Monday, 9 September 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 35





திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 35

கடந்த வாரம் நலம் புனைந்துரைத்தல்  அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம் காதற் சிறப்புரைத்தல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். இது தலைவனும் தலைவியும் தம் காதலின் சிறப்பைச் சொல்லுதல் ஆகும். இனிய சொற்களைப் பேசக் கூடிய ஒருவரை தீயவர் என்றாலும் அவரை தவறாக எண்ணுவதற்கு வாய்ப்புகள் குறைகின்றது. வார்த்தைப் பிரயோகமானது அவ்வளவு வலுவானது ஆகும். அப்படியிருக்கையில் திருவள்ளுவர் இனிய மொழிகளைப் பேசும் பெண்ணை எவ்விதம் கூறுகிறார். கீழ்வரும் குறளைக் காண்போம். 
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்  - 1121
அதாவது இனிய மொழியினைப் பேசுகின்ற தலைவியின் முத்துப் பற்களிடையே வெளிவரும் உமிழ்நீரானது பாலோடு தேன் கலந்த கலவையாகும் என்கின்றார். இதனை இனிய சொற்களைக் கூறுதலின் சிறப்பைக் குறிப்பிடுகிறார். 
அடுத்து வரும் பாடலில், 
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு -1122 என்கிறார். 
அதாவது, இரண்டு நெருங்கிய நட்புடன் அன்புடன் இருப்பவர்களை நாம் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தும் வார்த்தைகள் தான். ஆனால் மேற்கூறிய பாடலைப் பார்க்கும் போது இவருடைய குறளைக் கடனாகப் பெற்றுத்தான் இத்தனை நாட்களாக நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோமா? என்று சொல்லத் தோன்றும். நீங்களே பாருங்கள் என்ன சொல்லியிருக்கிறார் என்று, உடலுக்கும் உயிருக்கும் இடையேயான நட்பு எத்தகைய தன்மை வாய்ந்ததோ, அதே போன்றது தான் என்னவளுடன் எனக்கு இருக்கும் நட்பாகும் என்று தலைவன் கூறுவது போல் அமைத்துள்ளார். நான் சொல்வது சரிதானே?
கருமணியிற் பாவாய்நீ போதாய்யாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம் - 1123
நான் விரும்புகின்ற இவளுக்கு கண்ணில் இருப்பதற்கு இடம் இல்லாமல் இருக்கின்றது, ஆதலால், என் கண்ணின் கருமணியில் பாவையே நீ போய் விடு என்கின்றார். கண்ணிற்கு ஒளியாய் விளங்கும் பாவையையே போ எனது பார்வையே என்னவள் தான் அவளுக்கு இடம் கொடு என்று தலைவனின் காதலைச் சிறப்புரைக்கின்றார். 
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து -1124
ஆராய்ந்து சிறந்த பண்புகளைக் கொண்ட என்னவள் என்னிடம் சேர்ந்திருக்கையில் உயிருக்கு வாழ்வளிப்பதைப் போன்றும் நீங்குகையில் உயிருக்கு சாவைப் போன்றும் இருக்கிறாள் என்கிறார். 
ஒருவர் மீது மிகுந்த அன்புடன் இருக்கையில் வெளியூரிலோ அல்லது பார்க்க முடியாத இடத்தில் இருந்தாலோ அலைபேசியில் பேசும்போது சொல்ல வாய்ப்புண்டு, ‘என்னிடம் ஃபோன் பேச கூட நேரமில்லையா? எங்களை ஞாபகம் இருக்கா என்ன? என்று கேள்வி எழுமின் சொல்லக் கேட்டிருப்போம் அல்லது சொல்லியிருப்போம்... மறந்தால் தானே நினைப்பதற்கு என்று..” 
பின்வரும் பாடலில், இப்படித் தெரிவிக்கிறார்…
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம் -1125 
அதாவது, ‘ஒளியுடன் கூடிய கண்களை உடைய என்னவளின் குணங்களை நான் மறந்தால் பிறகு நினைக்க முடியும். நான் ஒருபோதும் மறந்ததில்லையே...” 
மறந்தால் தானே நினைக்க முடியும், சரிதானே?

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொருத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment