Tuesday, 22 October 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 40:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 40:
பிரிவாற்றாமை:
கடந்த வாரம் பிரிவாற்றாமை அதிகாரத்தில் இருந்து முதல் பகுதியைப் பார்த்தோம். இந்த வாரம் பிரிவாற்றாமை அதிகாரத்தில் இருந்து இரண்டாவது பகுதியைப் பார்ப்போம்.
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை – 1156
பிரிவு என்பதனை ஏற்றுக் கொள்ளமுடியாத காதலி, பிரிவைப் பற்றிச் சொல்லும் காதலனை கல்நெஞ்சம் கொண்டவராகப் பார்க்கிறார் என்பதைப் பற்றி மேற்கூறிய குறளில் விளக்குகிறார். அதாவது, பிரிவைப் பற்றி தெரிவிக்கும் அளவிற்கு கல் நெஞ்சம் கொண்டவர் என்றால், அத்தகைய தன்மைக் கொண்டவர் திரும்பி வந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது என்று காதலி குறிப்பிடுதாகத் தெரிவிக்கிறார் திருவள்ளுவர். 
அடுத்தக் குறளில், 
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை – 1157 என்கிறார். 
தலைவனின் பிரிவினால் தலைவிக்கு ஏற்படும் வருத்தத்தினால் ஏற்படும் உடல் மெலிவினையும் அதனால் ஏற்படும் விளைவினையும் எடுத்துக் காட்டுகிறார். அதாவது,
என்னை என் தலைவன் விட்டுவிட்டுச் பிரிந்து செல்லும் செய்தியை அறிந்து ஏற்பட்ட என் மெலிவால் என்னுடைய முன்கையிலிருந்து கழலும் வளையல்கள் ஊரறிய எடுத்துக்காட்டி தூற்றி விடாதோ?  என்று குறிப்பிடுகிறார். 
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு – 1158 
என்று மேற்கூறிய குறளில் குறிப்பிடுகிறார். தனிமையிலே இனிமை காண முடியுமா? என்ற பாடலைக் கேட்டிருப்போம். இங்கேயும் தனிமையின் கொடுமையினை காதலி குறிப்பிடுவதாகத் தெரிவிக்கிறார். நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது. அதனினும் துன்பமானது என்னவென்றால், இனியக் காதலரைப் பிரிந்து தனித்திருப்பது ஆகும் என்கிறார். 
அடுத்தக் குறளில், பிரிவின் கொடுமையை மாற்று வழியில் சொல்கிறார். 
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ – 1159
நெருப்பானது, தன்னைத் தொட்டால் சுடும்... ஆனால் காமநோய் போல தன்னை விட்டு நீங்கியபோதும் சுடவல்லதாகுமோ? என்று கேட்கிறார். 
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் 
பின்இருந்து வாழ்வார் பலர் - 1160. 
மேற்கூறிய குறளில், காதலருடைய பிரிவையும் பொறுத்துக் கொண்டு,


அதனால் ஏற்படும் துன்பத்தையும் தாங்கிக்கொண்டு, அதன் பின்னரும்


பொறுத்திருந்து உயிர்வாழ்பவர் பல பெண்கள் இருக்கின்றனர்.  நினைத்துப் பாருங்கள் நம்மைச் சுற்றி எவ்வளவு பெண்கள் தன்னுடைய கணவர் பல காரணங்களால் (பெரும்பாலும் தொழிலின் நிமித்தம்) தன்னை விட்டு வெகுகாலங்கள் பிரிந்திருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு தன்னுடைய குடும்பத்தினை தாங்கி நிற்கின்றனர். அத்தகைய மகளிரின் உள்ளத்தை உணர்ந்தவராய் நிற்கின்றார் அய்யன் திருவள்ளுவர். 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment