திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 43:
கண்விதுப்பழிதல்:
கடந்த வாரம் ; படர் மெலிந்திரங்கல் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; கண்விதுப்பழிதல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். கண்விதுப்பழிதல் என்பது; கண்கள் (தலைவனைக் காணாமல் ) துடித்து வருந்துதல் என்பதாகும்;. இனி குறள்களையும் அதன் அர்த்தத்தையும் பார்ப்போம்.
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோதண்டா நோய்
தாம்காட்ட யாம்கண் டது -1171
இந்தக் கண்கள் அன்று அவரைக் காட்டியதால் தானே தீராத இந்தக் காதல் நோய் ஏற்பட்டது. இன்று அதேக் கண்கள் அவரை என்னிடம் காட்டச் சொல்லி அழுவது எதனாலோ? ஏன்று காதலி கேட்பதாகக் குறிப்பிடுகிறார். அடுத்தக் குறளில்,
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன் -1172 என்கிறார்.
அதாவது, வரப்போவதை முன்கூட்டியே ஆராய்ந்து உணராமல், அன்று அவரை பார்த்து மகிழ்ந்த மை தீட்டிய கண்கள் இன்று இந்தத் துயரத்திற்குக் காரணம் தாம் தான் என்று உணராமல், தாமும் துன்பப்படுவது எதனாலோ? ஏன்று கேட்கிறார்.
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து -1173
அன்று தாமாகவே வேகமாக முந்திச் சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள் , இன்று தாமே அழுகின்றன. இதைப் பார்க்கும் போது சிரிப்பாகத் தான் இருக்கின்றது என்று காதலி சொல்கிறார். அடுத்தப் பாடலில்,
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து -1174
அன்று, நான் தப்பிப் பிழைக்க முடியாத தீராத காதல் துன்பத்தை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திய என் கண்கள், இன்று தாமும் அழுவதற்கு இல்லாதபடி நீர் வற்றிப் போய் விட்டன.
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண் -1175
கடல்கொள்ள முடியாத அளவிற்குக் காமநோயினை எனக்கு உண்டாக்கிய எனது கண்கள், அந்தத் தீவினையால் தாமும் உறங்காமல் இவ்விரவுப் பொழுதில் துன்பத்தினை அடைகின்றன.
ஓஒஇனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தூஅம் இதற்பட் டது -1176
எமக்கு இந்தக் காமநோயை ஏற்படுது;திய கண்கள், தானும் தூங்காமல் இப்படி அழுகையில் ஈடுபட்டுதும் பார்ப்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது என்று காதலி தெரிவிப்பதாகக் குறிப்பிடுகிறார். என்னை காதலில் சிக்க வைத்தது இந்தக் கண்கள் தானே இப்போது நீயும் சேர்ந்தே அனுபவி என்று காதலி சோகத்திலும் ஒரு ஆறுதலாய் பேசிக் கொள்வதாகக் குறிப்பிடுகிறார்.
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண் -1177
அன்று அவரை கண்டு மகிழ்ந்து இழைந்து குழைந்து இரசித்த கண்கள், இன்று தூக்கமில்லாமல் வருந்தி வருந்தி தன்னுடன் உள்ள கண்ணீரும் வற்றி போகட்டும்.
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண் -1178
என்னை அரவணைக்கும் எண்ணம் இல்லாமல் வெறும் பேச்சில் மட்டுமே அன்பு காட்டியவர் இவ்விடத்திலே இருக்கின்றார். ஆனால், அதனால் என்ன தான் பயன்? இருந்தாலும் அவரைக் காணாமல் என் கண்கள் அமைதியாக இருக்க மாட்டேன் என்கிறதே?
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண் -1179
காதலர் வராதபோது வழியிலே விழி வைத்து அவர் எப்போது வருவாரோ என்று என் கண்கள் தூங்குவதில்லை. காதலர் வந்தாலும் அவர் எங்கே உடனே பிரிந்து சென்று விடுவாரோ அன்று அஞ்சியே தூங்காமல் கண்கள் விழித்திருக்கின்றன. இவ்வாறு இரண்டு வழியிலும் தூங்காமல் தாங்க முடியாத துன்பத்தை எனது கண்கள் அனுபவிக்கின்றது.
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து -1180
அடிக்கப்படும் பறைபோன்று என்னுடைய மனதினுள் இருப்பதை அழுதே காட்டிக் கொடுத்து விடும் கண்களைப் போன்ற எம்மைப் போன்றவரிடத்தில் இருந்து இரகசியத்தை அறிந்து கொள்வது ஊராருக்கு ஒன்று கடினமான செயல் இல்லை.
No comments:
Post a Comment