திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-8
கடந்த வாரம் எவ்வாறு தமிழ் இலக்கியங்களில் நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு மற்றும் சிலப்பதிகாரத்தில் திருக்குறளின் தாக்கங்கள் இருக்கின்றன என்றும், அதேபோன்று தொல்காப்பியத்தின் தாக்கம் திருக்குறளில் ஏற்பட்டுள்ளதனையும் கண்டோம். அதாவது அனைத்து இலக்கியங்களும் வள்ளுவம் போல் அறக்கருத்துக்களை வலியுறுத்துவதில் ஒன்றுபட்டுள்ளன என்பதனை அறிய முடிகிறது.
திருக்குறளின் தாக்கம் பிற இலக்கியங்களில் மேற்கூறியவற்றோடு நிற்கவில்லை, திருவள்ளுவரின் சிந்தனை இன்று வரை ஆங்காங்கே ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. மேலும், சில இலக்கியத்தில் இருந்து திருவள்ளுவரின் சிந்தனை தாக்கத்தைக் காண்போமா?
எவ்வாறு வள்ளுவரின் வாழ்க்கைத் துணைநலம் என்னும் அதிகாரத்தில்
‘தெய்வம் தொழஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை”- 55 என்ற பாடலானது
சிலப்பதிகார பாடலோடு ஒத்துப் போனதோ அதே போன்று சிலப்பதிகார கதையின் மாந்தர் மாதவியின் மகளான மணிமேகலைப் பற்றிய இலக்கியமான மணிமேகலையில்
‘தெய்வங் தொழாஅன் கொழுகற் றொழுதெழுவாள் பெய்யெனப்
பெய்யும் பெருமழை என்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேராய்”- மணிமேகலை, சிறைசெய் காதை, 59-61 வரிகளில் குறிப்பிடப்படுகிறது.
மணிமேகலைக் காப்பியத்தை எழுதியவர் மதுரை கூலவாணிகர் சீத்தலைச் சாத்தனார் ஆவார். இவரே கண்ணகியின் கதையினை இளங்கோவடிகளுக்குக் கூறியவர். இரண்டு இலக்கியங்களிலும் திருக்குறளின் ஆதிக்கம் இருப்பதைப் பார்க்கும் போது. இவர்கள் காலத்திலும் திருக்குறள் மிகவும் மதிப்புடன் இருந்திருக்கிறது என்று உணர முடிகிறது. மணிமேகலைக் காப்பியத்தில் சதுக்கபூதம் கூறுவதாக அமையப்பெற்ற இக்கூற்றை திருக்குறளில் இருந்து மேல்காட்டியிருப்பது சிறப்பு.
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஓல்லாது வானம் பெயல் -559 என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.
இதே போன்று மணிமேகலையிலும்
வானம் மும்மாரி பொழிக; மன்னவன்
கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக- மணிமேகலை -1
என்னும் தொடர்மொழியில் மன்னவனின் கோல்pனைக் கொண்டே கோள்களும் இயங்கும். அரசன் தடுமாறாத செங்கோலனாக இருக்கவேண்டும். அப்போதுதான் கோள்களும் தன்னிலை மாறாமல் இயங்கும் அவ்வாறு இயங்குவதற்கு வானம்; மும்மாரி பொழிக என்று வருகிறது. இதேபோன்று மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்தீவில் மணிமேகலையை வைத்துவிட்டு, மணிமேகலையைக் காணாமல் வருந்தும் உதயகுமரன் முன் தோன்றி
கோன்நிலை திரிந்திடின் கோள்நிலைத் திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங்கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை- மணிமேகலை -7 என்று அதே குறளின் ஒத்த அர்த்தத்துடன் குறிப்பிடுகிறது.
மாதவியின் தாயாகிய சித்திராபதி, இந்திரவிழாவிற்கு மாதவியும் மணிமேகலையும் வருவர் என நினைத்துக் காத்திருந்தாள். ஆனால் அவர்கள் வராததால் ஊர்பழி தூற்றும் ஆகையால் அவர்களை சந்தித்து அழைத்துவர வசந்தமாலையை அனுப்பினார். வசந்தமாலையிடம் மாதவி ‘மணிமேகளை கண்ணகியின் மகள்: தவவொழுக்கத்திற்கு உரியவள், அங்கே வரமாட்டாள், நானும் இங்கே அறவணவடிகளிடம் என் கணவன் இறந்தது சுறி அழுதபோது அவர் எனக்கு,
‘பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்:
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்:
பற்றின் வருவது முன்னது: பின்னது
அற்றோர் உறுவது அறிக”- மணிமேகலை -2 என்று குறிப்பிட்டார் என்கிறாள். அதாவது இதில் பற்றின் வருவது முன்னது என்பது அவாவினால் வருவது பிறவி என்பதை விளக்குவதாகும்.
