திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 38:
அலர் அறிவுறுத்தல்:
கடந்த வாரம் அலர் அறிவுறுத்தல் அதிகாரத்தில் இருந்து முதல் பகுதியைப் பார்த்தோம். இந்த வாரம் அலர் அறிவுறுத்தல் அதிகாரத்தில் இருந்து இரண்டாவது பகுதியைப் பார்ப்போம். நமக்கு அறிவியலை விளக்குவதற்கு ஆன்மிகத்தில் பல கதைகள் புனையப்பட்டன. அதில் ஒன்று கிரகணத்தின் போது நிலவினை பாம்பு விழுங்குகிறது என்பது. அதாவது உலகத்தின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும், கிரகணத்தின் போது சந்திரன் மேல் கருப்பு வட்டம் மறைத்து மறுபடியும் விலகுவதைக் காணலாம். இந்த நிகழ்வினை பாம்பு விழுங்குவது போல கற்பனையாக வடித்து அதன் மூலம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வரையறுக்கின்றனர். இந்த நிகழ்வினை ஒட்டி கீழ்வரும் பாடலை வடித்துள்ளார். காதலரை நான் ஒரே ஒரு நாள் தான் பார்த்தேன். ஆனால், அதனை பாம்பு எப்படி நிலவை விழுங்குவது போன்ற கிரகணத்தில் சொல்கிறார்களோ அந்த நிகழ்வு போல அவரைப் பார்த்தது ஊரெங்கும் பரவி விட்டதே என்று காதலி குறிப்பிடுவதாகக் கூறுகிறார்.
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று – 1146
அடுத்தப் பாடலில், வேளாண்மை தெரிந்த அறிஞரின் பார்வையைக் காணலாம், பொதுவாக ஒருவர் சொல்லும் உவமை அவருடைய வாழ்வியலில் இருந்தே பொதுவாக அமையும், ஆனால், இவர் பலதுறையில் இருந்து வழங்கும் உவமை இவரைத் தனித்துக் காட்டுகிறது. சரி, பாடலைக் காண்போம்.
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய் - 1147
அதாவது எங்களுடைய காதலை சொல்லிக் கொண்டிருக்கும் ஊராரின் பழிச் சொல்லே எங்களின் உரமாகும் மேலும் எங்களுடைய காதலுக்கு எனது தாய் செய்யும் தடைச் சொல்லே நீர் ஆகும் என்கிறார். அதாவது ஒரு பயிர் நன்கு வளர்வதற்கு நீரும் எருவும் முக்கியமோ அது போன்று எங்களுடைய காதல் வளருவதற்கு ஊராரின் பழிச் சொல்லும் தாயின் தடைச் சொல்லும் உதவியாக இருக்கிறது என்று காதலர் நினைக்கின்றனர் என்கிறார்.
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல் - 1148
அலர் கூறுவதால் எங்களுடைய காதலை அழித்து விடுவோம் என்று மக்கள் எண்ணுகின்றனர். அவ்வாறு எண்ணுவது நெய்யை ஊற்றி நெருப்பை அணைத்துவிடுவோம் என்பது போன்ற அறியாமையாகும் என்று மேற்கூறியப் பாடலைக் குறிப்பிடுகிறார்.
அடுத்தப் பாடலில், அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும் போது, பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று உறுதியாக சொல்லி விட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா என்று தலைவிக் குறிப்பிடுவதாக தெரிவிக்கிறார்.
நான் என்ன விரும்புகின்றேனோ அதனை எனக்குப் பதிலாக பிறர் பேசி அதனால், எனக்கு நன்மை கிடைக்குமானால் நான் எவ்வளவு பாக்கியவாதி! இதனைத் தான் அடுத்தப்பாடலில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை - 1149
அதாவது, யாம் விரும்புகின்ற அலரைத் தான் இந்த ஊர் மக்கள் எடுத்துக் கூறுகின்றனர். அதனால், எம் காதலரும் தாம் எம் உறவை விரும்பி வந்து எமக்கு அருளினைச் செய்வார் என்கிறார்.
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்குமிவ் வூர் - 1150
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
No comments:
Post a Comment