Monday, 25 March 2024

திருக்குறள் வழிநின்று திருவள்ளுவரை அறிதல்-11

வளையாபதியில் திருக்குறள் கருத்துக்கள்:
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக வளையாபதி நூல் வைக்கப்பட்டுள்ள


து. சமண சமய நூலாகக் கருதப்படும் வளையாபதியின் 72 செய்யுள்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதன் ஆசிரியர் யார் என்பதும் தெரியவில்லை. ஆனால், கிடைக்கப்பெற்ற செய்யுளிலும் திருக்குறள் மற்றும் குறுந்தொகையில் இருந்து கருத்துக்கள் மட்டுமின்றி செய்யுளையுமே அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது வளையாபதியில் தெரிகிறது. 
நாடும் ஊரும் நனிபுகழ்ந்து ஏத்தலும்
பீடுறும்மழை பெய்கஎனப் பெய்தலும்
கூடல் ஆற்றவர் நல்லது கூறுங்கால்
பாடு சால்மிகு பத்தினிக்கு ஆவதே – வளை. 4
கற்புடையவள் வாழ்கின்ற ஊரும் அவ்வூரில் உள்ள நாடும் மிகப் புகழ்ந்து துதிக்கும் நிலையில் வாழ்தல் பத்தினிக்கு ஏற்ற பண்பாகும் என்பது ‘ தகை சான்ற சொற்காத்துச் சோர்விலார் பெண்”- 56 என்ற குறளுடன் ஒத்துச் செல்வதைக் காணலாம். மேலும், இதில் சொல்லப்படும் ‘பீடுறும்மழை பெய்கஎனப் பெய்தலும்” என்ற வாக்கியம் மழை பெய்ய வேண்டிய காலத்தில் எவ்வளவு பெய்ய வேண்டும் என்பதே மழைக்குரியது. ஆனால், மழை தீமை விளைக்கும் போது நில் என்று சொல்லும் அதிகாரம் உடையவர் பத்தினிப் பெண்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. இது வாழ்க்கைத் துணைநலம் என்னும் அதிகாரத்தில்
தெய்வம் தொழஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை- 55 என்று திருவள்ளுவர் குறிப்பிடும் குறளுடன் ஒத்துப் போகிறது. 
கூடாநட்பு என்னும் அதிகாரத்தில்,  
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல் வேறு படும் - 822 என்று குறிப்பிடுகிறார். அதாவது உறவுபோல் நடிக்கும் ஒவ்வாதார் நட்பு மாறும் இயல்புடையது. பரத்தையர் மனம் மாறுவதுபோல் மாறிக்கொண்டே இருக்கும் என்கிறார். இதில் மகளிர் மனம்போல் வேறுபடும் என்ற பதத்தினை வளையாபதியில்
பள்ள முதுநீர்; பழகினும் மீனினம்
வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉம்
கள்ளவிழ் கோதையர் காமனோ டாயினும்
உள்ளம் பிறிதாய் உருகலும் கொள்நீ – வளை. 8 இல் குறிப்பிடப்படுகிறது. 
அதாவது கடல்போன்ற ஆழமான நீர்நிலையில் வாழ்கின்ற மீனினமானது. புது வெள்ளம் பாய்ந்தால் அது வழியே எதிர்த்து ஓடும்.  அதுபோல மகளிர் மன்மதனை ஒத்த மணாளனை மணந்து வாழ்ந்தாலும் மனம் வேறுபட்டுப் பிறரொறுவனைக் கண்டு காதலால் உருகுவர். இதனை நன்றாக அறிந்து நீ மணங் கொள்வாயாக என்று குறிப்பிடப்பட்டுள்து.  இதனையே மேலும்,
பெண்மனம் பேதின்றி ஒருப்படுப்பேன் என்னும் எண்இல் ஒருவன் - வளை 49 லும் வலியுறுத்தப்படுகிறது. 
பெண் மனம் நிலையற்றது. பேதமையுடையது. நூலொடு பழகினாலும் பெண் மனது பேதமையுடையதே, ஆதலால் ஒருவன் இன்று ஒருமைப்படுத்துகிறேன் என்றால் அவன் ஆய்வுள்ளவனா? ஏண்ணிப்பார் என்று குறிப்பிடப்படுகிறது.
வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் 
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை -57 என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது வீட்டுச் சிறையில் பெண்களை வைத்துக் காப்பதால் என்ன பயன்? பெண்மையைத் தங்கள் மனதுக்குள் பெண்களே பேணிக் காப்பதுதான் மேன்மைமிக்கது என்கிறார். 
பெண்களைத் தனியாகக் காக்க இயலாது என்பதன் அறிவுரையாகும். இதே கருத்தை வலியுறுத்தி வளையாபதியில்
உண்டியுள் காப்புண்டு: உறுபொருட் காப்புண்டு
கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு
பெண்டிரைக் காப்ப திலமென்று ஞாலத்துக் 
கண்டு மொழிந்தனர் கற்றறிந்தாரே – வளை. 9 என்று அதன் ஆசிரியர் குறிப்பிடுகிறார். 
அதாவது உணவுப் பண்டங்களை உள்ளே மூடி போட்டு பாதுகாக்கலாம். பணத்தினைப் பெட்டியில் போட்டு பாதுகாக்கலாம். கல்வியைத் திரும்பத் திரும்பக் கற்றும் பாதுகாக்கலாம். பெண்களை வீட்டுக் காவலில் வைத்துக் காக்க முடியாது. என்று அறிவாளியாகிய கற்றறிந்தோர் கூறினர் என்று குறிப்பிடுகிறது. 
வரைவின் மகளிர் என்னும் அதிகாரத்தில் பரத்தையர் பொருளை நாடியே நிற்பர் என்பதனை 
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்  - 911 என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 
இதனை உள்வாங்கி வளையாபதியில்
தனிப்பெயல் தண்துளி தாமரை யின்மேல்
வளிப்பெறு மாத்திரை நின்றற்று ஒருவன் 
அளிப்பவற் காணுஞ் சிறுவரை யல்லால்
துளக்கிலர் நில்லார் துணைவளைக் கையார் - வளை. 11 என்று குறிப்பிடுகிறார் அதன் ஆசிரியர். அதாவது, இருமணப் பெண்டிராய் பிறர் நெஞ்சைப் பேணிப் புணரும் வகையிலானவர்கள், கையிலே காசு கொடுப்பவன் மற்றவனைக் காணும் வரைதான் முன்னர் கொடுத்தவனோடு உறைவர் உறவாடுவர். அதற்கு உவமையாகத் தாமரையிலைத் தண்ணீரைக் குறிப்பிடுகிறார். தாமரையிலைத் தண்ணீர் காற்றடிக்கிற வரை தான் அதன் மேல் தங்கியிருக்கும். அதற்குமேல் தாமரையிலைத் தண்ணீரை வைத்திருக்காது எனக் குறிப்பிடுகிறார். 
தம்பொரும் என்பதம் மக்கள் என்று மக்கட்பேறு அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது பெற்றோருக்குச் செல்வம் என்பது பிள்ளைகள் என்பதை வலியுறுத்துகிறார். இதனையே வளையாபதியில்
பொறையிலா அறிவு: போகப் புணர்விலா இளமை: மேவத்
 துறையிலா வசன வாவி: துகில் இலாக் கோலத் தூய்மை:
நறையிலா மாலை: கல்வி நலமிலாப் புலமை:நன்னீர் 
சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே. வளை-9 என்று குறிப்பிடுகிறார். 
அதாவது, குழந்தை இல்லாச் செல்வம் என்பது காவல் அகழிகள் இல்லாத நகரம் போலவும், மற்றும் பொறுமையில்லாத அறிவையும், போகப் புணர்ச்சியில்லாத இளமையையும், இறங்குதுறையில்லாத தாமரைக் குளத்தையும் , ஆடையில்லாத அணியழகையும், மணமற்ற மாலையையும், கல்விநலம் இல்லாத புலமைமையயும் போன்றது என்று குறிப்பிடுகிறார். 

அடக்கமுடைமை அதிகாரத்தில் நமக்கு நன்கு பரிட்சையமான குறளான,
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிலுக்கப் பட்டு – 127 என்னும் குறளில் நாவடக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். 
இதனையே வளையாபதியில்,
ஆக்கப் படுக்கும்: அருந்தளைவாய்ப் பெய்விக்கும்:
போக்கப் படுக்கும்: புலைநகரத்து உய்விக்கும்:
காக்கப் படுவன இந்திரியம் ஐந்தனுள்
நாக்கல்ல தில்லை நனி பேணுமாறே – வளை.18 என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். 

பிறன்இல் விiழாயமை அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு – 148 
அடுத்தவன் மனைவியைக் காமக் கண்ணால் காணாதிருப்பது ஆண்மையின் இலக்கணம் ஆகும். அப்பேராண்மை சான்றோர்க்குப் பேச்சளவிலான அறம் மட்டுமன்று வாழும் நெறியும் ஆகும் என்கிறார். இதனையே வளையாபதியில் ஆசிரியர்.
தாரம் நல்வதம் தாங்கித் தலைநின்மின்
ஊரும் நாடும் உவத்தல் ஒருதலை
வீர வென்றி விறல்மிகு விண்ணவர்
சீரின் ஏத்திச் சிறப்புஎதிர் கொள்பவே – வளை. 11 இல் குறிப்பிடுகிறார். 
உலகத்தவரை நோக்கி ஏக பத்தினி விரதனாக இருங்கள், அப்படி இருந்தால் ஊரும் நாடும் மதிக்கும், மறுமையில் விண்ணுலகத்திலிருந்து தேவர்கள் உங்களை எதிர் கொண்டு அழைத்துச் செல்வர் என்று குறிப்பிடுகிறார். பிறன்மனை நோக்காப் பேராண்மையை வலியுறுத்துகிறார் திருவள்ளுவரின் வழிநின்று!.
இதே போன்று வளையாபதியின் பல இடங்களில் திருக்குறள் தாக்கம் நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment