தும் போது, அவ்வரு
த்தமானது கடலை விட மிகப் பெரியதாக உள்ளது என்கிறார்.
த்தமானது கடலை விட மிகப் பெரியதாக உள்ளது என்கிறார்.
அடுத்தக் குறளில்,
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன் -1167 என்கிறார்.
அதாவது;, இந்த நள்ளிரவிலும், யான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடியே இருக்கின்றேன். அதனால், காமம் என்னும் கடுமையான வெள்ளத்தை நீந்தியும் என்னால் அதன் கரையைக் காண முடியாமல் தவிக்கிறேன் என்று காதலியின் கூற்றாகத் தெரிவிக்கிறார்.
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை -1168
மேற்கூறிய குறளில், இரவில் தனித்துக் கிடப்பதின் நிலையினை பின்வருமாறு விளக்குகிறார். இரவே!, இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்டு, பாவம் இப்போது என்னைத் தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய் என்று கூறுகிறார்.
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா -1169
ஒருவருக்கு வயிற்றில் உபாதை என்று எடுத்துக் கொள்வோம், அதுவும் இரவு நேரத்தில் என்றால் அவர் அதனைப் எப்படிக் கழிப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள்! அதுபோல காதலி இப்படிக் குறிப்பிடுகிறார். இப்போதெல்லாம் பிரிவுத் துன்பத்தினால், எனது இரவு நேரம் நீண்ட காலமாகின்றது. இப்படி மிகப் பெரிய இரவின் கொடுமையானது என்னைப் விட்டுப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கடுமையான கொடுமையாக இருக்கிறது என்கிறார்.
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண் -1170
தன் இயலாமையை காதலியால் எப்படி வெளிப்படுத்த முடியும்? நாம் அனைவரும் அறிவோம் மனதின் கற்பனைக்கு எல்லையே இல்லை. இதனை வள்ளுவர் எப்படி உணர்த்துகிறார். இதோ, காதலியின் வார்த்தையாக குறிப்பிடுவதைக் கவனியுங்கள்.
என் மனதைப் போல காதலர் உள்ள இடத்திற்குச் செல்ல முடியுமானால், என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டிய அவசியமில்லை என்கிறார்.
No comments:
Post a Comment