திருக்குறளில் இதனை,
அவாஎன்ப எல்லாவுயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து -361
என்று குறிப்பிடுகிறார். அதாவது ஆசைதான் புல் முதல் தேவரீறான எல்லாவுயிர்களுக்கும் பொது, உயிர்க்குணமாக இயல்பாகவே அமைந்து எடுத்த உடலிற்கு ஏற்ப விரிவது ஆகும். ஆகவே இது என்றும் கெடாத விதையாகும் என்கிறார்.
‘பின்னது அற்றோர் உறுவது அறிக” என்னும் தொடர் திருக்குறளின்
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்ற
நிலையாமை காணப் படும் - 349
முற்றிலும் பற்றினை அகற்றியவன் மானுடப் பிறவியை வென்று நிலைத்த புகழ் பெறுவான். அகற்றாதவன் வாழ்வில் நிலைத்த அடையாளம் எதையும் நிறுவ முடியாது என்பதன் அர்த்தமாக வருகிறது.
மணிமேகலையில் சுதமதியானவள் தன் வரலாற்றினை உதயகுமரனுக்குச் சொல்லும் போது சங்கதருமன் என்னும் முனிவர் தந்தையோடு தன்னையும் காப்பாற்றிய முறையினைச் சொல்லுகின்றாள்.
அன்புட னளைஇய அருண்மொழி யதனால்
அஞ்செவி நிறைத்து நெஞ்சகம் குளிர்ப்பித்தான் - மணி-5
என்கின்றாள்.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - 387
என்ற திருக்குறளே சாத்தனார் மனதில் நின்று சுதமதியுரையாகச் சங்கதருமனென்னும் பௌத்த முனிவனைப் பற்றி அறிவிக்கச் செய்கிறது. அருண்மொழி-இன்சொல் (அன்பு-ஈரம்), படிறுஇலவாம் செம்பொருள் கண்டார் - சங்கத் தருமன் என்னும் முனிவரைக் குறப்பிடுகிறது.
மணிமேகலையில் சாத்தனார் அவர்கள்
‘அந்திமாலை நீங்கிய பின்னர்
வந்து தோன்றிய மலர்கதிர் மண்டலம்
சான்றோர் தங்கண் எய்திய குற்றம்
தோன்றுவழி விளங்கும் தோற்றம் போலத் - மணி.6 என்று குறிப்பிடுகிறார்.
குடிபிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து - 957 என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
இருளை எதிர்நோக்குகிற போது களங்கத்தைச் சுமந்துவருகிற மதியாகிக் கருத்தை விளக்குகிறது. சான்றோர்கண் வருகிற குற்றம் அவர்கள் வருகிறபோதே அவர்களுடன் தோன்றும். காரணம் அவர்கள் ஒளியோடு ஒழுகியவர்கள். சமுதாயம் அவர்களோடு குறையை எதிர்நோக்கவில்லை. அவர்களிடம் சிறு குறை இருக்குமானால் அது தெளிவாக விளங்கும் என்று சாத்தனார் அழகாகக் குறிப்பிடுகிறார்.
மணிமேகலைப் புத்தப்பீடிகைக் காட்சியால் மணிமேகலைப் பழம்பிறப்பை உணர்ந்தாள் என்று எண்ணி, மணிமேகலா தெய்வம் ஆகாயத்தில் இருந்து இறங்கி வந்து, மணிமேகலைக் கேட்கும்படி புத்தபீடிகையைப் புத்தராகவே எண்ணிப் போற்றுகிறது.
உயிர்க ளெல்லாம் உணர்வு பாழாகிப்
பொருள்வழங்கு செவித்துறைத் தூர்ந்து – மணி. 10
அறிவிழந்த உலகத்திற்கு ஒரு ஞாயிறாகத் தோன்றினை என்று துதி பாடுகிறது. இதில் பொருள் என்பது அறம் எனப்படும். அறம் கேட்டுப் பழகாமையால் செவித்துளை தூர்ந்தது என்கிறது. இதில்
திருவள்ளுவரின்
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்- 246 என்ற குறளின் தாக்கம் இருப்பதை உணரலாம்.
மணிமேகலையில் வரும்
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்
அறங்கடை நில்லா தயர்வோர் பலரால்- மணி.11 என்கின்றாள்.
இது
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல் - 141 என்ற குறளின் சொல்லாட்சியாக விளங்குகிறது.
மேலே குறிப்பிட்டவைகள் மணிமேகலையில் திருக்குறளின் தாக்கம் மிகச் சிலவே. இன்னும் நிறைய இருக்கின்றது. திருவள்ளுவரின் சிந்தனைகள் எவ்வாறு ஒரு புலவர் மத்தியிலே இவ்வளவு தாக்கம் ஏற்படுத்தி தனது படைப்பு முழுவதிலுமே ஆங்காங்கே சிதற விட வாய்ப்பினை ஏற்படுத்தியது என்பதை எடுத்துக்காட்டவே சில குறிப்புகள் சொல்லியிருக்கிறேன். வரும் வாரத்தில் திருவள்ளுவர் எவ்வாறு கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதனைக் காண்போம்.
No comments:
Post a Comment