திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 38:
அலர் அறிவுறுத்தல்:
கடந்த வாரம் நாணுத் துறவுரைத்தல் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம் அலர் அறிவுறுத்தல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். அலர் அறிவுறுத்தல் என்பது அனைவரும் அறியப் பேசுதல் என்பதாகும் அது பழித்தல் அல்லது வம்புப்பேச்சாக இருக்கலாம். எப்படி ஒரு எதிர்மறையான எண்ணத்தை நேர்மறையாக மாற்றிக் கொள்வது என்று திருவள்ளுவரிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.
பிள்ளையில் காதலைப் பிடிக்காத பெற்றோர் பல வகைகளில் பிள்ளைகளைத் துன்புறுத்துவதை அதாவது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் என்று கேள்விப்பட்டிருப்போம். சில காதல்கள் ஆணவக் கொலையில் கூட முடிவதுண்டு. இதற்கு முக்கிய காரணம் நாலு பேரு நாலு விதமாக பேசுவார்களே என்பதுதான். அப்படி பலபேரும் பலித்தும் இழித்தும் பேசும் வார்த்தைகளை இவர் எப்படி நேர்மைறையாக மாற்றுகிறார் என்று கீழ்வரும் பாடல்களில் குறிப்பிட்டுள்ளதைப் பாருங்கள்.
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கி யத்தால் -1141
ஊரே சேர்ந்து என் காதலைப் பழித்துப் பேசியபோதும் அவமானத்தால் என் உயிர் அழிந்து விடவில்லை. அதற்குக் காரணம் நான் செய்த நல்வினைகள் தான் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்.
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர் - 1142
மலர் போன்ற கண்களை உடைய என்னவளின் அருமையினை அறிந்திராமல் , நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் மக்கள் எங்கள் காதலைப் பற்றியே பேசி எங்களைப் பழித்துப் பேசி எங்களுக்கு மறைமுகமாக நன்மை செய்து விட்டது என்று தலைவன் நினைப்பதாக அமைந்த குறள் இது.
அடுத்தப் பாடலில்,
உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து -1143 என்கிறார்.
காதலை இரகசியமாக வைத்திருக்க வேண்டும், யாரும் அறியாமல் பாதுகாக்க வேண்டும் காலம் கனியும் போது சொல்லிக் கொள்ளலாம் என்று காதலர்கள் பொதுவாக சிந்திப்பது உண்டு, ஆனால், அதனை ஊர் அறிந்து கொண்டால் என்னாகுமோ என்று பயப்படுவதற்குப் பதிலாக பின்வருமாறு தலைவன் யோசிப்பதாகக் குறிப்பிடுகிறார்.
எங்களுக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே. திருமணம் செய்ய முடியுமா என்று இருந்த நிலை போய் இவர்கள் சொல் மூலம் திருமணம் செய்தது போன்ற இன்பத்தைத் தந்து விட்டது.
கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து -1144
மேற்கூறிய குறளில், ஊராரின் புறணி மற்றும் பழிச் சொல்லால் தான் என்னுடைய காதலும் நன்கு வளர்ந்து நிற்கின்றது, இல்லையெனில் காதலானது தன்னுடைய தன்மையினை இழந்து சுவையில்லாமல் சப்பென்று ஆகிவிடும் என்கிறார்.
பின்வரும் பாடலில், எப்படி கள் உண்பவர் கள் உண்டு மயங்க மயங்க மறுபடியும் அதனை விரும்பி நாடுவது போன்று, காமமும், அலரால் வெளிப்பட வெளிப்பட மேலும் இனிமையானதாக மாறி நிற்கின்றது என்கிறார்.
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது – 1145
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
No comments:
Post a Comment