கடந்த வாரம் காதற் சிறப்புரைத்தல் அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம் நாணுத் துறவுரைத்தல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். காமத்துப்பாலில் கடந்த அதிகாரங்கள் வரை குறிஞ்சித் திணையைச் சார்ந்தது. நாணுத் துறவுரைத்தல் முதல் வரும் 5 அதிகாரங்கள் பாலைத் திணையைச் சார்ந்தது ஆகும். அதாவது பிரிந்து இருத்தலைக் குறிப்பிடுபவை. ஏற்கனவே நான் ஒருமுறை மடலேறுதல் என்பதைக் குறித்து விளக்கியிருக்கின்றேன். ஒருவேளைஅதனைக் குறித்து அறியாதவர்கள் கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கி விவரம் பெறலாம். சரி நாம் குறளைக் காண்போம்...
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி – 1131 என்கிறார்.
அப்படியென்றால் காதலன் வருந்தி யோசிப்பதாக உள்ள கூற்று. அதாவது காதல் நிறைவேற முடியாமல் வருந்தியருக்கு வலிமையானத் துணை என்பது மடலேறுதல் தவிர வேறு ஏதும் இல்லை என்கிறார். காதல் கைக்கொள்ளாதது அவ்வளவு துன்பத்தைத் தருகின்றது என்று உரைக்கின்றார்.
அடுத்தப்பாடலில், காதலியின் அன்பைப் பெறாமல் தவிக்கும் துயரத்தைத் தாங்கமுடியாத என் உடம்பும் உயிரும், என்னுடைய நாணத்தை என்னிடமிருந்து நீக்கி விட்டு மடலூரத் துணிந்து விட்டன என்கிறார். காதலியின் அன்பை பெறத் துடிக்கும் துயரத்தைக் குறிப்பிடுகிறார்.
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து -1132
அதே போன்று அடுத்தப் பாடலிலும்,
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல் -1133
நல்ல ஆண்மையும் நாணத்தையும் கொண்டிருந்த நான் இப்பொழுதோ காதலியின் பிரிவுத் துயரத்தால் காமநோய் மிகுந்தவர் ஏறும் மடலையே பெற்றுள்ளேன் என்று புலம்புகிறார் காதலன்.
அடுத்தப் பாடலில் காமத்தின் கொடுமையினைக் குறிப்பிடுகிறார். நாணத்தோடு நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்கின்ற கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே, நான் என்ன செய்வது? என்று பிரிதலின் கொடுமையாக காதலன் புலம்புவதைக் குறிப்பிடுகிறார்.
காமம் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை – 1134.
மலைபோல தொடர்ந்த சிறு வளையல்களை அணிந்திருக்கும் என் காதலி எனக்கு மாலைப் பொழுதில் நான் அடையும் மயக்கத்தையும் துயரத்தையும் அதற்கு மருந்தாகிய மடலேறுதலையும் எனக்குத் தந்துவிட்டாள் என்று வருந்துகிறார்.
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர் - 1135
மேலும், அடுத்தப்பாடலில் அந்தப் பேதைப் பெண்ணை நினைத்து நினைத்து என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன. அதனால் நடுச்சாமத்திலும் கூட நான் மடலேறுதலைக் குறித்தே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று காதலனின் நிலையாகக் குறிப்பிடுகிறார். நினைத்து நினைத்துப் பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன் பாடல் போல இருக்கிறது அல்லவா..?
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லாப் பேதைக்கென் கண் -1136
அடுத்தப் பாடலில், ஒரு பெண் எந்த அளவிற்குப் பெருமை உடையவள் என்றால், கடல் அளவிற்கு காம நோயால் வருந்திய போதிலும், ஆண்களைப் போலாமல் மடலேறாமல் தன் துயரத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கும் பெண்ணைப் போல பெருமை உடைய பிறவி இல்லை என்கிறார் வள்ளுவர்.
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல் -1137
இவர் மன அடக்கம் மிக்கவர், மனதில் உள்ளதை ஒளித்து வைக்கத் தெரியாதவர், பரிதாபத்திற்கரியவர் என்று பார்க்காமல் இந்தக் காதலானது எங்களுக்கும் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப் போகிறது.
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும் - 1138
அடுத்தப் பாடலில்,
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு – 1139 என்கிறார்,
அதாவது, என்னுடைய காமநோயானது எனது மன அடக்கத்தால் எல்லோரும் அறிந்திருக்கவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவவெங்கும் தானே அம்பலப்படுத்திச் சுற்றி வருகிறது.
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு – 1140
மேற்கூறிய குறளில், காதல் நோயினால் நான் பட்ட துன்பத்தை அனுபவித்து அறியாதவர்கள் தான் அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து சிரிக்கின்றனர்.
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
No comments:
Post a Comment