திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 36
காதல் சிறப்புரைத்தல்:
கடந்த வாரம் காதல் சிறப்புரைத்தல் அதிகாரத்தில் முற்பகுதியில் இருந்து பார்த்தோம். இந்த வாரம் பிற்பகுதியைப் பார்ப்போம். முற்பகுதியில் காதலன் தன் காதலியை/தலைவியை சிறப்புரைத்தவற்றைப் பார்த்தோம் இந்த வாரம் காதலி/தலைவி தன் காதலன்/தலைவனைக் குறித்து சிறப்புரைத்தலைக் குறித்துக் காணலாம்.
கடந்த வாரம் ஒரு பாடலில், தலைவன் தன் கண்ணின் பாவையையே போய்விடு, ஒளிதரும் என்னவள் எனக்குப் பார்வையாக இருக்கிறாள் அவளுக்கு இடம் கொடு என்று அன்பின் மிகுதியால் கேட்டதைக் கண்டோம். அதே போன்று பின்வரும் பாடலில் காதலி குறிப்பிடுகிறார்,
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர் எம்காத லவர் - 1126
‘என்னுடைய காதலர் என் கண்களில் இருந்து ஒரு போதும் போக மாட்டார், நான் கண்ணை மூடி இமைத்தாலும் அதற்காக வருந்த மாட்டார், ஏனென்றால் அவர் அவ்வளவு நுட்பமானவர்” என்று குறிப்பிடுகிறார். பொதுவாகவே ஒரு சொல்லடை உண்டு ‘அவளைப் பாரு தன் புருசனை கைக்குள்ள போட்டு வச்சிருக்கா, நீயும் தான் இருக்கறியே?” என்று கட்டுக்கு அடங்காத கணவனின் மனைவியிடம் அவர் தோழியர் பிறரைக் காட்டி சொல்வதுண்டு. ஆனால் மேற்கூறிய பாடலில் ‘காதலனை தன் கண்ணுல போட்டு வச்சிருக்கா” என்று சொல்லலாமா...?
அடுத்தப் பாடலில்,
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து -1127 என்கிறார்.
ஏற்கனவே காதலரை கண்ணிலே அடைச்சி வச்சிருக்கா என்று பார்த்தோமல்லவா அதன் நீட்சியாக இப்பாடல் அமைந்துள்ளது. அதாவது, எனக்கே உரிய என் காதலன் என் கண்ணிலேயே இருக்கின்றார். ஆதலால், நான் கண்ணுக்கு மை தீட்டினால் அவர் மறைந்து விடுவாரோ என்று நினைத்து, என்னுடைய கண்களுக்கு நான் மை தீட்ட மாட்டேன் என்கிறார்.
அடுத்தப் பாடல், முந்தைய பாடலின் மிஞ்சிய பாடல் ஆகும்
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து -1128 என்கிறார்.
அதாவது, என்னுடைய காதலர் என் நெஞ்சிலே நிறைந்திருக்கிறார். அதனால், நான் எதைச் சாப்பிட்டாலும் அவருக்கு சூடு உண்டாகும். ஆதலால் அதை நினைத்து சூடாக நான் எதையும் சாப்பிடுவதற்கு அஞ்சுகிறேன் என்று காதலி குறிப்பிடுகிறார். புரிந்து கொள்ள முடிகிறதா காதலின் அளவினை...?
அடுத்தப் பாடலில் அதற்கு அடுத்த ஒரு படி முன்னேறுகிறார்.
இமைப்பின் கரப்பார்க்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர் -1129
தன் கண்ணுக்குள்ளே காதலன் இருப்பதால் தான் இமைத்தால் அதனால் அவன் மறைந்துவிடுவான் என்பதால் நான் இமைக்காமல் இருக்கின்றேன். ஆனால், இந்த அன்பினை புரிந்து கொள்ளாத ஊர் மக்கள் என்னவரை அன்பற்றவர் என்கின்றனர். என்று காதலியின் கூற்றாகக் குறிப்பிடுகிறார். மேலும்,
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர் -1130 என்கிறார்.
அதாவது, என்னவர் என் உள்ளத்திலேயே குடி கொண்டிருக்கிறார். அவரோ உள்ளத்திலே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத்தான் தெரியும். ஆனால், இதனை அறியாத ஊர் மக்கள் அவர் ‘பிரிந்து போய் விட்டார்” ‘அன்பற்றவர்” என்று புரியாமல் திட்டுகின்றனர். இந்தக் கூற்றை மடமை என்பதா? அல்லது காதலின் ஆழம் என்பதா? அது காதலியின் நிலையில் இருந்து பார்த்தால் தான் விளங்கிக் கொள்ள முடியும் என்று உணர்த்துகிறார் ஞானி திருவள்ளுவர்.
No comments:
Post a Comment